வெளி வாங்கும் காலம் - என். ஸ்ரீராம் - வாசிப்பு அனுபவம் - உயிர்மெய்யார் - மார்ச் 2025, மெல்பன் - மெல்பன் வாசகர் வட்டம்
- உயிர்மெய்யார்
- 2 days ago
- 23 min read

வெளி வாங்கும் காலம் - என். ஸ்ரீராம்
- உயிர்மெய்யார்
(இயற்பெயர்: ஜான் பிரி்ட்டோ பரிசுத்தம்)
மார்ச், 2025. மெல்பன்
மெல்பன் வாசகர் வட்டம் மூலம் இந்த நூல் என் கைக்கு வந்தது. ஓரிரு நாட்களில் படித்து முடித்தாலும் ஒரு மாத காலத்திற்கு அது என் மேசை மேலேயே இருந்தது. வாசகர் வட்டத்தில் போய் பகிர்ந்துக் கொள்வதற்காக சிலக் குறிப்புகளை எடுத்துக்கொண்டே படித்து முடித்திருந்தாலும், கூட்டத்தில் முழுமையாக எல்லாவற்றையும் பகிர முடியவில்லை. அதனால் என் எண்ணங்களையும், அக்கதைகளைப் படிக்கும் போது எனக்கு இருந்து உணர்வுகளையும் ஒரு கட்டுரையாக வடிப்பது என்று முடிவெடுத்து எழுதத் துவங்குகிறேன். கீழ்க்கண்ட தலைப்புகளில் எழுதுவது என முடிவெடுத்தேன்.
கதை பொருண்மைகள்
நிறமும் ஆழ்மன நிகழ்வும்
பாலியல் பேதமும் பாவங்களும்
சாதியக் கொடுமைகளும் சாமானியர்களும்
மத நம்பிக்கைகளும் மனப்பிறழ்வுகளும்
சூழலியல் விவரிப்பும் சூழும் அபாயங்களும்
உயிர்மநேயமும் உணர்வின்மையும்
கதை உத்திகள்
இழப்பும் இறப்பும்
கதை சொல்லும் பாணி
சூழலைப் பயன்படுத்தும் முறை
வட்டார வழக்குச் சொற்கள்
கதை மாந்தர் கட்டமைப்பு
உவமையும் உவமானமும்
நூலில் 13 சிறுகதைகளும் ஒரு குறுநாவலும் இருக்கின்றன. குறுநாவலைத் தவிர்த்து மீதி உள்ள கதைகளின் சுருக்கங்களைப் பார்த்துவிடுவோம். பிறகு என் எண்ணங்களும் வாசகர்களின் கருத்துக்களும் மேற்கண்ட குறுந்தலைப்புகளில் பார்ப்போம்.
கதைச் சுருக்கங்கள்
‘முனிவிரட்டு’ கதை: மாராண்டி விரதம் இருந்து முனிஅப்புச்சியாக வேடம் தரிக்கிறான். தீர்த்தம் வைத்ததில் இருந்து எட்டாவது நாள் முனியை விரட்டுவது வரை முனியாகவே ஊருக்குள் சுற்றித் திரிவான். கணக்குச் (குறிச்) சொல்வான். எட்டாவது நாள் கோழிக்குஞ்சை உயிரோடு கடித்து இரத்தத்தைக் குடிப்பான். முதுகு தடிக்கும் வரை, ரத்தம் சொட்டச் சொட்ட சாட்டையால் அடி வாங்குவான். ஒன்பதாவது நாள் அதிகாலை தீர்த்தக் கும்பத்தை வாங்கி ஊருக்கு வெளியே கிணற்றில் போட முனி விரட்டப்பட்டதாக அறிவிப்பு வரும். மாராண்டி தன் வீட்டிற்கு வருவான். அவன் ஏழு வயது மகன், ‘ஐயோ! முனி வந்துடுச்சு! தொரத்துமா அதை!’ என்பதோடு கதை முடிவடைகிறது.
‘தாமரை நாச்சி’ கதை: சுசி வீட்டுக்கும் தாமரை நாச்சி வீட்டுக்கும் பொதுவான ஒரே சுவர் இருந்தது. அதனால் இந்த வீட்டில் நடப்பது அந்த வீட்டிற்கும், அந்த வீட்டில் நடப்பது இந்த வீட்டிற்கும் எளிதாகக் கேட்கும். ஏதாவது இரைச்சல் கேட்டுக்கொண்டே இருக்கும். மணியக்காரர் தாமரை நாச்சியின் அப்பா. தாமரை நாச்சிக்கு மூன்று அக்காக்கள். இது தவிர சுசியின் அம்மாவும், தாமரை நாச்சியின் அம்மாவும் கதையில் இருக்கிறார்கள். தாமரை நாச்சி மனநலம் குன்றிய மாற்றுத் திறனாளி. அதனால் அவளை திண்ணைத் தூணில் கட்டியே வைத்திருக்கிறார்கள். அவள் அலறிக்கொண்டே இருக்கிறாள். அக்காக்கள் மழையில் நனைந்து விளையாடும் பொழுது தாமரை நாச்சி தன்னையும் விளையாட அனுமதிக்குமாறு அழ, மணியக்காரர் ஈர்க்குச்சியை வைத்து அடிக்கிறார். அன்று இரவு மணியக்காரர் ஓட்டு வீட்டில் ஏறி, அங்கேயிருந்த அழுக்குவண்ணான் குருவிக் குஞ்சுகளை தாயிடமிருந்து பிரித்து தூக்கி எறிகிறார். பூனை கவ்விக்கொண்டு போகிறது.
ஒரு நாள், குமரேச வாத்தியார், பெண்கள் ராட்டையில் சுற்றும் சிட்டங்களை எடுக்கக் கதர் கடையிலிருந்து தாமரை நாச்சி வீட்டிற்கு வருகிறார். அன்று தாமரை நாச்சியும் சரஸ்வதியக்காவும் தனியாக இருக்கிறார்கள். நரைத்த நெஞ்சு முடியுள்ள குமரேச வாத்தியார் சரஸ்வதியக்காவிடம் ‘மாசத்துல ரெண்டு தடவை ஒத்துழை…இது மாதிரி நெறையப் புடவெ வாங்கித் தர்றேன்’ என்று அவள் முதுகைத் தடவிச் சொல்கிறார். குடத்தோடு உள்ளே நுழைந்த தாமரை நாச்சி அம்மா அதட்ட, வாத்தியார் தலை கவிழ்ந்து போய்விடுகிறார். தாமரை நாச்சி இருப்பதால் தான் அவளது மூன்று அக்காக்களுக்கும் திருமணம் நடக்கவில்லை என சுசி அம்மாவிடம் தாமரை நாச்சி அம்மா புலம்புகிறார். மணியக்காரர் இதைக்கேள்விப்பட்டும் பேசாமல் இருக்கிறார். அன்று இரவு தாமரை நாச்சி இறந்து போகிறாள். எல்லோரும் பேருக்கு அழுது வைக்கிறார்கள். ‘சோத்துல விஷம் வச்சி கொன்னுட்டார்’ என்று சுசியின் அம்மா சுசியிடம் சொல்கிறார். தாமரை நாச்சியின் அம்மா அழுது கொண்டே இருக்கிறார். ஒரு நாள் அவள் சப்தமும் ஒய்கிறது. இப்பொழுது எந்த இரைச்சலும் இல்லை. இப்படி கதை முடிகிறது.
‘மூக்குத்தி காகம்’ கதை: புகையிலைச் சாவடியில் மாதாரிகள் தழை உரித்துக் கட்டி எட்டயபுரத்துக்கு லாரியில் ஏற்றிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவன், வீட்டிற்கு உள்ளே ஓர் உரியில் காகம் ஒன்று வந்த அமர்வதைப் பார்த்துவிடுகிறான். பறவைகளை லாவகமாகப் பிடித்து விடும் தெண்டபாணி சித்தப்பா அந்தக் காகத்தைப் பிடிக்க முற்படுகிறார். பல முயற்சிகளுக்குப் பிறகு காகத்தைப் பிடித்து விடுகிறார். கருப்பு நிற காகம் ஒரு துர்க்குணம் பிடித்த பறவையாகவே மனதுக்குள் ஒரு சித்திரம் படிந்திருந்ததால் இவனுக்கு இரக்கம் வரவேயில்லை. காகத்தை என்ன செய்வது என்ற நீண்ட ஆலோசனைக்குப் பிறகு அதன் மூக்கில் ஒரு சிறிய மணியைக்கட்டி விடுகிறார்கள். அங்கும் இங்கும் பறந்து கொண்டிருந்த மூக்குத்தி காகம், ஆறு மாதம் கழித்து காணாமல் போய்விடுகிறது. இவன் தேடினான். கடலை பருப்பு போட்டிருந்த வயல்களில் மொட்டு விரிந்து இலைகள் துளிர்த்திருந்தன. அவைகளை காகங்கள் கொத்திவிடாமல் இருக்க அப்பா, காகங்களைக் கொன்று குச்சியில் தொங்கவிட்டிருந்தார். அதில் மூக்குத்தி காகமும் தொங்கிக்கொண்டிருந்தது.
‘மீட்பு’ கதை: இவர் ஒருவரிடம் தொழிலுக்காகக் கடன் வாங்கியிருந்தார். அதைத் திருப்பித் தராததால் கொடுத்தப் பணத்தைக் கேட்டு அவர் வருவதாகவும், இவர் ‘சாயபுவின் மகன் இஸ்மாயில்’ ஊரிலிருந்து வந்ததும் வாங்கிக் கொடுத்துவிடுவதாகவும் சொல்வதாகக் கதைத் துவங்குகிறது. தேங்காய் களத்திற்குச் சென்று சம்பாரித்து வரும் இரு மகள்களில் மூத்தப் பெண்ணிடம் பத்து ரூபாய் வாங்கிக்கொண்டு சாயபுவின் மகனைப் பார்க்கப் போகிறார். இவர் ஆடுகளை மொத்தமாகச் சேகரித்து சாயபுவிடம் வந்து கொடுப்பார். சாயபு பணம் கொடுப்பார். சாயபுக்குப் பிறகு இஸ்மாயிலும் அப்படியே கொடுத்து வந்தான். சந்தை சொணங்கும் போது இஸ்மாயில் கடன் சொல்லுவான். இவரும் ஆட்டை விட்டுவிட்டு வருவார். ஓரிரு நாட்களில் போய் பணம் வாங்கி வருவார்.
இப்படித்தான் போய்க்கொண்டு இருந்தது. இஸ்மாயிலின் இரண்டு தங்கைகளுக்கும் திருமணம் நடக்கப் போகிறது என்றும் கொஞ்சம் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்றும் சொன்னான். அந்த மாதம் முழுக்க ஆடுகளை அனுப்பிக்கொண்டேயிருந்தார். எல்லாவற்றிற்கும் சேர்த்து வந்து பணத்தை வாங்கிக்கொள்ளச் சொல்லிச் செய்தி அனுப்பினான். இவர் கிளம்பி பஸ் நிலையம் போனார். அன்றைக்குத் தான் டவுனில் குண்டு வெடித்தது. அவர் சாயபுத்தெருவுக்குப் போகும் போது, சாயபும் இஸ்மாயிலும் அங்கு இல்லை. வடக்கே எங்கோ போய்விட்டதாக பக்கத்துவீட்டுக்காரர் சொன்னார். ஆடு கொடுத்த சிலருக்கு நகை நட்டுக்களை விற்றுக் கொடுத்தார். சிலருக்கு கடனாளி ஆகிவிட்டார். ஆறு மாதம் ஆகிவிட்டது. அப்படி ஆடு கொடுத்த ஒருவர் தான் இன்று கடன் கேட்டு வந்தார். இஸ்மாயிலைப் பார்க்க மகளிடம் பத்து ரூபாய் வாங்கிக்கொண்டு கிளம்பியிருக்கிறார். இவர் போன போது சாயபு இருந்தார். ‘இஸ்மாயில் குண்டு வெடிப்புல செத்துட்டான்னு நெனக்கிறேன். அவன் இருந்து நடத்த வேண்டிய ரெண்டு மகள்கள் கல்யாணமும் நின்னு போச்சி’ என்று வாய் விட்டு அழுதார். இவர் திரும்பி வந்தார். அடுத்த நாள் காலை அவரிடம் பணம் கேட்டு இன்னொருவர் வந்து நின்று கொண்டிருந்தார் என்று கதை முடிகிறது.
‘ஆதாயவாதிகள்’ கதை: அந்த ஊரில் தொடர்ந்து கோழிகள் காணாமல் போயின. யாரோ திருடுகிறார்கள். முதலில் சின்னப்ப ஆசாரியின் வீட்டில் தான் திருடு போனது. யார் திருடுகிறார்கள் என்று கண்டுபிடிக்க இவனும் கந்தசாமியும் ஈர சாக்குகளை எடுத்துக்கொண்டு புறப்படுகிறதில் கதை தொடங்குகிறது. குப்புசாமிக் கவுண்டர் வீட்டில் கோழிகள் காணாமல் போகிறது. இப்பொழுது ஊரே பதட்டப்படுகிறது. 'திருடனைப் பிடித்துக் குடுங்க…நான் போலீசுட்ட அவனை ஒப்படைக்கிறேன்' என்று ஊர்க்கவுண்டர் சொன்னதும் ஊரே கோழித்திருடர்களைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டது. திடீரென ‘மாதாரி வளவுக்குள்’ (சக்கிலியர் தெருவில்) மூன்று வீடுகளில் கோழித் திருடு போகிறது. ‘தொழிலாளிங்க வூட்டுலயே திருடு போனா…நாங்க என்னங்க பண்றது?’ என்று அழுகிறார்கள்.
