top of page
Writer's pictureJohn B. Parisutham

திணை - இரண்டாம் பகுதி


இதுவரை என்னென்ன கோட்பாடுகளைக் கற்றோம்?


1. தோழமை: தமிழர்கள் இவ்வுலகைக் கண்டு பயப்படவில்லை. யாரோ ஒருவர் படைத்தார் என்றும், புண்ணியம் செய்தால் சொர்க்கம், பாவம் செய்தால் நரகம் என்றும் பார்க்கவில்லை. மாறாக, தோழமையுடன் பார்த்தார்கள். ஐம்பூதங்களின் கலவை என்று பார்த்தார்கள்.

2. உயிரினப் பன்மயம்: அதனால் மனிதர்கள் இயற்கையின் மையம் என்றோ, தனக்காகப் படைத்தவற்றை ஆண்டு அனுபவிக்க வேண்டும் என்றோ கருதவில்லை. இயற்கையில் உள்ள பல்வேறு உயிர்களின் இருப்பை உணர்ந்திருந்தார்கள்.

3. உறவாண்மை: அந்த பல்லின உயிர்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து இருக்கின்றன. இயற்கை ஒரு வலைப் பின்னல். ஒரு பெரும் சுழற்சி என்பதை அறிந்திருந்தார்கள்.

4. சமநிலை: ஒன்றோடு ஒன்று உறவாடும் பல்லுயிர் மத்தியில் ஒரு சமநிலை இருந்து வருகிறது என்பதை அறிந்திருந்தார்கள்.

5. உயிர்ம நேயம்: பல்லின உயிர்களின் இருப்பையும், அதன் வலைப்பின்னலையும், மையத்தில் உள்ள சமநிலையையும் உணர்வதோடு மட்டுமின்றி, எல்லா உயிரினங்களையும் நேயத்தோடு அணுக வேண்டும் என்றும் கருதினார்கள். ஏற்றத் தாழ்வு பாராது, எல்லா உயிரினங்களையும் பரிவோடு பார்த்து வாழ விரும்பினார்கள்.

சரி! தொடர்வோம்.

6. தற்சார்பியம் (Self-reliance)

பல்லுயிர்களும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன என்று பார்த்தோம். இருந்தாலும் இயற்கையின் அழகில் இன்னொன்று இருக்கிறது. அது என்ன? ஒவ்வொரு உயிரும், உயிரினமும், உயிர்க்கூட்டமும் தன்னளவில் தன்னிறைவாக இருக்க முயன்றுக்கொண்டே இருக்கிறது. மற்றவைகளோடு சார்ந்திருந்தாலும், சாராது வளர, இருக்க, முழுமையடைய முயற்சி செய்துக்கொண்டே இருக்கிறது. சார்ந்திருத்தலும், தற்சார்பாக இருத்தலும், ஒரே கோலின் இரு முனைகள் தான்.


‘நாடென்ப நாடா வளத்தன நாடல்ல

நாட வளந்தரு நாடு.’ (திருக்குறள் 739)


எது நாடு என்று கேள்வியை திருவள்ளுவர் கேட்கிறார். மக்கள் துன்பப்பட்டு, பெரும் முயற்சி செய்து, வருந்தி, நாடி வளங்களை பெற்றால் அது நாடல்ல. தங்கண் வாழ்வார் தேடி வருந்தாமல் அவர்பால் தானே அடையும் செல்வத்தை உடைய நாட்டையே நாடு என்பர் என அவரே பதில் தருகிறார். பிறரை வெகுவாகச் சார்ந்து இல்லாமல், தற்சார்பு உடைய நாடு தான், தன்னுள்ளே அப்படிப்பட்ட செல்வம் உடையதாக இருக்கும்.


அப்படி தற்சார்பு உள்ள நாட்டில் உறவு முறைகள் எப்படி இருக்கும்?

நெடு நுகத்துப் பகல் போல

நடுவு நின்ற நல் நெஞ்சினோர்,

வடு அஞ்சி வாய்மொழிந்து,

தமவும் பிறவும் ஒப்ப நாடிக்

கொள்வதூஉம் மிகை கொடாது,

கொடுப்பதூஉங் குறைகொடாது,

பல் பண்டம் பகர்ந்து வீசும்,

தொல் கொண்டி துவன்று இருக்கை’ (பட்டினப்பாலை; 206-212)

கடியலூர் உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையில் வளமான, நியாயமான வணிகர் குடிச்சிறப்பு பற்றிக் கூறும் போது இப்படிக் கூறுகிறார்.

அவர்கள், கலப்பையின் நீண்ட தடியின் நடுவில் பொருந்திய கொழுமுனை போல, நடுவு நிலைமையுடையவர். நல்ல நெஞ்சினோர். பழிக்கு அஞ்சி உண்மையே பேசுவர். தம்முடையதையும் பிறருடையதையும் ஒப்பாக எண்ணுவர். தாம் கொள்ளும் பொருட்களை மிகுதியாகக் கொள்ளமாட்டார்கள். தாம் விற்கும் பொருட்களையும் குறைவாகக் கொடுக்க மாட்டார்கள். பல பொருட்களின் விலையைக் கூறி விற்கும், தொன்று தொட்டுச் செல்வம் ஈட்டிய வணிகர்கள் அவர்கள் என பதிவு செய்கிறார்.

தற்சார்பு வாழ்க்கை நெறி, எவ்வாறு அறவழிக்கு வகை செய்கிறது பார்த்தீர்களா? அப்படி ஒரு உயிரினக்குழு, தற்சார்புடன் இருக்கும் போது தான், நெடுநிலைத்தன்மையுடன், நீண்ட காலத்திற்கு அந்த உயிரனக்குழு சுற்றி இருக்கும் வளங்களை சுகிக்க முடியும். வளமாக வாழமுடியும்.


7. நெடுநிலைத்தன்மை (Sustainability)

அப்படி தற்பார்புடன் வாழும் போது, உயிரனங்கள் நீடித்த நிலைத்த வாழ்வை பெறமுடியும். நாம் அதை ‘நெடுநிலைத் தன்மை’ என அழைக்கிறோம். நெடுநிலைத் தன்மை என்றால் என்ன? ஒவ்வொரு உயிரனக் குழுவும், தனது இன்றையத் தேவையை நிறைவு செய்து கொண்டே, வருங்கால தலைமுறைக்கு பாதிப்பு ஏற்படாமல் எடுக்கும் எல்லா முயற்சிகளும் நெடுநிலைத்தன்மை என்றாகும்.


