2. பனை ஓலையில் காத்தாடி
தேவைப்படும் பொருட்கள்: பனை ஓலை, முள், வேப்பங்காய், குச்சி
செய்முறை: 4-5 அங்குலம் நீளத்திற்கு, ஓர் அங்குலம் அகலத்திற்கு இரண்டு பனைஓலைகளை எடுத்துக்கொள்ளுங்கள். அதன் இரு முனைகளையும் படத்தில் காட்டியபடி கூராக சீவிக்கொள்ளுங்கள். அவைகள் தான் காத்தாடி. (படம்). ஓர் ஓலையில், நடுவில் இரு முனையிலும் சிறுது கிழித்துக்கொள்ளுங்கள். மற்றொரு ஓலையை அந்தக் கிழித்த இடத்தில் விட்டு வெளியே எடுங்கள். அப்பொழுது X வடிவத்தில் இருக்கும்.
பிறகு, ஒரு பென்சில் தடிமனுக்கு, ஓர் அடி நீளத்திற்கு, ஒரு குச்சியை எடுத்துக்கொள்ளுங்கள். அந்தக்குச்சியின் மையத்தில் ஒரு முள்ளை செருகுங்கள்.
அடுத்து, அந்த முள்ளில் X வடிவத்தில் இருக்கும் இரு காத்தாடிகளையும் செருகுங்கள். அது இறுக்கமாக இல்லாமல், கொஞ்சம் தளர்வாக இருக்கட்டும். முள்ளின் முனையில் ஒரு வேப்பங்காயை செருகிவிட்டால், முள் குத்தும் பிரச்சனை இருக்காது. இப்பொழுது உங்கள் பனை ஓலை காத்தாடி தயார். பனை ஓலைகள் கிடைக்கவில்லையென்றால், தடிமனான காய்ந்த இலைகளையோ, அல்லது காகித அட்டைகளையோ பயன்படுத்தலாம். சாதாரண காகிதத்தைக் கூட மடித்து காற்றாடி போல செய்யலாம்.
விளையாட்டு: பனை ஓலை காத்தாடி தயாராகிவிட்டதா? அதை காத்தடிக்கும் திசையில் காண்பியுங்கள். சுற்றும். அல்லது அதை எடுத்துக்கொண்டு சிறிது தூரம் ஒடுங்கள். அப்பொழுது சுற்றும்.
கூடுதல் தகவல்:
பனைஓலைச்சுவடி
காய்ந்த தென்னை ஓலையில் காத்தாடி செய்யமுடியாது. ஏனென்றால், தென்னை ஓலை காய்ந்துவிட்டால் அது சுருண்டு விடும். பனை ஓலைகள் தான் வலுவாகவும், நெகிழ்வுத் தன்மையுடனும் இருக்கும். அதனால் தான், கற்களில் எழுதியபிறகு, தமிழ்ப் புலவர்கள் பனைஓலையில் செய்யுட்களை எழுதினார்கள். பெரும் பெரும் காப்பியங்களைக் கூட பனை ஓலையில் எழுதி வைத்தார்கள். அதைத்தான் பனைஓலைச் சுவடி என்கிறோம். அந்த பனைஓலைச் சுவடிகளை முறையாகப் பக்குவப்படுத்தி காப்பாற்றி வந்ததால் தான், இன்றைக்கு சங்க இலக்கியங்கள், பக்தி இலக்கியங்கள், மற்ற இலக்கியங்கள் என்று நமக்கு கிடைக்கப் பெற்றிருக்கின்றன. நமது வரலாறையும், பண்பாட்டையும் தலைமுறை தலைமுறையாகத் தெரிந்துக் கொள்வதற்கு இந்தப் பனைஓலைகள் பயன்பட்டிருக்கின்றன என்பது தெரியும் போது பனைஓலைகள் மீது மிகுந்த மரியாதை வருகிறது, அல்லவா?. பனைஓலைகள் கிடைக்கும் நிலச்சூழலில், அங்கு வாழும் சமூகம், தங்கள் எண்ணங்களை, உணர்வுகளை கலை, இலக்கியமாக காத்து வந்ததை நினைக்கும் போது மகிழ்வாக இருக்கிறது. இல்லையா? சேர, சோழ, பாண்டியர்கள் போன்ற அரசர்களில் சேரமன்னர்கள் பனம்பூவை தங்கள் நாட்டு பூவாக அங்கீகரித்தார்கள். தமிழ்நாட்டின் மரமாக பனைமரம் விளங்குகிறது.