ஒரு நாள் கந்தசாமி வீட்டுக் கோழிகளைத் திருட முற்படும் போது தான் எல்லோரும் விரட்ட திருடன் தப்பித்து ஓடிவிடுகிறான். குப்புசாமிக் கவுண்டர் 'அழகிரி மூப்பனும் கருமுட்டியும் சேர்ந்து கோழிகளைத் திருடி ஊர்க்கவுண்டரிடம் கொடுப்பதாகவும், அவர் வறுத்து தின்பதாகவும்' யூகம் சொல்ல, நேரே ஊர்க்கவுண்டர் வீட்டிற்கு இருவரும் செல்கிறார்கள். ஊர்க்கவுண்டர் வீட்டில் அவர்கள் இருவரும் கோழிகளை வறுத்துக் கொண்டிருக்கின்றனர். அவர் மேல், மேல்நாட்டு சரக்கு வாசனை வீசுகிறது. ‘என் சகலை பிராய்லர் கோழிப்பண்ணையிலேர்ந்து கோழிகள அனுப்புனாரு. வறுத்த கோழி நல்லா இருக்கும். இந்தாங்க சரக்கு அடிங்க. கறியைச் சாப்புடுங்க’ என அவர்களுக்கும் கொடுக்க, கந்தசாமியும் அவனும் சரக்கை வாங்கி குடித்து விட்டு, கறியைச் சாப்பிடுகிறார்கள். பக்கத்தில் ஒரு கூடையில் கோழி இறகுகளை அமுக்கி வைத்திருக்கிறார்கள். அவைகள் வெள்ளையாக இல்லை. பல வண்ணத்தில் இருக்கின்றன. சில நாட்களுக்குப் பிறகு கருமுட்டியைப்பார்த்து, ‘இந்த பொழுப்பு எதுக்கு?’ எனக் கேட்க, ‘நீ பாத்தியா? சரி. நான் தான் திருடுறேன். உன்னால என்ன பண்ண முடியும்?’ என்று சவால் விட்டான். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று தான் கந்தசாமி இவனை அழைத்துக்கொண்டு ஈர சாக்குடன் புறப்பட்டிருக்கிறான். ஊர்க்கவுண்டர் வீட்டில் உள்ள கோழிகளைப் பிடித்து வந்து கருமுட்டி வீட்டில் போட்டு விட்டு, ‘திருடன், திருடன்’ என்று அலற, ஊரே திரண்டு விடுகிறது. போலீஸ் வந்து அவர்களைப் பிடித்துச் செல்ல, அதற்குப்பிறகு ஊரில் கோழித்திருட்டு நடக்கவில்லை என்று கதை முடிகிறது.
‘வெளி வாங்கும் காலம்’ கதை: இவன் நடேசனைப் பார்க்க நடேசன் ஊருக்கு வருகிறான். வந்த காரணத்தை நினைத்துப் பார்க்கிறான். அவனுக்கேச் சிரிப்பு வருகிறது. உள்ளூர் டீச்சரோடு கேரம் விளையாடிக் கொண்டிருந்த இவனை, அவன் அப்பா அழைத்து ‘ஏய்! அவ கல்யாணம் ஆனவ’ என கண்டிக்கிறார். அவனுக்கு எரிச்சல் வந்ததால் தான் இப்பொழுது நடேசன் ஊருக்கு வந்திருக்கிறான். மணியும் நடேசனும் ஒரு நாள் அவனை தாசிக்குறத்தி வீட்டிற்கு அழைத்துப் போவார்கள். அன்றைக்கு பயந்து போய் வீட்டிற்கு ஓடி வந்துவிட்டாலும், இன்னொரு நாள் இரவு ஆற்று மணலில் சந்தித்து சிநேகிதர்கள் ஆகிவிடுகிறார்கள். ‘அவள் மேல் சதா பரிவும் பிரியமும் சுரந்துகொண்டேயிருந்தன’ என்று நூலாசிரியர் எழுதுகிறார். பல இரவுகளில், ஆற்று மணலில் அவர்கள் சந்திப்பு நடக்கிறது.
ஒரு தடவை மணியும் நடேசனும் இவனும் சந்திக்கும் போது மணி எச்சரித்தான். ‘ஏதோ ஒரு தடவ ரெண்டு தடவ ஜஸ்ட் ஜாலிக்காகப் போறது தான்….அதுக்காகப் பொழுதன்னிக்கிம் அவ பின்னாலயே போயிர்றதா?...’ ‘உன் குடும்பம் மானம் மருவாதிக்குக் கட்டுப்பட்ட குடும்பம். உன் தாத்தா அப்பா எல்லாம் எப்படி ஒழுக்கமா இருந்தாங்க தெரியுமா?...’ எல்லா தாத்தா அப்பாக்களும் ஒழுக்கமானவர்களா என்ற கேள்வி அவர்களுக்குள் எழ, ஒரு நாள் தாசிக்குறத்தியிடம் மூன்று பேருமே சென்று கேட்கிறார்கள். நெஞ்சு நிமிர்த்தி நடக்கும் பெருசுகளைப் பற்றி புட்டுப் புட்டு வைக்கிறாள். ‘ஏன் இவிய அப்பாரு..’ என இழுக்க இவன் எழுந்து வீட்டிற்கு வந்துவிடுகிறான். பல நாள் கழித்து அதைப் பத்தி கேட்கத்தான் இன்றைக்கு இவன் நடேசன் ஊருக்கு வந்திருக்கிறான். நடேசனைப் பார்த்து கேட்கிறான். ‘ம்ஹூம்! தாசிக்குறத்தியோட தொடர்பு இல்ல…ஆனா ஒரு கல்யாணமான பொண்ணோட அஞ்சு வருஷம் தொடர்பு இருந்திருக்கு…’ ‘அப்புடியா? யாரது?’ என்று இவன் கேட்க, ‘அது எங்கம்மா’ என்று நடேசன் சொல்வதோடு கதை முடிகிறது.
‘பிணம் தழுவியவன்’ கதை: பூசாரிக்கு ஒரு கனவு. ஒரு ராஜகுமாரி இறந்து போகிறாள். அவளது உடம்பை தொடுகிறார். சுடுகிறது. எழுந்து உட்கார்ந்துக் கொள்கிறார். அதிகாலை கனவு. கொஞ்சம் பயந்தார். பூசாரி இந்த ஊரில் பூசாரி ஆகும் முன்பு பொம்மைக்கூத்து நடத்தும் நாடோடிகளோடு சுத்திக்கொண்டிருந்தான். ஓரிரவு. அந்தக் கூட்டத்தில் இருக்கும் ஒரு பெண்ணும் அவனும் மட்டுமே கூடாரத்தில் இருக்கிறார்கள். இருவர் வந்து அவனை அழைத்துக்கொண்டு போய் சாராயம் வாங்கிக்கொடுக்கின்றனர். குடித்துவிட்டு சப்தமாகப் பாடிக்கொண்டு இருக்கும் போது ரெட்டை சாரட்டு குதிரை வண்டி வந்து, அந்த இருவரையும் அழைத்துப் போய் விடுகிறது. விடியும் போது கூடாரத்திற்கு வந்து பார்த்தால் பொம்மையெல்லாம் சிதறிக் கிடக்கிறது. அவளுக்கு ‘சிவப்பாக லட்சணமாக’ குழந்தை பிறக்கிறது. இவன் அந்த நாடோடி கூட்டத்திலிருந்து ஓடி வந்து விடுகிறான்.
இப்பொழுது இந்த ஊரில் அவன் பூசாரி. மற்றொரு நாள் அதே கனவு. இறந்த போன ராஜகுமாரியின் உடலை பூவை வருடுகிற மாதிரி வருடுகிறான். பாடம் சொல்லிக் கொடுக்கும் பண்டிதர், ‘நீ பிணத்தை தழுவும் கூட்டத்தில் பிறந்தவன்’ என்கிறார். முழிப்பு வந்து பயம் தொற்றிக்கொள்கிறது. பண்டாரம் தான் பூசாரிக்கு எல்லாம். பண்டாரம் வந்து பட்டக்காரர் வீட்டிற்குப் போகவேண்டும் என்று அழைக்கிறான். போகிறார்கள். பட்டக்காரரின் பெண்ணுக்குப் பேய் பிடித்துவிட்டதாகவும் அதை ஓட்ட வேண்டும் என்றும் சொன்னார்கள். பெண்ணைப் பார்த்தான். ராஜகுமாரியைப் போல் இருந்தாள். அவளது பார்வை நிலைக்குத்தி நின்றிருந்தது. பூசாரி செரவு அடித்தான். மூன்றாவது நாள் செரவு அடிக்கப் போன போது அவள் இறந்துப் போயிருந்தாள். பூசாரி அவளது உடலைப் பார்த்துவிட்டு வெளியே வந்தான். அங்கே பழைய ரெட்டை சாரட்டு குதிரை வண்டி ஒன்று மங்கலாக நின்றுகொண்டு இருந்தது. ஊருக்கு வெளியே பட்டக்காரரின் பெண்ணை புதைத்தார்கள். அடுத்த நாள் பண்டாரம் பூசாரியைத் தேடினான். காணவில்லை. பட்டக்காரரின் பெண் புதைக்கப்பட்ட உடல் வெளியே எடுக்கப்பட்டு அலங்கோலமாகக் கிடந்தது. 'சற்று தூரத்தில் பூசாரி சலனமற்று அம்மணமாகக் கிடந்தான். விடைத்த குறியில் ரத்தம் உறைந்திருந்தது' என்று கதை முடிகிறது.
‘கிணற்றில் குதித்தவர்கள்’ கதை: அந்த ஊரில் கிணற்றில் குதித்து யாரும் செத்ததில்லை. ஒரு நாள், கிணறு வெட்டுவதில் பிரசித்தி பெற்றவனான ராஜவெட்டுக்காரனை, ரெங்கண்ண கவுண்டரின் பாதி வெட்டிய கிணற்றிலிருந்து, கட்டில் வைத்து தூக்கி வெளியில் போட, அவனது மனைவி ஒப்பாரி வைப்பதில் கதை துவங்குகிறது. காயத்தோடு தப்பிவிட்டான் ராஜவெட்டுக்காரன். கிருஷ்ணசாமிக் கோனாரின் மகன் தேவராஜ். சொத்தைப் பிரித்துத் தரச் சொல்கிறான் தேவராஜ். தாராபுரம் சென்று இரண்டு தோட்டங்களை அவன் பெயரில் எழுதி வைத்து விடுகிறார். ஏனோ தேவராஜ் வீச்சரிவாளோடு கிருஷ்ணசாமிக் கோனாரைத் துரத்த அவர் ஒரு பாங்கிணற்றில் (நீர் இல்லாத பாழுங்கிணற்றில்) விழுந்துவிடுகிறார். ஆனால் அவரையும் கட்டில் வைத்து தூக்கும் போது எந்த காயமும் இல்லாமல் மேலே வந்து விடுகிறார்.
இந்த ஊரிலிருந்து, ஒருவருக்குப் பெண் பார்க்க காதபுள்ளிபட்டிக்கு போகிறார்கள். அங்கே பெண் குடும்பத்தார் கிணற்றில் கபிலை ஓட்டிக்கொண்டிருந்தார்கள். திடீரென கிணற்றின் ஒரு பக்கம் இடிந்து கீழே விழ பெண்ணின் அண்ணன் கிணற்றில் விழுந்து விட்டான். அந்தப்பெண்ணும் குதித்து விட்டாள். ஆனால் இருவருக்கும் அடிபடவில்லை. அதன் பின் பலரும் கிணற்றில் குதிக்கிறார்கள். ஆனால் அடிபடாமல் மேலே வந்துவிடுகிறார்கள். கடைசியில், ஒருவன் அவன் அப்பாவின் தோட்டத்தை அப்பாவின் சம்மதம் இல்லாமல் விற்க, அவர் கிணற்றில் விழுந்து சாவதாக கதை முடிகிறது.
‘பெயரைத் தொலைத்தவன்’ கதை: தன் அக்கா பிரசவம் ஆகி வீட்டுக்கு வந்திருந்த நிலையில் அவளின் குழந்தைக்கு பால் வேண்டி, கறவை மாடு வாங்க அந்த ஊருக்கு அவன் வந்தான் என்று கதை தொடங்குகிறது. பச்சைத் துப்பட்டியை முக்காடிட்டு உட்கார்ந்திருந்த ஒரு கிழவனிடம் ‘கறவை மாடு கிடைக்குமா?’ என்று கேட்கிறான். ‘இங்க இல்ல. மதுக்கம்பாளையத்துல இருக்கு’ ன்னு சொல்லி ஆத்தைத் தாண்டி அழைத்துப்போகிறான். ஒரு மேட்டில் நின்று கொண்டு ‘அந்த பட்டக்காரர் மச்சு வீட்டுக்குத்தான் போகப்போறோம்’ என்றதும் ‘குடும்பன் வெட்டிக் கொன்னதா சொல்வாங்களே….அந்த பட்டக்காரர் வீடா?’ எனக் கேட்பான். ஆமாம் என்று சொல்லிவிட்டு நடப்பார்கள். பட்டக்காரரின் மகன், சின்ன எசமான் தான் இப்பொழுது நிர்வாகம். இருக்கிற மூன்று மாடுகளில் ஒன்று இளங்கன்றாக இருந்தது. வீட்டில் விசாரித்த பொழுது சின்ன எசமான் வீட்டில் இல்லையென்றதும், கிழவன் அவசர அவசரமாக, ‘ஆளில்லாத பொழுது வீட்டிற்கு வந்தா சின்ன எசமானுக்குப் பிடிக்காது. நாளைக்கு வரலாம்’ என்று சொல்லி இவனை அழைத்து வந்து விடுகிறான். ‘நாளைக்கு வந்தா, உங்கள யாருன்னு சொல்லி விசாரிக்கிறது’ என்று இவன் கேட்க, ‘பட்டக்காரர வெட்டினவன்னு கேளுங்க’ என்று சொல்வதாகக் கதை முடிகிறது.
