வரலாறும் வழக்காறும் - ஆ. சிவசுப்பிரமணியன்(2025 பிப்ரவரி 23ம் தேதி, மெல்பர்ன் வாசகர் வட்டத்தில், நூல் ஆய்வு செய்யப்பட்டு பகிரப்பட்டதில் என் எண்ண ஓட்டங்கள்)
- உயிர்மெய்யார்
- Feb 27
- 11 min read

வரலாறும் வழக்காறும் - ஆ. சிவசுப்பிரமணியன்
(2025 பிப்ரவரி 23ம் தேதி, மெல்பர்ன் வாசகர் வட்டத்தில்,
நூல் ஆய்வு செய்யப்பட்டு பகிரப்பட்டதில் என் எண்ண ஓட்டங்கள்)
பேரா. முனைவர். ஜான் பிரிட்டோ பரிசுத்தம்
கிரான்பர்ன் நார்த், மெல்பர்ன்
“கேள்வி கேட்கனும். எதையும் கேள்வி கேட்கனும். கொடுக்கப்பட்ட வரலாறாக இருந்தாலும், கொட்டிக்கிடக்கும் வழக்காறாக இருந்தாலும் கேள்வி கேக்கனும்.” இப்படித்தான் ஆரம்பித்தார்.
“நான் பத்து, பதினோரு வயது இருக்கும் போது என் தந்தையாரோடு வயல் வரப்பில் நடந்துச் சென்றேன். பத்து பெண்கள் களையெடுத்துக்கொண்டிருந்தார்கள். அப்போது என் தந்தையாரிடம் கேட்டேன். நம் வீட்டில் இருப்போருக்கு நாத்து நட, களையெடுக்க, நெல்அறுக்கத் தெரியவில்லை. ஆனால் நமக்கு நிலம் இருக்கிறது. இதோ எல்லா உழவு வேலைகளும் தெரிந்த இவர்களுக்குக் கொஞ்சம் கூட நிலம் இல்லை. அது எப்படி? நான் கேள்வி கேட்டது மட்டும் தாமதம், என்னைத் தூக்கி பம்புசெட் அறைக்குள் போட்டுவிட்டார்கள்.
அந்த மாலை, ஊர்த்துணிகளை வெளுக்கும் 80 வயது மதிக்கத்தக்க பெண்மணி எங்கள் வீட்டிற்கு வந்தார். எட்டு வயது சித்தப்பா பையன், அவரைப் பெயர் சொல்லிக் கூப்பிட, நான் அவனை ஓங்கி அறைந்து, எப்படி பெயர் சொல்லி அழைக்கலாம்? என்று கேள்வி கேட்டேன். வீட்டில் உள்ள எல்லோரும் என் மேல் பாய்ந்து விட்டார்கள்.
வீட்டில், தெருவில், ஊரில், நாட்டில் ஒரு முறை உள்ளது. அதை எதிர்த்துக் கேள்வி கேட்காதே என்றே சொல்லிப் பழக்கமான இடத்தில் எதிர்க்குரல் கேட்பது கலகக் குரலாகவே பார்க்கப்பட்டது. அதுபோலத்தான் நமக்கு வழங்கப்படும் வரலாறு ஆதிக்க சக்திகளின் வரலாறாகவே இருக்கும் போது, அவைகளை கேள்வி கேட்டும், உண்மை வரலாறை அறிய, பாதிக்கப்பட்டோரின் குரலாக இருக்கும் பழமொழிகளையும், பாடல்களையும், விடுகதைகளையும், சடங்குகளையும் ஆய்வு செய்யவேண்டும் என்று பல சான்றுகளுடன் விளக்கியிருக்கிற ஆ.சிவசுப்பிரமணியன் அவர்களின் ‘வரலாறும் வழக்காறும்’ என்கிற நூல் முக்கியத்துவம் பெறுகிறது” என்று எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன் இரண்டரை மணி நேர நூல் ஆய்வினை நிறைவு செய்தார்.
சரி. அதற்கு முன்பு, இரண்டரை மணி நேரமாக என்ன நடந்தது?
திருமதி சாந்தி அவர்கள் தொடங்கி, ஏழு எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் மெல்பர்ன் வாசகர் வட்டத்திற்கு புதிய உறுப்பினராகச் சென்ற மாதம் சேர்ந்தேன். சுமார் இருபது பேர் திருமதி சாந்தி அவர்களின் வீட்டில் கூடியிருந்தனர். Khaled Hosseini எழுதிய The Kite Runner எனும் புதினத்தைப் படித்து, அனைவரும் தங்கள் கருத்துக்களையும், கற்றலையும், விமர்சனங்களையும் பகிர்ந்தனர். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்படியொரு சிந்தனையாளர்கள் கூட்டமா? அவர்களுடன் தொடர்ந்து பயணிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். கூட்ட முடிவில் என் கையிலும் ‘வரலாறும் வழக்காறும்’ நூல் வந்து சேர்ந்தது.
120 பக்கங்கள். ஒரே நாளில் படித்து விட்டேன். சரி அடுத்த கூட்டத்தில் என் கருத்தாக என்ன சொல்வது? என்று யோசித்துக்கொண்டே, குறிப்புகள் எடுத்துக்கொண்டே, இரண்டாவது முறையாக வாசித்தேன். புதிதாக பல சிந்தனைகள் வந்தன. எழுதிக்கொண்டேன். இரண்டாவது கூட்டத்திற்குப் போனேன். புன்னகையுடன் வரவேற்றார்கள். சிலர் ஷோபாவில். சிலர் நாற்காலிகளில். போன கூட்டத்தில் நான் உட்கார்ந்திருந்த ஓர் ஒற்றை குஷன் இருக்கை காலியாகவே இருந்தது. அதுவும் என்னை புன்சிரிப்புடன் வரவேற்றது. அதில் சுகமாக நான் உட்கார்ந்துக்கொண்டேன்.
ஒவ்வொருவராகப் பேசக் குறிப்புகள் எடுத்துக்கொண்டேன். ஒவ்வொருவருடைய கண்ணோட்டம் மாறுபட்டிருந்தாலும், எல்லோரும் தலையசைத்துக்கேட்டுக்கொண்டார்கள். கேள்விகள் சில எழும்போது கேட்டுத் தெளிவு பெற்றார்கள். தாங்கள் சொன்னதைப் பிறர் சரியாகப் புரிந்துக்கொள்ளவில்லை என்று எண்ணும்போது தெளிவுபடுத்தினார்கள். எனக்குத் தெரிந்த வரை இந்தியாவிலிருந்தும், மலேசியாவிலிருந்தும், இலங்கையிலிருந்தும் ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்து வந்திருக்கிறார்கள். அதனாலும் ஒவ்வொருவருடைய கருத்துக்களும் விமர்சனங்களும் கண்ணில் ஒத்திக்கொள்ளும் அளவுக்கு அழகாகவும், அழமாகவும் இருந்தன.
