top of page
Writer's pictureJohn B. Parisutham

கட்டுரை 7 - இன்னும் ஏழு நாட்களில் டோக்கியோ 2020 ஒலிம்பிக்

Updated: Jan 9, 2022


ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் Tokyo 2020 எனும் பெயரில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் அடுத்தவாரம் வெள்ளிகிழமை (ஜூலை 23) துவங்குகிறது. கடந்த ஆண்டு நடைபெறவேண்டிய இந்த போட்டி கோவிட் காரணமாக ஓராண்டு தாமதமாக நடந்தாலும் ஒலிம்பிக் போட்டியின் பெயர் Tokyo 2020 தான். இந்த ஒலிபிக் போட்டி இரு வாரங்கள் நடைபெற்று ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி கோலாகலமாக நிறைவுபெற திட்டமிடப்பட்டுள்ளது.


ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ஒரு பெண்ணும் ஓர் ஆணும் கொடி ஏந்தி மற்ற வீரர்களை வழிநடத்த வேண்டும் என்ற பாரம்பரியத்தை டோக்கியோ ஒலிம்பிக் துவக்கி வைக்கிறது. இதன்படி ஒலிம்பிக் விளையாட்டரங்கில் நடக்க இருக்கும் துவக்கவிழாவில், ஆஸ்திரேலியாவின் பூர்வீகக் குடி இனப்பின்னணி கொண்ட கூடைப்பந்து வீரர் Patty Mills ஆஸ்திரேலியக் கொடியை ஏந்தி செல்லவுள்ளார். அவரோடு நீச்சல் வீராங்கனை Cate Campbell யும் ஆஸ்திரேலியக் கொடியை ஏந்திச் செல்வார்.


“ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் கொடி ஏந்தி நாட்டின் அணியை வழிநடத்திச் செல்லும் வாய்ப்பு ஒரு விளையாட்டு வீரரின் சாதனைக்கும், தலைமைப்பண்புக்கும் கிடைத்த உச்சபட்ச மரியாதை” என கொடி ஏந்திச் செல்லும் செய்தியை அறிவிகும்போது ஆஸ்திரேலிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் John Coates குறிப்பிட்டார்.


Patty Mills ஏன் தெரிவு செய்யப்பட்டார்?

கொகாதா, நாகிரல்கல், தவ்ஆர்ப்-மெரியம் எனும் பூர்வீகக் குடியிலிருந்து வரும் ஒலிம்பிக் சாம்பியன் Patty Mills ஆவார். கொடி ஏந்திச் செல்லும் மரியாதை தனக்குக் கிடைத்ததைப் பற்றி கேட்ட போது அவருக்கு வார்த்தைகளே வரவில்லை. “இத்தருணம் வரை எனக்கு கிடைத்த ஆதரவிற்கு நன்றிக்கடன்பட்டுள்ளேன். நான் எந்த உணர்வு நிலையில் உள்ளேன் என்பதை வார்த்தைகளால் சொல்ல முடியாது” என்று Patty Mills உணர்ச்சிவசப்பட்டார்.


Patty Mills, கடந்த ஆண்டு (2020), பூர்வீககுடிகள் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு இளைஞர்களுக்கு விளையாட்டையும், வாழ்க்கையையும் பயிற்றுவிக்கும் Indigenous Basketball Australia எனும் நிறுவனத்தைத் தொடங்கினார். சமூகநீதிக்காக குரல் கொடுப்பவராகவும், Black Lives Matter இயக்கத்தில் தன்னை அர்ப்பணித்தவராகவும் அறியப்படுகிறார். அமெரிக்காவில் NBA All Star க்காக விளையாடியுள்ளார்.


கடந்த இரு ஆண்டுகள் (2019-20) நமது நாடு காட்டுத்தீயால் பெரிதும் பாதிக்கப்பட்டபோது, கோபார்கோ மற்றும் மோகோ பகுதிகளுக்குச் சென்று நிதி உதவி செய்ததோடு நன்கொடையாக பொருட்களை கொடுத்தார். அன்னையர் தினத்தை முன்னிட்டு அவர் வைத்த வேண்டுகோளுக்கிணங்க, San Antonio வில் உள்ள Family Violence Prevention Services க்காக ஒரு லட்சம் டாலர்களை அன்பளிப்பாகத் திரட்டிக் கொடுத்தார்


Cate Campbel: ஏன் தெரிவு செய்யப்பட்டார்?