எடுத்துக்காட்டாக, வாழை இலை உணவை எடுத்துக்கொள்ளுங்கள். மண்பானை சமையலை எடுத்துக்கொள்ளுங்கள். சூழலை எந்த விதத்திலும் மாசு படுத்தாது. அப்படியே வாழை இலையை தோட்டத்தில் போட்டாலும் மக்கி உரமாகி வளம் கொடுக்குமே தவிர, புண் படுத்தாது. ஆனால் இன்று என்ன நடக்கிறது? நெகிழிப் பயன்பாடு, உயிரினங்களுக்கு எவ்வளவு ஆபத்தைக் கொடுத்திருக்கிறது, கொடுக்கப்போகிறது என்பதை மனித இனம் அறிந்திருக்கிறதா?


இன்றைய எரிவாயு பயன்பாட்டை உற்று நோக்குங்கள். புதைபடிவ எரிசக்தி (Fossil Fuel) ஏறக்குறைய முடிவுக்கு வரப்போகிறது. புதுப்பிக்கத் தக்க எரிசக்தி நோக்கி மனிதகுலம் வெகு வேகமாக நகரவில்லையென்றால் என்ன ஆகும்? யோசித்துப்பாருங்கள்.

புவி சூடாவதால் உண்டாகும் பிரச்சனைகளை புரிந்து வைத்திருக்கிறோமா? காலநிலை மாற்றத்தால் உயிரனங்கள் அழிந்துக்கொண்டிருக்கிறதை உணர்ந்திருக்கோறோமா? இயற்கை வளங்களைப் பாதுகாப்பதிலும், முறையாக பயன்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டாமா? நில மற்றும் நீர் வளங்களை, ஒட்டுமொத்த உலக உயிரனங்களும் தொடர்ந்து பயன்படுத்தும் வழிவகை செய்ய வேண்டாமா? எது ஒரு நாட்டுக்கு பாதுகாப்பு? அரண்?


திருவள்ளுவர் கூறுகிறார்:

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்

காடும் உடைய தரண். (திருக்குறள்: 742)

(பொருள்: மணிபோல் தெளிந்த நீரும், வெட்ட வெளியான நிலமும், மலையும், அழகிய நிழல் உடைய காடும் ஆகிய இவை நான்கும் உள்ளதே அரண் ஆகும்.)


அணிநிழற் காடு என்றால் என்ன? பெருமரங்கள், குறுமரங்கள், புதர்கள், செடிகள், தரைக்கொடிகள், மேல்கொடிகள், கிழங்கினங்கள் என்ற பல்வகை மரங்கள் அடர்ந்த காட்டை அணிநிழற்காடு எனலாம். சூரிய ஒளிக்கீற்று எளிதில் உட்புகா வண்ணம், மண்அரிப்பு நடக்கா வண்ணம், பறவையினங்களுக்கும், மிருகங்களுக்கும், பூச்சிகளுக்கும் உணவையும் உறைய இடத்தையும் வழங்கிக்கொண்டிருக்கும் காடு தான் அணிநிழற்காடு.

அப்படிப்பட்ட காட்டை கலித்தொகையில் கபிலர் நம் கண் முன்னே ஒரு பாடலில் கொண்டு வருகிறார்.


தலைவியும் தோழியும் உரலில் நெல் குத்திக்கொண்டு இருக்கிறார்கள். இருவரும் உரையாடுவதாகத் தான் பாடல். தலைவன் தன்னை திருமணம் செய்வானா இல்லையா என்ற கவலையில் தலைவி கேட்க, தோழி நம்பிக்கைத் தருவதாக காட்சி.

தலைவன் எப்படிப்பட்ட வாழிடத்திலிருந்து வருகிறான் என்பதைக் குறித்துச் சொல்லும் போது, அணிநிழற்காட்டை விவரிக்கிறார் கபிலர்.


இடி உமிழ்பு இரங்கிய விரவு பெயல் நடுநாள், கொடி விடுபு இருளிய மின்னுச் செய் விளக்கத்துப், பிடியொடு மேயும் புன்செய் யானை அடி ஒதுங்கு இயக்கம் கேட்ட கானவன்

நெடுவரை ஆசினிப் பணவை ஏறிக், கடுவிசை கவணையில் கல் கை விடுதலின், இறுவரை வேங்கையின் ஒள் வீ சிதறி, ஆசினி மெல் பழம் அளிந்தவை உதிராத்,

தேன் செய் இறாஅல் துளைபடப் போகி, நறுவடி மாவின் பை துணர் உழக்கிக், குலை உடை வாழைக் கொழு மடல் கிழியாப், பலவின் பழத்துள் தங்கும் மலை கெழு வெற்பனைப்

பாடுகம்! வா! வாழி தோழி! நல் தோழி! பாடுற்று;” (கலித்தொகை: 41)


தோழியே! என் தலைவன் எந்த காட்டிலிருந்து வருகிறான் தெரியுமா? அவன் எப்படிப்பட்டவன் தெரியுமா? ஒரு நாள், கொடி போல் மின்னல் மின்னியது. நள்ளிரவில் இடி முழக்கத்துடன் மழை பொழிந்தது. அந்த வெளிச்சத்தில் ஆண் யானை தன் பெண் யானையுடன் தன் புன்செய் நிலத்தில் மேய்வதைப் பார்த்தான். பிறகு, இருளில், அவைகளின் காலடி ஒலியை கூர்ந்து காதால் கேட்டான்.


ஏற்கனவே ஆசினிப் பலா மரத்தின் மேல் பரணி பந்தல் அமைத்திருந்தான். அதன் மேல் ஏறினான். கவணில் கல்லை வைத்து, அவைகளை விரட்ட, தன் பலம் கொண்ட மட்டும் வீசினான். அந்தக் கல் ‘விர்’ரென்று பறந்தது. வேங்கைப் பூக்களை சிதறடித்தது. ஆசினப்பழங்களை உதிர்த்தது. தேன் கூட்டைத் துளைத்தது. மா மரத்தின் தளிர்களை உலுக்கியது. வாழைக் குலையை கிழித்தது. வேர்ப்பலாவை பிளந்து அங்கே தங்கியது. அப்படிப்பட்ட காடு கொண்ட மலைநாட்டுத் தலைவன் என் காதலன் என தோழியிடம் கூறுகிறாள் தலைவி.


இன்னொரு பாடல். இது சீவக சிந்தாமணியிலிருந்து. திருத்தக்கத் தேவர் எழுதியது. அதில் ஏமாங்கதம் என்ற நாட்டின் வளம் குறித்துப் பாடும் பொழுது,

‘காய்மாண்ட தெங்கின் பழம் வீழக் கமுகின் நெற்றிப்

பூமாண்ட தீந்தேன் தொடைகீறி வருக்கை போழ்ந்து

தேமாங்கனி சிதறி வாழைப்பழங்கள் சிந்தும்

ஏமாங்கத மென்று இசையால்திசை போயது உண்டே.’ (சீவக சிந்தாமணி. நாமகள் இலம்பகம். பாடல்:31)


மறுபடியும் அணிநிழற்காடு தான்.


