top of page
Writer's pictureJohn B. Parisutham

திணை - முதல் பகுதி


பொருளடக்கம்

  1. ஜோபா’வின் கதை

  2. முன்னுரை

    1. உலகப்பேரழிவு 6.0

    2. தொழிற்புரட்சி 4.0 மற்றும் காலநிலை மாற்றம்

    3. உலகப்போர் 3.0

    4. இன்றையக் கல்வி

    5. கல்வி 6.0

  3. தமிழர் அறம்

  4. திணை

  5. திணை இயங்கியல்

    1. முதற்பொருள்

    2. கருப்பொருள்

    3. உரிப்பொருள்

    4. இயங்கியல் கோட்பாடு

  6. இயற்கை வாழ்வியல் மெய்யியல் கோட்பாடுகள்

    1. தோழமை (Comradeship)

    2. உயிரினப் பன்மயம் (Biodiversity)

    3. உறவாண்மை (Inter-dependence)

    4. சமநிறை சமநிலை சமத்துவம் (Equilibrium, Balance & Equality)

    5. உயிர்மநேயம் (Bionity)

    6. தற்சார்பியம் (Self-reliance)

    7. நெடுநிலைத் தன்மை (Sustainability)

    8. சுயமெய் ஆய்வறிவு (Wisdom)

    9. முழுமை (Holistic Approach)

    10. அழகியல் (Aesthetic Approach)

    11. நேர்மறை (Positive Outlook)

    12. பண்புடமை (Human Values)

    13. இயல்பாய் இருத்தல் (Be natural)

  7. நிறைவுரை



ஜோபா’வின் கதை

ஜான் பிரிட்டோ அகாடமி - John Britto Academy என்பதன் சுருக்கமே JOBA (ஜோபா). இது ஆஸ்திரேலியாவில் ஒரு கல்விக் கழகமாக முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


பரிசுத்தம் மாசிலாமணி

1960களில் தமிழகத்தில் பரவி இருந்த வறுமையில் வாடிய பல குடும்பங்களில், எம் குடும்பமும் ஒன்று. ஆனால் எம் தந்தை மரியாதைக்குரிய திரு. பரிசுத்தம் மாசிலாமணி அவர்கள், நிதானமாக, ஒழுக்கநெறி வழுவாது, எளிமையாக எங்களை வளர்த்தார்.

‘தீது உற்ற செல்வம் ஏன்? தேடிப் புதைத்த திரவியம் ஏன்?

காது அற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே’

என்று பாடிய பட்டினத்தாரின் சீடராக வாழ்ந்தார். தனது வாழ்க்கை வரலாற்றை ‘நிறைவுள்ள நினைவலைகள்’ என்ற நூலாக தன் 93 வயதில் வெளியிட்டு 96வது வயதில் காலத்தில் கரைந்தார். பற்றற்ற நிலையும், ஆவணப்படுத்தும் பழக்கமும் தந்தையிடமிருந்து தொற்றிக்கொண்டது.


இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு. நம்மாழ்வார்

1980களில் திரு. நம்மாழ்வார், திரு. ஆஸ்வால்டு குவிண்டால், திரு. பெரியநாயக சாமி ஆகியோரோடு இணைந்து SHADE (Self Help and Developmental Education) என்ற சமூக சேவை மையத்தை துவங்கிப் பணியாற்றினோம். அது பிறகு ‘குடும்பம்’ என்கிற பெயரில் மாறியது. தமிழக கிராமத்து இளைஞர்களுக்கு விழிப்புணர்வும் தன்னம்பிக்கையும் கல்வியறிவும் கொடுத்து, தங்கள் கிராம முன்னேற்றத்திற்கு அவர்களே காரணமாக அவர்களை தயார் படுத்துவதில் முனைப்பாக பணி செய்தோம். நம்மாழ்வார் ‘செயல்’ உலகத்தை திறந்து வைத்தார். செயல்படவேண்டும், செயல்பாட்டில் தான் வளர்ச்சி உள்ளது என்பது தெரிந்துக்கொண்டோம்.


‘ஆய்வுச் செம்மல்’ ஆயர் யுவான் அம்புரோஸ்

1987ல், கல்வி ஆராய்ச்சி மற்றும் சமூக மேம்பாடு நிறுவனத்தில் இயக்குநராக சேர்ந்த பொழுது, இயற்கை விவசாயம், வறுமை ஒழிப்பு, நல வாழ்க்கை, குழந்தைகள் மேம்பாடு, பெண்கள் அதிகாரம், பேரிடர் மேலாண்மை என பல்வேறு துறைகளில் அனுபவம் கிட்டியது. இருந்தாலும் கல்வி மற்றும் குழந்தைகளுக்காகப் பணி செய்வது இதயத்திற்கு மிக நெருக்கமாக இருந்தது. பிறகு ஆயராக பதவியேற்ற, அப்போதைய காரிதாஸ் இந்தியாவின் இயக்குநராக இருந்த, அருட்பணி யுவான் அம்புரோஸ் அவர்கள் மூலம் சமூக ஆய்வு நுணுக்கங்களைக் கற்றோம். ‘அறிவு’ உலகத்தை, ஆய்வு உலகத்தை அவர் திறந்து வைத்தார். ஆய்வுக்கண்ணோட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்தார்.


தேசியக் கல்விக் கழகத்தோடு (National Educational Group) இணைந்து, தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும், தலைமையாசிரியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் (கிட்டத்தட்ட 20,000 பேருக்கு) குழந்தை மையக் கல்வி பயிற்சியும், செயல்வழிக் கல்வி பயிற்சியும், சுமையின்றி சுவையாக கற்கும் பயிற்சியும் கொடுத்தோம். அவர்களுக்கு உதவி செய்யும் வண்ணம் 20க்கும் மேற்பட்ட நூல்களும், கையேடுகளும் தயாரித்து வெளியிட்டோம்.


‘தகவல் தொடர்பு தீர்க்கதரிசி’ பியர் பபேன்

1996ல் மேற்படிப்புக்காக பிரான்ஸ் நாடு சென்றோம். லியோன் பல்கலைக்கழகத்தில் ஊடகம் மற்றும் சமூக மேம்பாடு குறித்த படிப்பு. CREC/AVEX என்ற அமைப்பின் இயக்குநரும், இணைய வழி தகவல் தொடர்பு எப்படி உலகை மாற்றப் போகிறது என்று தீர்க்கதரிசனம் சொன்னவருமான, பேராசிரியர் பியர் பபேன் ‘உணர்வு’ உலகத்தை திறந்து வைத்தார். ஊடகத்தின் நுணுக்கங்களை கற்றோம். கலை இலக்கியத்தின் பல்வேறு பரிமாணங்களைப் புரிந்துக்கொள்ள அது உதவியாக இருந்தது.


‘பயனீட்டாளர் காவலன்’ பெரியவர் திரு. முகமது இத்ரீஸ்

2000மாவது ஆண்டில், நம்மாழ்வாருடன் இணைந்து நடத்திய, மாநில இயற்கை விவசாயிகள் மாநாட்டில், மலேசிய நாட்டில் 40 வருடங்களுக்கு மேலாக பயனீட்டாளர்கள் மத்தியில் விழிப்புணர்வுப் பணிகளைச் செய்து கொண்டிருந்த, பெரியவர் திரு.முகமது இத்ரீஸ் ஐயா அவர்களைச் சந்தித்தோம். அவருடன் இணைந்து பணியாற்றிய அண்ணன் திரு. சுப்பாராவ் குழுவினருடன், மலேசியாவின் வடமுனை பெர்லிஸிலிருந்து, தென்முனை ஜோகூர் பாரு வரை, மலேசியாவின் 13 மாநிலங்களிலும் உள்ள தமிழ், மலாய், சீனப் பள்ளி ஆசிரியர்களுக்கு ‘உயிரோட்டமுள்ள கல்வி’ பயிற்சி கொடுத்தோம்.


