top of page
Writer's pictureJohn B. Parisutham

திருநெல்வேலியில் வீதிநாடக யாத்திரை

Updated: Dec 19, 2021


திருநெல்வேலி ராஜவல்லிபுரத்தில் ஒன்று சேர்ந்தோம்.


நான் ரிஷி என்பவரை (ரூபர்ட்) தஞ்சையிலிருந்து அழைத்துச் சென்றிருந்தேன். அல்போன்ஸ் ஈரோட்டிலிருந்து சுரேஷ் என்பவரை (பின்னாளில் பிளாக் தியேட்டர் அமைத்தவரை) அழைத்து வந்தார். மதிவாணன், காமராஜ் என்பவரை அழைத்து வந்தார். பிரபா, பாலாவை அழைத்து வந்தார். மொத்தம் பத்து பேர். எல்லாரிடமும் இருந்து பணத்தை பொதுவில் வைத்தோம். மொத்தம் 62 ரூபா தேறியது.


என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? அவ்வளவு தான் எங்கள் பொருளாதார நிலை. எந்த நிறுவனத்தின் உதவியும் இல்லாமல் மக்களை நம்பி வீதி நாடக யாத்திரையை நடத்தமுடியுமா என்ற பரிசோதனையில் இறங்கி விட்டோம். போக்குவரத்திற்கு, சாப்பாட்டிற்கு, பத்து நாட்களுக்கு என்ன செய்தோம் என யோசிக்கிறீர்களா? சொல்கிறேன்.


ராஜவல்லிபுரத்தில் நளன் என்ற நண்பர்ர பக்கத்தில் ஒரு கான்வெண்ட் மூலமாக, ஒரு வீட்டில் தங்க ஏற்பாடு செய்திருந்தார். அங்கு பைகளை வைத்து விட்டு, குளத்தில் குளித்துவிட்டு, வேப்ப மரத்தடியில் கூடினோம்.


மூன்று நாட்களுக்கு நாடகம் மற்றும் பாடல்களை ரிகர்சல் செய்தோம்.


‘கபடி மேட்ச்’ என்ற நாடகம். கபடி விளையாட்டை விளையாடுவது போல, ‘கபடி, கபடி’ என்று சொல்வதற்கு பதில், சமூக அரசியல் அவலங்களை ஒவ்வொன்றாகச் சொல்லி வருவோம். ஊழல், ஊழல், ஊழல் எனப் பாடி வருவோம். அன்றன்றைக்கு நடக்கிற விஷயங்களை அந்த நாடகத்திற்குள் போட்டுக்கொள்ளக்கூடிய சுதந்திரம் இருந்தது.

அடுத்து மு. ராமசாமி அவர்கள் தயாரித்திருந்த ‘நியாயங்கள்’ நாடகம். தஞ்சாவூர் கீழவெண்மணியில், நியாயமான கூலி கேட்டதால், ஒரே வீட்டில் வைத்து 43 விவசாயக் குடும்பங்களின் உறுப்பினர்களை கொளுத்திய சம்பவம். காட்சி, பாடல், ஸ்லோமோஷன், ஸ்டில் என்று மனதைத் தொடும்.


பிறகு குப்பைத்தொட்டி நாடகம். நடுவில் ஒரு குப்பைத்தொட்டி. ஒருவர் வந்து, நிறைய சாப்பாட்டை குப்பைத்தொட்டியில் கொட்டுவார். இரண்டு நாய்கள் சாப்பாட்டிற்காக வந்து சண்டை போடும். அடுத்து ஒரு பசியுள்ள மனிதன் நாய்களை விரட்டுவான். நாய்கள் ஸ்டில். குப்பைத்தொட்டியில் கையை விடுவான். உடனே இன்னொரு மனிதன் வருவான். இருவருக்கும் சண்டை. கட்டிப் புரளுவார்கள். அப்படியே ஸ்டில். ஓர் அரசியல்வாதி மைக்கில் பேசுவார். “வறுமையை ஒழித்தோம். வளமையை வளர்த்தோம்” என்கிற பாணியில் நீட்டி முழக்கிப் பேசுவார். அவர் ஒவ்வொரு தடவை ஒரு கோஷத்தைச் சொல்லும் போதும் நாய்கள், “ஊ..ஊ..ஊ”வென ஊளையிடும்.


கடைசியாக புறாக்கள் நாடகம். ஒற்றுமையாக இருந்தால் வேடனின் வலையைக்கூடத் தூக்கிக்கொண்டு பறந்து விடலாம் என்ற நம்பிக்கையை கொடுக்கும் நாடகம்.

ராஜவல்லிபுரத்தில் முதல் நாள் நாடகம். வெறும் கைலியை தார்பாச்சி கட்டிக்கொண்டு, மேலே வெற்றுடம்புடன், தரையில் உருண்டு புரண்டு நடித்தோம். நாடகம் முடிந்த பிறகு, ஒரு துண்டை அரங்கத்தின் மத்தியில் விரித்தோம். “உங்கள் ஆதரவைத் தாருங்கள்” என்றோம். ம்ஹீம்! யாரும் எதுவும் போடுவதாகத் தெரியவில்லை.