ஏமாங்கத நாடு எப்படிப்பட்ட நாடு தெரியுமா?


நன்கு முற்றிய தேங்காய் கீழே விழுகிறது. அந்த உயரத்திலிருந்து விழுகிற தேங்காய், அடுத்த உயரமான பாக்கு (கமுகு) மரத்தின் உள்ள குலையைக் கீறிக்கொண்டு விழுகிறது. தொடர்ந்து அடுத்த உயரத்தில் இருந்து பலா (வருக்கை) மரத்தில் உள்ள பலாப்பழத்தை பிளக்கிறது. அடுத்து சற்று உயரம் குறைவான மா மரத்தில் உள்ள கனிகளை சிதறிடிக்கிறது. அடுத்து அதற்கும் உயரம் குறைவான வாழைமரத்தில் உள்ள வாழைப்பழங்களை நசுக்கி கீழே விழுகிறது. இப்படி வளமான நாடு ஏமாங்கத நாடு என திருத்தக்கத் தேவர் கூறுவது அணிநிழற்காடு தான்.


இப்படிப்பட்ட சூழல் உள்ள நாட்டில் ஆறாவது அறிவு படைத்த, மனத்தை கூடுதலாகக் கொண்ட மனிதர்கள் எப்படிப்பட்ட அறிவு உடையவர்களாக இருக்க வேண்டும். அறிவுக்கு எந்த இடத்தைக் கொடுக்க வேண்டும்?


8. சுயமெய் ஆய்வறிவு (Wisdom)

இந்தக் கேள்விகளுக்கு திருவள்ளுவர் பதில் கூறுகிறார். அறிவு என்றால் என்ன?

எவ்வது உறைவது உலகம் உலகத்தோடு

அவ்வது உறைவது அறிவு. (திருக்குறள்: 426)

இயற்கை வாழ்வியலையும் அறிவையும் உணர்த்தும் குறள், இந்தக் குறளை விட, வேறு எதுவாக இருக்கும்? உலகம் எப்படி இயங்குகிறதோ, அப்படியே அதனோது இயங்குவது தான் அறிவு.

ஏனென்றால், அப்படிப்பட்ட அறிவு தான் அழிவிலிருந்து காக்கும் அரண்.

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்

உள்ளழிக்க லாகா அரண். (திருக்குறள்: 421)

இதை நான் சொல்வதால் அப்படியே நம்ப வேண்டாம். நீ சுயமாக எண்ணு. சிந்தி. மற்றவர்கள் சொல்வார்கள். ஆனால் அதன் மெய்ப்பொருளை நீ சுயமாக காண முயற்சி செய். அது தான் சுயமெய்யறிவு.

எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு. (திருக்குறள்: 423)

அப்படி சுயமெய்யறிவு பெற முயற்சிப்பவர்கள் பின்விளைவுகளை எண்ணுபவர்கள். இது செய்தால் இது ஆகும் என தெரிந்தவர்கள். ஆய்வறிவு பெற்றவர்கள்.

அறிவுடையார் ஆவது அறிவார் அறிவிலார்

அஃதறி கல்லா தவர். (திருக்குறள்: 427)


சுயமெய் ஆய்வறிவிற்கும், நெடுநிலைத்தன்மைக்கும் உள்ளத் தொடர்பு புரிகிறதா? இந்த தலைமுறை, ஒரு சிலரின் பேராசையாலும் சுயநலத்தாலும், இயற்கை வளங்களைச் சுரண்டி அழித்தால், அடுத்த தலைமுறைக்கு, வாழத்தகுதியற்ற உலகத்தையே கொடுக்கவேண்டி வரும் என அறிவதே அறிவு.

அப்படிப்பட்ட அறிவு படைத்த புலவர்களுக்கு எப்படிப்பட்ட இடத்தை தமிழர்கள் கொடுத்தார்கள். மோசிகீரனார் என்ற புலவரின் கதையைக்கேட்டால் நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள். அறிவிற் சிறந்த மோசிகீரனார் பல மைல் நடந்து சேரன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையின் அரண்மனைக்கு வருகிறார். பசி. களைப்பு. தூக்கம். அரண்மனையில் இருந்த ஒரு கட்டிலில் அசதியில் விழுந்தார். அடித்துப் போட்டது போல் தூங்கிவிட்டார்.


அப்பொழுதெல்லாம் ஒரு வழக்கம். அரசரின் முரசு அழகிய கட்டிலில் இருக்கும். வருடத்திற்கு ஒரு முறை முரசுக்கு நீராட்டு விழா நடக்கும். விழாவுக்குப் பின் அது மயில் பீலியும், பொன்னால் செய்யப்பட்ட உழிஞைப் பூவும் சூட்டப்பெற்று மீளும். அந்தக் கட்டிலில் முரசைத் தவிர வேறு யாரும் இருக்கவோ, படுக்கவோ கூடாது. மீறினால் மரண தண்டனை தான். அப்படி முரசை எடுத்துக்கொண்டு நீராட்டு விழாவிற்கு, அரசர் உட்பட, எல்லோரும் வெளியே போயிருக்கும் சமயத்தில் தான் மோசிகீரனார், அந்த கட்டிலில் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறார்.


நீராட்டு விழா முடிந்து, முரசை கட்டிலில் வைக்க வந்த வேலையாட்கள், பதறி அடித்துக் கொண்டு அரசர் இரும்பொறையிடம் முறையிட, சேர மன்னன், வீர வாளை எடுத்துக் கொண்டு, பெருஞ்சினத்தோடு, கட்டிலை நோக்கி வருகிறான். முரசுக்கு நேர்ந்த அவமரியாதை, மன்னனுக்கே நேர்ந்த அவமரியாதை. மன்னனுக்கு நேர்ந்த அவமரியாதை, நாட்டிற்கே நேர்ந்த அவமரியாதை. துண்டுத் துண்டாய் வெட்டிப் போடுவது என்று தோள்கள் திணவெடுக்க வந்த இரும்பொறை, மோசிகீரனாரைப் பார்த்து விட்டு, அப்படியே ஒரு கணம் ஆடிப் போய்,

‘யாரங்கே! உடனேச் சென்று, மயிற்தோகை விசிறியைக் கொண்டு வாருங்கள்!’

