top of page
Writer's pictureJohn B. Parisutham

பனை நுங்கு வண்டி - பாரம்பரிய விளையாட்டு 3 - Traditional Game 3




 

3. நொங்கு வண்டி

 

தேவைப்படும் பொருட்கள்: நொங்கு மட்டை (முழு நொங்கில் நொங்கு எடுக்க சீவப்பட்ட உடன்) (படம்), கவட்டை குச்சி, மூங்கில் முள் குச்சி

 

செய்முறை: ஓர் அடி அல்லது ஒன்றரை அடி மூங்கில் குச்சி அல்லது வேறு மரத்து குச்சியை எடுத்துக்கொள்ளுங்கள். அது உங்கள் கட்டை விரல் தடிமம் இருக்கலாம். அதன் இரு பக்கங்களையும் அம்பு போல் கூராக சீவி விடுங்கள். இரண்டு கூர் முனைகளிலிலும் நொங்கு மட்டைகளை செருகுங்கள். மட்டையின் மையப் பகுதியில் செருகினால் சுழலுவதற்கு எளிதாக இருக்கும். குச்சியில் நொங்கு மட்டைகளை செருகியவுடன் படத்தில் உள்ளது போல் வண்டி கிடைக்கும். (படம்)

 

அடுத்து படத்தில் உள்ளது போல், (படம்) ஒரு கவட்டை குச்சியை வெட்டிக்கொள்ளுங்கள். இரண்டரை மூன்று அடி நீளம் இருந்தால் நல்லது. அந்த கவட்டை குச்சி, நீங்கள் வண்டியை ஓட்டிச் செல்ல தோதுவானதாக இருப்பது போல் பார்த்துக்கொள்ளுங்கள். இனி விளையாட வேண்டியது தான்.

 

விளையாட்டு:

படத்தின் காண்பித்தது போல், (படம்) கவட்டை குச்சியை, இரு நொங்குகளுக்கிடையே உள்ள குச்சியில் மாட்டி, உருட்ட, வண்டி உருண்டு ஓடும். அப்பறம் என்ன? ‘ஹேய்ய்ய்’ எனக் கத்திக்கொண்டு, பிடித்த ஊர்களுக்கு பயணிக்க வேண்டியது தான்.

 

 

கூடுதல் விளக்கம்:

நுங்கின் நடுப்பகுதியில் குத்த வேண்டும். நுங்கில் இரண்டு கண்கள் அல்லது மூன்று கண்கள் அல்லது நான்கு கண்கள் கூட இருக்கலாம். நுங்கை வெவ்வேறு விதமாக அழகு படுத்தலாம். அதன் தோலை வட்டமாகவோ, கோடுகளாகவோ கீறி அழகு படுத்தலாம். அதன் மேல் பனைஓலைகளை குத்திவைத்தால், ஓடும் போது ஒலி எழுப்பும். கவட்டை கம்பின் முனையில் ஒரு நுங்கை குத்தி அதைப்பிடித்துக்கொண்டும் ஓட்டலாம்.

 

மாட்டுவண்டியின் சக்கரத்தில் ஓர் அச்சாணி இருக்கும். அந்த அச்சாணியை ஒட்டி சிறு இரும்பு வளையம் இருக்கும். அதை பனைமட்டைக் கொண்டு ஓட்டலாம். அல்லது மிதிவண்டியின் சக்கரத்தைக்கூட வைத்து ஓட்டலாம்.

 

கற்றல்

ஒரு பொருளை (நுங்கு வண்டி, மிதிவண்டி சக்கரம் அல்லது ஏதாவது ஒரு சக்கரம்) வைத்து விளையாட்டாகத்தான் விளையாடுகிறார்கள். ஆனால் அதே நேரம் கற்கவும் செய்கிறார்கள். எடுத்துக்காட்டாக, வண்டியை ஓட்டிக்கொண்டே போகும் போது, யாராவது குறுக்கே வந்தோலோ அல்லது முன்னே நடந்து போனாலோ, பேருந்தில் ஒலி எழுப்புவது போல ‘பாம், பாம்’ என்று கையை காற்றில் அசைத்து, வாயால் ஒலி எழுப்புவார்கள். ஒலி எழுப்பி அவர்கள் மேல் மோதிவிட்டால், நான் தான் ‘பாம், பாம்’ என்று ஒலி எழுப்பினேனே என்று சிறுவர்கள் கூறுவார்கள். மோதாமல், லாவகமாக வண்டியைத் திருப்பி ஓட்டவும் செய்வார்கள். சில நேரம் ‘டக்' கென்று பிரேக் போடுவார்கள். வண்டியின் முன்பக்கத்தில் குச்சியைக் கொடுத்து அப்படியே நிறுத்துவார்கள். வண்டியை நிறுத்திவிட்டு கடையில் ஏதாவது வாங்குவதோ அல்லது நண்பர்களுடன் பேசுவதோ முடித்துவிட்டு, மறுபடியும் வண்டியை ஓட்டிச் செல்வார்கள். இதற்கெல்லாம் சிறப்புத் திறன் வேண்டும். இந்த மனநிலை வாழ்க்கையைக் கொண்டாடும் மனநிலை. வண்டியை மெதுவாக சுவர் ஓரம் கொண்டு சென்று, அதை சாய்த்து வைத்து அதன் மேல் குச்சியை வைக்கும் போது, விளையாட்டு நிறைவு பெறும்.

 

தமிழர் கலைகள் – கழைக்கூத்து

கழை என்றால் மூங்கில் கம்பு என்று பொருள். மூங்கில் கம்புகளைக் கொண்டு கூத்தாடுவது கழைக்கூத்து என்று பெயர். சிறு வளையத்துக்குள் ஆட்கள் போய் வருவது, அந்தரத்தில் கயிறு கட்டி அதில் மூங்கில் கம்பைப் பிடித்து, இரு பக்கமும் விழுந்து விடாமல் நடந்து வருவது, சைக்கிள் ரிம்மை தூரத்தில் தூக்கிப் போட்டு, தூக்கிப் போட்டவரின் பக்கமே வருவது போல் செய்வது, தண்ணீரைக் குடித்துவிட்டு பிறகு வாய் வழியே கொண்டுவருவது, சிறு குழந்தையை கம்பில் ஏற்றி வானத்தில் கொண்டு போய் விட்டு, குச்சியை தூக்கி எறிந்து விட்டு குழந்தையைப் பிடிப்பது என வெவ்வேறு விளையாட்டுகள் காண்பிப்பார்கள். அவர்கள் இப்படி வளையத்தை வைத்து பல கூத்துகளைக் காண்பித்து பிழைப்பார்கள். முப்பது நாற்பது வருடங்களுக்கு முன்னர் இருந்த பல கழைக்கூத்தாடிக் குடும்பங்கள் இன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கின்றன.

7 views0 comments

Comments


bottom of page