‘நெட்டுக்கட்டு வீடு’ கதை: ராமையா கம்மாலன் நுணுக்கமாக செய்த வேலைப்பாடுகள் நிறைந்த கதவுகள் கொண்ட நெட்டுக்கட்டு வீட்டில் செல்லீயக் கவுண்டர் எதற்கோ ராமையா கம்மாலனைத் திட்டுகிறார் என்று கதைத் துவங்குகிறது. அவன் உளியையும் எளப்பக்கூட்டையும் அங்கேயேப் போட்டுவிட்டு ஊரைவிட்டு எங்கேயோப் போய்விடுகிறான். அவனுக்காக எடுத்து வைத்திருந்த வேட்டியும் துண்டையும் கூட சுடுகாட்டில் வீசிவிட்டார்கள். கவுண்டர் பயந்து போனார். கேரளாவிலிருந்து மருந்து எடுப்பவனை அழைத்து வந்து பூசை செய்கிறார்கள். வீட்டின் பின்புறத்தில் தோண்டி கொஞ்சம் முடியையும் தாயத்துக்களையும் எடுத்துவிடுகிறான். பயம் கொஞ்சம் தணிந்தது. கவுண்டருக்கு பர்வதம் என்ற மனைவியும் மூன்று பெண் பிள்ளைகளும் இருக்கிறார்கள். பழனாத்தாள் தான் பெரியவள். பதினேழு வயது. அவளுக்கு மஞ்சத் தண்ணி ஊற்றும் நாள் இன்று. ஊர்க்காரர்களும் உறவுக்காரர்களும் வந்திருக்கிறார்கள். அவளுடைய மாமன் மகனும் வந்திருக்கிறான். அவளுக்கு அவனைப் பிடித்திருக்கிறது.
சில நாட்களுக்குப் பிறகு, புயல் வருமென்றும் மழை தீவிரமாகுமென்றும் செய்தி வந்ததால், குளக்கரையைத் திடப்படுத்த கவுண்டர் போய்விடுகிறார். அப்பொழுது அந்த மாமன் மகன் வந்து அவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் என்று பத்திரிக்கைக் கொடுக்கிறான். அந்த வாரமெல்லாம் பழனத்தம்மாள் அழுகிறாள். பழனத்தம்மாளுக்கு இன்னொருவனோடு கல்யாணம் நடக்கிறது. ஆனால் அவன் ஏதோ ஒரு காரணத்திற்காக மருந்து குடித்து இறந்து விடுகிறான். பழனத்தம்மாள் நெட்டுக்கட்டு வீட்டிற்கு வருகிறாள். இப்பொழுது வெள்ளைச் சேலை கட்டியிருக்கிறாள். பழனத்தம்மாளின் தங்கைகள் சொர்ணாத்தாளும் சின்னாத்தாளும் சடங்காகி திருமணமாகிப் போகிறார்கள். பழனத்தம்மாள் வீட்டிற்குள் முடங்கிப்போகிறாள். அந்த வருடம், ஊரில் மாரியம்மன் பொங்கல் சாட்டியிருந்தது. சொர்ணாத்தாளும் சின்னாத்தாளும் அவர்கள் கணவர்களோடும் பிள்ளைகளோடும் வந்திருந்தார்கள். ஊரும் வீடும் களைக்கட்டியிருந்தது. பண்டாரம் வந்து செல்லியக்கவண்டரிடம் புது சாத்து துணிக் கேட்கிறார். திண்ணையில் உட்கார்ந்திருக்கும் கவுண்டர், ‘பர்வதம்! அந்த சாத்து துணிய எடுத்துட்டு வா’ எனக்குரல் கொடுக்கிறார்.
தங்கைகள் வேறு வேலைகளில் இருக்க, குளித்துக்கொண்டிருந்த பர்வதம், ‘கொண்டு போய் குடு’ என்று சொல்வதைக் கேட்டு சாமிக்கு சாத்த வேண்டிய புதுத் துணியை பழனத்தம்மாள் கொண்டு போய் கொடுக்கிறாள். பண்டாரத்திற்கு அதிர்ச்சி. செல்லியக் கவுண்டர் பழனத்தம்மாளை ஓங்கி அறைகிறார். பழனத்தம்மாள் தூக்கி மாட்டிக்கொண்டு சாகிறாள். சொர்ணாத்தாளும் சின்னாத்தாளும் நெட்டுக்கட்டு வீட்டிற்கு வருவது குறைந்தப் போனது. மாரியம்மன் கோவில் பொங்கல் சாட்டுவது நின்று போனது. மழையில் நெட்டுக்கட்டு வீடு இடிந்து போனது. பர்வதம் கவுண்டச்சி புரை ஏறி இறந்து போகிறாள். செல்லியக் கவுண்டர் பகலெல்லாம் திண்ணையில் உட்கார்ந்திருக்கிறார். எப்பொழுதாவது சிலர் வந்து சாப்பாடு கொடுக்கின்றனர். ஒரு தடவை திண்ணைக்கூரையும் இடிந்து விழுகிறது. கையில் வட்டிலுடன் தெருவில் நடந்தார் கவுண்டர். அப்பொது தான் திட்டிய ராமையா கம்மாலனை நினைத்துக்கொண்டார் என்று கதை முடிகிறது.
‘காற்றுக்காலம்’ கதை: முப்போகமும் மழைப் பெய்து, நிலமும் விலங்குகளும் அழிவதைக் கண்ணுற்று, ‘கோடைகாலத்தில் மழை பெய்ய வேண்டாம்’ என்று பாண்டிய மகாராஜா வருண பகவானிடம் வரம் கேட்டு அப்படியே வரம் கொடுப்பதிலிருந்துக் கதைத் தொடங்குகிறது. அதனால் கோடையில் எங்கும் ஒரே வறட்சி. ஆறு பங்காளிகளுக்குச் சேர்ந்தாற் போல் இருக்கிற தோட்டத்தில் லோகுவுக்கு ஒரு பங்கு. அவன் போட்ட மிளகாய்ச் செடி காய்கிறது. கிணற்றில் தண்ணீர் இல்லை. ஆழ்குழாய்க்கிணறு (போர்) போடவேண்டுமென்றால் எல்லா பங்காளிகளும் ஒத்துழைக்கவேண்டும். ஏட்டிக்குப் போட்டியாகப் பேசும் சிலப் பங்காளிகளையும் அசை மடக்கி பெரிய மாமா ஒத்துக்கவைத்தார். போர் போடும் இடத்தை நிர்ணயிக்க சுப்புக்குட்டி ஜோசியர் தேங்காய் உருளும் இடத்தைக் குறித்துக்கொடுத்தார். ஒரு பங்காளிக்கு அதில் நம்பிக்கையில்லை. அவர் வேறு ஒரு ஜோசியரை அழைத்து வந்தார். அவரும் அதே இடத்தைக் காண்பித்தார். உள்ளூரிலிருந்து ஒருவரும் விளாரைச் சுழற்றி அதே இடத்தில் வந்து நின்றார். பெரியப்பா தன் பங்கிற்கு மலைசாமி கோயிலுக்குச் சென்று சயனம் கேட்டார். அதே இடம். பின் கோனேறுபட்டி ஜோசியரும் வந்து நீர் ராசிப் பார்த்ததில் எல்லோருக்கும் திருப்தி. அதே இடம். போர் போடவேண்டும். பணம் புரட்டியாக வேண்டும்.
லோகு முயற்சி எடுத்ததால் அவன் தான் புரட்டியாகவேண்டும். தெற்கு வளவில், செல்லமுத்து மாமாவிடம் மூணு காசு வட்டிக்கு பணம் வாங்கினான். போர் மிஷின் வந்தது. ஐந்நூறு அடிக்கு போட்டும் வெறும் புகை தான் வந்தது. கடன் வாங்கிய மொத்தப் பணமும் கொடுக்கப்பட்டது. மழை பெய்யவில்லை. ஆடு மாடுகளுக்குத் தண்ணீர் கொடுக்கக் கூட தண்ணீர் இல்லை. கடன் கொடுத்த மாமன் வீட்டில் போய் தான் தண்ணீர் மொண்டு வரணும். போய் மொண்டு வந்தான். சில நாட்களில் லோகு காளைக்கன்றுகளை விற்றான். அந்தப் பணம் தனக்கு வரும் என்று எதிர்பார்த்திருந்த கடன் கொடுத்த மாமன், அதனை தீவனம் வாங்கி தன் கறவை மாட்டிற்கும் ஆடுகளுக்கும் கொடுத்தவிட்டதை அறிந்து வீட்டிற்கே வந்துவிட்டார். அப்பொழுது லோகு வீட்டில் இல்லை. தண்ணீர் மொள்ள மாமன் வீட்டிற்குப் போன போது, திட்டுகிறார். தண்ணீர் மொள்ளாமலேயே வீடு திரும்புகிறான். கறவை மாட்டையும் ஆடுகளையும் விற்கிறான். மழை பெய்யவில்லை என்று கதை முடிகிறது.
‘மழை நாள்’ கதை: எப்போதோ வாங்கிய அதிகமான கடனுக்காக, மாதம் தவறாமல் வட்டிக் கொடுக்கும், தன் மாமாவிடம் வட்டி வசூலிக்க அன்று அவன் கிளம்பி பஸ் ஸ்டாண்டு வருவதில் கதைத் தொடங்குகிறது. மாமா ஊருக்கு வந்ததும் அத்தை சாப்பாடு போடுகிறாள். திடீரென மழைப்பிடித்துக் கொள்கிறது. வீதியில் வெள்ளம் பெருகி ஓடுகிறது. கரை உடைவது போல் இருப்பதாகவும், வடக்கயிறை எடுத்துக் கொண்டு வரவேண்டும் என்றும் ஊரார் அழைக்க, மாமா கிளம்பினார். அத்தை அதில் இருக்கும் ஆபத்தை எடுத்துச் சொல்லித் தடுக்க, மீறி இவனை அழைத்துக் கொண்டு மாமா வெள்ளத்தைத் தடுக்கப் போகிறார். கயிறைக் கொண்டு, அந்தக் கரையிலிருந்து சிலர் இங்கே வர, இக்கரையிலிருந்து அங்கே போயினர். கடும் வெள்ளத்தைப் பார்க்க நடுக்கம் எடுத்தது இவனுக்கு.
இரவு வந்துவிட்டது. ஊரார் சிலரோடு மாமாவும் உட்கார்ந்து சாராயம் குடித்து விட்டு கறி தின்றனர். அப்பொழுது பல விஷயம் பேசுகையில் போன வெள்ளத்தில் அடித்துப் போய்விட்ட கந்தசாமி பற்றியும், அதனால் விதவையான ரேணுவைப் பற்றியும் ஒருவன் பேசினான். மாமாவின் முகம் சங்கடப்பட்டது. மாமா, ‘வா! நாம ரேணு ஊட்டுக்குப் போயிட்டு அப்புறம் போவலாம்’ என்றார். போகிறார்கள். ரேணு வீட்டில் பிள்ளைகள் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள். இவனுக்கு ஒரு பாயைப் போட்டாள். உட்கார்ந்துக்கொண்டான். மாமா ரேணுவை சமையலறைக்குக் கூட்டிப்போய் ஏதோ பேசிவிட்டு கொஞ்சம் பணம் கொடுப்பது தெரிந்தது. திரும்ப மாமா வீட்டிற்கு வருகிறார்கள். இவனுக்கு சாப்பாடு போடச் சொல்கிறார். இலையை வைத்துக் கொண்டே, அத்தை, ‘ரேணு ஊட்டுல மாப்பிள்ளைக்கும் சேர்ந்துதானே சாப்பாடு நடந்திருக்கும்…’ என்கிறாள். ‘இந்த மாசமெல்லாம் மழையாம். வெள்ளம் வரத்தான் போகுது. நீங்களும் எறங்கத்தான் போறீங்க…அந்த கந்தசாமி போனப் பிறகு ரேணுவ நீங்க வச்சிகிட்ட மாதிரி, உங்களுக்குப் பிறகு எவனாவது என்னையும் வச்சிக்கப் போறான்’ என்று அத்தை புலம்பினாள். இரவு முடிந்ததும் காலையில், ஊருக்கு பஸ் ஏறினான், மாமாவிடம் வட்டிப் பணம் வாங்கமலேயே என்று கதை முடிகிறது.