‘மல்டிவர்சிட்டி’ டான்ஸ்ரீ ஷூல்கிவ்லி அப்துல் ரஸாக்

2012 வாக்கில், அப்பொழுது ஏற்பட்ட தொடர்பின் காரணமாக, Multiversity என்கிற அமைப்பில் உறுப்பினரும், University Science Malaysia (USM) பல்கலைக்கழக துணைவேந்தருமான டான்ஸ்ரீ ஷூல்கிவ்லி அப்துல் ரஸாக் அவர்களின் அழைப்பில், மலேசிய கெடா மாநிலத்தில் அமைந்திருந்த அல்புஹாரி பன்னாட்டு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியில் அமர்ந்தோம். சுற்றுச்சூழல் பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தி, பல்கலைக்கழக வளாகத்தை, பசுமை வளாகமாகவும், ஜீரோ வேஸ்ட் வளாகமாவும் மாற்றும் பணிகளில் இறங்கினோம். அந்த மாணாக்கர்கள் இன்றும் 3G (Global Giving Group) என்கிற அமைப்பின் கீழ் அணி திரண்டு பணி செய்து வருகிறார்கள். இந்த அமைப்பும் ஆஸ்திரேலியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. www.our3g.org


முனைவர் திரு. குமரன் வேலு, திரு. மனோகரன்

2014ல், திரு. சுபாராவ் மூலமாக அறிமுகமான கோலாலம்பூர் பத்துமலை தமிழ்ப்பள்ளி ஆசிரியர் திருமதி. சரஸ்வதி அவர்களின் ஆசிரியர் முனைவர் குமரன் வேலு அவர்கள் இந்தியா வந்தார். அவரது அறிமுகத்தால் நீலாய்த் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கு 2015ல் செயல்வழிக் கற்றல் அணுகுமுறைப் பயிற்சி வழங்கினோம். அந்த ஆசிரியர்களின் அனுபவத் தொகுப்பு பின்னாட்களில் ‘கலகல கற்றல்’ என்ற நூலாக வெளிவந்தது. திரு. மனோ அவர்கள் பண்டார் ஸ்ரீ செண்டாயன் பள்ளி, அறவாரியத் துணைத்தலைவராக இருந்ததால், சில முறை அந்தப் பள்ளியைப் பார்வையிட்டோம்.


2018ல் பாமயனுடன் இணைந்து ஒரு தடவை பயிற்சியும் கொடுத்தோம். பினாங்கு சென்று திரு. சங்கா அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் ‘நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை’ பள்ளி அளவில் சிறப்பாகச் செய்து வருவதைக் கண்ணுற்றோம். அப்பொழுதே, தொல்காப்பியத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு பாடத்திட்டம் அமைப்பது என்று முடிவுசெய்து நானும் பாமயனும் முனைந்தோம். திரு. சங்கா அவர்கள் பணி மாற்றம் பெற்றதாலும், மற்ற சில காரணங்களாலும் அது தள்ளிப் போனது.


திரு. மனோ, திருமதி. சாந்தி அச்சுதன்

2020ல், பண்டார் ஸ்ரீ செண்டாயன் தமிழ்ப்பள்ளி ஆசிரியை திருமதி. சாந்தி அச்சுதன், திரு. மனோ மூலமாக, தமது பள்ளி ஆசிரியர்களுக்கு, ஒரு நேர்நிகர் உரையாற்ற எம்மை அழைத்தார். அது தான் திருப்பு முனை. ‘நானும் ஓர் ஆசிரியர் தான்’ என்ற தலைப்பில் உரை. அதில் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் பங்கேற்றனர். இந்த உரையோடு முடியாமல் தொடர்ந்து என்ன செய்யலாம் என்று கேட்டதற்கு,‘ஐயா! எம் குழந்தைகள், தமிழ் மொழியை நன்கு கற்க வேண்டும். தமிழ் பண்பாட்டை மேலும் அறிந்தவர்களாக ஆக வேண்டும். நம் கலை அவர்களுக்கு புரிபட வேண்டும். பாரம்பரிய உணவு, மருந்து எல்லாம் அவர்கள் மறந்துவிடக்கூடாது. அவர்கள் திறமைகளை இன்னும் அதிகமாக்கப் பயிற்சி கொடுக்கவேண்டும்’ என்று அடுக்கிக்கொண்டே போனார்கள்.


உரையை முடித்ததும் எமது சொந்த இணையப் பக்கம் www.johnbritto.com ஐ திரு. மனோ அவர்களிடம் காண்பித்தோம். அதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களுக்குத் தேவையான கதை, கட்டுரைகள், நாடகங்கள், பாடல்கள் என பலவும் இருந்தன. அதைக் கண்ணுற்ற திரு. மனோ,‘Prof! ரொம்ப நல்லாருக்கு Prof. உங்கள் பெயரிலேயே ஒரு Academy ஆரம்பிச்சி, ஆசிரியர்களுக்கு பயிற்சி குடுக்கலாமே!’ என்றார். பார்க்கலாம் என்றேன்.


ஜோபா பிறந்தது

சில கலந்துரையாடல்களுக்குப் பிறகு, 2021ல், John Britto Academyயை ஆஸ்திரேலிய அரசில் முறையாகப் பதிப்பிட்டோம். www.johnbrittoacademy.com என்ற இணையப் பக்கம் துவங்கினோம். பண்டார் ஸ்ரீ செண்டாயன் தமிழ்ப்பள்ளி பெற்றோர்கள், மாணவர்களுக்கு, ஆறு தொடர் பயிற்சிகள் வழங்கினோம். அதற்கான பாடத்திட்டத்தை ‘உழவு, உணவு, உணர்வு’ என்று பாமயன் வடிவமைத்துக் கொடுத்தார். பயிற்சிகள் நடத்த முனைவர். மகி, டிராமா செல்வம், பாமயன், முனைவர் அழகு அண்ணாவி போன்றோர்களை அணுகினோம். அழகாக நடத்திக் கொடுத்தார்கள். அப்படியே JOBA International Experts Team உருவானது.


வேல்முருகன், சங்கர், புஷ்கலா, நித்யா, ஞானசீலன், ஃபாத்திமா ரிம்ஷானா, ஆக்னஸ், பிரான்சிஸ், அபர்ணா, மகாலட்சுமி, சாந்தி, பெர்லின் ரூபி, ஜெயா, சுபாராவ், இளங்குமரன், சந்தீப், சௌம்யா, யோகேஷ்வரி, முத்துலிங்கம், ரெனிட்டா, மனோ, முனைவர் குமரன்வேலு, முனைவர் ஜான் பீட்டர், கலைவாணன், முனைவர் தமிழ்ப்பரிதி, முனைவர் கோகிலா தங்கசாமி, ஓவியர் சுமன் என வளர்ந்தது. ஆறு தொடர் பயிற்சிகள் நடத்தும் பொழுதும், மற்றும் சில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்கள் இப்படிப்பட்ட பயிற்சிகளில் ஆர்வம் காட்டினார்கள். Four pillars of JOBA என்று கீழ்க்கண்ட நான்கை வடிவமைத்தோம். உலகளாவிய மதிப்பீடுகள் (Universal Values), நீடித்த நிலையான வாழ்க்கை (Sustainable Living), வாழ்க்கை மற்றும் வேலைக்கான திறமைகள் (Life and Work Skills), கலை மற்றும் இலக்கியம் (Creative Arts and Literature).


ஜோபா இணையப்பக்கத்தில் போட, இந்த நான்கு பொருளையும் பற்றி, சிறு குறிப்புகள் எழுதித் தர முடியுமா? என, என் நீண்ட கால நண்பரும், பின்னாளில் ஜோபா இந்தியா தலைவராக ஆனவருமான திரு. சந்தியாகு அவர்களைக் கேட்டேன். இது அடுத்த திருப்பு முனை.


ஜோபா கூடுகைகள்

2022ல் ஜோபா வல்லுனர் குழு, தன் முதற் கூடுகையை, திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே உள்ள மருதம் பண்ணையில் நடத்தியது. அதில் திரு. சந்தியாகு அவர்கள் கலந்துரையாடலைத் துவக்கி வைத்தார். உலகளாவிய மதிப்பீடுகள் பற்றிய முதல் கேள்வியைக் கேட்டார். அழகு அண்ணாவி ‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்’ என்று துவங்கி வைத்தார். பாமயன் ஜோபாவின் மெய்யியல் என்ன? அதன் கோட்பாடுகள் என்னென்ன? செயல்படும் களங்கள் என்னென்ன? என்று கேள்விகள் கேட்டு, வல்லுனர் குழு யோசித்தது. இயற்கை வழி வாழ்க்கை என்பது தான் ஜோபாவின் மெய்யியல் என்று முடிவானது. அதன் கோட்பாடுகளை அடுத்த கூடுகையில் முடிவு செய்வது என முதற் கூட்டம் முடிவு பெற்றது.