அதனால் அந்த இரண்டரை மணி நேரம் நான் பிறரிடமிருந்து கற்றதையும், நான் நூலைப் படித்து கற்றதையும் கீழே தருகிறேன்.
சாதியும் கொடுமையும்
என் பூர்வீகம் தஞ்சாவூர் என்பதாலும், நீடாமங்கலத்தில் அருகே கொஞ்சம் நிலபுலம் இருப்பதாலும், நீடாமங்கலத்தில் 1937ல் நடந்த கொடுமையைப் பற்றி ஆசிரியர் எழுதிய கட்டுரையிலிருந்து தொடங்கினேன். பட்டியல் இன மக்களின் பாதுகாவலராக காந்தியும், காங்கிரஸ் கட்சியும் காட்டிக்கொண்ட காலம் அது. தென் தஞ்சை மாவட்டக் காங்கிரஸ் கட்சியின் எட்டாவது அரசியல் மாநாட்டை 1937 டிசம்பர் 28ல் நீடாமங்கலம் நிலக்கிழார் சந்தான ராமசாமி உடையார் தனது தோட்டத்தில் நடத்துகிறார். மாநாட்டில் அனைவருக்கும் சரிக்கு சமமாக, பட்டியல் இன மக்கள் பந்தியில் அமர்ந்து உண்டதால் அவர்களை பந்தியிலிருந்து வெளியேற்றி அடித்துத் துரத்துகின்றனர். மொட்டையடித்து சாணியைக் கரைத்து உற்றி அவமானப்படுத்துகின்றனர். விஷயம் வெளியே தெரியாமல் கள்ளு குடிக்க காசு கொடுத்து அசை மடக்குகின்றனர். வெகுசன ஊடகங்களும் ஆதிக்க சக்திகளும் இச்சம்பவத்தை இருட்டடிப்பு செய்த போது, குடியரசு மற்றும் விடுதலை இதழ்கள் மட்டுமே அதை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தன என்று ஆசிரியர் கட்டுரையில் விவரிக்கிறார்.
1937க்கும் 2025க்கும் எந்த மாற்றமும் இல்லை என்றும், சாதிய வேறுபாடுகளும் கொடுமைகளும் இன்றும் குறையவில்லை என்றும், மாறாக தீவிரமடைந்துவிட்டதாகவும் கூறினேன். ஒருவர் இதுகுறித்து பேசும்போது, சேலம் ஆத்தூர் பகுதியில் கவுண்டர் மற்றும் பட்டியலினத்தவர் வாழும் பகுதியில் இப்படித்தான் எனவும், இன்னொருவர் தென் தமிழகக் கடலோரப் பகுதிகளில் St. Johns Church என்பது வேளார் சாதியினரது கோயில், St. Patrick Church என்பது பட்டியல் இனத்தவர் கோயில் எனத் தெரிந்து கொள்ளலாம் எனவும் கூறினார்கள். இது ஆச்சரியமாக இருந்தது.
மற்றொருவர் பாபிலோனியன் ஹம்முராபி கோட் பற்றிக் கூறினார். அப்பொழுது கூட சமநீதி இல்லை என்றும், மற்றவரை அடிமைப்படுத்துவதும் கொடுமைப்படுத்துவதும் ‘இது உன் இடம், இது என் இடம்’ என்று நிலத்தை பிரித்துக்கொண்டு வேலி போட்ட வேளாண் காலத்திலிருந்து தான் தொடங்கியிருக்க வேண்டும் என்றும் கூறினார். அது என்ன பாபிலோனியன் ஹம்முராபி கோட் என்று தேடிப் பார்த்தேன். World History of Encyclopediaவுக்காக Joshua J. Mark எழுதிய Code of Hammurabi என்ற கட்டுரையில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.
பாபிலோனியப் பேரரசர் ஹம்முராபி (கிமு 1792–1750) உருவாக்கிய பண்டைய சட்டத் தொகுப்பு. இது மெசபடோமியாவின் சமூகம், நீதி முறை பற்றிய தகவல்களை வழங்குகிறது. சுமார் கிமு 1754ம் ஆண்டு ஹம்முராபி கோட் எழுதப்பட்டிருக்கலாம். வர்த்தகம், திருமணம், அடிமைத்தனம், குற்றங்களுக்கான தண்டனைகள் போன்ற துறைகளை உள்ளடக்கிய 282 சட்டங்களை கொண்டது. குற்றத்திற்கு ஈடான தண்டனை சமூக நிலைக்கேற்ப வேறுபட்டது எனவும் உயர்மட்டத்தவர், பொதுமக்கள், அடிமைகள் என வர்க்கங்களுக்கு வேறுபட்ட நீதி வழங்கப்பட்டது எனவும் எழுதுகிறார். பேரரசர் ஹம்முராபி, சூரிய தெய்வமான சமாஷிடம் சட்டங்களைப் பெறுவதாக ஒரு சிற்பம் இருக்கிறது.
கருங்கல் தூணில் எழுதப்பட்ட இந்த சட்டம் 1901ம் ஆண்டில் தற்போதைய ஈரானின் சூசாவில் கண்டெடுக்கப்பட்டது. ஆனால் தற்போது அது பிரான்ஸ் நாட்டுப் பாரிஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் உள்ளது.
துண்டு தலையில் கட்டப்படும் போதும், தோளில் கிடக்கும் போதும், இடுப்பில் சுற்றும் போதும் வெவ்வேறு பொருளைக் கொடுப்பதைப் பற்றியும், "கீழ்ப்படிதலின் அடையாளமாகக் காலம் காலமாக விவசாயிகள் பயன்படுத்திய துண்டு செந்துண்டாக மாறியது" பற்றியும் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
ஒருவர் அதை நினைவிற்கு கொண்டு வந்து தன் தாத்தாவுடன் அக்ரஹாரத் தெருவைக் கடந்த நிகழ்வுகளைப் பகிர்ந்தார். அப்பொழுதெல்லாம் அந்தத் தெருவழி சென்றால், கையில் செருப்பை எடுத்துக்கொள்வோம், துண்டை தோளிலிருந்து இறக்கிவிடுவோம் என்று அவர் தாத்தா சொன்னதாகவும், தன் குழந்தைப் பருவத்தில் அந்தத் தெருவைக் கடக்கும் போது ஒருவித அச்சத்துடனேயேக் கடந்ததாகவும் சொன்னார். மனிதர்களுக்குள் இத்தனை வேற்றுமைகளை உருவாக்கிட முடியுமா? ஒரு பழக்கம், வழக்கமாகி பண்பாடாக ஆக்கமுடியுமா? ஏன் இந்த வேறுபாடுகள்?