‘பேயைக் காட்டுபவர்’ கதை: சுப்ரமணிய மாமா பேயைக் காட்டுவதாகச் சொல்லி ஊரில் நிறையப் பேரை மிரட்டிக் கொண்டிருந்ததால், இவன் பேயைப் பார்த்து விட வேண்டும் என்று மாமா வீட்டிற்குப் போவதில் கதைத் தொடங்குகிறது. ‘குளிக்கலையில்ல?..’ ‘இல்ல..’ ஒரு பீப் ஸ்டாலுக்குச் சென்று மாட்டுக்கறி சாப்பிட்டார்கள். இவனுக்கு கொமட்டியது. இரண்டு பஸ் மாறினார்கள். சிவன் மலையில் தேங்காய் பழம் வாங்கிக்கொண்டார். இடும்பன் கோவிலில் நுழைந்தார்கள். இவனுக்கு பயம் தொற்றியது. குளிக்காமல், மாட்டிக்கறி சாப்பிட்டுவிட்டு புண்ணிய ஸ்தலத்திற்கா? கோயிலிலிருந்து அடுத்து சுடுகாடு. மாமா குனிந்து சுடுகாட்டு மண்ணை எடுத்து, வெள்ளைத்துணியில் முடித்து இவனிடம் கொடுத்தார். ‘சரி. வீட்டுக்குப் போயி கதவ தொறந்து வச்சி தனியா படுக்கறது தான் பாக்கி’ என்று சொல்லி அவனை வீட்டிற்கு அழைத்துச் சென்றார் மாமா. விளக்கைப் போடவில்லை. திண்ணைப்படியோரம் அவனைப் படுக்கவைத்தார். வீதியில் நாய் ஒன்று கடந்தது அவனுக்கு நெஞ்சுக்குள் சுருக்கென்றது. கண்களை மூடினான். வீடு சுழன்றது போல் இருந்தது. மாமா திடீரென எழுந்தார். ‘பேய்…பேய்…பேய்..’ என அலறிக்கொண்டே தெருவுக்கு ஓடினார். சட்டென ஒரு புள்ளியில் மறைந்தவிட்டாரென்றும் இவன் நடுக்கத்தில் அப்படியே உறைந்து போய் உட்கார்ந்து கொண்டான் எனவும் கதை முடிகிறது.
சரி!
கதைச்சுருக்கங்களைப் படித்துவிட்டீர்கள். இப்பொழுது அதன் வாசிப்பு அனுபவங்களையும், சில கருத்தாக்கங்களையும் படியுங்கள்.
நிறமும் ஆழ்மன நிகழ்வும்
துர்க்குணம் பிடித்த கருப்பு காகம்
மூக்குத்தி காகம் கதையில் ‘காகம் ஒரு துர்க்குணம் பிடித்தப் பறவையாகவே சித்தரிக்கப்பட்டிருந்தது’ என்று ஓர் இடத்தில் எழுதுகிறார். அது சரிதான். பேய்படங்களில் எல்லாம் கருப்பான காகம் பேயாக வந்து அமரும். ஆங்கிலப்படங்களில் அதிகமாகப் பார்த்திருக்கிறேன். எங்க அம்மா, ‘போய் ஒரு பிடி சோத்தை அந்த காம்பவுண்டு செவுத்து மேல வச்சிட்டு வா….செத்துப் போன தாத்தா மாறி நம்ம உறவுக்காரங்க (காகங்கள்) வந்து சாப்புடுங்க’ என்று சொல்லுவாங்க. கூரை மேல காக்கா உட்கார்ந்து கத்துனா, ‘டேய்! ஒங்க வூட்டுக்கு விருந்தாடி வரப்போறாங்க’ என்று நண்பர்கள் கத்துவார்கள். நமது முன்னோர்களாகவும், விருந்தினர்களாகவும் பார்க்கப்படும் காகம், அது என்னவோ துர்க்குணம் படைத்த பறவையாகவும் நம் முன்னே வைக்கப்பட்டிருக்கிறது. வெள்ளையான கொக்கு அந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு ஆகவில்லை. ஒரு வாசகர் சொன்னார், ‘ஒழுங்கா இருந்தா காகத்தை சனி பகவானா கொண்டாடுவோம். இடையூறு செய்ற மாதிரி இருந்தா, சாகடிச்சி தொங்க விட்டுடுவோம்’ என்றார்.
இந்த நிறம் பற்றிய சிலச் சொற்றொடர்களை ஆசிரியர் வேறு சில கதைகளிலும் பயன் படுத்துகிறார். நம்மையும் அறியாமல் நம் ஆழ்மனதில் நிறம் பற்றிய எண்ணங்களும் அவைகள் ஏற்படுத்துகிற ஏற்றத்தாழ்வுகளும் வந்து ஒட்டிக்கொள்கின்றனவோ என்று ஓர் எண்ணம் எனக்குத் தோன்றியது.
குள்ளமும் கருப்பும்
நெட்டுக்கட்டு வீடு கதையில் பழனத்தம்மாளைப் பொண்ணுப் பார்க்க மாப்பிள்ளை வருகிறார். ‘மாப்பிள்ளை குள்ளமாக, கருப்பாக இருப்பதாக சொர்ணாத்தாளும் சின்னாத்தாளும்’ கேலிப் பேசிச் சிரிக்கிறார்கள் என்கிற காட்சி வருகிறது. மாப்பிள்ளைகள் குள்ளமாக கருப்பாக இருக்கக் கூடாதா?
கருப்பா சிவப்பா?
வெளி வாங்கும் காலம் கதையில் ராகு, நடேசன், மணி மூவரும் நண்பர்கள். அதில் ‘வெள்ளாடு ஓட்டிப் போகும் தாசிக்குறத்தி’ என்கிற பெண்ணோடு மூவருக்கும் நட்பு. ஒரு நாள் ராகு, ஆற்றங்கரையில் அவளைப் பார்க்கிறான். ‘கருத்த முகத்தில் மூக்குத்தி மின்னிற்று’ என்று எழுதுகிறார். அதைத் தொடர்ந்து அவன் அவளிடம், ‘டவுன்ல எத்தனையோ பொண்ணுகளப் பாத்துருக்கேன்…செவத்த அழகான பொண்ணுகள…ஆனா ஏனோ உன்னெய எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு’ என்று சொல்வதாக எழுதுகிறார். செவப்பாக இருந்தால் அழகா?. அதே கதையில் ராகு ஒரு டீச்சர் வீட்டிற்குச் செல்வான். அந்தக் காட்சியில், ‘சிவந்த தாட்டியான டீச்சரின் தோற்றத்தில் ஒரு வசீகரம் இருந்தது’ என்று எழுதுகிறார். ராகு அப்படி நினைக்கிறானா? அல்லது எழுத்தாளரே அப்படி நினைக்கிறாரா? அல்லது அதைப் படித்து விட்டு கடந்து போகும் என்னைப் போன்ற வாசகர்கள் ஆழ்மனதில் அது படிந்துவிட்டதா?
பிணம் தழுவியன் கதையில், இராஜகுமாரி, ‘சிவப்பாக லட்சணமாகப் பிறந்தது குழந்தை’ என்று எழுதுகிறார். மூளையின் தோளிலிருந்து இந்த நிறம் பற்றிய கருத்தாக்கங்களை எப்படிப் பிடுங்கி எறிவது?
பெண்களை வர்ணிக்கும் போது மட்டும்
கிணற்றில் குதித்தவர்கள் கதையில் பெண் பார்க்கப் போவார்கள். ‘அவரால் பெண்ணைச் சரியாகக்கூடப் பார்க்க முடியவில்லை. அனுமானத்தில் கருத்த நிறம் எனத் தெரிந்தது. இறங்கிய முகம் கூட’ என்று எழுதுகிறார். எனக்குத் தெரிந்து எந்த ஆண் கதை மாந்தரையும் நிறம் சொல்லி வர்ணனை செய்ததாக நினைவில்லை. ஆனால் பெண்களை வர்ணிக்கும் போது மட்டும் நிறம் வந்து விழுகிறது. இது இயல்பு தான் என்று கடந்து செல்ல முடியவில்லை. பிரச்னை ஆழமானது என்று நினைக்கிறேன்.
Black and White
நமக்கு என்ன சொல்லப்பட்டிருக்கிறது? யாரையாவது தண்டிக்க வேண்டுமா? அவர்களை Black Listல் சேர்த்து விட்டார்கள் என்று சொல். யாரையாவது பயமுறுத்த வேண்டுமா? அவர்கள் Black Mail பண்ணப்பட்டார்கள் என்று சொல். எதையாவது திருட்டுத்தனமாக விற்கவேண்டுமா? அதை Black Marketல் வித்து விட்டார்கள் என்று சொல். யாருடைய குணாதிசியத்தையும் குறைத்துச் சொல்லவேண்டுமா? அவர் வாழ்க்கையில் Black Mark விழுந்தது என்று சொல். யாராவது மயக்கமுற்று, சக்தியிழந்து விட்டார்களா? அவர்கள் Black Out ஆகிவிட்டார் என்று சொல். யாராவது ஒரு குழுவுக்கு அவப் பெயர் வாங்கித் தந்து விட்டார்களா? யார் அந்த Black Sheep என்று கேள். எல்லாவற்றையும் விழுங்கிச் செரி்க்கும் ஒன்றைப் பெயர் சொல்லி அழைக்க வேண்டுமா? அதனை Black Hole என்று கூறிவிடு. கெட்டதிற்கு மந்திரம் செய்வதை, Black Magic என்று அழை. கெட்ட சகுனமாய் ஏதாவது ஓர் இழப்பு ஏற்பட்ட நாளுக்கு Black Day என்று பெயர் வை. குரூர நகைச்சுவைக்கு Black Comedy என்று நாமம் சூட்டு.
இவைகளுக்கெல்லாம் மாற்றாக, சமாதானத்திற்கு காட்ட White Flag பயன்படுத்து. அமைதிக்கு White Dove படத்தை பயன்படுத்து. உயர்தர வேலைகளை White Collar Jobs என்று சொல்லு. உயர்தர அறிக்கையை White Paper (வெள்ளை அறிக்கை) என்று சொல்லு. சுத்தம் மற்றும் உயர்தர சேவையைக் குறிக்க White Glove Service என்று சொல்லு. மற்றவர்களைக் காயப்படுத்தாமல் சொல்லப்படும் பொய்யிக்கு White Lie என்று சொல்லு. நம்பிக்கை ஊட்டும் மனிதருக்கு அல்லது வெற்றிக்கு White Hope என்று சொல்லு. சமூகம் அங்கீகரிக்கும் மனிதர்கள் அல்லது பொருட்களின் வரிசைக்கு White List என்று சொல்லு
இவைகளையெல்லாம் யோசனை செய்துப் பார்க்கிறேன். அதிகாரத்தில் இருப்போர் சொற்களையும், சொற்றொடர்களையும், பழமொழிகளையும், சொலவடைகளையும் தங்களுக்குச் சாதகமாக உருவாக்கிக் கொண்டேயிருக்கிறார்கள். இல்லையா? எல்லாவற்றையும் கேள்வித் தீயில் புடம் போட்டு சொந்த பகுத்தறிவைப் பயன்படுத்திப் பார்க்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது என நான் நினைக்கிறேன் என என் நண்பரிடம் சொன்னேன். சாமானிய மக்களும் தங்கள் பண்பாட்டில், வழக்காறில் கட்டமைக்கும் அப்படிப்பட்ட சொற்களையும், சொற்றொடர்களையும், பழமொழிகளையும், சொலவடைகளையும், விடுகதைகளையும் சேகரம் செய்யவேண்டும். அவைகளை ஆய்வுக் கண்ணோட்டத்தோடு ஆய்ந்து, புரிந்து சமூக மாற்றத்திற்குப் பயன்படுத்த வேண்டும் என்று என் நண்பர் கூறினார்.
சினிமாப் படங்களில் (ஒரு சிலரை விட) ஹீரோயின்கள் வெள்ளையாகவே இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருந்துக்கொண்டு தான் இருக்கிறது. ஹீரோ எப்படி வேண்டுமென்றாலும் இருக்கலாம் என்பது கூட சமீபத்தில் தான் வந்திருக்கிறது. ஏன் இப்படி? பல நேரத்தில் நாமே ‘அவங்க நல்லா fairஆ அழகா இருப்பாங்க’ என்று சொல்வதன் பொருள் என்ன? என்ற பொருள் பதிந்த கேள்வியை ஒரு வாசகர் எழுப்பினார். நேரம் நிறைவு பெற்றதால், கூட்டம் முடிந்த பிறகு, ‘அதிகாரத்தில் இருந்த ஆங்கிலேயர்கள் வெள்ளையாக இருந்தார்கள். அதற்கு முன் அதிகாரத்தில் இருந்த மொகலாயர்கள் வெள்ளையாக இருந்தார்கள். ஆயிரக்கணக்கான வருடங்களாக, எப்பொழுதுமே அதிகாரத்தில் இருப்பவர்களோடு நெருக்கமாகவே இருந்த பிராமணர்கள் வெள்ளையாக இருந்தார்கள் ஆகவே, அதிகாரத்திற்கும் நிறத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கிறதாக கருதுகிறேன்’ என்று என்னிடம் தனியாகப் பகிர்ந்துக் கொண்டார் ஒரு வாசகர்.
