மணல் வீடு கட்டுவோம்
தேவையான பொருட்கள்: மணல், நீர், விளக்கமாறு குச்சி
செய்முறை: ஆற்று மணல் கிடைக்கிறதா? அல்லது கடற்கரை ஓரம் மணல் இருக்கிறதா? அல்லது பள்ளியிலோ, வீட்டிலோ மணல் கொட்டி உள்ளதா? ஈரப்பதம் இருந்தால் நல்லது. இல்லையென்றால் கொஞ்சம் நீரை தெளித்துக்கொள்ளுங்கள். வீடு போல, பாலம் போல, கோயில் போல என உங்கள் படைப்புத்திறனுக்கு ஏற்றாற்போல கட்டுங்கள். பூங்காங்கள், பறவைகள், மிருகங்கள், படகு என உங்கள் கட்டும் திறன் விரியலாம். விளக்கமாறு குச்சியை மடித்து ஒழுங்கு படுத்தலாம். துவாரங்களை உருவாக்கலாம். கொடி நடலாம். வேலி போடலாம்.
விளையாட்டு: வீடு செய்வதே விளையாட்டு தான்.
அப்பா அம்மா விளையாட்டு
மணல் வீடு கட்டி விளையாடும் போதே, ஒரு குடும்பமாகச் சேர்ந்து அப்பா, அம்மா, பிள்ளைகள், மாமா, அத்தை, சித்தப்பா, சித்தி என உறவுகளைக் கொண்டு விளையாடுவார்கள். அப்பாவுக்கு அடுப்புக்கரியைக் கொண்டு மீசை வரைவார்கள். அப்பா கடைக்குப் போவார்.
கடை
ஒருவர் கடையை வைத்திருப்பது போல நடிப்பார். கற்கள், செடி, கொடிகள், மற்ற பொருட்களை காய்கறிகள், பழங்கள் போல ஜோடனை செய்திருப்பர். கொட்டாங்குச்சியில் (சிரட்டையில்) தராசு செய்து பயன்படுத்துவர். அதை அம்மாவோ, அப்பாவோ வாங்கி வருவார்கள். மணல் வீட்டில் சமையல் நடக்கும்.
கூட்டாஞ்சோறு
முன்பெல்லாம் இரவு நேரத்தில் அல்லது விடுமுறைக் காலங்களில், ஒரு தெருவில் உள்ள பெரியவர்களும் குழந்தைகளும் ஒரே இடத்தில் உட்கார்ந்து, அவரவர்கள் கொண்டு வந்த உணவை மற்றவர்களுக்கும் பரிமாறி உண்பர். தெருவிளக்கின் அடியில் வட்டமாக உட்கார்ந்து உண்பர். இதையே கூட்டாஞ்சோறு என்பர். அதை அடிப்படையாக வைத்து, குழந்தைகள், உணவைப் போல சில பொருட்களை கற்பனையில் வடித்து அதை எல்லோரும் சேர்ந்து சாப்பிடுவது போல நடிப்பர். அதை மணல் வீட்டின் முன் அமர்ந்தும் செய்வர்.
*************
Comentarios