பனைமரத்தின் பயன்கள்
பனைமரத்தின் வேர், தண்டு, இலை, பூ, காய், பதநீர், கள்ளு, பனங்கற்கண்டு, பழம் என எல்லாமே எல்லா காலத்திலும் பயன்படும். வெள்ளம், புயல், சுனாமி போன்ற இயற்கை பேரிடர் சமயத்திலும் கூட விழுந்துவிடாமல் இருக்கிற மரங்களில் ஒன்று பனைமரம். மண் அரிமானத்தைத் தடுப்பதில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது இது. காட்டாறு போன்ற நீர்நிலைகளில் நீரைத் தேக்கி ஊர் மக்களுக்கும், கால்நடைகளுக்கும், விவசாயத்திற்கும் பயன்பட பனைமரத் தோப்புகள் பயன்படுகின்றன. நில வரையறைக்கும் ஊர் எல்லையை முடிவு பண்ணுவதற்கும் பனைமரங்களையே தமிழர்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். பனைமரத்தில் தான் வீட்டு உத்திரம் போடுவார்கள். மச்சி வீடு கட்டுவதற்கும், கூரையாக பயன்படுத்துவற்கும் பனைமரத்தைப் பயன்படுத்துவார்கள். அப்படி கட்டுகிற வீடுகள் எண்பது, நூறு வருடங்கள் இருக்கும்.
பனை ஓலையில் பாய் செய்யலாம், பெட்டி செய்யலாம். கூடை, கொட்டான் போன்ற கைப்பொருட்கள் நிறைய செய்யலாம். கிளுகிளுப்பை செய்யலாம். அதில் கடுகோ, குண்டுமணியோ போட்டு ஆட்டினால் அது சலக், சலக்’கென்று ஒலி எழுப்பும் கிளுகிளுப்பை ஆகிவிடும். பனை ஓலையில் விசிறி செய்யலாம். தலையில் போடும் தொப்பி செய்யலாம். மட்டையைக் கொண்டு வேலி கட்டலாம். மட்டையைப் பிரிச்சி நார் எடுக்கலாம். நாரை நனைத்துக் கயிறு திரிக்கலாம். பனம்பழத்தை அப்படியே சாப்பிடலாம். சுட்டு சாப்பிடலாம். மலச்சிக்கல் வராது. நீரிழிவு நோய் வராது. உள்ளுறுப்புகளை சீராக்கும். பனம்பழத்தை சாப்பிட்டுவிட்டு அதில் மனிதன் போல ஓர் உருவம் செய்வார்கள்.
வாகை மரமும் காத்தாடியும்
தாள் கண்டுபிடிக்கப்படாத காலத்திலும் தமிழ் சமூகம் வாகை மரத்தை வெகுவாக பயன்படுத்தி வந்திருக்கிறது. எப்பேர்பட்ட போரிலும் வெற்றி கண்ட மன்னர்கள் வாகைப் பூவைச் சூடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதைத்தான் வாகைச் சூடினர் என்று வெற்றிப் பெற்றவர்களுக்குச் சொல்வார்கள். அந்த வாகை மரத்தின் காய் பார்த்திருக்கிறீர்களா? காய்ந்து போன வாகை மரத்தின் காயை எடுத்து ஆட்டிப் பார்த்தீர்களானால், அது இன்றைய ‘கிளு கிளுப்பை’ போல் ஒலி எழுப்பும். நான்கைந்து வாகை நெத்தைக் கட்டி, குழந்தைகளிடம் காட்டி, ‘சல, சல, சல, சல’ வென்று அதனை ஆட்டி மகிழ்விப்பார்கள். வெறுமனே வாகைக் காயை கட்டி தொங்கவிட்டிருந்தாலும், காற்று அடித்து அது ‘கிளு கிளு’ வென சத்தம் போடும். அந்த வாகை நெத்தை இரண்டாகப் பிளந்தும் காத்தாடி செய்யலாம். இரண்டாகப் பிளக்காமல் அப்படியே காயைக் காத்தாடியாகச் செய்து சுத்தவைத்தால், ஒலி எழுப்பிக்கொண்டே சுற்றும்.