எனக் கேட்டு, அந்த கவரி கொண்டு, புலவருக்கு விசிறி விட்டான். கண் விழித்துப் பார்த்த புலவர், நடந்தவற்றைப் புரிந்து, ‘மன்னா! மன்னிக்கவேண்டும்.’ எனக் கூற ‘தமிழுக்கும் அறிவிற்கும் நான் செய்யும் சிறு காரியம்’ என இரும்பொறை கூறினான்.


அப்படிப்பட்ட இடத்தைத் தான், தமிழர்கள் அறிவிற்கு கொடுத்து வைத்திருந்தார்கள். அந்தப் புறநானூற்றுப் பாடலை படித்து மகிழுங்கள்.


மாசற விசித்த வார்புறு வள்பின்

மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை

ஒலிநெடும் பீலி ஒண்பொறி மணித்தார்

பொலங்குழை உழிஞையொடு பொலியச் சூட்டிக்


குருதி வேட்கை உருகெழு முரசம்

மண்ணி வாரா அளவை எண்ணெய்

நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை

அறியா தேறிய என்னைத் தெறுவர


இருபாற் படுக்கும்நின் வாள்வாய் ஒழித்ததை

அதூஉம் சாலும்நல் தமிழ் முழுது அறிதல்

அதனொடும் அமையாது அணுக வந்துநின்

மதனுடை முழவுத்தோள் ஒச்சித் தண்ணென


வீசி யோயேவியலிடம் கமழ

இவணிசை உடையோர்க் கல்லது அவணது

உயர்நிலை உலகத்து உறையுள் இன்மை

விளங்கக் கேட்ட மாறுகொல்

வலம்படு குரிசில் நீ ஈங்கிது செயலே! (புறநானூறு - 50)


(பொருள்: குற்றமில்லாமல் வாரால் இறுக்கிக் கட்டப்பட்டு, வயிரங் கொண்ட கரிய மரத்தால் செய்யப்பட்டு, நடுவிடம் அழகாக விளங்குமாறு நெடிய மயில் இறகுகளால் அலங்கரிக்கப்பட்டு, நீலமணிகளும் பொன்னிறமான உழிஞைப் பூக்களும் அணிந்து, குருதிப்பலியை விரும்பும் அச்சம் தரும் முரசு, நீராட்டுவதற்காகக் கொண்டு செல்லப்பட்டிருந்தது. அவ்வேளையில், எண்ணெய் நுரையை முகந்து வைத்ததுபோல் இருந்த மெல்லிய மலர்க் கட்டிலை முரசுக்கட்டில் என்று அறியாது நான் ஏறிப் படுத்தேன். என் செயலுக்காக என்னைச் சினந்து, இரு கூறாக வெட்டக்கூடிய உன் கூரிய வாளால் வெட்டாமல் விடுத்தாய். நீ தமிழை நன்கு அறிந்த அறிவாளி என்பதற்கு அதுவே சான்று. அத்தோடு அமையாமல், என்னை அணுகி, உன்னுடைய வலிய, முரசு போன்ற தோளை வீசிச் சாமரத்தால் குளிர்ச்சி தரும் வகையில் விசிறியவனே! வெற்றி பொருந்திய தலைவ! பரந்த இவ்வுலகத்தில் புகழோடு வாழ்ந்தவர்க்கு அல்லாமல் மற்றவர்க்கு உயர்நிலை இல்லை என்பதை நன்கு கேள்விப்பட்டிருந்ததால்தான் நீ இவ்விடத்து இச்செயலைச் செய்தாய் போலும்.)


9. முழுமை

இந்த சுயமெய் ஆய்வறிவு கொண்ட தமிழர்கள் உலகத்தை எப்படிப் பார்த்தார்கள். இயற்கையின் பேருண்மையை எப்படிப் பார்த்தார்கள்? முழுமைக் கண் கொண்டுப் பார்த்தார்கள். தொல்காப்பியர் இந்த உலகை எப்படிப் பார்த்தார்? முன்பே குறிப்பிட்ட படி, ஐம்பூதங்களான நிலம், நீர், ஆகாயம், காற்று, தீ என்னும் கலவை என்று தமிழர்கள் பார்த்ததாகக் குறிப்பிடுகிறார்.

‘நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும்

கலந்த மயக்கம் உலகம் ஆதலின்’. (தொல்.பொருள்.635)

மேலை நாட்டு மருத்துவம், பல்லுக்கு ஒரு மருத்துவர், தொண்டைக்கு ஒரு மருத்துவர், என பகுத்து, பகுத்து, பிரித்து, பிரித்து நோக்கும் போது, சித்த மருத்துவம், உடலை உயிரோடு இணைத்து முழுமையாகப் பார்த்தது. இல்லையா?


சங்க இலக்கியங்களுக்குப் பிறகு வந்த பக்தி இலக்கியங்கள் கூட முழுமைப் பார்வையைப் பேசியிருக்கின்றன.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்

கோனாகி யானெனதென் றவரைக் கூத்தாட்டு

வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே. (திருவாசகம். திருச்சதகம்.15)


சைவ சித்தாந்தத்தில், எல்லாமுமாகி நின்ற இறையை வாழ்த்திய மாணிக்கவாசகர்,

இறையே! நீ வானமாய் இருக்கிறாய். பூமியாய் இருக்கிறாய். காற்றாய் இருக்கிறாய். ஒளியாய் இருக்கிறாய். உடலாயும் உயிராயும் இருக்கிறாய். உண்மையாகவும் உண்மை இல்லாததாயும் இருக்கிறாய். எல்லாவற்றிற்கும் தலையாய் இருக்கிறாய். நான் எனது என்று பேசுவோரை ஆட்டுவிக்கிறாய். உன்னை எப்படி வாழ்த்துவேன்? என்கிறார்.


முழுமையானப் பார்வை.


வைணவ நூலாக எழுதிய கம்பராமாயணத்தை கம்பர் எப்படித் தொடங்குகிறார் தெரியுமா?

‘உலகம் யாவையும் தாம்உள ஆக்கலும்

நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா

அலகு இலா விளையாட்டு உடையார் அவர்

தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே.’ (கம்பராமாயணம்)

உலகங்கள் அனைத்தையும் ஆக்கி, காத்து, அழித்து என விளையாடும் தலைவா, உனக்கு வணக்கம் என துவங்குகிறது.


முழுமையானப் பார்வை.


இந்த முழுமையானப் பார்வை, தமிழர்களுக்கு இவ்வுலகை தோழமையோடு பார்ப்பது மட்டுமல்ல, அதன் அழகியலோடும் பார்க்க வைத்திருக்கிறது. அதனால் எழுந்தவையே தமிழ்க் கலையும், இலக்கியங்களும், பண்பாடும்.


