களிமண்ணில் கலைகள்
தேவையான பொருட்கள்: களிமண், தண்ணீர், விளக்கமாத்து குச்சி
செய்முறை: களிமண்ணை எடுத்துக்கொள்ளுங்கள். சிறிது தண்ணீர் விட்டு பொருட்களை செய்யும் அளவுக்கு பதமாக ஆக்கிக் கொள்ளுங்கள். சப்பாத்தி மாவு போல வரட்டும்.
விளையாட்டு: அதில் சட்டி, பானை, அம்மி, தட்டு, பாட்டில், சுரைக்காய், தேங்காய், பப்பாளிப் பழம், நாற்காலி, மேசை என்று உங்களுக்குப் பிடித்தமான பொருட்களை செய்யுங்கள். விளக்கமாத்து குச்சியை வைத்து அழகாக்கிக் கொள்ளுங்கள். பலவகை பொம்மைகளை செய்யலாம். அதை வெயிலில் காய வைத்து அல்லது நெருப்பில் சுட்டு திடமாக்கலாம். நிறம் கூட அடிக்கலாம். அதை வைத்து வீடு, பள்ளி, சந்தை என்று காட்சிகளை உருவாக்கி மகிழலாம்.
சிலர் ராட்டினம் செய்வர். களிமண்ணை கொஞ்சம் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறு குச்சி ஒன்றை செருகுங்கள். இரு பக்கமும் களிமண் உருண்டைகளைக் கொண்ட ஒரு குச்சியை அதன் மேல் வைத்து சுற்றுங்கள். ராட்டினம் தயார்.
சிலர் மருத்துவமனை போன்று, சந்தையைப் போன்று, பள்ளிக்கூடம் போன்று என பலவிதங்களில் களிமண்ணை வைத்தே உருவாக்குவர். சிலர் மைக் செட் போன்ற உருவங்களைச் செய்து விளையாடுவர். இப்பொழுது கடைகளில் செயற்கை இரப்பரைக் கொண்டு உருவங்கள் செய்வதற்கு என்று பலவிதப் பொருட்களை விற்கிறார்கள். ஆனால் இயற்கையில் கிடைக்கும் களிமண்ணைத் தொட்டு, நீர் ஊற்றி, பிசைந்து, அது காய்வதைப் பார்த்து, அதற்கு நிறம் ஏற்றி என்று நேரடி அனுபவத்தை அவைகள் கொடுப்பதில்லை.
களிமண் உருண்டையில் விதையை வைத்துவிட்டால் அது தானாக முளைக்கும். ஐயனார் சிலைகள், குதிரை சிலைகள் போன்றவைகளை கிராமத்தில் பார்த்து இருப்பீர்கள். அப்படியான பெரிய சிலைகளைச் செய்வதற்கு முன்னோடி இப்படி களிமண்ணில் விளையாடுவது தான்.
***********
Comments