ஆசிரியரே அதற்கு பதிலும் சொல்கிறார். கள்ள மரக்கால் பற்றிச் சொல்லும் போது, அதன் பின்னே ஒளிந்திருந்த சுரண்டலை எடுத்துரைக்கிறார். தங்களுக்கு வரவேண்டிய நெல்லை அளக்கச் சற்றுப் பெரிய மரக்காலும், கூலி கொடுக்கச் சற்று சிறிய மரக்காலும் "பெருநில முதலைகளும் மடாதிபதிகளும்" புழக்கத்தில் வைத்திருந்ததாக சான்றுகளோடு விளக்குகிறார். வாசகர் வட்டத்தில் ஒருவர் அப்படிப்பட்ட வேறு வேறு அளவிலான மரக்கால்கள் தனது இல்லத்திலேயே இருந்ததைக் குறிப்பிட்டார். அதைப் பற்றி அவரது தாயிடம் கேட்ட போது, மாமனார் வீட்டிலிருந்து சீர் வந்ததாகச் சொன்னாராம். ஆக, இந்த வேறுபாடுகளை உருவாக்குவது மற்றவர் உழைப்பில் தாங்கள் சுகபோகத்துடன் வாழவே என்று, ஏற்றத்தாழ்வுகளின் இருப்புக்கு பதில் கொடுக்கிறார்.
பல போராட்டங்களுக்குப் பிறகு, இப்பொழுது மரக்கால் மறைந்தாலும், கூலிப்பிரச்னை இருந்துக் கொண்டே இருக்கிறதே, அதற்கு என்ன காரணம்? கைத்துண்டு செந்துண்டாக மாறிய போதும் அவமானம் குறையவில்லேயே, அது ஏன் என்கிற கேள்விகள் வரத்தானேச் செய்கிறது. சாதியமும் பொருளாதாரமும் பின்னிப் பிணைந்தே இருக்கிறது புலப்படுகிறது அல்லவா? அதிலும், இரண்டு அடுக்குகளாக கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படும் பெண்களின் நிலை என்ன? கேள்விகள் கேட்கவேண்டும் இல்லையா?
பெண்களும் வன்முறையும்
பெண்கள் மீதான கொடுமைகளைப் பற்றியும் ஆசிரியர் நூலில் எடுத்துரைக்கிறார். “புல்லு அறுத்தா மாட்டுத் தொட்டிக்கு; பொண்ணு சமைஞ்சா அரண்மனைக்கு” என்கிற செவுலில் அறைகிற பழமொழியைப் படிக்கும் போது ஒரு கன்னம் வலிக்கத்தான் செய்தது. எல்லோரும் பகிரும்போது ஒன்றைக் கவனித்தேன். வாசகர் வட்டத்தில் கலந்துக்கொண்ட நான்கு பெண்களும், பெண்கள் மீது ஏவப்பட்ட பாலியல் வன்முறையைப் பற்றி வலியோடு பகிர்ந்துக் கொண்டதையும், அதிகமான ஆண்கள் அப்படி பகிராததையும், என்னையும் சேர்த்து, இப்பொழுது நினைத்தால், மாற்றம் எங்கிருந்து வரவேண்டும் என்பதை உணர்த்தியது. அது இன்னொரு கன்னத்தில் வலியை ஏற்படுத்துகிறது.
ஒருவர் குறிப்பிட்டது கவனத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது. ‘மொகலாயர்கள் வந்தார்கள். அவர்கள் சூறையாடியதில் பெண்கள் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டார்கள். ஆங்கிலேயர்கள் வந்தார்கள். அவர்கள் கொடுமைப் படுத்தியதில் பெண்கள் நிறையப் பாதிக்கப்பட்டார்கள்’ என்றெல்லாம் சொல்லுகிறார்கள். ஆனால் உள்ளூர் லட்சணம் சந்தி சிரிக்கும் அளவுக்கே இருந்திருக்கிறது என்பதை ஆசிரியர் தன் நூலில் பல நிகழ்வுகளைச் சான்றுகளுடன் சொல்கிறார் என்று குறிப்பிட்ட பொழுதும், திருவள்ளுவரே ‘சிறைகாக்கும் காப்பு’ பற்றி வாழ்க்கைத் துணை நலம் அதிகாரத்தில் சொல்கிறாரே, அப்படியானால் ஆயிரக்கணக்கான வருடங்களாக பெண்கள் மீதான வன்முறை இருந்து வருகிறது எனத்தெரிகிறதே என இன்னொருவர் குறிப்பிட்ட பொழுதும், மனம் உள்ளூர வலிக்கத்தான் செய்தது.
இது தான் அந்தக் குறள்.
சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை. (குறள் 57)
மற்றொருவர் ஆதங்கப்பட்டார். உயிரோடு இருக்கும் போது பெண்களைக் கொடுமை செய்துவிட்டு, செத்த பிறகு சாமியாக்கிவிடுவது வேதனையளிக்கிறது என்று வலியோடு சொன்னார். அப்படி கொடுமைப்படுத்திவிட்டு சாமியாக்குவது வன்முறைக்கு ஆளாக்கியோரின் குற்ற உணர்வே தவிர வேறென்ன? என்று இன்னொருவர் பதிலிறுத்தார்.
அப்படி ஆளுவோரின் பாலியல் வன்முறைக்குச் சாட்சியாக பல நிகழ்வுகளை ஆசிரியர் நூலில் குறிப்பிடுகிறார். அவை மரபாக சொல்லப்படும் வரலாறில் அல்லாமல், குலதெய்வ வழிபாட்டிலும், உறவுச் சொல்லிலும், கோவில் வழிபாட்டிலும், அச்சிடாத சுயசரிதையிலுமாக வழக்காற்றில் கிடப்பதை அழகாக எடுத்துரைக்கிறார். அவைகளைச் சுருக்கமாகப் பார்த்துவிடுவது நல்லது.