10. அழகியல்

அழகு குறித்த தேடல், தமிழர்களிடையே மிகுந்து காணப்படுகிறது. அது ஓவியம், இசை, இசைக் கருவிகள், பாடல்கள், கவிதை, ஆடல், கதை, சிற்பம், கட்டிடம், மெய்யியல், நுட்பம் என எல்லாத்துறையிலும் இருக்கிறது. இயற்கையை ரசித்து வெளிப்படுத்தும் போது அவை கலை, இலக்கியங்களாக வெளிப்படுகிறது.


உதாரணமாக கவிதையை எடுத்துக் கொள்வோம். பொருண்மையும், வடிவமும் இணைந்தே இருப்பது கவிதை. திருமூலரின் திருமந்திரத்தில் உள்ள இந்தப் பாடலைப் பாருங்கள்.

மரத்தை மறைத்தது மாமத யானை

மரத்தில் மறைந்தது மாமத யானை

பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்

பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம் (திருமந்திரம்)

(பொருள்: மரத்தால் செய்த யானை சிலை ஒன்று இருக்கிறது. அதை யானையாகப் பார்த்தால் மரம் மறைந்து விடுகிறது. மரம் என்று பார்த்தால் யானை மறைந்து விடுகிறது. அது போல பரத்தால் (இறையால்) செய்த அண்டம் இருக்கிறது. அதை அண்டமாகப் பார்த்தால் இறை மறைந்து விடும். இறையாகப் பார்த்தால் அண்டம் மறைந்துவிடும்.)

சிலர் இந்தக் கவிதையின் வடிவத்தில் மயங்கலாம். சிலர் இந்தக் கவிதையின் உள்ளடக்கத்தில் மயங்கலாம். அழகியல் என்பது வடிவத்திலும் பொருளிலும் இருக்கிறது என்பது புலனாகிறது. என்ன சொல்கிறோம் என்பதிலும், எப்படி சொல்கிறது என்பதிலும் அழகியல் இருக்கிறது என்பது புரிகிறது. இதே போன்றது தான் மற்ற கலை இலக்கியங்களும் கூட.


நூல்வழியாகக் கிடைக்கும் ஆதாரங்கள் ஒருபக்கம் இருக்க, தமிழர்களின் இசை மரபு, நாட்டிய மரபு, குடைவரைக் கோயில்கள், கோபுரங்கள், சிற்பங்கள், ஓவியங்கள் என தமிழர்களின் அழகியல் விரிவடைகிறது.


இயற்கை ஆற்றலுடையதாகவும், அழகுக்குரியதாகவும் தமிழ் மரபில் தொடர்ந்து வர்ணிக்கப்பட்டு வந்திருக்கிறது. மேலகரம் திரிகூட ராசப்பக் கவிராயரின் பாடலைக் கேளுங்கள்.

‘வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்

மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்

கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பார்

கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்

தேனருவித் திரைஎழும்பி வானின்வழி ஒழுகும்

செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்

கூனவிளம் பிறைமுடித்த வேணியலங் காரர்

குற்றாலத் திரிகூட மலைஎங்கள் மலையே.’ (குற்றாலக் குறவஞ்சி: 35)


ஆண்குரங்குகள் பெண்குரங்குகளுக்கு பழங்களை கொடுத்து கொஞ்சி விளையாடுகின்றன. அந்தப் பெண்குரங்குகள் பழங்களை உண்ணும் போது கொஞ்சம் கீழே சிந்துகின்றன. அப்படி சிந்துகிற பழங்கள் தங்களுக்கு கிடைக்காதா என வான்கவிகள் கெஞ்சுகிறார்கள். காட்டில் உள்ள வேடர்கள் கண்ணசைவால் வானவரை அழைக்கிறார்கள். சித்தர்கள் கீழிறங்கி சித்து விளையாட்டு விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்.


அப்படிப்பட்ட, பிறைநிலா தரித்த நாதர் இருக்கும், எங்கள் குற்றாலத் திரிகூட மலையில், தேனருவியிலிருந்து வரும் அலை மேலே எழும்பி வானத்திலிருந்து ஒழகுகிறது. அதனால் சூரியனின் தேர்க்கால் வழுக்குகிறது.


என்ன கற்பனை! என்ன அழகியல். சொல்லிக்கொண்டே போகலாம். இந்த அழகியல் பார்வை, தமிழர்களுக்கு ஒரு நேர்மறைப் பார்வையைக் கொடுத்து இருக்கிறது.


11. நேர்மறை (Positive Outlook)

எடுத்துக்காட்டாக, மனிதர்களை உயர்திணை என்று பெயரிட்ட போது, மற்றவைகளை கீழ்திணை என்று பெயரிடவில்லை. மாறாக அஃறிணை, அது இல்லாத திணை என்று பெயரிட்டனர் தமிழர்கள். அது போல உண்மை அல்லது மெய்மை என்று கூறும் போது பொய்மை என்று அழைப்பதை தவிர்த்து, உண்மை மற்றும் உண்மையின்மை என்று அழைப்பதை நோக்கவேண்டும்.


வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி

ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்’


பாகற்காய் கசக்கும். இனிப்பு இராது. ஆனால் அதற்கு கசப்புக் காய் என பெயரிடவில்லை. பாகு+இல்+காய் எனப் பெயரிட்டனர். அதாவது பாகு என்ற இனிப்பு இல்லாத காய்.


பிணந்தின்னி கழுகு என்று ஒரு பறவை இன்று அழைக்கப்படுகிறது. அது ‘எருவை’ என்று சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்படுகிறது.

நெய்த்தோர் அன்ன செவ்விய எருவை’ (ஐங்குறுநூறு. 335)

கழுகொடு செஞ்செவி எருவை திரிதரும்’ (புறநானூறு. 370)

அதன் காரணம் என்ன தெரியுமா? அவைகள் மற்ற மிருகங்கள் வேட்டையாடி சாப்பிட்டு விட்டு விட்டுச் செல்லும், இறந்து கிடக்கும் உயிரினங்களை உண்ணும். அப்படி உண்டு, அவைகள் மக்க வைத்து எருவாக்கும் என்பதால் அவைகளுக்கு ‘எருவை’ என்று பெயரிட்டு அழைத்தான். வியப்பாக இருக்கிறதல்லவா?

‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றது

தள்ளினினும் தள்ளாமை நீர்த்து. (திருக்குறள். 596)

எண்ணுவதெல்லாம் உயர்வைப் பற்றியே எண்ணவேண்டும். அவ்வுயர்வு கைகூடா விட்டாலும், அவ்வாறு எண்ணுவதை விடக்கூடாது என திருவள்ளுவர் கூறுகிறார்.