இரண்டாவது கூடுகை மதுரையில் நடைபெற்றது. அங்கே 5 மெய்யியல் கோட்பாடுகள் கலந்துரையாடி முடிவு செய்யப்பட்டன. பிறகு அது 8 ஆனது. தொடர்ந்து 13 ஆனது. அவைகளே அடுத்தடுத்து வருவன.


ஒன்று புரிகிறது!


எம்மைச் சுற்றி இருந்தவர்கள், எம்மை செதுக்கி செதுக்கி, இந்த நிலைக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். இன்னும் என்னை வைத்து ‘என்ன காமெடியெல்லாம்’ செய்யப் போகிறார்களோ?


எல்லாம் ‘அவர்கள்’ செயல்!!


************


இத் தொகுப்புக்கு கருத்துரை வழங்கி உதவியவர்கள்


பாமயன்

மகிமை பிரகாசம்

டிராமா செல்வம்

அழகு அண்ணாவி

சந்தியாகு

வேல்முருகன்

சங்கர் நாராயணன்

புஷ்கலா

நித்யா

ஆக்னஸ்

பிரான்சிஸ்

அபர்ணா

சாந்தி

பெர்லின் ரூபி

ரெனிட்டா


திணை

இயற்கை வாழ்வியல் கோட்பாடுகள்


ஒரு பக்கம் கவலையாக இருக்கிறது.

மறு பக்கம் நம்பிக்கை மிளிர்கிறது.


ஏன் கவலை?

உலகப் பேரழிவு 6.0 பற்றி தற்பொழுது மனிதகுலம் பேசிக்கொண்டு இருக்கிறது.

அதற்குக் காரணம் தொழிற்புரட்சி 4.0 என்று சொல்கிறார்கள். சில பேருடைய பேராசை, பொருளாதார சீர்குலைவிற்கும் மனிதகுல நாசத்திற்கும் அடிகோலிவிட்டதா? அதுவே உலகப்போர் 3.0க்கு துவக்க மணியை அடிக்குமா?

இதுதான் கவலை. கொஞ்சம் விரிவாகப் பார்த்துவிட்டு, மிச்சமிருக்கிற நம்பிக்கை என்ன என்று பார்ப்போம்.


உலகப் பேரழிவு 6.0

உலகப் பேரழிவு 6.0 (Mass extinction 6.0) என்பதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கக்கூடும். டைனசோர் போன்ற மிருகங்கள், உலகில் நடமாடிக் கொண்டிருந்தன. அவைகள் இன்று அடியோடு காணாமல் போய்விட்டன. இதைப்போன்ற உலகில் உள்ள முக்கால்வாசி உயிரனங்கள் அழிவதையே உலகப் பேரழிவு என்கிறோம். அதற்கு வெளியிலிருந்து வந்த விண்கற்களோ அல்லது பூமியில் நடந்த எரிமலையோ காரணமாக இருந்திருக்கின்றன.

443 மில்லியன் வருடங்களுக்கு முன்பு நடந்த முதல் பேரழிவைத் தொடர்ந்து, தற்போது ஆறாவது பேரழிவு நடந்துக்கொண்டிருக்கிறது. இதற்கு காரணகர்த்தாக்களாக இருப்பது யார் தெரியுமா? நெஞ்சு நிமிர்த்தி, திமிரோடு இயற்கை வளங்களை கபளீகரம் செய்து கொண்டிருக்கிற மனிதர்கள் தான் இதற்கு காரணமாக இருக்கிறார்கள். இரசாயன மாசுபாடு (chemeical pollution), புவி வெப்பமடைதல் (climate change and greenhouse effect), உயிரனங்களை தேவைக்கதிகமாகக் கொல்வது, என பல நவீன வாழ்க்கைக்கான காரணங்கள் அதன் பின்னே இருக்கின்றன என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இந்த நவீன வாழ்க்கைக்கான ஏற்பாடுகள் எப்படி நடக்கின்றன? அதற்கு தொழிற்புரட்சி 4.0 பற்றித் தெரிந்திருக்க வேண்டும்.


தொழிற்புரட்சி 4.0 மற்றும் காலநிலை மாற்றம்

தொழிற்புரட்சி 4.0 (Industrial revolution 4.0) பற்றியும் கேள்விப்பட்டிருப்பீர்கள். வணிகம் உலகமயமானபிறகு (globalisation), இணையத்தைப் (Internet of things) பயன்படுத்தி, செயற்கை நுண்ணறிவு (Artificial intelligence) கொண்டு, இயந்திரங்கள் சுயமாக கற்று செயல்படுவதன் (machine learning) மூலமாக ஒரு சில கார்ப்பரேட் கம்பெனிகள் மாத்திரம் அசுர லாபம் பெற வழி வகை செய்யும், தொழில் மற்றும் வணிக முறை செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. அதற்குத் தேவையான பணியாளர்களை உருவாக்க இருபத்தியோராம் நூற்றாண்டுத் திறன்கள் (21st century skills) தேவையாக இருக்கின்றன. இதுவரை மனிதகுலம் தேடிவைத்த திறனறிவு ஒரு சிலர் லாபம் சம்பாரிக்க, உலக வளத்தை சுரண்டி பேரழிவிற்கு கொண்டுச் செல்லத்தான் பயன்படுகிறதா? என்கிற கேள்வியும் எழாமல் இல்லை. தொழிற்புரட்சிகள் காலநிலை மாற்றத்தில் வந்து நிற்கிறதை மனிதகுலம் உணர்ந்திருக்கிறதா?

சுற்றுச்சூழலிலும், வணிகத்திலும் நடக்கிற இதே நிலை கலை கலாச்சாரத்திலும், அரசியலிலும் நடக்கிறது. உலகப்போர் 3.0 பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.


உலகப்போர் 3.0

உலக வளங்களின் மேலும், மக்கள் மனங்களின் மேலும் மேலாதிக்கம் செலுத்த பல உலக அமைப்புகள் துடியாய் துடிக்கின்றன. மதங்களின் பெயரால், தேசியங்களின் பெயரால், அமைப்புகளை உருவாக்கி ஊடகங்களை தன் வயப்படுத்தி, துர்கருத்துக்களை போதித்து, உலக மேலாண்மை செய்ய செயல்படுகின்றன.

எளிய நாடுகளை கடன் என்கிற பெயராலும் தன் வலைக்குள் போட்டு அந்த மேலாண்மைக்கு வழி கோலுகின்றன. பன்முகம் கொண்ட மொழி, இலக்கியம், கலை, பண்பாடுகளை இருட்டடிப்பு செய்து ஒரு சில கலாச்சாரத்தை மட்டும் தூக்கிப்பிடிக்க முயலுகின்றன. துப்பாக்கி குண்டுகளால் செய்யும் போரைவிட வலிமையாய், மௌனமாய் கலாச்சாரப் போர் நடந்துக்கொண்டிருக்கிறது என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுவரை மனிதகுலம் தேடிவைத்த விழுமிய மாண்புகள், ஒரு சில கலாச்சார குழுக்களும், அரசியல் குழுக்களும் பெரும்பான்மையோரை மேலாதிக்கம் செய்யத்தான் பயன்படுகிறதா? என்கிற கேள்வி எழுகிறதா இல்லையா?


இன்றைய கல்வி

ஆக, இதுவரை கல்வி மூலம், மனிதகுலம் தேடிவைத்த அறிவும் (knowledge), திறனும் (skill), பண்பாட்டு விழுமியங்களும் (values) உலக அழிவிற்கும், ஒரு சிலர் லாபத்திற்கும், அவர்களுடைய மேலாண்மைக்கும் தான் பயன்படுகிறது. அப்படியானால் அப்படிப்பட்ட கல்வி தனிப்பட்ட மனிதருக்கும் மனிதகுலத்திற்கும் உலக உயிரனங்களுக்கும் ஊறு விளைவிக்க கூடியதாக இருக்கிறது என்று முடிவு செய்யலாம்.

அப்படியானால் எப்படிப்பட்ட கல்வி தேவை?


கல்வி 6.0 - இயற்கையை (பன்மயத்தையும் பண்பாட்டையும்) மையப்படுத்திய கல்வி

கற்றலில் ஆசிரியர் மையம் அல்லர். மாணவர் மையம் அல்லர். பாடப்புத்தகங்கள் மையம் அல்ல. கணிணி, இணையம், எண்ணியல் கருவிகள் (digital gadgets) மையம் அல்ல. மனிதர்கள் மையம் அல்லர். இயற்கையே மையம். பல்லுயிர் பன்மயமே மையம். உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும், நீடித்து நிலைத்து வாழ கற்பதே கல்வி.