கொண்டையங்கோட்டை மறவர் தந்தையின் மகள்:
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகிலுள்ள மறுகால்குறிச்சி கிராமத்திற்கு கொண்டையங்கோட்டை மறவர்கள் வந்த கதை. அவர்களுக்குக் கீழான பிரிவாகக் கருதப்பட்ட இராமநாதபுரம் செம்பிநாட்டு மறவர் பிரிவைச் சேர்ந்த ஜமீன்தார் கொ.மறவர் பெண்ணை ‘சிறைப்பிடிக்க’ எண்ணியிருந்த செய்தி கேட்ட, அப்பெண்ணின் தந்தை இராமநாதபுரத்தை விட்டு, இரவோடிரவாக கிளம்பி மறுகால்குறிச்சிக்கு வந்துவிட்டார். காமக்கிழத்தியாக வாழவேண்டும் என்பதுமல்ல, கீழான பிரிவு என்பதும், அவரது பகை வேண்டாம் என்பதும் காரணம்.
குலதெய்வ வழிபாடு: மணியாச்சி ஒட்டப்பிடாரம் சாலையில் பாறைக்குட்டம் என்ற ஊரில் அய்யன் செங்கமல உடையார் கோயில் உள்ளது. கொண்டையங்கோட்டை மறவர்களின் குலதெய்வம் அது. மறவர்கள் இராமநாதபுரத்திலிருந்து இடம்பெயர்ந்து திருநெல்வேலி, நாங்குநேரிக்கு வருமுன்னர் பாறைக்குட்டத்தில் தங்குகின்றனர். கூடவே குலதெய்வத்தையும் தூக்கி வருகின்றனர். குலதெய்வ அபிஷேகத்திற்கு பாறைக்குட்டம் இடையர்கள் பால் கொடுக்க மறுக்கின்றனர். நாங்குநேரிக்குக் கிளம்பும் போது அவர்களின் குலதெய்வம் வர மறுக்கிறது. அங்கேயே விட்டுச்செல்கின்றனர். இடையர்களின் கால்நடைகள் செத்து மடிகின்றன. விட்டுச்சென்ற உடையாரை இடையர்கள் வழிபடத்தொடங்குகின்றனர். பிறகு அவர்களின் வாழ்க்கை சீராகிறது. இன்றுவரை வழிபாடு நடக்கிறது. நாங்குநேரி மறவர்கள் பாறைக்குட்டம் போய் வழிபடுகின்றனர்.
ஆப்பநாட்டு மறவர் தந்தையின் மகள்:
மற்றொரு இராமநாதபுரம் ஜமீன்தார் சிறைபிடிக்க புறப்படுகிறார். ஆப்பநாட்டு மறவர் தந்தை, கடற்கரையருகே இருக்கும் வேம்பாறில் பரதவர் நண்பரின் வீட்டிற்கு தன் மகளை அனுப்புகிறார். ஜமீன்தாரின் ஆட்கள் வரும்போது, பரதவர் நண்பர், தன் ஆப்பநாட்டு மறவர் நண்பரின் மகளை ஒரு மறவர் பையனுடன் திருமணம் செய்து விடுகிறார். அவள் காப்பாற்றப்படுகிறாள்.
உறவுச்சொல்: அந்த உதவிக்காக, ஆப்பநாட்டு மறவர்கள், பரதவர்களை ‘அப்பச்சி’ என்று அழைக்கின்றனர்.
இலுப்பக்குளம் அகமுடையார் தந்தையின் மகள்:
கட்டிடக்கலை நிபுணர்களான இலுப்பக்குளம் அகமுடையார் இராமநாதபுரம் அரண்மனையில் வேலை பார்க்க, அவரது மகள் மதிய உணவு கொண்டு வர, ராஜா, அகமுடையாரின் மகளை கல்யாணம் செய்து தரக் கேட்க, தந்தை மகளை அழைத்துக்கொண்டு இலுப்பக்குளம் ஓடி இலுப்பமரப்புதரில் இருக்க, அரண்மனை வீரர்கள் சிறைப்பிடிக்க வர, சோணை, முந்தையா என இரண்டு அகமுடையார் இளைஞர்கள் தடுத்து நிறுத்தி சண்டையிட, வீரர்கள் ஓடி விட, சண்டையில் சோணையும் முத்தையாவும் இறந்து போகின்றனர். இன்றும் இலுப்பக்குளத்தில் சோணையா கோவிலில் வழிபாடு நடந்து வருகிறது.
கோவில் வழிபாடு: சோணையா கோவில் வழிபாடு இந்த சமூக நினைவை திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறது.
திருநெல்வேலி ஞானப்பிரகாசம் பிள்ளை மகள்:
இராமநாதபுரம் ஜமீனில் பணிபுரிந்து வந்த ஞானப்பிரகாசம் பிள்ளை, தன் மகளை ஜமீன் கவரப்போவதாக செய்தி அறிந்து, கால்நடையாக எட்டு நாள் நடந்து திருநெல்வேலி வந்தடைந்தார் என்று அவரது கொள்ளுப் பேரன் பெரிய நாயகம் பிள்ளை தனது சுயசரிதையில் எழுதியுள்ளார்.
சுயசரிதை: சமூக நினைவுகளை ஆவணப்படுத்துகிறது.
இத்தகைய நிகழ்வுகளுக்காக நிலங்கள் பெற்ற செய்தி செப்பேடுகளில் பதிவாகியுள்ளது. கீழே அவற்றுக்கான சான்றுகள் உள்ளன.
ஆயிரமங்கலம் ஊரைச் சேர்ந்த கொளும்பிச்சரு தேவன் மகள்:
இராமநாதபுரம் ஜமீன் கேட்க தனது மகளைக் கொடுத்ததற்காக நிலம் பெற்றுள்ளார்
செப்பேடு
மளுவிராயப் புரையார் அசையாவீரன் மகள்:
இராமநாதபுரம் ஜமீன் கேட்க தனது மகள் கருப்பாயியைக் கொடுத்து நிலம் பெற்றுள்ளார்.
செப்பேடு
விசையநல்லூர் பல்லவராய புரையர் மொக்குபுலித்தேவன் மகள்:
இராமநாதபுரம் ஜமீன் கேட்க தனது மகள் அழகிய நல்லாளைக் கொடுத்து நிலம் பெற்றுள்ளார்.