ஒலிம்பிக் நீச்சல் போட்டியில் இரண்டு தடவை தங்கப் பதக்கங்களையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் இரண்டு வெண்கல பதக்கங்களையும் பெற்றவர் Cate Campbel ஆவார்.


“நாட்டின் கொடியை ஒலிம்பிக் துவக்க விழாவில் எடுத்துச் செல்ல கிடைத்த வாய்ப்பு, என் வாழ்க்கையில் நடந்த மிகப்பெரிய விடயங்களில் ஒன்று. நீங்கள் விரும்பும் ஒரு விளையாட்டில் உங்கள் நாட்டைப் பிரதிநிதிப்படுத்துவது ஒரு பக்கம். மற்றொரு பக்கம் உங்கள் சக ஒலிம்பியன்களையும், ஒட்டுமொத்த ஒலிம்பிக் குடும்பத்தையும் பிரதிநிதிப்படுத்துவது மற்றொரு பக்கம். இந்த மரியாதை எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். இதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டேன். மிகத் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன்.” என Campbel கூறினார்.


டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் நீச்சல் அணியில் எமிலி சீபோம் மற்றும் லீசல் ஜோன்ஸ் ஆகியோருடன் Cate Campbel கலந்துகொள்கிறார்.


ஆஸ்திரேலிய வீரர்கள் கூறும் ஒலிம்பிக் போட்டியின் உறுதிமொழி

ஆஸ்திரேலியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் கௌரவத்தில்,இந்தக் கண்டத்தோடும், நீர் நிலைகளோடும், கடலோடும், பூர்வீக குடிகள் மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்கள் கொண்டுள்ள உறவை, தொடர்ந்து ஒப்புக்கொண்டு அதனை மதித்து,ஒவ்வொரு செயலிலும் உயர்ந்து விளங்க முனைப்புடன் முயற்சித்து சாத்தியமாக்குபவரை நன்றியுடன் நினைவு கூர்ந்து,விளையாட்டின் மகிமைக்காகவும், நான் மதித்து ஆதரவு கொடுக்கும் சக ஒலிம்பிக் வீரர்களுக்காகவும்,எட்வின் முதல் என்றும் எப்பொழுதும், ஒருமுறை ஒலிம்பியன் ஆனால் எப்பொழுதும் ஒலிம்பியன் தான்.– இப்படி ஒலிம்பிக் போட்டியின் புதிய உறுதிமொழி வெளியிடப்பட்டுள்ளது.


ஆஸ்திரேலிய ஒலிம்பிக் அணி

ஆஸ்திரேலிய ஒலிம்பிக் அணியில் மொத்தமாக 474 விளையாட்டு வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அதில் 254 பெண் வீராங்கனைகளும் 220 ஆண் வீரர்களும் அடங்குவர். இதுவரை இல்லாத அளவு அதிக பெண் வீராங்கனைகளும், 16 பூர்வீகக் குடிமக்களின் பங்கெடுப்பும் இந்த ஆண்டு அணியின் சிறப்பு.


வில்வித்தை, அழகியல் நீச்சல், ஓட்டப்பந்தயம், பூப்பந்து (பேட்மிட்டன்), கூடைப்பந்து (பேஸ்கட் பால்), பீச் வாலிபால், பாக்ஸிங், சைக்கிளிங், ஃபுட்பால், கோல்ஃப், ஜிம்னாஸ்டிக்ஸ், ஹாக்கி, ஜூடோ, கராத்தே, படகோட்டுதல், ரங்பி, துப்பாக்கி சுடுதல், டேபிள் டென்னிஸ், டென்னிஸ், டிரையத்லான், வாட்டர் போலோ, பளு தூக்குதல், உட்பட்ட 33 விளையாட்டுப் பிரிவுகளில் நமது வீரர்கள் பங்கு பெறுகிறார்கள்.


டோக்கியோவில் நடைபெறும் Paralympics 2020

உணர்வுகளில் ஒன்றுபடுவோம் ( United by Emotion ) என்ற முழக்கத்தோடு ஒலிம்பிக் போட்டி முடிந்ததும், மாற்றுத் திறனாளிகளுக்கான Paralympics 2020 டோக்கியோவில் நடக்க இருக்கிறது. மொத்தம் 22 விளையாட்டுகளில் 540 நிகழ்வுகளில் சுமார் 4400 வீரர்கள் பங்கெடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. Paralympics போட்டிகள் ஆகஸ்ட் 24 தொடங்கி செப்டம்பர் 5ம் தேதி வரை நடக்கும். நான்கு தடவை உலக சாம்பியனான Kathryn Ross தனது எட்டு படகு ஒட்டும் வீரர்களோடு டோக்கியோ பாராஒலிம்பிக் விளையாட்டில் கலந்துகொள்கிறார்.