பச்சை நிறம்
கருப்பு, வெள்ளை நிறங்கள் பற்றி மட்டுமல்ல. பச்சை நிறத்திற்கும் ஓர் பொருளைக் கொடுத்து வைத்திருக்கிறார்கள். மீட்பு கதையில் முஸ்லீம்கள் வாழும் பகுதியில், ‘பச்சை வர்ணம் அடித்த சுவர் கொண்ட வீடு சாய்புவினுடையது’ என்று எழுதுகிறார். இஸ்லாமிற்கும் எந்த வர்ணத்திற்கும் எந்த தொடர்புமில்லை. ஆனால் பச்சை நிறத்தோடு அவர்களைத் தொடர்பு படுத்துவது வழக்கமாகிவிட்டது என்று ஒரு நண்பர் கூறினார். சினிமா படங்களில் இஸ்லாமியர் வேடம் போட்டால் அவர்கள் பச்சை நிறத் துண்டு ஒன்றை முக்கோண வடிவத்தில் போடும் பழக்கம் ஒரு ஸ்டீரியோ டைப் தான் என்றார்.
பாலியல் பேதமும் பாவங்களும்
பெண்களும் ஐம்பூதங்களும்
முனிவிரட்டு கதையில் ‘சேந்து கிணற்றடியில் மட்டும் தண்ணீர் சேந்தும் பெண்கள் இருந்தனர்’ என்றும் நெட்டுக்கட்டு வீடு கதையில், ‘இரவெல்லாம் சேந்துக்கிணற்றில் பெண்கள் தண்ணி சேந்திக் கொண்டேயிருந்தார்கள்’ என்றும் எழுதுகிறார். பெண்கள் ஐம்பூதங்களோடும் நேரடித் தொடர்புக் கொண்டவர்களாகவும் ஆண்கள் கொஞ்சம் அந்நியப்பட்டு நிற்பதாகவுமே எனக்குத் தோன்றும். குழந்தை பிறந்தால், அதனைக் குளிப்பாட்டி, சீராட்டுவதோடு, மலம் கழித்தால் சுத்தம் பண்ணுவது வரை பெண்களே அருகில் இருப்பார்கள். ஒருவர் இறந்தால், பிணத்தின் அருகே அமர்ந்து ஒப்பாரி வைப்பதும் அவர்களே. நீரோடும், நிலத்தோடும், அடுப்போடும் அனைத்தோடும் பெண்கள் உறவாடுகிறார்கள். ஆண்கள் என்னதான் செய்கிறார்கள்?
ஆண்கள் சாமி கட்ட, பெண்கள் நீரை ஊற்ற
நெட்டுகட்டு வீடு கதையில் மருந்து எடுப்பவன் வந்து பூசை செய்வான். ‘பர்வதம் கவண்டச்சியும் மூன்று பெண்களும் நடையோரம் நின்று வேடிக்கைப் பார்த்தப்படியிருந்தனர்.’ என்று எழுதுகிறார். எங்கள் ஊரில், சிவராத்திரியன்று, ஓர் ஆண் தான் சாமி வேடம் தரித்து ஒவ்வொரு வீட்டிற்கும் வருவார். அப்பொழுது வீட்டுப் பெண்கள் தான் அவர் காலில் குடத்து தண்ணீர் ஊற்ற வேண்டும். அந்தக் காட்சியை மாற்றி யோசிக்கலாமா என்று என் நண்பர் கேட்டார். ‘ஊரில் ஒரு பெண்ணோ அல்லது பட்டியலினப் பெண்ணோ சாமி வேடம் போட்டு வர, குடும்பத்தில் உள்ள ஆண்கள் பயபக்தியாக அவரது காலில் தண்ணீர் ஊற்றினால் எப்படி இருக்கும்?’ என்று கேட்டார்.
பயமுறுத்தி வை
மருந்து எடுக்க வந்தவனால் முடியாமல், பாலக்காட்டிலிருந்து வேறு ஒருவனை அழைத்து வருவான். ‘அவனைப் பார்த்து பெண்கள் பயந்தனர்’ என்று எழுதுகிறார். பயமுறுத்தியே காரியத்தைச் சாதித்து வருகிறார்களோ? பயமே அவர்களின் முதலீடாக இருக்கிறது. அந்த முதலீட்டைப் போட்டு ‘அடிமைத்தனத்தை’ அறுவடை செய்கிறார்கள்.
வேலைப்பிரிவு இன்னும் உண்டா?
கடைசி கிராமத்திற்குப் போய்ப் பார்த்தால், ஆண்களுக்கென்று சில வேலைகளும், பெண்களுக்கென்று சில வேலைகளுமாக வேலைப்பிரிவு இருக்கிறது. கதையில் அந்த வருடம் மழை பெய்யும். கவுண்டர்கள் நிலத்தில் உழுவ, ‘பூங்கோடிப் பண்டாரச்சி கூடையில் சாப்பாடு சுமந்து வந்தாள்’ என்று எழுதுகிறார். இப்பொழுது நிறைய மாறியிருக்கிறது. ஆண்கள் உழுவ பெண்கள் உணவு சுமந்து வந்த காலம் 50, 60 களில் வந்த சினிமாக்களோடு போய்விட்டது. தற்போது தஞ்சை மாவட்டத்தில் என்ன நடக்கிறது தெரியுமா? யார் நாத்து நடுவது? யார் களைப் பறிப்பது? தமிழ் பேசாத மற்ற மாநிலத்தவர்கள் தான் நாத்து நடுகிறார்கள். களைப் பறிக்கிறார்கள். ஆந்திராவிலிருந்தும், பீகாரிலிருந்தும், மேற்கு வங்கத்திலிருந்தும் குடும்பம் குடும்பமாக வந்து, விவசாய வேலை செய்கிறார்கள். சரி யார் அறுவடை செய்வது? பெரிய கம்பெனிகளின் ராட்சச இயந்திரங்கள் மென்மையான நிலங்களை வன்புணர்வு செய்கின்றன. நம் கிராமத்து இளைஞர்கள் என்ன செய்கிறார்கள்? ஆற்றில் மண்ணைத் திருடுகிறார்கள். அதிகாலையிலேயே மது அருந்துகிறார்கள்.
பெண்களும் பேச்சுரிமையும்
சரி! பெண்கள் நிலைக்கு வருவோம். கிணற்றடியில் பர்வதம் கவுண்டச்சியும் பொன்னி வண்ணாத்தியும் ஏதோ பேசிக்கொண்டிருக்கிறார்கள். செல்லியக் கவுண்டர் வந்து செருமிகிறார். பெண்கள் பேச்சை நிறுத்திவிட்டு, வாயை மூடிக்கொண்டு, தங்கள் வேலையை தொடர்கிறார்கள். பெண்களுக்கு பேச்சுரிமை வந்து விட்டதா? எத்தனை சதவீதப் பெண்களுக்கு பேச்சுரிமை வந்திருக்கிறது? கிராமத்துப் பஞ்சாயத்துகளில் ஆண்கள் தான் கூடுகிறார்கள். பேசுகிறார்கள்.
பெண்களும் மறுமணமும்
பெண்களின் மறுதிருமணத்திற்கு எவ்வளவு சுதந்திரம் இருக்கிறது? கைம்பெண்களின் நிலைமை எப்படி இருக்கிறது? நெட்டுகட்டு வீடு கதையிலே, சாமிக்கு சாத்துவதற்காக, சாத்து துணி வாங்க பண்டாரம், செல்லியக்கவுண்டர் வீட்டுக்கு வருகிறார். கவுண்டர் தன் இரண்டு மாப்பிள்ளைகளோடு திண்ணையில் பேசிக்கொண்டிருக்கிறார். பழனத்தம்மாள் ஒரு கைம்பெண். பழனத்தம்மாளின் சகோதரிகள் வேலையாக இருக்கிறார்கள். பழனத்தம்மாளின் தாய் பர்வதம் கவுண்டச்சி குளித்துக் கொண்டிருக்கிறார். ‘அந்த சாத்து துணிய எடுத்துட்டு வாங்க’ என்று செல்லியக்கவுண்டர் ஆணையிடுகிறார். குளித்துக்கொண்டிருக்கும் பர்வதம் கவுண்டச்சி ‘துணிய எடுத்துக்கொடு’ என்றதும் பழனத்தம்மாள் கொண்டு போய் கொடுக்கிறார். பண்டாரம் திடுக்கிட, செல்லியக் கவுண்டர் பழனத்தம்மாளின் கன்னத்தில் ஓங்கி அறைகிறார். ‘அந்த முண்டைக்குத்தான் அறிவில்லன்னா உங்களுக்கெல்லாம் எங்கடி போச்சி அறிவு?’ என்று வீட்டில் உள்ள எல்லாப் பெண்களையும் பார்த்து கத்துகிறார். பழனத்தம்மாள் தூக்குப் போட்டுச் சாகிறாள். எப்பொழுது இந்த கருத்தாக்கத்தைத் தூக்கில் போடுவார்கள்? நம்ம ஊர்ல என்னவெல்லாம் நடக்குது. அப்பாவே ஒரு கைம்பெண்ணை இப்படி நடத்துகிறார் என்று ஒரு வாசகர் வருத்தப்பட்டார்.
ஆண்களின் ஒழுக்கம்
வெளி வாங்கும் காலம் கதையில் ஆண்களின் ஒழுக்கம் பற்றிப் பேசப்படுகிறது. எனது இருபதுகளில் தஞ்சாவூர் மாவட்ட மேற்குப் பகுதியில் சில கிராமங்களில் முறைசாராக் கல்விப் பணியில் இருந்தேன். அப்பொழுது கிராமங்களில் தங்கி பணியாற்றிக்கொண்டிருந்தோம். சினிமாக்களில் நடக்கும் ஊர்ப்பஞ்சாயத்துகளை நேரில் பார்க்கும் வாய்ப்புகள் இருக்கும். ஊர்ப்பெருசுகள் வெள்ளையும் சொள்ளையுமாக பிரச்னைகளுக்கு தீர்வு சொல்லிக்கொண்டிருப்பார்கள். அப்படி ஒரு பஞ்சாயத்து முடிந்த மறுதினம் ஓர் அம்மா நாலு தெரு நாறும் வகையில் பஞ்சாயத்து தலைவர் ஒருவரை திட்டித் தீர்த்துக்கொண்டிருந்தாள். ‘என்ன இப்படி திட்றாங்க…அவர் வீட்டுக்கு வெளிய வந்து ஒன்னுமே கேக்கமாட்டேங்குறாறு’ என்று பத்தாம் பசலியாக என் நண்பரிடம் நான் கேட்டேன். ‘ம்க்கும்! வெளிய வந்தா இன்னும் நாறும். அந்த அம்மாவோட அவருக்கு இருக்கும் பழக்கம் அப்படி’ என்றதும் தலைவரைப்பற்றிய என் கோலப்பொடி சித்திரத்தில் ஒரு குடத்து தண்ணீரை ஊற்றி கலைத்தார் என் நண்பர். பிறகு வரிசையாக ஊரில் உள்ள ஒவ்வொரு ஆம்பளையைப் பற்றியும், சின்ன பெட்டிக்கடை வைத்திருந்த முத்தம்மாவிடம் ஒரு ரூபா கொடுத்து சிறிய பையன்கள் கேட்டு வந்து எங்களிடம் சொல்லுவார்கள். இந்தக் கதைப் படிக்கும் போது அந்த அம்மா தூற்றி வாரி இறைத்த சேறு சிதறியது தான் என் காதில் கேட்டது. கதை நாயகனின் அப்பா, ‘அந்த டீச்சரோட என்னடா பழக்கம்’ என்று சாதாரணமா பழகிக்கொண்டிருந்த தன் மகனைக் கண்டிக்க, பிறகு தான் தெரிந்தது தன் நண்பனின் கல்யாணமான அம்மாவோடு தன் அப்பா வைத்திருந்த உறவு.
நான் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கும் போது Ethics பற்றிய ஒரு பாடம் இருந்தது. இவனுக்கு தப்பு என்று வரையறுத்த விடயம் அவனுக்குச் சரியாக இருக்கிறது. அவன் தப்பு என்று வாழ்ந்துக்கொண்டிருந்த முறை இவனுக்குத் தவறாக இருக்கிறது. இருந்தாலும் மனித குலத்திற்குப் பொதுவான அறம் இருக்க முடியுமா? மனிதகுலம் மட்டுமில்லாது அனைத்து உயிர்களின் நலத்திற்குமான பொது அறம் இருக்க முடியுமா?
பிணம் தழுவியவன் கதையில், நிராசையோடு இறந்த போன கன்னிப் பெண்களை தழுவுவதற்கு என்று ஒரு கூட்டம் இருந்ததாக குறிப்பிடுகிறார் ஆசிரியர். அந்தக் கதையில் ஒருவன் கேள்வி எழுப்புவான். கன்னிப் பெண்களைத் தழுவுவது சரி, ‘அதே மாதிரி கல்யாணமாகாத ஆண்கள் இறந்து விட்டால்…’ என்று கேட்பான். அதற்கு பதில், ‘ஆண்களின் ஒழுக்கத்தின் மேல் அப்போதைய மக்களுக்கே நம்பிக்கையில்லை போலும்…அவர்களை யாரும் தழுவுவதில்லை…’ என்று வருகிறது. அந்தக் கதையில் ரெட்டை சாரட் குதிரை வண்டி வைத்திருக்கிற பட்டக்காரர் இருக்கிறார். பொம்மைக் கூத்து நடத்தும் நாடோடி கூட்டம் ஒன்று இருக்கிறது. அதில் ஒரு இளைஞனும் ஒரு இளம் பெண்ணும் மட்டும் அன்று கூடாரத்தில் இருக்கிறார்கள். பட்டக்காரர் சாரட் குதிரை வண்டியில் இரண்டு ஆட்களை அழைத்து வருகிறார். கூடாரத்தில் இருந்த இளைஞனை வெளியே அழைத்து சாராயம் குடிக்க வைத்துவிட்டு, கூத்து கட்டும் அந்தப் பெண்ணோடு பாலியல் வன்புணர்வு செய்கிறார். அதே இளைஞன் சில காலத்திற்குப் பிறகு பட்டக்காரர் இருக்கும் ஊருக்குப் பூசாரியாக வருகிறான். இறந்து போன ஒரு ராஜகுமாரியின் உடலைத் தழுவுவதாக கனவு காண்கிறான். பட்டக்காரர் பெண்ணுக்கு பித்து பிடித்துவிட்டதென பூசாரியை அழைக்கிறார்கள். அப்பொழுது தான் பழுதாகி நின்ற அந்த ரெட்டை சாரட் குதிரை வண்டியைக் கவனிக்கிறான். பட்டக்காரர் பெண் இறந்து போகிறாள். அவள் உடலைத் தோண்டி எடுத்து பூசாரி கூடி இறந்து போவதாகக் கதை. மறுபடியும் பட்டக்காரர் போன்ற ஆண்களின் ஒழுக்கம் கேள்விக்குறியாக்கப்படுகிறது.