செப்பேடு
ஜமீன்களுக்கு இதே வேலையாக இருந்திருக்கிறது. திண்டுக்கல்லில் கம்புக்குழியம்மாள் வழிபாட்டில், பக்தர்கள் கம்பு கொண்டு வந்து காணிக்கையாகக் கொடுக்கின்றனர். துருவிப் பார்த்ததில் ஒரு பெண்ணை கம்பு நிறைந்த குழிக்குள் வைத்து, அதில் முழுக முழுக, மூச்சு முட்டி இறக்க வைத்த துயர சம்பவம் வெளி வருகிறது என்று ஒருவர் சொன்னார். ஆனால் தற்போது கிராமங்களை விட நகர்ப்புறப் பெண்கள் இன்னும் சுதந்திரமாக இருக்கிறார்கள் என்று ஒருவர் குறிப்பிட்டார். (ஆமாம். சுதந்திரம் என்றால் என்ன?) திருமணத்தில் ஓதும் மந்திரத்திற்கு பொருள் தெரிந்தால் ஓத விடுவோமா என்று தெரியவில்லை. ஏனென்றால் கணவனிடம் மனைவியாக ஆகும் முன்பு யார் யாருக்கெல்லாம் மனைவியாக இருக்க வேண்டும் என்று அந்த மந்திரத்தில் வருகிறது என்று ஒருவர் குறிப்பிட்டார்.
மலைத்தோட்டத் தொழிலாளர்களைப் பற்றிப் பேசும் போது, பெண் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறை, வேலைப் பளு, அடித்துவேலை வாங்கும் கொடுமை ஆகியவற்றை நாட்டார் பாடல்கள் மூலம் அறிந்துகொள்வதை ஆசிரியர் 'வலி நிறைந்த பாடல்களை' எடுத்துக்காட்டுகிறார். 'மலையகம்-200' என்று இலங்கையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் அவர்களது உரிமைக்காகப் பாடுபடும் நண்பர் முத்துலிங்கம் 2024ல் கொண்டாடி, இன்றும் அவர்களது நிலை மோசமாக இருப்பதை உலகுக்கு எடுத்துச்சொன்னார் என்று நான் கூறினேன். 1989ல் ஜோகூர் பாருவில் இரப்பர் தோட்ட இளைஞர்களுக்கு விழிப்புணர்வுப் பயிற்சி கொடுத்ததிலிருந்து, 2017ல் மலேசியாவில் கெடா மாநிலத்தில் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய வரை மலேசிய புலம் பெயர்ந்தவர்களின் பிரச்னைகளை கவனமாக நோக்கும் நபராக இருந்திருக்கிறேன். அவர்களில் பெண்கள் படும் கொடுமைகளை நேரடியாக பார்த்தும், கேட்டும் உணர்ந்திருக்கிறேன் என்று பகிர்ந்துக் கொண்டேன்.
மலேசியா பற்றிப் பேசும் போது ஒருவர் தான் அங்கு பணி புரிந்ததாகவும், அப்பொழுது தோட்டத்திலிருந்து வரும் பெண்கள் வெளியே போகவும், உள்ளே வரவும் நேரக் கட்டுப்பாடு இருந்ததாகவும் பதிவிட்டார். மூன்று ஷிப்ட் வேலையில் அவர்கள் இரண்டாவது ஷிப்டுக்கு வரமுடியாத நிலை அந்த நேரக் கட்டுப்பாடு தான் என்று கூறினார். மற்றொருவர் சொல்லும் போது கொடுமைப்படுத்திய கங்காணி சாகும் போது 'அப்பாடா! போய் விட்டார்' என்பது போன்ற மகிழ்ச்சித் தொனியே ஒலிக்கிறது என்றும் கூறினார். மதுரையில் பஞ்சம் வந்த போது, குஞ்சரத்தம்மாள் கஞ்சித் தொட்டி தொடங்கி தன் சொத்தையெல்லாம் இழந்தக் கதையை கும்மிப் பாட்டில் பாடத் தடை இருந்ததாகவும் ஒருவர் கூறினார்.
பெண்களுக்குச் சொத்து வழங்க வேண்டும் என்பதற்காக தென் தமிழ்நாட்டில் பலர் கிறித்துவ மதத்திற்கு மாறினர் என்பது புதிய செய்தியாக இருக்கிறது என்று ஒருவர் சொன்னார், ஆனால் அது தான் முழுமுதற் காரணம் என்று ஏற்க முடியாது என மற்றொருவர் கருதினார்.
ஆக, சாதிக் கொடுமைகளும், பெண்கள் மீதான வன்முறைகளும் தொடர்ந்து நடந்து வரக் காரணம் என்ன? மேலாதிக்கமும், அதைத் தக்கவைத்துக்கொள்ள நடந்து வரும் பயங்காட்டலும் என்று சொல்லலாமா? கேள்விகள் கேட்கவேண்டும் இல்லையா?
ஆதிக்கமும் பயங்காட்டலும்
மேலாண்மை இரண்டு விதங்களில் நடைபெறுகிறது. ஒன்று இராணுவம், நீதித்துறை, சட்டம் போன்ற புற பயம். இது அதிகார மேலாண்மை. மற்றொன்று கதைகள், பாடல்கள், புராணங்கள், கோயில் சடங்குகள் போன்ற அக பயம். இது பண்பாட்டு மேலாண்மை. ஆனால் இரண்டிலும் பயமே முதலீடு. பயமுறுத்துதலே பணியாகும். மேலாண்மையே விளைச்சல். இதையே ‘பிரம்மஹஸ்தி - பிராமணப் பேய்’ என்ற தலைப்பில் நூலாசிரியர் தனது கட்டுரையில் விளக்குகிறார். பிரம்மஹஸ்தி என்றால் என்ன? பிராமணர்களுக்கு எதிராக யாராவது குற்றம் செய்தால், பிரம்மஹஸ்தி என்கிற பிராமணப் பேய் குற்றம் செய்தவரை பிடித்து பழிவாங்கும். அவர் தகுந்த பரிகாரம் செய்தால் அந்த பேய் விலகிவிடும். இதுகுறித்து பல கதைகளை நூலாசிரியர் எடுத்துக்காட்டுகிறார். அந்தக் கதைகளையும் சுருக்கமாகப் பார்ப்போம். பிறகு விமர்சனத்திற்குச் செல்வோம்..
சிவன் ஒரு பாவம் செய்யப் போக, இந்திரனின் ஒரு தலை சிவனின் கையேந்தும் பாத்திரமாகி பிச்சை எடுக்க நேர்ந்தது என்பது ஒரு கதை. ஷத்திரிய குலத்தைச் சேர்ந்த இராமன், பிராமணக் குலத்தைச் சேர்ந்த இராவணனுக்கு தீங்கு விளைவித்ததால், இராமேஸ்வரத்தில் இராமலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட நேர்ந்ததாக ஒரு கதை. (இராவணன் ஒரு தமிழனா? பிராமணனா? குழப்பமாக இருக்கிறது என்று ஒரு வாசகர் கேள்வி எழுப்பினார்.)