பன்மய பண்பாடுகள் இருக்கின்றன. கல்வி அவரவர் பண்பாட்டு வேர்களில் முளையிட வேண்டும். பல்லுயிர் ஓம்புதலும் பண்பாட்டை பேணுதலும் கல்வியின் ஆதாரங்களாக இருக்கவேண்டும். அதற்கான அறிவைப்பெருக்க வேண்டும். அதற்கான திறன்களை வளர்க்க வேண்டும். அதற்கான மதிப்பீடுகளைப் பேண வேண்டும்.

அறிவு உயிரினங்களை அழிப்பதாக இருக்கக்கூடாது. உயிரினங்களைக் காப்பதாக இருக்க வேண்டும். திறன்கள் ஒரு சாராருக்கு பலனளிப்பதாக மட்டும் இருக்கக்கூடாது. எல்லோருக்கும் சமமாக, நியாயமாக பலன் கொடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும். பண்புகள், ஒரு குழு, மற்றவர்கள் மேல் மேலாதிக்கம் செலுத்துவதாக இருக்கக் கூடாது. எல்லோரும் இன்புற்று புரிதலோடும் அன்போடும் ஒழுக பயன்பட வேண்டும்.

இத்தகைய அறத்தை தமிழர் பன்னெடுங்காலமாக அறிவுறுத்தி வந்ததோடு, தங்களது இயல்பான வாழ்வியலாக மாற்றி வாழ்ந்து வந்துள்ளனர். தங்களது கலை இலக்கியங்களில் ஆவணப்படுத்தியுள்ளனர். இயற்கையோடு இயைந்து வாழ்வதே தமிழ் அறமாக இருந்திருக்கிறது.

இதைக் கற்றுக்கொண்டு, நம் குழந்தைகளை, இயற்கை வாழவியிலுக்குப் பழக்கப்படுத்தி, பண்பாட்டு மாற்றம் கொண்டு வர, பலர் முனைப்பாக இருப்பது நம்பிக்கைத் தருகிறது.


தமிழர் அறம் - ஒரு நம்பிக்கை

‘அறு’ என்கிற வேர்ச்சொல்லிலிருந்து ‘அறம்’ என்கிற சொல் பிறக்கிறது. அதிலிருந்து தான் ஆறு என்கிற சொல்லும் வருகிறது. ஆறு தன் வழியை வரையறுத்து, தன்னையே நெறிப்படுத்திக்கொண்டுச் செல்கிறது. அதுபோல வாழ்க்கைக்கான நெறியை வரையறுத்துக் கொடுப்பது தான் அறம்.

சரி! அந்த அறம் தான் என்ன? தமிழர் வாழ்க்கை நெறி தான் என்ன? திருவள்ளுவர் பதில் கொடுக்கிறார்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்

ஆகுல நீர பிற. (திருக்குறள். 34)

[பொருள்: ஒருவர் தன் மனத்தில் குற்றமற்று இருப்பதே அறம். மற்றவை எல்லாம் வெறும் ஆடம்பரங்களே.]


இன்னொரு இடத்தில், அழுக்காறு (பொறாமை), அவா (பேராசை), வெகுளி (கோபம்), இன்னாச்சொல் (கடுஞ்சொல்) ஆகிய நான்கையும் தவிர்த்து ஒழுகுதல் அறம் என்கிறார். இந்த அறவாழ்க்கை, அவரவர் வாழும் இடத்தைப் (திணையைப்) பொறுத்து அமையும் எனத் தமிழர்கள் வகுத்து வைத்தனர்.


திணை

திணை என்றால் வாழும் இடம் என்றும், அங்கு ஒழுக வேண்டிய ஒழுக்கம் என்றும் பொருள்படுகிறது. எப்படி என்று பார்ப்போம்.

தமிழர்கள் இவ்வுலகத்தை ஐம்பூதங்களின் கலவையாகப் பார்ப்பதோடு, நிலத்தை நான்கு வகைகளாகப் பிரித்து, ஐந்திணைகளாக வகைப்படுத்தினர்.

'மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்

சொல்லிய முறையான் சொல்லவும் படுமே.’

(தொல்காப்பியம்-பொருளதிகாரம்-அகத்திணை இயல்-பாடல் எண்:5) என்ற பாடல் மூலம் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் என்று நான்கு நிலங்களைக் குறிப்பிடுவதை அறியலாம்.

[பொருள்: காடும் காடு சார்ந்த நிலமுமாகிய முல்லை நிலத்திற்குத் தெய்வமாகத் திருமாலினையும், மலையும் மலை யைச் சார்ந்த நிலமுமாகிய குறிஞ்சி நிலத்திற்குத் தெய்வமாக முருகனையும், வயலும் வயலைச் சார்ந்த நிலமுமாகிய மருத நிலத்திற்குத் தெய்வமாக இந்திரனையும், மணல் பொருந்திய வளம் குறைந்த நெய்தல் நிலத்திற்குத் தெய்வமாக வருணனையும், பழந்தமிழ் மக்கள் கொண்டார்கள்.]


பாலை என்ற நிலம் எவ்வாறு உருவாகிறது என்பதைக் காலத்தால் சற்றுப் பிற்பட்ட சிலப்பதிகாரம் சொல்கிறது.

‘முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து

நல்லியல்பு இழந்து நடுங்கு துயர் உறுத்துப்

பாலை என்பதோர் படிவம் கொள்ளும்.’

(சிலப்பதிகாரம். காடுகாண் காதை. 64-66)

[பொருள்: முல்லை, குறிஞ்சி ஆகிய நிலங்கள் நீண்ட காலம் மழை பொழியாமல் காய்ந்து போய் இருப்பின் அது பாலைவனப்பகுதியாக மாறும்.]

இப்பாலை நிலத்திற்கு கடவுள் ‘கொற்றவை’ என தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணர் கூறுகிறார்.


ஆக, நில வகைகளை அடிப்படையாக வைத்து, குறிஞ்சி, முல்லை, முருதம், நெய்தல், பாலை என ஐந்து திணைகளாகப் பிரித்தனர். திணை என்பதற்கு வாழிடம், ஒழுக்கம், குடி, குலம், பூமி, பொருள் எனப் பலப் பொருட்கள் உண்டு. இங்கு Ecology என்கிற சொல் எப்படி வந்தது என்பதை பாமயன் விளக்குவதை உற்று நோக்க வேண்டும். Oikos என்கிற கிரேக்கச் சொல்லுக்கு வாழிடம் என்றும், Logos என்ற கிரேக்கச் சொல்லுக்கு இயல் என்றும் பொருள். அதனால், வாழிடம் பற்றிய இயலுக்கு (Oikos+Logos) Ecology என்று பெயர். அதாவது திணை என்றால் Ecology என்கிற பொருளோடு, கூடுதலாக ஒழுக்கம் அல்லது உறவு முறையை குறிக்கிறது, தமிழின் சிறப்பாக விளங்குகிறது. திணையில் உள்ள கூறுகளின் உறவு முறையை திணை இயங்கியல் என்கிறோம்.


திணை இயங்கியல்

ஒவ்வொரு திணையிலும் மூன்று பொருண்மைகள் உள்ளன. அவை யாவை? அவை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என தொல்காப்பியர் கூறுகிறார்.

‘முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே

நுவலுங் காலை முறைசிறந் தனவே

பாடலுள் பயின்றவை நாடுங் காலை.’ (தொல்: பொருள்:அகத்திணை 3)

[பொருள்: உலகியல் வழக்கிலும், செய்யுள் வழக்கிலும் பார்க்கும் போது, முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் என்ற முறையில் வகைப்படுத்திப் பார்ப்பதே சிறந்தது]


முதற்பொருள்

முதற்பொருள் என்றால் என்ன?

முதல் எனப்படுவது நிலம் பொழுதிரண்டின்

இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே.’ (தொல்: பொரு: அகத்திணை 4)

முதற் பொருளாவது, நிலம் பொழுது இரண்டின் இயல்பு. நிலத்தை, ஏற்கனவே மேற்குறிப்பிட்டபடி குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணைகளாக தமிழர்கள் பிரித்துள்ளனர். பொழுதை பெரும்பொழுது, சிறுபொழுது என்று பிரித்தனர். பூமி சூரியனைச் சுற்றி வருவதை வைத்து, ஓர் ஆண்டை, கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனில் காலம், முதுவேனில் காலம் என ஆறு பெரும் பொழுதுகளாகப் பிரித்தனர். பூமி தன்னைத் தானே சுற்றி வருவதை வைத்து, ஓர் நாளை, வைகறை, விடியல், எற்பாடு, நண்பகல், மாலை, யாமம் என ஆறு சிறு பொழுதுகளாகப் பிரித்தனர்.