வாகையும் இலக்கியமும்
வாகை என்றால் வெற்றி என்று பார்த்தோம். வாகை என்பது புறத்திணையில் ஒரு திணை. வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை, போன்றன எல்லாம் புறத்திணையில் உள்ள திணைகள். எல்லாம் பூ, செடி அல்லது மர வகைகளைக் கொண்டது. பழஞ்செய்யுள் ஒன்று அவைகளை அழகாக விவரிப்பதைக் காணலாம்.
வெட்சி நிரைகவர்தல்; மீட்டல் கரந்தையாம்;
வட்கார்மேற் செல்வது வஞ்சியாம்; - உட்காது
எதிரூன்றல் காஞ்சி; எயில்காத்தல் நொச்சி;
அதுவளைத்தல் ஆகும் உழிஞை; - அதிரப்
பொருவது தும்பையாம்; போர்க்களத்து மிக்கோர்
செருவென்றது வாகையாம்.
இது செய்யுள்.
வாகை என்பது வெற்றி. அதுவும் ஆரவாரமிக்க வெற்றி. ஓலமிட்டால் அது துயரம். கொண்டாடினால் அது வாகை. அல்லது வெற்றி.
பனையும் இலக்கியமும்
சங்க இலக்கியத்தில் தலைவன் பனநொங்கு செய்து விளையாடுவான். (இது இன்னொரு விளையாட்டு. அது எப்படி செய்வது என்று பிறகு சொல்கிறோம்). தலைவன் தலைவியை விரும்புவான். அதை அவளது தோழியிடம் தெரிவிப்பான். தோழி தலைவியின் குடும்பத்தாரிடம் தெரிவிப்பாள். தலைவியின் தந்தை மறுப்பார். தமையன்மார்கள் மறுப்பார்கள். அப்பொழுது கருக்கு அறுக்காத பனமட்டையில் பனநொங்கு வண்டி செய்து, தலைவன் தெருவில் ஓட்டுவான். அப்படி தலைவன் தெருவில் வரும் பொழுது தலைவனுக்கு இரத்தம் சொட்டும். அதைக் கண்டாவது தலைவியின் குடும்பத்தார் மனம் இரங்கமாட்டார்களா? எனத் தலைவன் அப்படி செய்வான். தலைவியின் தந்தை மனமிறங்கி தலைவனோடு தலைவி சேருவாள்.
சங்க இலக்கியத்தில் பனங்கள்ளைப் பற்றிய பாடலை ஔவையார் அதியமான் நெடுமான் அஞ்சி மீது பாடியுள்ளார். அதியமான் நெடுமானஞ்சி தகடூரை ஆண்ட குறுநில மன்னன். கடையெழு வள்ளல்களில் ஒருவன். இம்மன்னன் ஒளவையாரோடு நெருங்கிய நட்புக் கொண்டிருந்தான். உண்டாரை நெடுங்காலம் வாழ வைக்கக் கூடிய அருநெல்லிக்கனி ஒன்றைக் காட்டில் மிகவும் முயன்று பெற்று அதனைத் தான் உண்ணாமல் ஒளவைக்குக் கொடுத்து உண்ணச் செய்தவன் இவன். பகைவர் எழுவரை ஒரு போரில் வென்று அவர்களுக்குரிய அணிகலன்களையும் அரச உரிமையையும் இம்மன்னன் கவர்ந்து கொண்டான். இவனுடைய திருக்கோவலூர் வெற்றியைப் பரணர் புகழ்ந்து பாடியுள்ளார். இம்மன்னன் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையால் வெல்லப்பட்டான். அதியமான் பகைவரோடு புரிந்த போரில் பகைவர் எறிந்த வேல் அவனுடைய மார்பில் தைக்க அவன் உயிரிழந்தான். ஒளவையார் ஆற்றாமல் வருந்திச் சிறியகட் பெறினே என்று தொடங்கும் இப்பாடலைப் பாடினார்.
முதலில் பாட்டின் பொருளைப் படியுங்கள். பிறகு பாடலைப் பார்க்கலாம்.