இரண்டாம் நிலை
கிணற்றில் குதித்தவர்கள் கதையில் ரெங்கண்ணக் கவுண்டருக்கு ராஜவெட்டுக்காரன் கிணறு வெட்டிக்கொண்டிருப்பான். குண்டு வைத்ததில் அடிபட்டு அவனை கட்டில் போட்டு தூக்குவார்கள். அவனது மனைவி ஒப்பாரி வைத்து அழுவாள். அப்பொழுது ரெங்கண்ணக் கவுண்டர், ‘ புருஷந் தண்ணி போட்டா ஞாயம். பொண்டாட்டியும் சேந்து தண்ணி போட்டு ஆடினா மயிரப் புடுங்குமா…’ என்று கத்துவார். அது என்ன? ஆம்பிளைகள் தண்ணி போடுவது நியாயம்? ஏன் பெண்கள் சரக்கு அடித்தால் உள்ளே இறங்காதா? தண்ணி அடிப்பதே நியாயமா? தண்ணி அடிப்பதில் என்ன வேறுபாடு?
ஆண் வைத்துக்கொண்டால் ஓகே
மழைக்காலம் கதையில் போன வருடம் அடித்த வெள்ளத்தில் கந்தசாமி அடித்துச் செல்லப்படுகிறான். அவன் மனைவி ரேணு, சிறு பிள்ளைகளுடன் தனித்து விடப்படுகிறாள். ஊர் வெள்ளத்தை அடைக்கப் போகும் இவன் மாமா ரேணு வீட்டுக்குப் போகிறார். அவள் சமையலறைக்குச் சென்று பேசுகிறார். ரேணு அழுது கொண்டே ஏதோ சொல்கிறாள். கையில் பணம் கொடுக்கிறார். வீட்டுக்குத் திரும்பியதும் அத்தை, ‘போக வேண்டாம்னா கேக்க மாட்டேங்குறீங்க. அடுத்த வெள்ளத்துல நீங்க போயிட்டா, என்னை எவனாவது வச்சுக்கப் போறான்’ னு அழுதுகிட்டே சொல்கிறாள். மாமாவுக்குப் பதில் அத்தை அப்படி ஓர் உறவை வைத்துக்கொண்டால் மாமா’வின் வசனம் என்னவா இருக்கும்? ஆம்பளன்னா அப்படி இப்படி இருக்கத்தான் செய்வாங்க…என்று எங்கள் ஊரில் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். எது சரி?
சாதியக் கொடுமைகளும் சாமானியர்களும்
உட்ருங்கோ!… உட்ருங்கடா!!…
முனிவிரட்டு கதை. பெரிய வீட்டுக்காரர் ஆணையிடுகிறார். நிகழ்வு ‘ஒழுங்காக’ நடப்பதை அவ்வப்போது உறுதிப் படுத்திக் கொள்கிறார். விரதம் இருப்பதும், அடி வாங்குவதும், வேடம் போடுவதும் மாராண்டி. மாராண்டி என்ற பெயரை அந்தக் கதாபாத்திரத்திற்கு கொடுக்கும் போது அவர் எந்த சாதியிலிருந்து வந்திருக்கக் கூடும் என்று வாசகர் புரிந்துக் கொள்கிறார். பெரிய வீட்டுக்காரரைப் பற்றிச் சொல்லும் போது, ‘திரும்பிப் போனார்’ என்று ‘ர்’ விகுதியுடன் விளிப்பதும், மாராண்டியைப் பற்றிச் சொல்லும் போது, ‘கோயிலுக்குச் சென்றான்’ என்று ‘ன்’ விகுதியுடன் விளிப்பதும் சாதாரணமாகப் படிக்கும் போது ‘அது தானே இயல்பு’ என்று மேலோட்டமாக வாசகர் போய்விட வாய்ப்பிருக்கிறது. ஆய்வுக் கண்ணோட்டத்தோடு வாசிக்கும் போது ‘ஏன் அந்த வேறுபாடு’ என்று கேள்விக் கேட்கத் தோன்றுகிறது. (இப்படி ஆய்வுக் கண்ணோட்டத்தை வளர்ப்பது தான் வாசகர் வட்டங்கள் செய்கிற வேலை). ‘பெரியவீட்டுக்காரன் திரும்பிப் போனான் என்றும் மாராண்டி கோயிலுக்குச் சென்றார்’ என்றும் மனதிற்குள் ஒரு முறைப் படித்துப் பார்த்துக் கொண்டேன்.
மாராண்டி முனியாக இருக்கும் போது சாட்டையால் அடி வாங்கி, ‘நா ஓடிப்போறேன். என்னை உட்ருங்கோ’ எனச் சொல்லிக்கொண்டே ஓடிப்போவான். உயர்வான சமூகம் என்று சொல்லப்படுகிற சமூகத்திலிருந்து விரதம் இருந்து, கோழிக்குஞ்சை உயிரோடு கடித்து, இரத்தம் உறிஞ்சி, சாட்டையால் அடிவாங்கி முனி வேடம் போடுவதற்கு ஆள் வருமா? அப்படி வந்தால் ‘நா ஓடிப்போறேன். என்னை உட்ருங்கடா’ என்று அந்தக் கதாபாத்திரம் சொல்லியிருக்குமா? என்று ஒரு வாசகர் கேட்டார். அறிவார்ந்த கேள்வி தானே!
வன்கொடுமையா? மென்கொடுமையா?
ஆதாயவாதிகள் கதையில் ஊர்க்கவுண்டர், அழகிரி மூப்பனையும் கருமுட்டியையும் கோழித் திருடப் பயன்படுத்துகிறார். அவர்களும் அவருக்காக, கவுண்டர்கள் வீட்டிலிருந்தும், சக்கிலியர்கள் வீட்டிலிருந்தும் கோழிகளைப் பிடித்து வந்து வறுத்துக் கொடுக்கிறார்கள். மேல்நாட்டு சரக்கைக் குடித்துவிட்டு, அவைகள் அவருடைய சகலையின் பிராய்லர் பண்ணையிலிருந்து வந்ததாகப் பொய் சொல்கிறார். அவர் தான் கோழித்திருட்டிற்கு அடிப்படைக் காரணம் என்று தெரியாமல், ஊர்க்காரர்கள் அவரிடமேப் போய் முறையிட, ‘நீங்க திருடனைப் புடிச்சி குடுங்க, நான் அவனை போலிசுல ஒப்படைக்கிறேன்’ என்று சவடால் பேசுகிறார். திருடர்களைப் பிடிக்க முடியவில்லை. தொடர்ந்து கோழிகள் திருட்டு போகின்றன. அதிகாரத்தில் இருப்பவர்கள், அதிகாரமற்றவர்களைப் பயன்படுத்தி, சொகுசு வாழ்க்கை வாழ்வது அந்த ஊரில் மட்டும் தான் நடக்கிறதா? பிறகு ஒரு நாள் அவருக்காக கோழிப் பிடித்துக் கொடுப்பவர்களை போலீஸ் பிடித்துச் செல்கிறது. அவர்கள் திருடர்களாம். ஊர்க்கவுண்டருக்கு என்ன பெயர்? அவர்களை ஜாமீன் எடுக்க முயல்பவர்களைத் தடுத்துவிடுகிறார். இது என்ன நியாயம்? சக மனிதர்களைத் தன்னை விட தாழ்ந்தவன் என்று சொல்லி, அவர்களது ஏழ்மையைப் பயன்படுத்தி அவர்களை அறமற்ற செயல்களில் ஈடுபடுத்துவதற்கு என்ன பெயர்? இது சாதிய வன்கொடுமையா? மென்கொடுமையா? ‘சாதிய அடக்குமுறைகளை பார்த்திருக்கிறோம். சாதிய வன்முறைகளை, கொலைகளை நான் நேரில் பார்த்திருக்கிறேன்’ என்று ஒரு வாசகர் கூறினார்.
கொங்கு மண்டல சாதிய வரலாறு
கிருஷ்ண தேவராயர் தமிழகத்திற்கு வந்த பொழுது, அவருடைய ராஜ்ய நிர்வாகத்துக்கு உதவி செய்யும் வகையில் பல்வேறு படிநிலையில் ஆந்திராவிலிருந்து மக்கள் வந்தார்கள். தமிழ் கலந்து தெலுங்குப் பேசுவார்கள். சக்கிலி வளவு, பறை வளவு என்றப் பிரிவுகள் இன்றைக்கும் இருக்கின்றன என்று கொங்கு மண்டலத்திலிருந்து வந்த வாசகர் விளக்கினார். அந்தத் தெருவிலிருந்து வருவோர், வீட்டிற்கு வந்து தண்ணீர் கேட்டால், பாத்திரங்களில் கொடுக்கக்கூடாது என்றும் அவர்கள் இரண்டு கைகளை விரித்துக் கொள்வார்கள், அப்படியே ஊற்றவேண்டும் என்றும் தன் அனுபவத்தைத் தொடர்ந்தார். ‘நாங்க நீட்டிக்கனும். நீங்க ஊத்தனும் சாமி’ என்று சொல்வார்கள் என்றார். கொத்தடிமை முறையும் இருந்தது. ‘நான் பெரிய கொம்பு’ என்று நினைத்துக் கொண்டிருக்கும், நிலம் இருக்கும் கவுண்டர்கள் வழக்கமாகக் கஷ்டப்படமாட்டார்கள். ஆனால் மழை இல்லாமல் போனால் அவர்கள் கதியும் அதோ கதி தான். பல கதைகளில் கதாசிரியர் அதைச் சுட்டிக்காண்பிக்கிறார் என ஒரு வாசகர் விளம்பினார்.
மத நம்பிக்கைகளும் மனப்பிறழ்வுகளும்
கோயிலும் வருணங்களும்
முனிவிரட்டு கதையில், முனி அப்புச்சியை நினைக்காததே பருவமழை பொய்த்ததற்கு காரணம் என்று ஊர்ச்சனங்கள் நம்புவதாக கதையில் சொல்லப்படுகிறது. தனிநபர் உயிருக்கோ சமூகத்தின் நலத்திற்கோ ஆபத்து என்று சொல்லியே கோயிலுக்கு அழைத்துவரப்படுகிறார்கள். ஒரு கோயிலின் வேலை ‘நீ அந்த ஆள். உன் கடமை அது. நான் இந்த ஆள். என் வேலை இது’ என்று அடிக்கடி நினைவுப்படுத்தி, ‘ஏற்ற இறக்கமாக’ இருக்கும் நிலையை மாற்றிவிடாதே என நினைவு படுத்துவதே என நினைக்கிறேன். அவர் அது வரை உள்ளே போகலாம், இவர் இதற்கு மேலே போகக் கூடாது என்ற வரையறையை உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கின்றன கோயில்கள். மக்கள் பெருங்கூட்டமாகக் கோயிலுக்கு வருகிறார்கள். போகும் போது சிறு சிறு குழுக்களாகப் பிரிந்துப் போகிறார்கள்.
கோழிக்குஞ்சை உயிரோடு முனியின் வாயில் திணிக்கிறார்கள். ‘முனி நறநறவென்று அதன் குரல்வளையைக் கடித்து ரத்தம் குடித்தது.’ என்று எழுதுகிறார். அப்படிச் செய்தால் வைரஸ் கிருமிகள் வராதா? என ஒருவர் கேள்வி எழுப்பினார். பதில் என்னவாக இருக்கும்?
சிறு குழந்தை முதலே ‘(மூட) நம்பிக்கைகளை’ மனதில் விதைக்கிறார்கள் என்று ஒருவர் விசனப்பட்டார். ஒரு கோயில் சடங்கு ஒரு குழந்தையை எப்படி பாதிக்கிறது என்று எப்பொழுதாவது யோசித்திருக்கிறோமா? என்று ஒரு வாசகர் தன் கருத்துரை சமயத்தில் கேட்டார். ‘நானெல்லாம் முனியை நேரில் பாத்தவன். அப்படி பாக்கக் கூடாதுன்னு சொல்வாங்க. ஆனா எனக்கு ஒன்னும் ஆகல’ என்றார் ஒரு வாசகர் தொடர்ந்தார். ‘ஆணி செருப்புல நிக்கும் முனி. ஒரே ஆணியை வச்சி அது மேல நிக்கட்டுமே என்று கேட்டதால் முதுகில் மொத்து விழுந்தது’ என்றார்.