கருப்பொருள்

கருப்பொருள் என்றால் என்ன?

‘தெய்வ முணாவே மாமரம் புட்பறை

செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ

அவ்வகை பிறவுங் கருவென மொழிப.’ (தொல்: பொரு: அகத்திணை 20)

[பொருள்: தெய்வம், உணவு, விலங்குகள், பயிரினங்கள், பறவையினங்கள், செய்தி, இசை போன்றவை கருப்பொருட்கள் எனச் சொல்வர்.]

ஒவ்வொரு திணையிலும், அந்தத் திணைக்கு ஏற்ற தெய்வம், உணவு, விலங்குகள், பயிரினங்கள் இன்ன பிற இருக்கும். எடுத்துக்காட்டாக, குறிஞ்சித் திணைக்கு தெய்வம் முருகவேள். உணவு - தினையும் ஐவனமும் வெதிர் நெல்லும்; விலங்குகள் - யானையும் புலியும் பன்றியும் கரடியும்; பயிரினங்கள் - வேங்கையும் கோங்கும்; பறவையினங்கள் - மயிலும் கிளியும்; இசை - வெறியாட்டுப்பறையும், தொண்டசப்பறையும்; செய்தி - தேனழித்தல்; பண் - குறிஞ்சிப்பாட்டு; பூ - வேங்கைப்பூ காந்தட்பூ குறிஞ்சிப்பூ; நீர் - சுனை நீர் அருவி நீர்.


உரிப்பொருள்

உரிப்பொருள் என்றால் என்ன?

‘புணர்தல் பிரித லிருத்த லிரங்கல்

ஊட லவற்றி னிமித்த மென்றிவை

தேருங் காலைத் திணைக்குரிப் பொருளே.’ (தொல்: பொரு: அகத்திணை 16)

[பொருள்: திணைக்கு உரிய உரிப்பொருட்கள் என்ன என ஆராயுங்காலத்து, அவை புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என அறியலாம்.]

ஒவ்வொரு திணைக்கும் உரிய ஒழுக்கம் உரிப்பொருள் ஆகும். எடுத்துக்காட்டாக, மருதத் திணையின் உரிப்பொருள் ஊடல் கொள்வதாகும்.


இயங்கியல் கோட்பாடு

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை போன்ற நிலங்களில், கார்காலம், கூதிர்காலம், முன்பனிக்காலம், பின்பனிக்காலம், இளவேனில் காலம், முதுவேனில் காலம் போன்ற பெரும் பொழுதுகளில், வைகறை, விடியல், எற்பாடு, நண்பகல், மாலை, யாமம் போன்ற சிறு பொழுதுகளில் வாழ்க்கையின் இயல்பு மாறுபடும். எடுத்துக்காட்டாக மருத நிலத்தில், முன்பனிக்காலத்தில், வைகறை நேரத்தில் ஆடு புற்களை மேய விடக்கூடாது. ஏனெனில் புற்களில் உள்ள பனித்துளிகளையும், புற்களின் மேல் பகுதியில் உள்ள நுண்ணுயிர்களையும் உண்ணும் ஆடு சுகவீனமாக அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆடு வருந்தியிருக்கக் கூடும்.

நிலமும் பொழுதும் ஆகிய முதற் பொருளைப் பேசும் போதே, ஆடு, புல் என அந்த நிலத்திற்குரிய கருப்பொருளைப் பற்றியும், வருந்துதல் என்கிற உரிப்பொருள் பற்றியும் பேசுகிறோம். அப்படி மூன்று பொருட்களைக்கிடையேயான உறவைத் தான் இயங்கியல் என்கிறோம்.

உரிப்பொருளான புணர்தல், பிரிதல், இருத்தல், இரங்கல், ஊடல் என்பது மனிதர்களுக்கிடையே இருக்கும் ஒழுக்கம் மட்டுமல்ல. புணர்வதும் (கூடுவதும்), பிரிவைப் பொறுத்து இருத்தலும், காத்து இருத்தலும், இரங்கலும் (வருந்துதலும்), ஊடலும் (கோபப்பட்டு இருப்பதும்) மற்ற உயிரினங்களுக்கும் உரித்தானது.

இவ்வாறு, திணை இயங்கியல் (Thinai Dynamics) பற்றி ஆராயும் போது, இயற்கை வாழ்வியல் மெய்யியல் கோட்பாடுகள் (Nature Centric Philosophical Principles) பல புலப்படுகின்றன. தமிழர்கள் ‘இந்த திணையில், இப்படிப்பட்ட வாழ்க்கை நெறி அல்லது அறத்தோடு வாழ்ந்தால் சிறப்பாக இருக்கும்’ என்று ஆய்ந்து அதனை சங்க இலக்கியங்கள் முதல், பக்தி இலக்கியங்கள் ஊடாக, தற்கால இலக்கியங்கள் வரை ஆவணப்படுத்தி வந்திருக்கிறார்கள். ஆவணப்படுத்தி வந்ததோடு, அவைகளை தங்கள் இயல்பான வாழ்க்கை முறையாக ஆக்கி வாழ்ந்தும் வந்திருக்கிறார்கள். அந்த தமிழர் அற மெய்யியல் கோட்பாடுகளை தெரிந்துக் கொள்வது ஒவ்வொரு தனி மனிதரும் நலமாக நீடுடி வாழவும், ஒவ்வொரு சமூகமும் நீடித்த நிலைத்த வாழ்வை வாழவும், இவ்வுலகம் உய்யவும் பயனளிக்கும்.


அந்த தமிழர் அற மெய்யியல் கோட்பாடுகள் என்னென்ன?


இயற்கை வாழ்வியல் மெய்யியல் கோட்பாடுகள்

பதின்மூன்று மெய்யியல் கோட்பாடுகளை இங்கே விவரிக்கிறோம்.

1. தோழமை (Comradeship)

2. உயிரினப் பன்மயம் (Biodiversity)

3. உறவாண்மை (Inter-dependence)

4. சமநிறை சமநிலை சமத்துவம் (Equilibrium, Balance & Equality)

5. உயிர்மநேயம் (Bionity)

6. தற்சார்பியம் (Self-reliance)

7. நெடுநிலைத் தன்மை (Sustainability)

8. சுயமெய் ஆய்வறிவு (Wisdom)

9. முழுமை (Holistic Approach)

10. அழகியல் (Aesthetic Approach)

11. நேர்மறை (Positive Outlook)

12. பண்புடமை (Human Values)

13. இயல்பாய் இருத்தல் (Be natural)


ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.


1. தோழமை (Comradeship)

தமிழர் நாகரிகம் சிறப்பானது. தமிழர் அறம் சிறப்பானது. தமிழர் அறம் எனச் சிறப்பாகச் சொல்வதற்குக் காரணம், மற்ற நாகரிகங்களுக்கும், தமிழர் பண்பாட்டிற்கும் உண்டான சிறப்பான மாறுபாடே ஆகும். அப்படி என்ன மாறுபாடு?

‘உலகின் பல்வேறு நாகரிகங்கள் (சிந்துச் சமவெளி நாகரிகம், எகிப்து நாகரிகம், சுமேரிய நாகரிகம் உட்பட) இவ்வுலகை ஏதோ ஒரு தெய்வம் படைத்ததாகவும், பூசாரியமும், சடங்குகளும், பூசனைகளும் நிறைந்ததாகவும் சொல்லிய நிலையில், தமிழ் மரபு இவ்வுலகத்தை ஐம்பூதங்களின் சேர்க்கை என்று விளம்பியது.’ என்று சொல்லி அதற்கு ஆதாரமாக தொல்காப்பியம்,

‘நிலம் தீ நீர் வளி விசும்பொடு ஐந்தும்

கலந்த மயக்கம் உலகம் ஆதலின்’ (தொல்.பொருள்.635) என்று குறிப்பிடுவதை எடுத்துக்காட்டுகிறார் பாமயன்.

[பொருள்: இந்த உலகம், நிலம், தீ, நீர், ஆகாயம், காற்று ஆகிய ஐந்தால் கலந்த கலவை.]