பிரான்சிஸ் வட்டத்தின் நடுவில் வந்தார்.


“ உங்களிடம் 5 காசு, 10 காசு இருந்தாலும் போடுங்க. (அந்தக் காலத்தில் அவைகள் செல்லும்.) இல்லன்னா, ஏதாவது பொருளா இருந்தா குடுங்க” என்றார். சிலர் வீட்டுக்குச் சென்று, அரிசி, புளி, உப்பு, மிளகாய் என்று கொண்டு வந்தார்கள். துண்டு பத்தாது என்பதால் அவர்களே இரண்டு மூன்று சாக்குகளை கொடுத்தார்கள்.


சிலர் “ தம்பிங்களா! வாங்க. எங்க வீட்டுல வந்து சாப்பிடுங்க” என்று பாசமாக அழைத்தார்கள். ஆளுக்கொரு வீடு என்று போய் சாப்பிட்டோம். “ தம்பி! நாளைக்கு காலையில வாங்க. பழைய சோறு சாப்பிடலாம்” என்று அழைத்தார்கள்.


பிறகென்ன! குளத்தில் குளித்துவிட்டு, தலையைத் துவட்டிக் கொண்டே, அவர்கள் வீட்டிற்குச் சென்று கிடைத்ததைச் சாப்பிட்டோம். சேகரம் செய்த பொருட்களை பிரான்சிஸ், மளிகைக் கடைக்குச் சென்று அவரிடம் கொடுத்துவிட்டு பணம் வாங்கி வருவார். மதிய உணவை ஹோட்டலில் சாப்பிடுவோம். மாலை வரை ரிகர்சல். அடுத்த கிராமத்துக்கு நடை அல்லது டவுன் பஸ்.

சங்கர் சிமெண்ட் இருக்கிற தாழையூத்துக்குப் போனோம். நாடகம் போட்டோம். நாஞ்சான்குளத்திலே நாடகம். திண்ணையில் அமர்ந்து பீடி சுருட்டிக்கொண்டே பெண்களும், பிள்ளைகளும் நாடகத்தைப் பார்த்தார்கள். கண் நாடகத்தில், கை பீடி இலையில்.


சுற்றுவட்டார கிராமங்களில் நாடகம் போட்டோம். எல்லா இடத்திலும் துண்டு விரிப்பு. அல்லது சாக்கு விரிப்பு. நாடக முடிவில் வீடுகளில் சாப்பாடு. காலையில் அவர்கள் வீட்டிலேயே உபசரிப்பு. மதியம் மளிகைக்கடை விஜயத்திற்குப் பிறகு ஹோட்டலில் உணவு. இப்படித்தான் நாட்கள் நகர்ந்தன. ஓர் இடத்தில், அப்பொழுது தான் நெல் அறுவடை நடந்துக்கொண்டிருந்தது. நியாயங்கள் நாடகத்தில், நாங்கள் மூன்று பேர் மாடுகள் போல் குனிந்து, போரடிக்கும் காட்சியை, உண்மையிலேயே மாடுகளைக் கொண்டு போரடித்துக்கொண்டிருந்த விவசாயிகள் பார்த்தார்கள்.

“ அப்படியே எங்கள் வாழ்க்கை ஐயா!” என சிலாகித்து கண்ணீர் விட்டார்கள். அந்தக் கண்ணீரின் ஈரம் இன்னும் காயவில்லை.


நாடகத் தயாரிப்பு, பாடல் தயாரிப்பு, ரிகர்சல், நாடகம் நிகழ்த்துவது, குளிப்பது, தூங்குவது, நடப்பது, பயணிப்பது, மக்களோடு பேசுவது, எங்களுக்குள் கருத்து மோதல்களை நடத்துவது என வாழ்க்கைப் போகும் போது, புதிதாக குழுவானவர்கள், ஒரு குழுவாக இயங்குவது எப்படி கஷ்டம் என உங்களுக்குத் தெரிந்திருக்கும்.


ஆனால் பிரான்சிஸ் இருக்கும் போது அதில் கவலை இல்லை. குழுவைக் கட்டி காப்பாற்றியது மட்டுமல்ல, நல்ல நட்பை வளர்க்கவும் முனைவார். நட்போடு அரவணைப்பார். அதே நேரம் குழு செயல்பாட்டில் வீரயம் குறையாமல் பார்த்துக் கொள்வார்.

"நகுதற் பொருட்டன்று நட்டல்; மிகுதிக்கண்

மேற்சென்று இடித்தற் பொருட்டு."


என்பதற்கிணங்க, தன் விமர்சனங்களை அஞ்சாமல் கூறுவார். குழுவில் யாராவது ஒருவர் சற்று மிகையாகவோ, குறைவாகவோ நடந்துக்கொண்டால் கனிவுடன் எடுத்துக் கூறுவார்.


ஆனால் அடுத்த யாத்திரையில் தான் பிரான்சிஸ்க்கு சோதனை காத்திருந்தது.


****************


( தொடரும்...)

12 views0 comments

Comments


bottom of page