Tokyo 2020 யில் ஆஸ்திரேலியா

  • டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் 42 இடங்களில் நடைபெறுகிறது. மொத்தம் 33 விளையாட்டுகளில் 339 நிகழ்வுகள் நடைபெறும்.

  • ஆஸ்திரேலியாவின் Equestrian ஆட்ட வீரர் Andrew Hoy, 37 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலாக ஒலிம்பிக் போட்டியில் பங்கெடுத்தார். இப்போது தன் 62ஆவது வயதில் எட்டாவது தடவையாக டோக்கியா ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்கிறார்.

  • ஆஸ்திரேலிய Cycling ஆட்ட ஒலிம்பிக் அணியில் Lucas Hamilton மற்றும் Steeplechaser Matthew Clarke ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

  • ஆஸ்திரேலியாவிலிருந்து இதுவரை 3988 ஒலிம்பியன்கள் 52 விதமான விளையாட்டுக்களில் பங்கெடுத்து 527 பதக்கங்களை வென்றுள்ளார்கள்.

  • ஆஸ்திரேலிய ஒலிம்பிக் அணியை உற்சாகப்படுத்தி ஆதரவு கொடுக்கும் வண்ணம் நமது அணியின் நிறமான பச்சை மற்றும் தங்கம் எனும் நிறங்களால் நாட்டின் பல முக்கியபகுதிகள் அலங்கரிக்கப்படவுள்ளன.


Tokyo 2020 ஒலிம்பிக் போட்டியும் ஜப்பானும்

ஜப்பான் உயர்தர தொழில்நுட்ப பொருட்களுக்குப் பெயர் போன நாடு என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் தற்போதைய ஒலிம்பிக் போட்டியைப் பயன்படுத்தி, நாட்டின் இயற்கை வளத்திற்கு முன்னுரிமை தரவும், இயற்கை குறித்த செய்தியை உலகுக்கு காட்டவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர். எனவே, டோக்கியா ஒலிம்பிக் போட்டியில் தரப்படும் மெடல்கள், மறுசுழற்சி மின்னணு பொருட்களைக் கொண்டு ( recycled electronic gadgets ) செய்திருக்கிறார்கள். அதற்காக ஜப்பானியர்கள் முன்வந்து அவர்கள் பயன்படுத்திய எலக்ட்ரானிக் பொருட்களை கொடையாக கொடுத்துள்ளார்கள்.


கோவிட் தொற்றுக் காரணமாக ஒலிம்பிக் போட்டிகளைக் கண்டு களிக்க பார்வையாளர்களுக்கு இம்முறை அனுமதி வழங்கப்படவில்லை. “கமான், கமான்” எனக் கூச்சலிட்டு விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தும் பார்வையாளர்கள் ஒலிம்பிக் மைதானத்தில் இருக்க மாட்டார்கள். கைதட்டும் ஒலி வெறும் கனவாகத்தான் இருக்கும். வீரர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் இருக்கும் உறவு இல்லாமலேயே இந்த ஒலிம்பிக் நடக்க இருக்கிறது.


ஒலிம்பிக்: வேகமாக, உயரமாக, வலுவாக, இணைந்து!

மனித குலத்தை இணைக்கும் மிக முக்கிய கூறு விளையாட்டு. ஒலிம்பிக் விளையிட்டின் ஐந்து வளையங்களும் நமக்கு இந்த பூமிப் பந்தின் ஐந்து கண்டங்களின் மக்களை இணைக்கிறது என்பதை நினைவூட்டுகிறது. Faster, Higher and Stronger என்பது ஒலிம்பிக் போட்டியின் தாரக மந்திரம். அந்த மந்திரம் Tokyo 2020 ஒலிம்பிக் போட்டியிலிருந்து Faster, Higher, Stronger and Together – வேகமாக, உயரமாக, வலுவாக, இணைந்து என்று மாற்றியமைக்கப்படுகிறது.


*****

Picture Courtesy: https://www.sbs.com.au/language/tamil/tokyo-2020-olympic





19 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page