‘உலகச் சூழலை அச்சத்துடன் நோக்காது, தோழமையுடன் நோக்கியதே தமிழறிவியத்தின் தனித்தன்மை’ எனவும் அவர் குறிப்பிடுகிறார். [1] இதைச் செய்தால் புண்ணியம். சொர்க்கத்துக்குப் போவாய். இதைச் செய்தால் பாவம். நரகத்துக்குப் போவாய். ஆகவே உன் பிறப்புக்கு ஏற்ற கருமத்தைச் செய். அது தான் தர்மம். செய்யவில்லையென்றால் நாசமாய் போவாய் என பயமுறுத்தி வைக்கவில்லை.

இந்த உலகம் இருக்கிறது. ஐம்பூதங்களால் கலந்த மயக்கமாக இருக்கிறது. அதனோடு இயைந்து வாழ். வாழ்க்கையை அனுபவி என்று தாங்கள் வாழ்கிற சூழலை தோழமையுடன் பார்த்து, வாழ்க்கையைக் கொண்டாட அழைக்கிறது தமிழ் மரபு.

அப்படி தமிழர்கள், இந்த உலகை தோழமையுடன் நோக்கியதால், ‘மனிதன்’ இந்த உலகின் மையம் அல்ல, இவ்வுலகில் எண்ணற்ற உயிர்கள் இருக்கின்றன என்று உணர்ந்தார்கள். அவை பல்வகைப்பட்டவை எனத் தெரிந்தார்கள்.


2. உயிரினப் பன்மயம் (Biodiversity)

பல்வகை வாழ்வினங்கள் தாவர இனங்கள், விலங்கினங்கள், நுண்ணுயிர்களாக இருக்கின்றன. நிலத்திலும், நீர் நிலைகளிலும், கடலிலும் சுமார் ஒரு கோடி முதல் மூன்று கோடி வரையிலான தாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்ணுயிர்கள் வாழ்ந்து வருவதாக மதிப்பிடப்படுகிறது. [2] அவைகளுக்குள் பல வேறுபாடுகள் இருக்கின்றன. பல வடிவங்களிலும், பல அளவுகளிலும் இருக்கின்றன. தேனியின் வடிவமும் அளவும் வேறு. யானையின் வடிவமும் அளவும் வேறு. மூஞ்சூறுகள் சில மாதங்கள் உயிர் வாழும்.


திமிங்கலம் 200 ஆண்டுகள் வரை உயிர் வாழும். கரையான்கள் சில ஆயிரங்கள் முதல் ஐந்து லட்சம் வரை கூட்டமாக ஒரே புற்றில் வாழும். புலிகள் தனித்து வாழும் இயல்புடையன. கண்ணுக்குத் தெரியும் உயிரனங்களும், தெரியாத உயிரினங்களும் இருக்கின்றன. சில பசுமைவனங்களில், சில பாலைவனங்களிலில், சில மண் பொந்துகளில், சில மரப்பொந்துகளில், சில நீரில், சில நிலத்தில். சில புல்லைத் தின்னும். சில புலாலைத் தின்னும். சில நடக்கும். சில பறக்கும். சில நீந்தும். சில நெளியும். இவ்வாறு வேறுபட்டு, மாறுபட்டு இருப்பதே இயற்கையின் அழகு.


தொல்காப்பியர் இப்புவியில் உள்ள அனைத்து உயிர்களையும் வகைப்பிரிக்கிறார். பொருளதிகாரத்தில், மரபியலில் மெய், வாய், மூக்கு, கண், செவி என்னும் ஐம்பொறிகளால் பற்றப்படும் ஊறு, சுவை, நாற்றம், ஒளி, ஒலி ஆகிய புலன்களுடன் மன உணர்வினையும் சேர்த்து, உயிரினங்களைத் தொல்காப்பியனார் ஆறுவகையினாற் பிரித்துள்ளார். அவை,

“ஒன்ற றிவதுவே உற்ற றிவதுவே,

இரண்டறிவதுவே அதனொடு நாவே

மூன்றறிவதுவே அவற்றொடு மூக்கே

நான்கறிவதுவே அவற்றொடு கண்ணே

ஐந்தறிவதுவே அவற்றோடு செவியே

ஆறறிவதுவே அவற்றொடு மனனே!

நேரிதின் உயர்ந்தோர் நெறிப்படுத்தினரே” (தொல். பொருள். மரபியல். 27)

என்று கூறியுள்ளார்.

உடம்பால் மட்டும் அறிவன ஓரறிவு உயிர்கள் ஆகும்.

புல்லும் மரனும் ஓர் அறிவனவே. பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே (தொல். பொருள். மர. 28) எடுத்துக்காட்டு: புல், மரம் போன்றவை.

உடம்பாலும் நாவாலும் அறிவன இரண்டு அறிவு உயிர்கள் ஆகும்.

நந்தும் முரளும் ஈர்அறிவினவே. பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே (தொல். பொருள். மர. 29). எடுத்துக்காட்டு: நத்தை, மீன், சிப்பி போன்றவை.

உடம்பு, நா, மூக்கு மூன்றாலும் அறிவன மூவறிவு உயிர்கள் ஆகும்.

சிதலும் எறும்பும் மூவறிவினவே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே (தொல். பொருள். மர. 30). எடுத்துக்காட்டு: கறையான், எறும்பு போன்றவை.

உடம்பு, நா, மூக்கு, கண் இவை நான்காலும் அறிவன நாலறிவு உயிர்கள் ஆகும்.

வண்டும் தும்பியிம் நான்கறிவினவே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே (தொல். பொ. மர. 31) எடுத்துக்காட்டு: வண்டு, தும்பி போன்றவை.

உடம்பு, நாக்கு, மூக்கு, கண், காது இவை ஐந்தால் அறிவன ஐந்தறிவு உயிர்கள் ஆகும்.

மாவும் மாக்களும் ஐயறிவினவே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே (தொல். பொருள். மர. 32). எடுத்துக்காட்டு: விலங்கினங்கள்

இந்து ஐந்தறிவுகளோடு, மனத்தாலும் அறிவன ஆறறிவு உயிர்கள் ஆகும்.

மக்கள் தாமே ஆறறிவினவே; பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே (தொல். பொருள். மர. 33). எடுத்துக்காட்டு: மக்கள்


இவ்வாறு இயற்கையில் இருக்கும் பல்வகைப்பட்ட உயிர்கள் ஒன்றுக்கொன்று சார்ந்து, உறவு கொண்டு இருக்கின்றன என்று புரிந்து வைத்திருந்தான்.


3. உறவாண்மை (Inter-dependence)

அனைத்து வகையான உயிர்களும் முழுமையாக ஒன்றோடொன்று ஊடாடுகிறது. உறவாடுகிறது. ஒன்று மற்றொன்றுக்கு உதவுகிறது. மற்றொன்று இன்னொன்றை பாதிக்கிறது. இன்னொன்றில் ஏற்படும் மாற்றம் பிரிதொன்றை மாற்றுகிறது. ஒன்றில் ஏற்படும் இழப்பு இன்னொன்றை பாதிக்கிறது. ஒன்று இன்னொன்றுக்கு உணவாகிறது.

எடுத்துக்காட்டாக, சூரியனிடமிருந்து நேரடியாக ஆற்றலைப் பெறும் நீர்த்தாவர நுண்ணுயிர்களை சிறிய விலங்குகள் உண்ணுகின்றன. அவைகளை மீன்கள், முதலைகள், பாலூட்டிகள் போன்ற பெரிய விலங்குகள் உண்ணுகின்றன. மீன்களை மக்கள் உணவாகக் கொள்கின்றனர். [2]

கால வெள்ளத்தால் மழையும், காற்றும் பாறைகளில் இருந்து மண்ணை உருவாக்குகின்றன. தாவரங்களும் இதர உயிரிகளும் அம் மண்ணை மேலும் திடப்படுத்தி வளமாக்குகின்றன. அம் மண் நீரைத்தேக்கி வைக்கிறது. நீர் சுழற்சியில் கடல் பெரும் பங்கு வகிக்கிறது. கடல் உணவு வழங்குகிறது. இப்படி, ஒன்றுக்கொன்று உறவில் இருக்கும் தன்மையைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

1980-களில், நான் சமூக மாற்றப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் பொழுது, தமிழ்நாட்டில், தஞ்சை மற்றும் புதுக்கோட்டை மாவட்ட கிராமங்களில், மாலை வேளைகளில், முறைசாராக்கல்வி வகுப்புகள் நடத்துவோம். பள்ளிக்குப் போகாத சிறார்களிலிருந்து முதியோர்கள் வரை அவ்வகுப்புகளில் பங்கெடுப்பர். பெரும்பாலும் செயல் வழி, மற்றும் கலை வழி வகுப்புகளாகத்தான் இருக்கும். விளையாட்டுக்கள், பாட்டு, கதை, பழமொழி, விடுகதை, நாடகம் என களை கட்டும். அப்படி ஒரு தடவை ஒரு விவசாயி சொன்ன விடுகதையை, என்னோடு இணைந்து பணி புரிந்த, பின்னாளில் இயற்கை வேளாண் விஞ்ஞானி என்று பாராட்டப்பட்ட நம்மாழ்வார் ஐயா அவர்கள் பிரபலப்படுத்தினார். அந்த விடுகதை இது தான்!