‘எண்ணிய முடிதல் வேண்டும்

நல்லவே எண்ணவேண்டும்

திண்ணிய நெஞ்சம் வேண்டும்

தெளிந்த நல்லறிவு வேண்டும்’ என்று பாரதி சொல்லவில்லையா?


இதனையே

‘எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்.’ (திருக்குறள். 666) என திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்.

எண்ணியதை செயல்படுத்துவதில் உறுதியாக இருந்தால் எண்ணியதை அடையலாம் என்பதை விட வேறு எது நேர்மறை எண்ணமாக இருக்க முடியும்?


தமிழர்களின் நேர்மறைப் பார்வையும், அழகியல் பார்வையும், முழுமைப் பார்வையும் மனித மாண்பை மதிக்க கற்றுக் கொடுத்திருந்தது.


12. பண்புடைமை

தனி மனிதர் ஒவ்வொருவரும் தங்களது மனித மாண்பை உணர்வதும், மற்ற மனிதர்களின் மாண்பை பேணுவதும் தமிழர் பண்பாடாக இருந்திருக்கிறது. பகுத்து அறிவுதும், பகுத்து உணர்வதும், மன நெகிழ்வும் மனித மாண்புகளாக கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள்.

நற்றிணையில் ஒரு பாடல்.

நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்

செல்வம் அன்று; தன் செய் வினைப் பயனே;

சான்றோர் செல்வம் என்பது, சேர்ந்தோர்

புன்கண் அஞ்சும் பண்பின்

மென்கட் செல்வம், செல்வம் என்பதுவே. (நற்றிணை: 210)

ஆடம்பர புகழ் மொழிகள் செல்வம் ஆகாது. வாகன வசதிகள் செல்வம் ஆகாது. அவைகள் ஒருவனது செயலால் வருவன. உண்மையான செல்வம் எது என்று சான்றோர்கள் கூறுகிறார்கள் தெரியுமா? தம்மைச் சார்ந்தோருக்கு உண்டாகும் துன்பத்தை தவிர்க்கும் மனித மாண்பே உண்மையான செல்வம் என மிளைகிழான் நல்வேட்டனார் கூறுகிறார்.


அதையே திருவள்ளுவர்

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்

பண்பு பாராட்டும் உலகு. (திருக்குறள்: 994)

நீதியையும் அறத்தையும் விரும்பி, பிறர் பயன் பட வாழ்வோரை உலகம் பாராட்டும். அப்படி மக்கட் பண்பு இல்லாதவர், பெரிய அறிவாளியாக இருந்தாலும், பயனற்ற மரம் போலாவர் என்று கடிந்துக் கொள்கிறார்.

அரம் போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

மக்கட்பண்பு இல்லா தவர். (திருக்குறள்: 997)


அதனால், மற்றவர்களுக்கு நல்லது செய்வதில் ஆர்வம் காட்டவேண்டும். ஆனால் அப்படி நல்லது செய்யும் போது, அதனால் நமக்கு என்ன பயன் என்று பார்த்து செய்யக்கூடாது என்பதை

எத்துணை யாயினும் ஈத்தல் நன்று என

மறுமை நோக்கின்றோ அன்றே - பிறர்

வறுமை நோக்கின்று அவன் கைவண்மையே (புறநானூறு 141) என்று புறநானுற்றுப் பாடல் வர்ணிக்கிறது. மறுமையில் என்ன பயன் என்று பார்க்காமல், வறுமையில் இருப்போருக்கு ஈதலே மனித பண்பு.


அப்படி நல்லது செய்யவில்லை என்றாலும், கெட்டது செய்யாமல் இருப்பதும் மனித பண்பு தான்.

….. நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்

அல்லது செய்தல் ஓம்புமின்; அது தான்

எல்லாரும் உவப்பது;’…..(புறநானூறு:195)

மனித பண்புகளின் சாரம் கலித்தொகை 133ம் பாடலில் சிறப்பாக வழங்கப்பட்டிருக்கிறது.

ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்;

போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பிரியாமை

பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகுதல்

அன்பு எனப்படுவது தன்கிளை செறாஅமை

அறிவ எனப்படுவது பேதையார் சொல் நோன்றல்

செறிவு எனப்படுவது கூறியது மறாஅமை

நிறை எனப்படுவது மறை பிறர் அறியாமை

முறை எனப்படுவது கண்ணோடது உயிர்வௌவல்

பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல்


நலிந்தவருக்கு உதவுவதே இல்லறம் எனப்படும்.

இணைந்தவரை பிரியாமல் இருப்பதே போற்றத்தக்கது.

உலக நடைமுறை அறிந்து எல்லோரும் இன்பமாக இருக்க நடந்துகொள்வதே பண்பாகும்.

உற்றார் உறவினரை வெறுத்து ஒதுக்காமையே அன்பாகும்.

அறிவுத் தெளிவு இல்லாதவர்கள் சொல்லும் கடுஞ்சொற்களை பொறுத்துக்கொள்ளுதலே அறிவாகும்.

கொடுத்த வாக்கை மீறாமல் இருப்பதே செறிவாகும்.

பேணிக்காக்க கொடுத்த செய்தியை காப்பதே நிறையாகும்.

நிலை தடுமாறாது நீதி வழங்குதலே முறையாகும்.

அழிக்கப்படவேண்டியவர்களை அழிக்க சரியான தருணத்திற்கு காத்திருப்பதே பொறுமையாகும் என்பதே மனித பண்புகளாக கலித்தொகை சித்தரிக்கிறது.


இவைகளோடு, துணிவுடன் நியாயத்தை எடுத்துக்கூறுவதும் திண்மையான மனித பண்புகளில் ஒன்று.


வெண்ணிக்குறத்தியாரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?


சோழன் கரிகாற் பெருவளத்தான், பெருஞ்சேரல் ஆதனை வெண்ணியில் போரிட்டு வென்றான். வெண்ணிக் குறத்தியார் ஒரு பெண் புலவர். தான் பாடப்போவது மன்னனுக்கு பிடிக்குமோ, பிடிக்காதோ என்றெல்லாம் யோசிக்காமல், தான் நியாயம் என்று நினைப்பதை பாடுகிறார்.


நளியிரு முந்நீர் நாவாய் ஒட்டி

வளிதொழில் ஆண்ட உரவோன்மருக!

களி இயல் யானைக் கரிகால் வளவ!

சென்று அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற

வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே

கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,

மிகப் புகழ் உலகம் எய்திப்,

புறப்புண் நாணி, வடக்கிருந்தோனே!