“சிறிய அளவினை உடைய மதுவைப் (பனங்கள்ளைப்) பெற்றால் எங்களுக்குக் கொடுப்பான்; அந்நிலை போய்விட்டது. பெரிய அளவில் மதுவை அவன் பெற்றால் அதனை யாம் உண்டு பாட, எஞ்சிய மதுவைத் தான் மகிழ்ந்து அருந்துவான். அந்நிலையும் போயிற்று. எல்லார்க்கும் பொதுவான நிலையில் தனக்குக் கிடைக்கும் சோறு சிறு அளவினதாயினும் மிகப் பலரோடும் கலந்து உண்பான். பெரிய அளவினதாகிய சோறு கிடைப்பினும் மிகப் பலரோடும் கலந்து உண்பான். அதுவும் கழிந்தது. சோற்றின் இடையே எலும்பும் ஊனும் தட்டுப்பட்டால் அவற்றை எங்களுக்கு அளிப்பான். அதுவும் நீங்கிற்று. அம்போடு வேல் வந்து பாயும் போர்க்களங்களில் தான் சென்று முன்னிற்பான். அதுவும் இல்லையாயிற்று. தான் காதலிப்பார்க்குத் தன் கையால் மாலை சூட்டுதலால் நரந்தப் பூ மணம் வீசும் தன்னுடைய கையால் அருள்மிகக் கொண்டு புலால் நாறும் என் தலையைத் தடவுவான். அஃதும் இனி நிகழாதாயிற்று. அவனுடைய கரிய மார்பில் தைத்த வேல் அருங்கலை வளர்க்கும் பெரும்பாணர்களின் கையில் உள்ள மண்டைப் பாத்திரத்தை ஊடுருவியது; அவர்கள் கைகளையும் துளைத்தது; அழகிய சொற்களை ஆராய்ந்து கூறும் நுண்ணிய அறிவுடையார் நாவிலும் போய்த் தைத்தது. எங்களுக்குப் பற்றுக் கோடான எங்கள் தலைவன் எங்கே உள்ளானோ? இனிப் பாடுகின்றவரும் இல்லை; பாடுகின்றவர்களுக்கு ஈவாரும் இல்லை. குளிர்ந்த நீரை உடைய துறையில் தேனைக் கொண்ட பகன்றை மலர்கள் பிறராற் சூடப்படாமல் உதிர்வது போலப் பிறர்க்குப் பொருளைக் கொடுக்காமல் மாய்ந்து போகின்றவர்கள்தாம் இவ்வுலகில் பலராக உள்ளனர்”.
இது தான் பாட்டு.
சிறியகட் பெறினே எமக்கீயும் மன்னேபெரிய கட் பெறினேயாம் பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னேசிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னேபெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன் மன்னேஎன்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும் மன்னேஅம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும் மன்னேநரந்தம் நாறும் தன் கையால்புலவு நாறும் என்தலை தைவரும் மன்னேஅருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇஇரப்போர் புன்கண் பாவை சோரஅஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்சென்றுவீழ்ந் தன்று அவன்அருநிறத்து இயங்கிய வேலேஆசாகு எந்தை யாண்டுஉளன் கொல்லோஇனிப் பாடுநரும் இல்லை படுநர்க்குஒன்று ஈகுநரும் இல்லைபனித்துறைப் பகன்றை நறைக் கொள் மாமலர்சூடாது வைகியாங்குப் பிறர்க்கு ஒன்றுஈயாது வீயும் உயிர்தவப் பலவே
அடுத்து சங்க இலக்கியத்திலிருந்து ஒரு பாட்டைப் பாருங்கள். பிறகு விளக்கம் பார்க்கலாம்.
நாராய்! நாராய்! செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய் !
நீயுநின் மனைவியும் தென்றிசை குமரியாடி
வடதிசைக் கேகுவீ ராயின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரைக் கனைகுரற் பல்லி
பாடு பார்த்திருக்குமென் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
ஆடை யின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழை யாளனைக் கண்டனம் எனுமே.
பாடலின் விளக்கம்:
சத்திமுத்தம் என்ற ஊரில் வாழ்ந்து வரும் புலவர் தம் வறுமையைப் போக்க பாண்டி நாட்டை அடையும்போது பெருமழையில் மாட்டிக் கொண்டார். உடம்பை மூடி போர்வையின்றிக் குளிரால் வாடினார். தம் விதியை நொந்து, தம் மனைவி பிள்ளைகளை எண்ணி வருந்தினார். அப்போது வானில் செல்லும் நாரையைப் பார்த்துத் தம் நிலையைப் பாடலாகப் பாடினார்.