‘அடி காட்டுல

நடு மாட்டுல

நுனி வீட்டுல’ அது என்ன? இது தான் விடுகதை. இதை உங்களால் விடிக்க முடியுமா?

பார்ப்பதற்கு எளிதான குறுங்கவிதை போல உள்ள விடுகதை. ஆனால் இயற்கை வாழ்வியலின் மொத்த சூட்சுமத்தையும் உள்ளடக்கிய விடுகதை. இந்த விடுகதையின் பதில்: நெற்கதிர்.

நெற்கதிரின் அடியை அறுக்கும்போது வயலிலேயே (காட்டிலேயே) விட்டு விடுகிறார் விவசாயி. (அடி காட்டுல.) நெற்கதிரின் நுனியை அடித்து நெற்மணிகளை வீட்டிற்கு கொண்டுச் செல்கிறார். (நுனி வீட்டுல.) அடிக்கும், நுனிக்கும் நடுவே உள்ள வைக்கோலை மாட்டிற்கு கொடுத்து விடுகிறார். (நடு மாட்டுல.)

ஒரு பகுதி வயக்காட்டிற்கு. ஒரு பகுதி உழவு மாட்டிற்கு. ஒரு பகுதி தன் வீட்டிற்கு. வயக்காட்டிற்கும், பசுமாட்டிற்கும், தன் வீட்டிற்கும் உள்ள உறவைப் புரிந்து வைத்திருந்த தமிழ் விவசாயி, தனக்கு வேண்டியதை மட்டும் எடுத்துக்கொண்டு, மீதியை இயற்கைக்குக் கொடுத்து விட்டார்.

இந்த உறவுமுறை இயற்கையின் சுழற்சி முறை! எளிதான எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.

தாவரங்கள் பூக்களைப் பூக்கின்றன. தேனீக்கள் பூக்களில் தேன் எடுக்கின்றன. கூடவே பூக்களின் மகரந்தத்தைப் பரப்புகின்றன. அதனால் தாவரங்கள் காயும் கனியும் கொடுக்கின்றன. பறவைகள் கனிகளை உண்கின்றன. விதைகளை விதைக்கின்றன. மரங்கள் முளைக்கின்றன. சுழற்சி!

இன்னொரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.


மரங்கள் சுவாசிக்கின்றன. கரியமிலவாயுவை உட்கொள்கின்றன. உயிர்வளியை (பிராணவாயு, ஆக்சிஜன்) வெளியிடுகின்றன. மனிதன் உயிர்வளியை உள்ளிழுக்கிறான்.

சங்க இலக்கியங்கள் முழுக்க, தாவரங்களுக்கும், விலங்குகளுக்கும், பறவைகளுக்கும், மனிதர்களுக்கும் இன்ன பிற உயிரனங்களுக்கும் உள்ள உறவை அழகாக எடுத்துக் காட்டியிருப்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்.


ஔவையார் அகநானூற்றில் பாடிய பாடல் ஒன்றைப் பார்த்து வியந்து வியந்து போவேன். வானில் பறவைகள் பறக்கும் போது அம்பு முனை போல் பறப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? இதோ! பாடல்.

‘விசும்பு விசைத் தெறித்த கூதளங் கொதையின்

பசுங்கால் வெண்குருகு’ - (அகநானூறு. 273: 1-2)

(பொருள்: அழகிய நீல வானில் நாரைகள் கூட்டம் குறிப்பிட்ட வடிவத்தில் பறக்கின்றன. அது எப்படி இருக்கிறது தெரியுமா? கூதள மலர்களைக் கொண்டு கட்டிய மாலையை வானில் வீசி எறிந்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறது)

ஐங்குறுநூறில் கேழற் பத்து என்கிற பகுதியில், கபிலர் பாடிய பாடலில் (267), இயற்கையோடு ஒட்டிய வாழ்க்கையை அழகாக வர்ணிக்கிறார்.

‘சிறுகண் பன்றி பெருஞ்சினை ஒருத்தல்

துறுகல் அடுக்கத்து வில்லோர் மாற்றி

ஐவனம் கவரும் குன்ற நாடன்

வண்டுபடு கூந்தலைப் பேணிப்

பண்புஇல சொல்லும் தேறுதல் செத்தே?’ (ஐங்குறுநூறு. கேழற்பத்து. 267)

(பொருள்: தோழி தலைவியிடம் கூறுகிறாள்: தலைவியே! சிறிய கண்களையும் பெரும் கோபத்தையும் உடைய பன்றிகள், அதோ அந்த மலையில் உள்ளன. அவை வில் வைத்துக்கொண்டு காவல் காக்கும் காவலாளிகளை ஏமாற்றி விட்டு, மலைநெல்லை உண்ணும். அப்படிப்பட்ட மலை நாட்டைச் சேர்ந்தவன் உன் தலைவன். நீ ஒரு காட்டுப் பூ என நினைத்து உன் கூந்தலை வண்டுகள் மொய்க்கிறது. அப்படிப்பட்ட கூந்தலைப் பேணி உன்னை அடைய தலைவன் பசப்பு வார்த்தைகளை சொல்கிறான். கவனமாக இரு.)


அழகிய மலையும், அதில் விளையும் பயிரும், வில் கொண்டு பயிர் காக்கும் கானகரும், கானகரை ஏமாற்றி நெல் உண்ணும் பன்றிகளும், வண்டுகள் மொய்க்கும் கூந்தலைக் கொண்டுள்ள மகளிரும், அவர்களை கவர உத்தி செய்யும் காதலரும் என இயற்கையை பின்புலமாக வைத்து பின்னிய பாடலில், இயற்கையின் வெவ்வேறு கூறுகள் கொண்டுள்ள உறவு முறை புலப்படுகிறது அல்லவா?


இன்னொரு புறநானூற்றுப் பாடலைப் பாருங்கள். சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதனை புகழும் , புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் கீழ்க்கண்டவாறு பாடுகிறார்.


மண் திணிந்த நிலனும்,

நிலம் ஏந்திய விசும்பும்,

விசும்பு தைவரு வளியும்

வளித் தலைஇய தீயும்,

தீ முரணிய நீரும், என்றாங்கு

ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்

போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்

வலியும், தெறலும், அணியும், உடையோய்! (புறநானூறு: 2)


சேரமன்னா! நீ மண்ணின் திணிந்து இருக்கும் நிலம், நிலத்தை ஏந்திக்கொண்டிருக்கும் ஆகாயம், ஆகாயத்தை தடவிக்கொடுக்கும் காற்று, காற்றில் பற்றும் தீ, தீயோடு முரண்பட்டிருக்கும் நீர் என்ற ஐம்பூதங்களின் பாங்குகளை ஒத்து இருக்கிறாய்! நிலம் போல பொறுமை கொண்டவனாய் இருக்கிறாய். உன் நாடு ஆகாயம் போல் பரப்பில் அகன்று இருக்கிறது. காற்றைப் போல் வலிமை கொண்டவனாயும், சூழ்ச்சி செய்வோரை தீயைப் போல் அழிக்க வல்லவனாயும், நீரைப்போல் கொடைத்திறம் கொண்டவனாயும் விளங்குகிறாய் எனப் பாராட்டுகிறார்.


ஒன்றுக்கொன்று தொடர்பும் உறவும் இருக்கிறதை உணர்ந்தவர்களாக தமிழர்கள் இருந்திருக்கிறார்கள். இப்படி வலைப்பின்னலில் இருக்கிற பல்லுயிர்களுக்குள்ளும் ஒரு சமச்சீர்மை இருந்துக்கொண்டே இருக்கிறது என்பதையும் அவர்கள் உணர்ந்திருந்தார்கள்.