(புறநானூறு; 66)

(பொருள்: வளவனே! கடலிற் செல்லும் மரக்கலம், காற்று உரிய திசையிலே வீசாததனால் ஓடாதுபோகக், காற்று இயங்குமாறு போலக் கலத்தைச் செலுத்துதற்குரிய பொறிமுறைகளைக் கையாண்டு கலம் செல்லுமாறு செய்த அறிவாற்றல் உடையவர் நின் முன்னோர். மதயானை மிகுந்த படை வன்மை உடையோனே! பகைவரினும் மேற்சென்று, அவர் எதிர் நின்று, அவரைக் கொன்று அழித்த வெற்றி வீரனே! வெண்ணி யென்னும் ஊர்ப்புறத்தே நடந்த போரில் புறப் புண்பட்டனன் சேரன். உலகத்திலே புகழ் பெறுமாறு அவன் வடக்கிலிருந்து உயிர்நீத்தனன். புறப்புண் நாணி வடக்கிருந்து உயிர்துறந்த அவன், புறத்தே அம்பேவிப் போர் முறை பிறழ்ந்த நின்னைக் காட்டினும், நல்லவன் அல்லனோ!)


கதை இது தான்!


கரிகால் வளவன், வெண்ணி என்ற ஊரில் நடைபெற்ற போரில் சேரமான் பெருஞ்சேரலாதனையும், பாண்டிய மன்னன் ஒருவனையும், வேளிர்குலத்தைச் சார்ந்த பதினொரு சிற்றரசர்களையும் வென்றான். அப்போரில் சேரமான் பெருஞ்சேரலாதனின் மார்பில் பாய்ந்த வேல் அவன் மார்பைத் துளைத்து முதுகையும் புண்ணாக்கியது.

தன் முதுகில் புண்பட்டதால் அவன் நாணமுற்று வடக்கிருந்து உயிர் துறந்தான். அதைக் கேள்வியுற்ற வெண்ணிக் குயத்தியார், இப்பாடலில், சேரமான் பெருஞ்சேரலாதனின் செயலை வியந்து, கரிகாலனை நோக்கி, “வேந்தே, போரில் வெற்றி பெற்றதால் நீ வெற்றிக்குரிய புகழ் மட்டுமே அடைந்தாய். ஆனால், சேரமான் பெருஞ்சேரலாதன் உனக்கு வெற்றியை அளித்தது மட்டுமல்லாமல், உன்னால் உண்டாகிய புண்ணுக்கு நாணி, அவன் வடக்கிருந்து பெரும்புகழ் பெற்றான். ஆகவே, அவன் உன்னைவிட நல்லவன் அல்லனா?” என்று கேட்கிறார். இதுவல்லவோ திண்மை!


நியாய உணர்வும், துணிவும் மட்டுமல்ல. நட்பையும் சிறந்த மனித பண்பாகப் போற்றினார்கள். அதனால் தான்

முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பின்

நஞ்சும் உண்பர் நனிநாகரிகர்’ (நற்றிணை: 355)என்று பாடினார்கள்.


அதையேத் தான் திருவள்ளுவர்

‘பெயக் கண்டும் நஞ்சு உண்டு அமைவர் நயத்தக்க

நாகரீகம் வேண்டு பவர்.’ (திருக்குறள்: 580) என்று சொல்கிறார்.


உறவு, நட்பு என பேசும் போதே, தியாகம் என்ற மனித பண்பையும் பேச வேண்டுமல்லவா? இதோ அதற்கு சான்றாக நற்றிணை 110ஆம் பாட்டு.

‘பிரசம் கலந்த வெண் சுவை தீம் பால்

விரி கதிர் பொன் கலத்து ஒரு கை ஏந்தி

புடைப்பின் சுற்றும் பூ தலை சிறு கோல்

உண் என்று ஓக்குபு பிழைப்ப தெண் நீர்

முத்து அரி பொன் சிலம்பு ஒலிப்ப தத்து - உற்று

அரி நரை கூந்தல் செம் முது செவிலியர்

பரி மெலிந்து ஒழிய பந்தர் ஓடி

ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி

அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்கொல்?

கொண்ட கொழுநன் குடிவறன் உற்றென

கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்

ஒழுகு நீர் நுணங்கு அறல் போல

பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே! (நற்றிணை: 110)


கதை இது தான்!


ஒரு சங்ககாலத் தாய், தன் பெண்குழந்தையை (தேன்மொழி எனப் பெயர் வைத்துக்கொள்வோம்) எப்படியெல்லாம் வளர்த்தாள் தெரியுமா? பொன்னால் செய்த பாத்திரத்தில் சோறு. தேனும் பாலும் கலந்து உணவு. சாப்பிடு, சாப்பிடு என ஊட்ட, தேன்மொழி வேண்டாம் வேண்டாம் என மறுத்து ஓடுகிறாள். பூ சுற்றிய கோலைக் கொண்டு மிரட்டுவது போல் பாவனை செய்கிறாள் அம்மா. முத்துக்கள் கொண்ட பொற்சிலம்பு ஒலிக்க தேன்மொழி ஓடுகிறாள். செவிலியர் பின்னே ஓடுகின்றனர். தேன்மொழி ஒரு பந்தலில் ஒளிந்து விளையாட்டு காட்டுகிறாள்.


இப்படி செல்லமாக வளர்ந்து, பெரியவளான தேன்மொழிக்கு ஒரு நாள் திருமணம் நடந்தது. தேன்மொழி, புகுந்த வீட்டிற்குச் சென்று விடுகிறார். புகுந்த வீடோ வறுமையில் உழலும் வீடு. ஒரு வேளை சோற்றுக்கூட பஞ்சம். ஒழுங்காகச் செல்லும் ஆற்றில், மெல்லிய கூழாங்கற்களைத் தாண்டித் தாண்டிச் செல்லும் நீர் போல, ஒரு வேளை விட்டு, மறு வேளை உண்கிறாள் தேன்மொழி. கணவன் வீடு வறுமையில் இப்படி இருக்கும் போது, தந்தை வீட்டில் உண்ட கொழுஞ்சோற்றை நினைக்காமல் எப்படி இப்படி இவளால் இருக்க முடிகிறது என தாய் ஆச்சரியப்படுகிறாள்.


இதுவல்லவோ பண்பு! இப்படிப்பட்ட பண்புள்ளவர்களாக இருக்கும் போது, இயற்கை எப்படி இயல்பாக இருக்கிறதோ, அப்படியே வாழ்க்கையில் இயல்பாக இருக்கத் துவங்குவார்கள்.


13. இயல்பாய் இருத்தல் ( Be natural)

கணியன் பூங்குன்றனார் வாழ்க்கையை பார்க்கும் விதமே அலாதி.