ஜோசியமும் நம்பிக்கைகளும்
காற்றுக்காலம் கதையில் பல ஜோசியர்கள் வந்து நீர் இருக்கும் இடத்தைக் காண்பிப்பார்கள். ஒருவர் தேங்காய் உருட்டிக் காண்பிப்பார். இன்னொருவர் தங்கச் சங்கிலியை சுழற்றிக் காண்பிப்பார். மற்றொருவர் ஊஞ்சவிளாறை இழுத்துப்பிடித்துக் காண்பிப்பார். ஒருத்தர் சயனம் சொல்வார். இன்னொருத்தர் சாமி கேட்டுச் சொல்வார். மற்றொருவர் ஜாதகம் பார்த்துச் சொல்வார். ஆனால் அந்த இடத்தில் ஐந்நூறு அடிக்கு போர் போட்டும் தண்ணீர் வராது. எனக்குத் தெரிந்து பராம்பரியமாக கரையான் புற்று இருக்கும் இடத்தில் நீரோட்டம் இருப்பதாகச் சொல்வார்கள். என் தாத்தா, ‘தம்பி! பசுமாடு ஒக்காந்து அசை போடுற எடத்துல நீரோட்டம் இருக்கும்பா. அத்தி மரம், நாவ மரம், மருதம் இல்ல வேம்பு இருக்குற எடத்துலயும் இருக்கும்’ என்பார். ஒரு காணொளிப் பார்த்தேன். அதில் தேங்காயின் உள்ளே இருக்கும் தண்ணீர் இப்படி அப்படி ஆடுவதால் தான் அது படுக்கை நிலையிலோ, நிமிர்ந்த நிலையிலோ இருக்கிறது. நிலத்தடி நீரோட்டத்திற்கும் அதற்கும் சம்பந்தமில்லை என்று அந்தக் காணொளியில் அவர் சொல்கிறார். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பேய்
பேயைக் காட்டுபவர் கதையில், பேயைப் பார்த்துவிட வேண்டும் என்று கேட்ட இவனை சுப்பரமணிய மாமா குளிக்காமல் வரச் சொல்கிறார். மாட்டுக்கறி சாப்பிடவைத்து, மலையேறி கோயிலுக்குப் போக வைக்கிறார். பிறகு சுடுகாட்டிற்குச் சென்று ஒரு வெள்ளைத் துணியில் சுடுகாட்டு மண்ணை எடுத்து அவனிடம் கொடுத்து வீட்டிற்கு அழைத்து வருகிறார். இருட்டில் தனியாகத் தூங்கும் போது, ‘பேய், பேய்’ எனக் கத்திக் கொண்டு மாமா ஓடி மறைகிறார். இவன் அதிர்ந்து போய் உட்கார்ந்திருக்கிறான். கடைசி வரையில் மாமா இது தான் பேய் எனக் காட்டவேயில்லை. ஒவ்வொரு செயல் செய்யும் போதும், அவனது மனசுக்குள் நடக்கிற உள்ளுணர்வும் போராட்டமும் கதையில் சொல்லப்படுகிறது. அது தான் பேயா? கதையாசிரியரைத்தான் கேட்க வேண்டும். கதையாசிரியராவது பேயைக் காட்டுவாரா?
சூழலியல் விவரிப்பும் சூழும் அபாயங்களும்
வௌவால்கள்
‘சரிந்த தட்டோடுக் கூரைகளின் மேலே சிறுசிறு வௌவால்கள் அலைவது…’ என்று எழுதுகிறார். சுமார் 50 ஏக்கரில், தஞ்சாவூரில் நாயக்க மன்னர்களாலும், மராட்டிய மன்னர்களாலும் கட்டப்பட்ட அரண்மனை உள்ளது. அதில் ஏழு அடுக்குக் கொண்ட ஆயுத கோபுரமும் மணி கோபுரமும் பல்வகை மரங்களும் உள்ளன. பல ஆயிரக்கணக்கான பழந்தின்னி வௌவால்கள் தங்கியிருப்பதை நான் சிறுவயதிலிருந்தே பார்த்து வந்திருக்கிறேன். ஆனால் அவைகள் மடமடவென அழிந்துக் கொண்டிருக்கின்றன. கதைகளில் மட்டும் வௌவால்கள் வந்தால் போதுமா?
நீந்துவனவும் பறப்பனவும்
‘ஸ்படிகம் போல் தெளிந்த பிரவாகத்தில் சிப்பிலி மீன்கள் பிரளியடித்தன. நீர் அருந்த வந்த ஆள்காட்டி குருவிகள் ஆள்வாசனைக் கண்டதும் தூரப் பறந்து போயிற்று’ என்று எழுதுகிறார். ‘வங்கு மேலிருந்த நண்டுகள் உள்ளிழுத்துக் கொண்டன. மேய்ந்த கொக்குக்கூட்டம் நகர்ந்து உட்கார்ந்தன.’ என்று தொடர்கிறார். ‘பனையில் மரங்கொத்தி மௌனமாக உட்கார்ந்திருந்தது. ஊரின் மேல் புறாக்கள் வட்டமடித்துக் கொண்டிருந்தன.’ என்று வர்ணிக்கிறார்.
நீடாமங்கலத்தில் எங்கள் வீட்டின் பின் புறத்தில் ஒரு குளம் இருக்கிறது. காவிரியின் கிளை ஆறுகளில் ஒன்றான வெண்ணாற்றில் இருந்து மூன்று தலைப்பு என்ற இடத்திலிருந்து கோரையாறு பிரியும். நீடாமங்கலத்திலிருந்து முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள் வரை நீளும். அதில் வரும் மீன்கள் எங்கள் குளத்திற்கும் வரும். கெண்டை மீன்களும் கெலுத்தி மீன்களும் நீந்தும் அழகைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். எங்கள் அப்பா காலத்தில் மீன்கள் வரத்து நிறைய இருக்கும். நாட்டு நண்டுகளும், தவளைகளும், மீன் கொத்திக் குருவிகளும், பெயர் தெரியாத பூச்சிகளும் குளத்தில் இருக்கும். பச்சை நிற வயலில் வெள்ளை நிறக் கொக்குகளைப் பார்க்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
அறுபதுகளில் ‘பசுமைப்புரட்சி’ என்ற பெயரில் நடந்த விவசாயக் கொடுமையில், செயற்கை இரசாயன உரங்கள் அத்தனை உயிரனங்களையும் அழித்து விட்டன. இப்பொழுது பேருக்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக சில அலைந்துக் கொண்டிருக்கின்றன. உங்களுக்கும் இந்தக் கவலை இருக்கும் என்று நினைக்கிறேன்.
‘புறவெளியில் செம்போத்து குரல் கொடுத்தவண்ணம் இருந்தது’ என்று முனிவிரட்டு கதையில் எழுதுகிறார். அதன் சிறகு ஆரஞ்சு நிற சிறகுகளும், குண்டுமணியைப் போல செஞ்சிவப்பும் கருமணியும் சேர்ந்த கண்களும் அதற்கு அப்படிப்பட்ட ஒரு பெயரைக் கொடுத்திருக்கிறது. கருமையும் மயில் நீலமும் கொண்ட உடலும் ஆரஞ்சும் சிவப்பும் தெறித்த நெற்றியும் செம்போத்து அழகு சேர்த்திருக்கிறது. எங்கள் வீட்டிற்கு முன்னால் உள்ள கொய்யா மரத்திற்கு அரிதாக வந்து அமரும். பழங்களை உண்டு விதைகளைத் தூவும் இயற்கை விவசாயியை காப்பாற்ற வேண்டாமா?
மழை
காற்றுக்காலம் கதையில் ஒரு காட்சி. முப்போகமும் (கார்மழை, கோடை மழை, பருவமழை) பெய்து நிலம் சொத சொதவென்றாகிவிடுகிறது. செம்மறியாடுகள் வாய் சப்பைக் கண்டு இறந்து போகின்றன. வருண பகவானிடம் வேண்டி கோடைக்காலத்தில் மழை வேண்டாம் என்று வரம் வாங்கிக்கொள்கின்றனர். அதன் பிறகு எங்கும் புழுதி. கோடைக்காலத்தில் மழையே பெய்வதில்லை. மழையும் பொய்த்து, கிணறும் வறண்டு, போர் போடுவதிலும் தோல்விக் கண்டு, அவன் காளைக் கன்றை விற்க, பிறகு பால் கறக்கும் பசுக்களை விற்க, ஆடுகளை விற்றும், கடனைக் கட்டமுடியாமல் தவிக்கிறான் என்று கதை. ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது எவ்வளவு உண்மை! நான் சிறு பிள்ளையாக இருக்கும் போது, வருடா வருடம், தஞ்சாவூரிலிருந்து திருவாரூர் வழியாக வேளாங்கண்ணிப் போவோம். அப்பொழுது வழியெங்கும் ஏற்றம் வைத்து இறைப்பர். வாய்க்கால் வழிந்தோடும். குளங்கள் நிரம்பி வழியும். ஆறுகள் அலை மோதும். வடுவூர் ஏரி கடல் போல் இருக்கும். இப்பொழுது பயணித்தால் கண்ணில் தான் நீர் வருகிறது.
உயிர்மநேயமும் உணர்வின்மையும்
மகளும் குருவிக்குஞ்சுகளும்
தாமரைநாச்சி கதையில் தாமரைநாச்சி ஒரு மனநலம் குன்றியவர். அவருக்கு மூன்று அக்காக்கள். சரஸ்வதி அக்காவைப் பார்த்துப் போகும் நாலாவது மாப்பிள்ளை, ‘பையனில்லாத ஊடு, கடைசி காலத்துல இதெய (தாமரைநாச்சிய) ஆரு வெச்சுக் காப்பாத்துவா’ என்று சொல்லிவிட்டு போய்விட்டான். தாமரைநாச்சி அப்படிப் பிறந்ததற்கு அவள் காரணம் இல்லையே! கூடுதலாக ஒரு கவளம் சோறு கொடுத்து, ஒரு முழம் துணி எடுத்துக் கொடுக்க முடியாதா? கொடுத்தல் தானே வாழ்க்கை. குளம் தன் மீன்களை தின்கிறதா? மரம் தன் பழங்களை உண்ணுகிறதா? கொடுத்தல் தானே வாழ்க்கை. மனிதநேயம் எங்கே போனது என்று வாசகர் ஒருவர் மனமுருகினார். தாமரை நாச்சி போல மனநலம் குன்றியிருக்கும் சிலரை ‘கிறுக்கு’ என்று சொல்லும் போது சங்கடமாக இருந்திருக்கிறது.
அதே கதையில் மணியக்காரர் (தாமரைநாச்சியின் தந்தை) ஓட்டு வீட்டில் ஏறி, அங்கேயிருந்த அழுக்குவண்ணான் குருவிக் குஞ்சுகளை தாயிடமிருந்து பிரித்து தூக்கி எறிவார். பூனை கவ்விக்கொண்டு போகும்.
நம்பிக்கை
மீட்பு கதையில் ஆடு விற்கும் கவுண்டர், சாயபுவின் மகன் இஸ்மாயிலிடம் ஆடுகளை ஓட்டிவிடுவார். சில நேரம் கையில் காசு கொடுத்துவிடுவான். சிலநேரம் விற்றபிறகு ஓரிரு நாட்களில் பணம் கொடுப்பான். அவனுடைய தங்கைகளுக்குத் திருமணம் நடக்கப் போகும் போது ஒரு மாதம் காத்திருக்கச் சொன்னான். கவுண்டரும் அவன் மேல் நம்பிக்கை வைத்து ஆடுகளை அனுப்பிக்கொண்டிருந்தார். இப்படி ஒருவர் மேல் ஒருவர் வைக்கும் நம்பிக்கை, குடும்ப உறவுகளிலும், உறவினர் மத்தியிலும், நண்பர்கள் இடையிலும், பணியாளர்கள் ஊடேயும், வியாபாரத்திலும், அரசியலிலும் இருக்கவேண்டும். இல்லையா? என்ன பதில் சொல்லுங்கள். இப்பொழுது அந்த நம்பிக்கை இல்லை என்று சொல்கிறீர்களா? எங்கே போனது? யோசித்துச் சொல்லுங்கள்.
வெடிகுண்டு
கொங்கு மண்டலப் பகுதிகளிலேயே இவருடைய எல்லாக் கதைகளும் புழங்குகிறது. ஆடு விற்கும் கவுண்டர், சாயபுவிடமும் அவரது மகன் இஸ்மாயிலிடமும் நம்பிக்கையாக தொழில் செய்து வருகிறார். ஆனால் ஒரு குண்டு வெடிப்பு எல்லாவற்றையும் மாற்றி விடுகிறது. நன்கு தொழில் செய்து கொண்டிருந்த கவுண்டர் கடன்காரர் ஆகிறார். அவரது இரண்டு மகள்களும் ‘கருக்கும் வெயிலில் தேங்காய் எடுக்கும்’ வேலைக்குச் சென்று பிழைக்க வேண்டியிருக்கிறது. சாயபு ஊரை விட்டு ஓடிப்போய் பிறகு ஆறு மாசத்திற்குப் பிறகு வீட்டிற்கு வருகிறார். சாயபுவின் மகன் இஸ்மாயில் காணவேயில்லை. குண்டுவெடிப்பில் இறந்துகூட போயிருக்கலாம் என்று சாயபு சொல்கிறார். சாயபுவின் இரண்டு மகள்களின் கல்யாணம் நின்று போகிறது. வெடிகுண்டுக்கும் பேசத் தெரிந்தால், ‘டேய் முட்டாப் பசங்களா! நீங்க எல்லாம் மனுஷங்கதானா? எங்கடா ஒங்க அறிவு போச்சி’ என்று கேட்குமோ? ஒரு வாசகர் சொன்னார் ‘கொங்கு மண்டல கதைகளாக இவர் எழுதவதால் இந்தக் குண்டு வெடிப்பை கோயமுத்தார் குண்டு வெடிப்போடு தான் இணைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது’ என்றார். பலரும் இதை ஆமோதித்தார்கள்.