மூன்றாம் குலோத்துங்க சோழன், பிராமணனை கொன்ற பாவத்தை கழிக்க கும்பகோணத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் உள்ள திருவிடைமருதூர் கோயிலுக்குச் செல்கிறார். அவரைத் தொடர்ந்து வந்த பிரம்மஹஸ்தி கிழக்கு வாயிலில் தங்கி விடுகிறது. திரும்பப் பேய் பிடிக்காமல் இருக்க சிவனிடம் வேண்டியபோது, சிவன் சோழனை கருவறையின் பின்புற வாயிலில் செல்லச் சொல்கிறார். அப்படியே அவர் அருகிலுள்ள வனத்திற்கு சென்று திரும்பி பார்த்ததால் அந்த இடத்திற்கு ‘திருப்புவனம்’ என்று பெயர் வந்ததாகவும், சோழன் வருவான் என பிரம்மஹஸ்தி இன்னும் கிழக்குப் பக்கம் காத்திருக்கிறது எனவும் அதற்குச் சான்றாக கோயிலின் கிழக்கு வாயிலில் பிரம்மஹஸ்தி சிலை இருக்கிறது என்பதையும் ஆசிரியர் குறிப்பிடுகிறார். (இவ்வளவு புத்தியுள்ள பிராமணப்பேய், கருவறை வழியே சென்றது தெரியாமல் இன்னும் அங்கேயே தேமே’ என்று உட்கார்ந்திருப்பது நகைமுரணாக இருக்கிறதல்லவா? என்று ஒரு வாசகர் நக்கலோடு கேட்டார். அந்த சிலை இன்னும் அங்கு உட்கார்ந்திருப்பதால் இன்றும் அது பேசப்படுகிறது என்று நான் நினைத்துக்கொண்டேன். பயத்தை நினைவூட்ட, நிலைநாட்ட நல்ல உபாயம் இல்லையா?)
பாண்டிய நாட்டின் வீரசேனன் வேட்டையாடும் போது, மறையவனை அம்பு தாக்க, பிரம்மஹஸ்தி அவரைக் கைப்பற்றியது. அவர் திருவிடைமருதூர் சென்று குளத்தில் குளித்து கோவிலுக்குள் சென்றார். ஆனால் பூதகணங்கள் பிரம்மஹஸ்தியை கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை.
இதேபோல பாண்டிய நாட்டின் வரகுணனும். காட்டில் வேகமாக குதிரையில் செல்லும் போது, தூங்கிக் கொண்டிருந்த அந்தணன் மீது குதிரையின் குளம்பு பட்டதால் அந்த அந்தணன் இறந்துவிடுகிறார். போருக்கு வரும் சோழ மன்னனை துரத்தி வந்து, திருவிடைமருதூர் கோயிலில் பரிகாரம் செய்ததாக மற்றொரு கதை உள்ளது.
இவ்வாறு சிவன் முதல் இராமன், சோழன் பாண்டியன் வரை பரிகாரம் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் பிராமணன் ஒரு குற்றம் செய்தால் என்ன செய்ய வேண்டும்? அதற்கு மனுநீதியை சுட்டுகிறார்.
எந்த பாவம் செய்தாலும், பிராமணனை கொல்லாமல், காயமின்றி அவன் பொருளுடன் ஊரை விட்டு துரத்துக (மனு 8: 379) என்று மனுநீதி கூறுகிறது. "உனக்கு வந்தால் ரத்தம், எனக்கு வந்தால் தக்காளிச் சட்னியா" என்ற சொலவடை திடீரென நினைவுக்கு வருகிறது.
சரி, ஏன் இப்படி செய்கிறார்கள்? பிராமணனின் சொத்தை அபகரிப்பது மிகப்பெரிய தீமையாகவும், அது அவர்களின் குழந்தைகளையும் பாதிக்கும் (பிரம்மதேய செப்பேடுகள்) என்றும் கூறுவது, அவர்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க உதவுகிறது. மேலும், அதிகாரத்தில் இருப்பவர்களுடன் நெருக்கமாக இருக்கவும் பயன்படுகிறது. பிராமணல்லாதவரிடமிருந்து அபகரித்த நிலங்களை மீண்டும் மீட்டெடுக்க முடியாமல் அவர்களைப் பயமுறுத்தவும், தங்களின் உயிரைக் காப்பாற்றிக்கொள்ளவும், பிரம்மஹஸ்தி என்ற பிராமணப் பேய் கதைகள் பயன்படுகின்றனவோ என்று ஆசிரியர் ஒரு கருத்தை முன் வைக்கிறார். மனுநீதி போன்ற சட்டங்கள் ஒரு பக்கம், பிரம்மஹஸ்தி போன்ற பேய்க் கதைகள் மறுபக்கம் என அரசியல் மற்றும் பண்பாட்டு அரண்களை உருவாக்கிக் கொண்டனர் என்றும் கூறுகிறார். பண்பாட்டு மேலாண்மை அரசியல், பொருளாதார, சுற்றுச்சூழல் மேலாண்மைக்கு வழிவகுக்கிறது. நிலம் மூலம் வருமானம் கிடைக்கிறது. நிலம் வைத்திருப்பதால் அதிகாரத்துடன் நெருக்கம் கூடுகிறது.
பாபிலோனியன் ஹம்முராபி சட்டத்திலிருந்து மனு சட்டம் வரை வர்க்க ரீதியான, சாதி ரீதியான நீதி தான் கிடைக்குமா என்று ஒரு வாசகர் வருத்தப்பட்டது எவ்வளவு உண்மையானது. அவர் மேலும் இன்னொரு முக்கிய விஷயத்தையும் முன்வைத்தார். நூலாசிரியர் பழையக் கதைகளை மட்டுமே சொல்லி நிறுத்திவிட்டார். அதோடு கூட, இப்பொழுது உலக அளவிலும் பல்வேறு நாடுகளில் நடக்கிற விஷயங்களை எடுத்துக் கூறி, எப்படி அதே ‘பயத்தை’ மூலதனமாகக் கொண்டு பல்வேறு தரப்பினர் மேலாண்மை பிழைப்பு நடத்துகின்றனர் என்று தொடர்பு படுத்திக் கூறியிருந்தால் சிறப்பாக இருக்கும் என்றும் சொன்னார். அது கவனிக்க வேண்டிய கருத்து.