ஆற்றிலே நீர் சென்று கொண்டிருக்கிறது. அதில் ஒரு மிதவை மிதந்து செல்கிறது. கற்பனை செய்து பாருங்கள். அமைதியாக ஓடுகின்ற ஆற்றிலே முறையாக மிதவை மிதப்பது போல், வாழ்க்கை என்ற ஆற்றிலே, உயிர் என்ற மிதவை, மிதந்து கரை சேரும். பரபரப்பு வேண்டாம். மனஅழுத்தம் வேண்டாம். இயல்பாய் இருங்கள்.


எல்லா ஊரும் நம் ஊரே! எல்லா மக்களும் நம் மக்களே! திறந்த மனத்துடன் இருங்கள்.


நல்லதும் கெட்டதும், கஷ்டப்படுவதும், இலகுவாவதும் நாமே உருவாக்கிக்கொள்வது தான். பதட்டப்படாதீர்கள். மரணம் ஒன்றும் புதிதல்லவே. அதனால் வாழ்க்கை இன்ப மயம் என்று துள்ளிக்குதிக்கவோ, துன்ப மயம் என்று சோகமாக உட்காரவோ வேண்டாம். அமைதியாக இருங்கள். ஆற்றில் மிதக்கும் மிதவையை கற்பனை செய்துக் கொள்ளுங்கள்.பெரியோரைப் பார்த்து வியக்கவும் வேண்டாம். சிறியோரைப் பார்த்து இகழவும் வேண்டாம். இயல்பாய் இருங்கள் என்கிறார்.

யாதும் ஊரே,யாவரும் கேளிர்;

தீதும் நன்றும் பிறர்தர வாரா;

நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;

சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்

இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே,

முனிவின், இன்னா தென்றலும் இலமே,

'மின்னொடு வானம் தண்துளி தலைஇ ஆனாது

கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று

நீர்வழிப் படுஉம் புணைபோல,

ஆருயிர் முறைவழிப் படுஉம்' என்பது திறவோர்

காட்சியின் தெளிந்தனம் ஆகலின்,

மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே!

சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (பொருண்மொழிக் காஞ்சி. கணியன் பூங்குன்றனார்)


[பொருள்: எவ் வூராயினும் அஃது எம் ஊரே. யாவராயினும் அவர் எம் உறவினரே! தீதும் நன்றும், நோதலும் தணிதலும் பிறரால் வருவதன்று. நம்மாலேயே விளைவதாம். சாதலோ இவ்வுலகிலே புதிய செய்தியன்று. வாழ்தலே இனிது என மகிழ்தலும், வெறுத்து அதனை இன்னாதென ஒதுக்குதலும் கூடாது. பேரியாற்று நீரிலே செல்லும் மிதவைபோல் எம் அரிய உயிரானது முறையாகச் சென்று கரைசேரும் என்பதனை அறிவுடையவர் காட்சியினால் தெளிந்தோம். எனவே, செல்வத்தாற் பெரியவரை மதித்தலும் செய்யோம்; சிறியோரை இகழ்தலும் செய்யோம். அவரவர், ஒழுக்கம் ஒன்றையே யாமும் கருதுவோம்.]


நிறைவுரை

நிறைவாக,

தமிழர்கள், இயல்பான இவ்வுலகை இயல்பாகவேப் பார்த்ததாலும், இவ்வுலகைக்கண்டு பயப்படாமல் தோழமையுடன் பார்த்ததாலும், உலகத்தில் உள்ள பல்உயிர்களின் இருப்பை உணர்ந்தார்கள். அவைகளையும் தோழமையுடன் பார்த்தார்கள். பல்உயிர்களுக்கு இடையே உள்ள உறவையும், இயற்கை சுழற்சியையும் உணர்ந்தார்கள். அந்த உறவை மதித்தார்கள். இயற்கை சமநிறையுடனும், சமநிலையுடனும், சமத்துவத்துடனும் இயங்குவதை உணர்ந்தார்கள். அதை புரிந்து தெளிந்துக் கொண்டார்கள். அதனால் பல்உயிர்களின் மேல் நேயம் கொண்டார்கள்.


அப்படி நேயத்தோடு, இயைந்து வாழ்வதே, தங்களது தற்சார்பிற்கும், தங்களது பிள்ளைகளின் மற்றும் மற்ற உயிரினத்தின் நெடுநிலைத்தன்மைக்கும் உதவும் என்று உணர்ந்தார்கள். இந்த ஞானத்தை, இந்த நூல் சொன்னது, இந்த நபர் சொன்னார், இந்த மரபு சொன்னது என்று கேட்காமல், சுயமாக ஆய்வு செய்து, மெய்யறிவுடன் உணர்ந்து தெளிந்தார்கள்.


தமிழர்களது இந்தப்பார்வை முழுமையானப் பார்வையாகவும், அழகியல் பார்வையாகவும், நேர்மறைப் பார்வையாகவும் அமைந்ததற்கு சுயமெய் ஆய்வறிவே காரணமாக அமைந்தது. அதனால் பழக்கம், வழக்கமாகி, ஒழுக்கமாகி, பண்பாடாகி, இனத்தின் அறமாக பண்பு உயர்வு பெற்று நிற்கிறது.


அந்தப் பண்பாட்டை, ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதே இயல்பாக வாழ்வதன் சாரம்.


அதனால் திணை மன்றங்கள் மூலம், நம் குழந்தைகளுக்கு இந்த இயற்வை வாழ்வியல் மெய்யியலை சொல்லிக்கொடுத்து, அவைகள் அவர்களது வாழ்வியல் பண்பாடாக மாற உதவுவோம்.


*********














உசாத்துணை


  1. பாமயன். (2019). திணைக்கோட்பாடுகள்.

  2. உயிரினப் பன்மயம் குறித்த உலகளாவிய கருத்துக்கள் - குடிமக்களுக்கான தகவல் ஆவணம் - ஜூன் 2012. தொழில்நுட்ப டேனிஷ் வாரியம். Retrieved from http://biodiversity.wwviewes.org

  3. வெள்ளைவாரணன். க. (1994). தொல்காப்பியம் - பொருளதிகாரம் - மரபியல் உரைவளம். பதிப்புத்துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை.

  4. திருக்குறள்

  5. நற்றிணை

  6. புறநானூறு

  7. அகநானூறு

  8. திருமந்திரம்

  9. திருவாசகம்

  10. கம்பராமாயணம்

  11. சீவக சிந்தாமணி

  12. கலித்தொகை

  13. மணிமேகலை

  14. சிறுபாணாற்றுப்படை

  15. திருவருட்பா

  16. சிலப்பதிகாரம்

33 views0 comments

© 2021 - John B. Parisutham | All rights reserved

bottom of page