கதை உத்திகள்
இழப்பும் இறப்பும்
எல்லாக்கதைகளிலும் ஏதோ ஓர் இழப்பு சொல்லப்படுகிறது. அல்லது யாரோ இறந்து போகிறார்கள். முனிவிரட்டில் தந்தை மகன் உறவை இழந்து போகிறார். தாமரை நாச்சி கதையில் பிஞ்சுக் குருவிக் குஞ்சுகளை பூனை தின்று விடுகிறது. தாமரை நாச்சியும் அவரது தாயாரும் இறந்து போகிறார்கள். மூக்குத்தி காகத்தில் காகம் கொல்லப்படுகிறது. மீட்பு கதையில் குண்டு வெடிப்பு. கவுண்டர் தொழிலை இழக்கிறார். மானத்தை இழக்கிறார். சாயபு இஸ்மாயிலை இழக்கிறார். கவுண்டரின் மகள்கள் கௌரவமான வாழ்க்கையை இழக்கிறார்கள். இஸ்மாயிலின் சகோதரிகள் திருமண வாழ்வை இழக்கிறார்கள். கிணற்றில் குதித்தவர்கள் கதையில் சொந்த தோட்டத்தை விற்ற மகனைப் பொறுக்கமுடியாமல் தந்தை கிணற்றில் குதித்து இறப்பார். பிணம் தழுவியவன் கதையில் ரெட்டை சாரட் குதிரை வண்டி வைத்திருந்த பட்டக்காரரின் மகள் இறந்து போகிறாள். வெளி வாங்கும் காலம் கதையில் மணி இறந்து போகிறான். நெட்டுக்கட்டு வீட்டில் கைம்பெண்ணாகிப்போன பழனத்தம்மாள் தூக்கு மாட்டிக்கொண்டு தன் உயிரை எடுத்துக்கொள்கிறாள். இப்படி எல்லாக் கதைகளிலும் இழப்பும் இறப்பும் இயல்பாய் வருகிறது. கதைக்கு வலு சேர்க்கும் என்று இந்த இழப்புகளும் இறப்புகளும் இணைக்கப்பட்டிருக்கக் கூடுமோ? அல்லது வாழ்க்கை இப்படித்தான் நகர்கிறதா? என் மாமனாரும், தந்தையாரும் இறந்து போனார்கள். அவர்கள் இறந்து போவார்கள் என்று நான் துளியளவும் எண்ணியதேயில்லை. அது சரிதானே! இறந்து போகத்தானேப் போகிறோம்.
கதை சொல்லும் பாணி
கதை மாந்தர்களை விவரிக்கிறார். கதைச் சூழலை விவரிக்கிறார். முன்னுக்குப் பின் காட்சிகளை விவரிக்கிறார். வட்டார வழக்குச் சொற்களைப் பயன்படுத்துகிறார். நிலத்தையும் நீரையும், விலங்குகளையும், பறவைகளையும், பூச்சிகளையும் இன்ன பிறவற்றையும் உலாவ விடுகிறார். எல்லாவற்றையும் அள்ளித் தெளித்துக்கொண்டேப் போகிறார். நானாக ஒரு கதையை எனக்காக கட்டிக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. இது என் அனுபவம். அப்படிப்பார்த்தால் ஒவ்வொரு வாசகனும் ஒரு கதையைக் கட்டுகிறான். எழுதியது ஒரு கதை தான். எழுந்தது எண்ணற்ற கதைகள். கோயமுத்தூர் வட்டாரத்தில் நாம் பார்த்ததை அனுபவித்ததை கதையாக எழுதியிருக்கிறார். தாமரை நாச்சி கதையில் வரும் பாத்திரங்களை அப்படியேப் பார்த்திருக்கிறேன் என ஒரு வாசகர் சொன்னார்.
சூழலைப் பயன்படுத்தும் முறை
தாமரை நாச்சி கதையில் ஒலியும் மௌனமும் கதாபாத்திரங்களாகவே பின்னப்படுகிறது. இந்த வீட்டில் ஒவ்வொருவரும் நடக்கும் ஒலியைக் கொண்டு, நடுச்சுவர் தாண்டி, அந்த வீட்டில் சுசியின் அம்மா சரியாகக் கணிப்பாள். தாமரை நாச்சி அழுவதும், இவள் அவளை ஓங்கித் திட்டுவதுமாக இரைச்சலாக இருந்த வீட்டில் தாமரை நாச்சியும், அவளது அம்மாவும் இறந்த பிறகு மௌனம் மட்டுமே குடியிருக்கும்.
வட்டார வழக்குச் சொற்கள்
கொங்கு மண்டல வாசனை எல்லா சொற்களிலும் வீசுகிறது. கோயமுத்தூரிலிருந்து வருகிற எனக்கே பல சொற்களுக்கு பொருள் புரியவில்லை என்று ஒரு வாசகர் தன் கருத்தைச் சொல்லத் துவங்கினார். அவரைத் தொடர்ந்த பேசிய இன்னொரு கொங்கு மண்டலக்காரர் சொன்னார், ‘ஒரு பெரியவர் இறந்து போனால், நாப்பது அம்பது வட்டாரச் சொற்களை இழக்கிறோம்’ என்று சொல்வார்கள் என்றார். எல்லா மண்டலத்திற்கும் இது பொருந்தும் என்று நினைக்கிறேன். ஆனால் கவலை வேண்டாம். கண்மணி குணசேகரன் எழுதிய நடுநாட்டு சொல்லகராதி இருக்கிறது என்றொரு வாசகர் ஆறுதல் கொடுத்தார். கொங்கு வட்டார வழக்குச் சொல்லகராதி என்று இரா. இரவிக்குமார் எழுதிய நூலும் பெருமாள் முருகன் எழுதிய ‘கொங்கு வட்டாரச் சொல்லகராதி’ நூலும் கூட இருக்கிறது என இன்னொருவர் சொன்னார். கதை எழுதும் போது, பின் பக்கத்தில் வட்டாரச் சொற்களுக்கு பொருள் கொடுத்துக் கூட எழுதலாம் என்று ஒருவரும், வெவ்வேறு கதைகளைப் படிக்கப் படிக்க நமக்கே கொஞ்சம் புரிந்து விடுகிறது என்று மற்றொருவரும் கூறினார்கள். ‘மவன பெத்தனே..மவந்து கெடந்தனே’ என்று ஒரு கிழவி ஒப்பாரி வைத்தார். மவுந்து கெடந்தனே என்றால் மகிழ்ந்து கெடந்தனே என்று பொருள் என்று ஒரு வாசகர் கூறினார். ஒரு வாசகர் சொன்னார்,’உற்பத்தியிலிருந்து தான் சொற்கள் பிறக்கின்றன. உற்பத்தி முறைகள் மாறும் பொழுதெல்லாம் சொற்களும் மாறுகின்றன. சில வழக்கொழிந்து போகின்றன. சில நிலையாய் நிற்கின்றன’ என்றார். சிந்தனைக்குரிய கருத்து தான்.
சில சொற்களை மட்டும் எடுத்துக்காட்டுக்காகக் கொடுக்கிறேன்.
கிளுவை வேலியில் ‘தொக்கடா’ தேடினான். வேலியின் மேற்புறத்தில் ஓர் ஆள் புகுந்து போகிறாற் போல கிளைகளை இழுத்து விட்டு, இடைவெளி ஏற்படுத்துவதற்கு ‘தொக்கடா’ என்று பெயர் என்று ஒருவர் விளக்கம் அளித்தார். ‘மேகாடு’ என்றால் மேய்ச்சல் காடு என்று பொருள். ஈயக்கலையம் வைத்து தயிர் ‘சிலுப்பி’க் கொண்டிருந்தாள். கல்லுமாரி (ஐஸ்கட்டி?), மழைக்காகிதப்பை (ஜவ்தாள்? நெகிழி? பிளாஸ்டிக்?), தொட்டிவாசல், சடைவு, சாட்டுதல், தண்ணீர் சேந்துதல், பட்டுவரிக்கல், கோம்பை வீடுகள், கொழி மணல், மழை மிகுதியால் நிலம் சொதும்பி சதாகாலமும் உரம்பு எடுத்தபடியிருந்தது, செம்மறியாடுகள் வாய் சப்பைக் கண்டு இறந்து போயின. வெள்ளம் இழுத்துட்டுப் போயிருது…நீங்க பாட்டுக்கு வளுசப் பசங்களோட சேந்துகிட்டு எறங்கறீங்க. வீதியில் மாமாவிற்குத் தெரிந்த முகங்கள் கொங்காடைக்குள்ளிருந்து நீட்டி மழையைப் பற்றி விசாரித்தன.
கதை மாந்தர் கட்டமைப்பு
இந்தக் கதைகளில் வரும் எல்லா கதை மாந்தர்களும் சாதாரண மனிதர்கள். ஆ. சிவ சுப்பிரமணியன் எழுதிய வரலாறும் வழக்காறும் என்ற நூலில் குறிப்பிட்டது போல வரலாறு அரசர்களுக்கு மட்டும் தானா? இல்லை. சாமான்ய மக்களுக்கும் ஆனது தான் என்று வெளி வாங்கும் காலம் சிறுகதை தொகுப்பின் நூலாசிரியர் என். ஸ்ரீராம் இந்தத் தொகுப்பில் வரும் கதைகளிலெல்லாம் சாதாரண மனிதர்களையே உலவ விட்டிருக்கிறார். பல நேரம் அவர்களுக்கு பெயரே போடுவதில்லை. இவன் என்று தான் குறிப்பிடுகிறார் என்று ஒரு வாசகர் குறிப்பிட்டார். Very down to earth என்று சொன்னார்.
முனிவிரட்டு கதையில் மாராண்டி முனியானதும், ‘முனி’ என்றே விளிக்கப்படுகிறான். வாசகன் மாராண்டியை விட்டு விட்டு முனியைப் பின்தொடர்கிறான். நல்ல உத்தி.
உவமையும் உவமானமும்
தாமரை நாச்சி கதையில், மன நலம் குன்றிய தாமரை நாச்சியை விஷம் வைத்துக்கொள்ளப் போகிறார் என்பதை முன்கூட்டியே, அவரது தந்தை ஓட்டு வீட்டில் ஏறி அழுக்குவண்ணான் குருவிக்கூட்டிலிருந்து குஞ்சுகளை எடுத்து பூனைக்கு தூக்கி எறிவதாக ஒரு காட்சி வரும்.
‘உரி நெய்யெ நரி தூக்கிட்டுப் போன கத எங்காச்சுமுண்டா’ என்ற சொலவடை கிணற்றில் குதித்தவர்கள் கதையில் வருகிறது. இளவயதிலேயே தன் அப்பன் சொத்தை தனக்கு எழுதிவைக்கும் மகனைப் பார்த்து சனங்கள் இப்படி பேசிக்கொள்கிறார்கள். அருமை! இல்லையா?
நிறைவாக
நிறம் பற்றிய கருத்துக்கள் ஆழ்மனதில் எப்படி உறைந்து போயிருக்கிறது என்றும், பாலியல் பேதங்கள் இன்றைய சமூக வாழ்க்கையை இயக்குகிறது என்றும், சாதியக் கொடுமைகளும் வன்முறைகளுக்குமான வேர் எங்கு இருக்கிறது என்றும், சடங்குகளும் மத நம்பிக்கைகளும் வாழ்வியலை எப்படி வரையறுக்கிறது என்றும் சுற்றி உள்ள நிலமும், நீரும், பறவைகளும், விலங்குகளும், எப்படி அழிந்து போயிக்கொண்டிருக்கிறது என்றும், எல்லாவற்றிற்கும் மேலாக உயிர்மநேயமும் மனித நேயமும் எப்படி மறைந்து போய்கொண்டிருக்கிறது என்றும் தெரிய தெரிய உண்மைக்கருகில் பயணப்பட்ட நிறைவு கிடைக்கிறது. ஆக மொத்தம் வேறு ஒரு உலகில் உலவி விட்டு திரும்ப நிஜ உலகுக்கு வந்த அனுபவம்.
நன்றி என். ஸ்ரீராம் அவர்களே!
நன்றி மெல்பன் வாசகர் வட்ட நண்பர்களே!!
*********
வணக்கம் குரு. ஏறக்குறைய 30-40 பக்கங்கள் வரும். தஞ்சாவூர் பூண்டி கல்லூரியில் படிக்கும்போது தேர்வில் 30-40 பக்கங்கள் எழுதியிருக்கிறேன். அதன்பின்னர் அந்தளவு எழுதவேயில்லை. அந்தளவு என்ன அந்தளவு. எழுதவேயில்லை. உங்கள் நூல் விமர்சனங்களைப் பார்க்கும்போது வியப்பாகவே உள்ளது. எழுதுவேன். நான் மீண்டும் எழுதுவேன் குரு.