அந்தப் பயத்திற்கு எதிராக சொக்கத்தங்கம் செம்புலிங்கம் ஒரு கண்ணியமிகு கொள்ளையராக வாய்மொழி வழக்காறில் சித்தரிக்கப்படுகிறார் எனவும், பேருந்தில் தன்னை உட்கார அனுமதிக்காததால் கிருஷ்ண பெருமாள் நாடார் என்பர் தானே பொருளீட்டி, களக்காட்டில் இருந்து சேரன்மகாதேவிக்கு ஒரு பேருந்தை விட்டதாகவும் நூலாசிரியர் குறிப்பிட்டதை எடுத்துச் சொன்னார்கள். இன்னொரு வாசகர் சொன்னார். மனு ஸ்மிருதி என்று ஒன்று இருக்கிறதா? ஏன் இல்லாத ஒன்றை பெரிசாகப் பேசுகிறீர்கள் என்று சிலர் கேட்கிறார்கள். ஓர் ஆசிரியரைக் கொண்ட நூல் வடிவத்தில் அது தற்போது இல்லையென்றாலும், இன்றைய அன்றாட வாழ்வியலில் வெகுவாக இருக்கிறது. அதற்கு இத்தகைய நிகழ்வுகளே அப்பட்டமான சாட்சி என்றார்.
அதனால் தான் மாற்றுக் கதைகளையும்/நிகழ்வுகளையும் வாசிப்பதும், தெரிந்துக்கொள்வதும், உருவாக்குவதும், ஆவணப்படுத்துவதும், பரப்புவதும், இயக்கமாவதும் நம் வேலையாகிறது என நினைத்துக்கொண்டேன். அதற்காக வரலாறையும் வழக்காற்றையும் உன்னிப்பாகக் கவனிப்பது எவ்வளவு அவசியம்? ஆனால் அவைகளை எந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பது? கேள்விகள் கேட்கவேண்டும் இல்லையா?
வரலாறும் கண்ணோட்டமும்
ஆசிரியர் மூன்று பார்வைகளை முன்வைக்கிறார்.
மேலாண்மைப் பார்வை - மரபு வரலாறு; சாமானியர் பார்வை - நாட்டார் வழக்காறு; இயங்கியல் பார்வை - மார்க்சிய கண்ணோட்டம்
மேலாண்மைப் பார்வை - மரபு வரலாறு
வளங்களை கைப்பற்றி, திருடி, மக்களை அடிமைகளாக்கி, மேலாண்மை செய்யும் செயல் எல்லா காலத்திலும் எல்லா இடத்திலும் நடந்துக் கொண்டே இருந்திருக்கிறது. அதற்குத் தலைமைத் தாங்கி நடத்தியவர்களைப் பற்றியே வரலாறு சொல்லப்பட்டு வந்திருக்கிறது. மன்னர்கள் பற்றியும், அவர்கள் தொடுத்த போர்கள் பற்றியும், கட்டிய நகரங்கள் பற்றியும், எடுத்துரைப்பதே வரலாறாக முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது.
சாமானியர் பார்வை - நாட்டார் வழக்காறு
மரபு வரலாற்றுப் பார்வையில், சாமானியர்களின் வாழ்க்கை, அவர்களது தோல்விகள் மற்றும் வெற்றிகள் பற்றிச் சொல்லப்படவில்லை. ஆனால் அவர்களின் வரலாறு, பழமொழிகள், விடுகதைகள், வாய்வழிக் கதைகள், வில்லுப்பாட்டு, நாட்டார் பாடல்கள், சொலவடைகள், சடங்குகள் என அன்றாட வாழ்க்கையில் பரவி, விரவிக் கிடக்கிறது. இதை மாற்றுப் பார்வை எனவும் கூறலாம்.
மார்க்சியப் பார்வை - இயங்கியல் வழக்காற்றியல்
வரலாறு என்பது மேலாண்மை செய்பவர்களுக்கும், சாமானியர்களுக்கும் இடையேயான வர்க்கப் போராட்டம் என்றும் மார்க்சியப் பார்வைக் கூறுகிறது. இப்படி மூன்று பார்வைகளை ஆசிரியர் முன்வைக்கிறார்.
நாட்டார் வழக்காற்றை ஆய்வு செய்யும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார். அந்த வழக்காறு, குறிப்பட்ட வரையறைக்குட்பட்ட நிலப்பகுதிக்கோ, சாதியினருக்கோ சார்பாக இருக்கலாம். அதனை ஆய்வுக் கண்ணோட்டத்துடன் பார்க்கவேண்டும் என்று ஆலோசனை சொல்கிறார்.
அப்படி வழக்காற்றை பார்த்து உண்மையான வரலாற்றைப் புரிந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தை ஒரு வாசகர் தன் அனுபவத்தைக் குறிப்பிட்டார். அவர் இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வந்த போது, யாரைச் சந்தித்தாலும் ‘சாப்டாச்சா?’ என்று கேட்டார்களாம். அவர் இவர் என்றில்லை. எல்லோரும் ‘சாப்டாச்சா?’ என்று கேட்பார்களாம். முதல் நாள் கேட்டால், மறு நாளும் ‘சாப்டாச்சா?’ என்று கேட்பார்களாம். ஒரே நாளில் இரண்டு மூன்று முறை சந்தித்தாலும் ‘சாப்டாச்சா?’ எனக் கேட்பார்களாம். இவருக்கே அலுத்துப் போய்விட்டதாம். பிறகு தான் அவர் நண்பர் சொன்னாராம். 1943 வாக்கில், இரண்டாம் உலகப் போரின் போது, இந்தியாவில் கடும் பஞ்சம் வந்தது. பல நாட்களுக்கு உணவு இல்லாமல் பலரும் செத்து மடிந்தார்கள். அதனால் யாரும் யாரையும் பார்க்கும் போது ‘சாப்டாச்சா?’ எனக் கேட்கிறார்கள் என்று சொன்னாராம். ஒரு சொல்லில் எப்படி வரலாறு ஒளிந்திருக்கிறது பார்த்தீர்களா? என அவர் வினவினார். அட! ஆமாம்.