“நாரையே! நாரையே! சிவந்த கால்களையுடைய நாரையே! பனங்கிழங்கைப் பிளந்தது போல பவளம் போன்று செந்நிறமுள்ள கூர்மையான வாயையும், சிவந்த காலையும் உடைய நாரையே! நீயும் உன் மனைவியும் தெற்குத் திசையில் உள்ள கன்னியாகுமரிக் கடலில் முழுகி, அங்கிருந்து வடக்குத் திசை நோக்கிச் சென்றால், எம் ஊராகிய சத்திமுத்தத்தில் உள்ள நீர்நிலையிலே இறங்கி, மழையினால் நனைதற்குரிய சுவரோடு கூடிய கூரை வீட்டில், கனைகுரல் பல்லி நற்சகுனமாக ஒலிப்பதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற என் மனைவியைப் பார்த்து, என் நிலையைக் கூறுவாயாக! எம் நாட்டின் அரசனாகிய மாறன் என்றும் வழுதி என்றும் பெயரையுடைய பாண்டிய அரசனது மதுரையில் போர்த்துக் கொள்ள ஆடையில்லாமல் குளிர் காற்றினால் ஒடுங்கி கைகள் இரண்டினாலும் உடம்பை மூடிக் கொண்டும், கால்களைக் குந்த வைத்துக் கொண்டு தழுவிக் கொண்டும், பெட்டிக்குள் அடங்கியிருக்கும் பாம்பு போல பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கின்ற வறுமையுடைய உனது கணவனைப் பார்த்தோம் என்று சொல்லுங்கள்” என்று பாடுகின்றார் புலவர்.
இது மட்டுமா? பனைமரம் தமிழகப் பண்பாட்டில் எப்படியெல்லாம் முக்கிய பங்காற்றுகிறது தெரியுமா?
பனைமரமும் தமிழ்ப்பண்பாடும்
தமிழகத்தில் பனிரெண்டு மாதங்களும் பனைஓலை கிடைக்கும். தமிழ்நாட்டில் பனையூர் என்று கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட ஊர்கள் இருக்கின்றன. கார்த்திகை, மார்கழியில் பனைமட்டையை வைத்து ‘சொக்கப்பனை’ சுற்றுவார்கள். பனைமட்டையை எரிப்பார்கள். பனைமரத்தில் மட்டும் தான் தூக்கணாங்குருவி கூடு கட்டும். தூக்கணாங்குருவி தன் கூட்டை குட்டையாக கட்டினால் அந்த வருடம் காற்று குறைவாக வீசப்போகிறது என்று பொருள். அதே நேரம் கூட்டை நீளமாகக் கட்டினால், அந்த வருடம் காற்று வேகமாக வீசப்போகிறது என்று பொருள். (ஆனால் இப்பொழுது தூக்கணாங்குருவிகளை மனிதர்கள் வாழ விடுவதில்லை. காணாமல் போய்க்கொண்டே இருக்கிறது.). காற்று வருகிறதைப் பொறுத்து பயிருக்கு பூச்சி வருவதை முன்கூட்டியே விவசாயிக்கு அது தெரிவிக்கிறது. பயிருக்கு வரும் பூச்சியை விரட்டவேண்டும். அதற்கு என்ன செய்தார்கள் தெரியுமா? ஒரு பனைமரத்தை நடுவார்கள். சுற்றி பனைஓலைகளை கோபுரம் போல் கட்டிவிடுவார்கள். கிராமத்தில் இருக்கும் எல்லோருக்கும் ஒரு மட்டை கிடைப்பது போல அந்த பனைஓலைகளின் எண்ணிக்கை இருக்கும். பிறகு அதைக் கொளுத்திவிடுவார்கள். பிறகு எரியும் பனைமட்டையை எடுத்து ஊர்வலம் வருவார்கள் கிராம மக்கள். அதனை நிலத்தில் கொண்டு போய் வைத்து, பூச்சிகளை இயற்கை முறையில் கவர்ந்து கொல்வார்கள். இதை ஒரு சடங்காகவும், வழிபாடாகவும் செய்வார்கள்.