நூலிலிருந்து இரண்டு பழமொழிகளை இங்கு குறிப்பிடுவது நலம். ‘ஆனை துரத்தினாலும் ஆனக்காவில் ஒண்டாதே’ என்கிற பழமொழி வைணவத்திற்கும் சைவத்திற்கும் உண்டான சண்டையை வெளிச்சம் போடுகிறது. ‘தின்பவன் தின்பான் திருக்குறுங்குடியான் தெண்டமிறுப்பான்’ என்கிற பழமொழி மடத்தாருக்கும் குத்தகைத்தாரருக்கும் இடையேயான சண்டையைச் சொல்கிறது என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
மன்னன் மதிப்பன் கதை என்ற கட்டுரை ஒரு நூலில் உள்ளது. பாண்டிய மன்னனுக்கும் கன்னடிய மன்னனுக்கும் நடந்த போரில், மன்னன் மதிப்பன் என்ற இரண்டு சகோதரர்கள் பாண்டிய மன்னனுக்காக போராடி வெற்றியைப் பெற்றுத் தர, கன்னடிய மன்னன் ஒரு வீரனை ஆண்டி போல வேஷமிட்டு மன்னனைக் கொல்ல அனுப்புகிறான். அப்படியேக் கொன்று திரும்பும் போது, செய்தி கேட்டு மதிப்பன் அந்த வீரனைக் கொன்றதாக ஒரு வில்லுப்பாட்டு. இவ்வாறு நாட்டார் வழக்காற்றியலில் வரலாறு பொதிந்திருக்கிறது. ஒரு வாசகர் இந்தக் கதையில் புனைவு அதிகமாக இருக்கிறதாக கருத்து தெரிவித்தார்.
மற்றொருவர் அழகாக விவரித்தார். இதுவே இந்நூலாசிரியரின் அறச்சீற்றம். ஏன் Cliche-ஐ மட்டுமே பின்பற்றுகிறீர்கள்? நமக்கு சொல்லப்பட்ட மரபு வழி வரலாறை விட நாட்டார் வழக்காற்றியலில் உண்மை சிம்மாசனம் போட்டு உட்கார்ந்திருக்கிறது. அதுவே நூலாசிரியரின் முக்கியமான வாதம் என்று அவர் வலியுறுத்தினார். ஏனெனில் பொதுமையாக்கப்படும் மரபு வரலாற்றில் பல உண்மைகளை மறைக்க முடியும் என்பதற்காக மற்றொருவர் அதனை ஒப்புக்கொண்டு சான்றாக ஒரு கருத்தைச் சொன்னார். ஐநா சபையில் இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரும்போது, ‘1988க்குப் பிறகு உள்ள மனித உரிமை மீறல்களை விசாரிப்பது என்றால் ஜநா சபையில் தீர்மானம் ஏற்றுக் கொள்ளலாம்’ என்று இந்திய அரசு சொன்னது. வரலாற்றை மறைக்க முடியுமா? என்றால் முடியும் என்று இதுபோன்ற நிகழ்வுகள் உறுதிசெய்கின்றன என உணர்வுபூர்வமாகக் கூறினார்.
முந்தைய முறையில் பெரிய நூலுக்காக அனைவரும் சிறப்பாக கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். இந்த முறை சிறிய நூல் தான் என்று நான் சொன்னதைக் குறிப்பிட்டு, இவ்வாறு Non-Fiction நூலைப் படிக்கும் போது, இரண்டு வரி தாண்டியதும் வேறு எண்ணங்கள் எழ, மற்றொரு நூலைத் தேடிப் பிடித்து படிக்க வேண்டியிருக்கிறது. Fictionக்கும் Non-Fictionக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. நாம் அடிக்கடி Non-Fiction நூலையும் படிக்க வேண்டும். அது ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு அழைத்துச் செல்கிறது என்றார் ஒரு வாசகர். அதை ஆமோதித்து இன்னொருவர் ஆமாம், இந்தப் புத்தகத்தில் வரும் இடப்பெயர்ச்சியைப் பற்றிப் படிக்கும் போது Journey of Civilisation நூலை புரட்ட வேண்டியிருந்தது என்றார்.
முத்தாய்ப்பாக, ஆசிரியரைப் பற்றிய சிறு குறிப்பை வழங்கினர். ஆ.சிவசுப்பிரமணியன் (பிறப்பு: ஏப்ரல் 9, 1943) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பண்பாட்டு ஆய்வாளர். தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அசைவுகளை கவனித்து ஆவணப்படுத்தியவர். தமிழகத்தின் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரலாற்றின் மீது வெளிச்சம் வீழ்த்திய முக்கியமான ஆய்வுநூல்களை எழுதியவர். நா. வானமாமலை அவர்களை முன்னோடியாகக் கொண்டு, மார்க்ஸியச் சமூகவியல் நோக்கில் பெரும்பாலும் அடித்தளமக்களின் வரலாறாகவும், ஒடுக்குமுறையின் இயங்கியலை விளக்குவதாகவும் அவரது ஆய்வுகள் அமைந்தன. ஆகவேத்தான் தோழர் நல்லகண்ணுவைப் பற்றி சிறப்பாகக் குறிப்பிட்டது குறித்து பலரும் மகிழ்ச்சி தெரிவித்தார்கள். இடது சாரி சிந்தனையாளர்களுக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் வெகு தூரம் தேவையில்லை எனச் சொல்லியிருந்ததை பலரும் வரவேற்றார்கள்.
இறுதியில், நம் சொந்த வாழ்க்கையிலும், நம் குடும்பத்திலும், நம் நண்பர்கள் மத்தியில் மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்றும், வரலாறு அல்லது வழக்கம் என்றாலும் எதையும் கேள்வி கேட்க வேண்டும் என்றும் எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன் கூறியதை நான் மிகவும் விரும்பினேன். முடிந்தால் இதை ஒரு கட்டுரையாக எழுதியிடுங்கள் என்று அவர் கேட்டதால், இதோ எனது கட்டுரை.
*****************
துணைநூல் பட்டியல்
Mark, J. J. (2021, June 24). Code of Hammurabi. World History Encyclopedia. Retrieved from https://www.worldhistory.org/Code_of_Hammurabi/
ஆ. சிவசுப்பிரமணியன். goodreads. Retrieved from https://www.goodreads.com/author/show/15234815._
வணக்கம் குரு. என் இளம் வயதில் நான் பார்த்து வியந்த மனிதர் நீங்கள். இன்றைக்கும் என்னை வியப்படைய வைத்துக் கொண்டே இருக்கிறீர்கள்.
விரைவில் கட்டுரையைப் படித்து என் கருத்தினை எழுதுகிறேன்.
அன்புடன்
இளங்குமரன்.