ஆண் பனை என்று ஒன்று உண்டு. அதில் நொங்கு வராது. ஆனால் பூ மட்டும் வரும். ஆண் பனையில் உள்ள பூவை எடுத்துவருவார்கள். ஒரு சிறிய குழி தோண்டுவார்கள். அதில் அந்த பூக்களைப் போடுவார்கள். தீயைக் கொண்டு மிதமாக எரிப்பார்கள். லேசாக எரியும் போதே பனை ஓலையைப் போட்டு மூடி, அதில் மண்ணை போட்டு மூடிவிடுவார்கள். முழுசாக எரிய விடுவதில்லை. காலையில் தோண்டி, பாதி கருகி உள்ள பனம் பூக்களை எடுப்பார்கள். அதை உரலில் போட்டு இடிப்பார்கள். அல்லது தரையில் போட்டு கற்களால் நசுக்குவார்கள். பழைய துணி ஒன்றை எடுத்து பை போல தைப்பார்கள். அதில் இடித்த அல்லது நசுக்கிய பாதி கருகிய பனம் பூக்களைப் போட்டு, தைத்து விடுவார்கள். அதில் மாட்டு சாணத்தை தேய்த்து காய வைத்துவிடுவார்கள். அடுத்து குட்டிப் பனைமரத்தில் உள்ள மட்டையை வெட்டி, அதில் ஒரு பக்கத்தில், பூக்கள் உள்ள பையைக் கட்டிவிடுவார்கள். மறு பக்கத்தில் சிறு கயிறைக் கட்டிவிடுவார்கள். சொக்கப்பனை எரியவிடும் நாளன்று, சிறுவர்களும் இளைஞர்களும், அந்த பையில் ஒரு நெருப்பு கங்கை வைத்து, மறு முனையைப் பிடித்துக்கொண்டு ஆட்டிக்கொண்டே தெருவில் வருவார்கள். சிறிது நேரத்தில் அதை சுத்த ஆரம்பிப்பார்கள். அது மத்தாப்பு போல பொறி பொறியாக தெறிக்கும். பெரும்பாலும் இரவு நேரத்தில் தான் அதைச் செய்வார்கள். இது குறித்து தமிழ் மரபில் ஒரு பாட்டு இருக்கிறது.
‘மாவலி அப்பன் மதுரைக்குப் போறான்
சோறு கொண்டாடி சொக்காயி...’ என்ற பாட்டைப் பாடிக்கொண்டே பொறி எங்கும் தெறிக்க சுத்துவார்கள். கங்கு தீரும் பொழுது அதை தூக்கி எறிவார்கள்.
பனைஓலைக் காத்தாடியும் கற்றலும்
கற்றலில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால் ஒரு செயல் இன்னொரு செயலைச் செய்யத் தூண்டவேண்டும். காத்தாடி செய்து, காற்று வரும் திசை நோக்கிக் காட்டுவதும், காத்தாடி சுத்தும் படி ஓடுவதும், வேகமாக ஓடி வந்து நின்று காத்தாடியைச் சுற்ற வைப்பதும், சுற்றி நிற்கும் போது சிறிது வாயால் ஊதிவிடுவதும் என்று பல செயல்களைச் செய்து விளையாடும் விளையாட்டு இது. இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், கற்றல் தானாகவே நடக்கிறது. காத்தாடி சுத்தும் ஒரு சிறுவன் அவனாகவே கற்றுக்கொள்கிறான். இன்னொரு ஆசிரியரின் தேவை குறைந்துப் போய் விடுகிறது. இயற்கையே ஆசானாக நிமிர்ந்து நிற்கிறது. காத்தாடி செய்யும் போது, கைவேலைத் திறனும் பெருகுகிறது. அதுமட்டுமா! ஓடுவதால், மூச்சு நன்றாக விடமுடிகிறது. உடல் திடம் பெறுகிறது.
இன்னொரு விடயத்தைக் கவனிக்கவேண்டும். காத்தாடி செய்வது, காற்று வரும் திசை நோக்கி ஒடுவது, எவ்வளவு தூரம் ஓடுவது, எப்பொழுது திரும்பி வருவது என சிறுவர்களே முடிவு செய்கிறார்கள். வேறு யாரும் இவர்களுக்காக முடிவு செய்வதில்லை. முடிவு செய்யும் திறனும் வளர்கிறது. எவ்வளவு அருமை பாருங்கள்! காற்று அடிக்கும் திசையை நோக்கி காத்தாடியைக் காண்பித்து சிறுவர்கள் நிற்பார்கள். பனைஓலை காத்தாடி சுழலும். ஒருவேளை காத்தடிப்பது நின்றுவிட்டால், ஓடத் துவங்குவார்கள். எந்தத் திசையிலிருந்து காற்று வருகிறது என்கிற சூழலறிவு சிறுவர்களுக்குப் புலப்படும்.
இப்படி பனை மரம் தமிழர்களின் வாழ்வியலில் மிகப்பெரிய பங்கு வகித்து வந்தது. அதை நினைவு கூறும் வகையில் பனை ஓலையில் காத்தாடி செய்து விளையாடி மகிழ்வோம்.
Comments