4. சமநிறை-சமநிலை-சமத்துவம் (Equilibrium, Balance & Equality)

சமநிறை

இயற்கையில் பல்லுயிர்கள் சக்தியுருவமாக இருக்கின்றன. அந்த இயற்கை சக்தி சமநிறையுடன் இருக்கிறது. கூட்டவோ குறைக்கவோ முடியாது. அதன் பல்வேறு வடிவங்களாக உள்ள பல்லின உயிரனங்கள் புணர்வதும், பிறப்பதும், வளர்வதும், பிரிவதும், இருப்பதும், இறப்பதும் என மாறிக்கொண்டே இருந்தாலும், மையப் புள்ளியாக சமநிறையை இயற்கை கடைப்பிடித்து வருகிறது. எடுத்துக்காட்டாக, திரவமாக இருக்கிற நீர், வாயுவாக நீராவியாகலாம். நீராவி குளுமைப்படுத்தி நீராகலாம். நீர் கெட்டிப்பட்டு திடமாக ஐஸ் ஆகலாம். வடிவம் மாறுமே தவிர, சக்தி மாறாது.

சமநிலை

சக்தி மாறாதது போல, வடிவமும் சமநிலையில் இருப்பது போல் இயற்கை பார்த்துக்கொள்கிறது. எடுத்துக்காட்டாக, இதைக் கற்பனை செய்து பாருங்கள். புலிகள் எண்ணிக்கையில் அதிகமாவதாக வைத்துக்கொள்வோம். அப்பொழுது புலிகள் உண்ணும் மான்கள் அளவில் குறைந்து போகும். மான்கள் குறைந்துப் போவதால், உண்ண போதுமான உணவின்றி புலிகளின் தொகை குறையும். அல்லவா? அப்படி புலிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டால், அடித்துத் திங்க ஆள் இல்லாததால் மான்களின் எண்ணிக்கை கூடும் அல்லவா? இப்பொழுது மான்கள் வந்து விட்டதால் புலிகள் எண்ணிக்கையில் கூடும். இதை கதையை மானையும் புல்லையும் வைத்து எண்ணிப்பாருங்கள். மான்கள் அதிகம் ஆகும் போது புல் குறையும். புல் குறைந்தததால் மான்கள் குறையும். மான்கள் குறைந்தால் புற்கள் அதிகமாகும். புல் அதிகமானால் மான் அதிகமாகும். இந்த இயற்கை விளையாட்டுக்குத்தான் சமநிலை தீர்மானிப்பு என்கிறோம்.

சற்றே கடல் பக்கம் நம் பார்வையைத் திருப்புவோம்.


ஒரு சிப்பி தன் வாழ்நாளில் இருபது லட்சம் முட்டைகள் இடும். சூரியமீன் என்கிற ஒரு வகை மீன் தன் இனப்பெருக்க காலத்தில் முப்பது கோடி முட்டைகள் வரை இடும். அவைகளை அப்படியே விட்டுவிட்டால் என்னாகும்? கடலே மூடி விடும். ஆனால் அப்படி நடந்ததா? இல்லையே! எப்படி? அவைகளை உண்கிற வேறு இன மீன்கள் இருக்கின்றன. அப்படி சமநிலை காக்கப்படுகிறது. இவைகளையும் மீறி உயிரன அழிப்புகள் நடந்தாலும், சமநிறையில் சக்தி இருந்துக்கொண்டே இருக்கிறது. இயற்கை நடுநிலையில் இருந்துக்கொண்டே இருக்கிறது.

இன்னொரு காட்சியை கற்பனை செய்யுங்கள்.

ஓர் எலி ஒரு சமயத்தில் 6 முதல் 8 குட்டிகளை ஈனும். அந்த எலிகள் ஒரு வருட முடிவில் 800 க்கும் மேற்பட்ட கூட்டமாக மாறும். சில வருடங்களில் பல லட்சம் எலிகளாக பெருகும். இந்த நிலை நீடித்தால் மனிதர்களுக்கு உணவு இருக்காது. நோய் பெருகும். ஆனால் இயற்கை அதற்கு ஒரு வழி வைத்திருக்கிறது. ஆந்தைகள் எலிகளை உண்பதால் நிலைமை கட்டுக்குள் வைக்கப்படுகிறது என நவீன அறிவியல் கூறுகிறது. இந்த தரவை வைத்து, 2200 ஆண்டுகளுக்கு முன்பு பெருந்தேவனார், நற்றிணையில் ஒரு பாடல் பாடியிருக்கிறார்.


‘எம் ஊர் வாயில் உண்துறைத் தடைஇய

கடவுட் முது மரத்து, உடன் உறை பழகிய,

தேயா வளை வாய், தெண் கண், கூர் உகிர்,

வாய்ப் பறை அசாஅம், வலி முந்து கூகை!

மை ஊன் தெரிந்த நெய் வெண் புழுக்கல்,

எலி வான் சூட்டொடு, மலியப் பேணுதும்;

எஞ்சாக் கொள்கை எம் காதலர் வரல் நசைஇத்

துஞ்சாது அலமரு பொழுதின்,

அஞ்சு வரக் கடுங் குரல் பயிற்றாதீமே!’ (நற்றிணை. 83)

(பொருள்: எங்கள் ஊரின் துவக்கத்தில் இருக்கிற குளத்தின் அருகில், கடவுளாக வழிபடக்கூடிய பழைய மரத்தில் வாழும், தேயாமால் வளைந்த வாயும், உருண்டு திரண்ட கண்களும், கூர்மையான கால்நகங்களும் கொண்டு, வாயால் பறையொலி எழுப்புகிற ஆந்தையே! நீ எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும். என் காதலர் வரும்போது, நீ உன் குரலை உசத்தி மற்றவர்களை எழுப்பி விடாமல் இருக்க வேண்டும். அப்படி நீ செய்தால், ஆட்டுக்கறி போட்டு, நெய் ஊற்றி வெண்பொங்கல் வைத்து, எலிக்கறி சுட்டு, வேண்டிய அளவு வைத்து உன்னைப் பார்த்துக்கொள்வேன். செய்வாயா?)

இயற்கையின் சமநிலை புரிந்தவர்களாக, இயற்கையோடு இயைந்து வாழ்பவர்களாக தமிழர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதற்கு, மேலே நற்றிணையில் உள்ள பாடல் போல, சங்க இலக்கியங்களில் பரவி, விரவி பல பாடல்கள் இருக்கின்றன.


சமத்துவம்

இயற்கை ஒரு உணவுத்தொடரியை உருவாக்கியிருக்கிறது. இதை அது திங்கும். அதை இன்னொன்று திங்கும். இன்னொன்றை மற்றது திங்கும். இது ஒரு சுழற்சி. தொடர். சங்கிலி. இச்சங்கிலியில் பல கண்ணிகள் உள்ளன. மனிதன் ஒரு கண்ணி. சங்கிலியில் ஒரு கண்ணியில் ஏதாவது பாதிப்பு என்றால், ஒரு கண்ணி அறுந்து போனால், மற்ற எல்லா கண்ணிகளுக்கும் பாதிப்பு தான். சங்கிலியில் உள்ள எல்லா கண்ணிகளுக்கும் சம நிலையும் சம உரிமையும் இருக்கின்றன என உணர்ந்த தமிழர்கள்


பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா

செய்தொழில் வேற்றுமை யான்’ (திருக்குறள் எண்: 972) என்றனர்.

(பொருள்: பிறப்பினால் எல்லா உயிர்களும் சமம். ஆனால் அவை செய்யும் செயல்களால் சிறப்புகள் மாறும்.)

பிறக்கிற எல்லா உயிர்களுக்கும் சமமான மரியாதை உண்டு. அந்த உயிர்கள் செய்கிற வேலையால் அவைகளின் பெருமையும் சிறப்பும் மாறுபடும் என்றனர்.


எல்லா உயிர்களையும் அன்பு செய்ய வேண்டும் என்றனர்.


5. உயிர்மநேயம் (Bionity)

ஆனால் இப்பொழுது நடப்பது என்ன? மனிதன், தன்னை இவ்வுலகின் மையமாக நினைத்துக்கொண்டு, இயற்கையை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சிக்கிறான். மற்ற உயிரினங்கள் எல்லாம் தனக்காகப் படைக்கப்பட்டிருக்கிறது என நம்புகிறான். இன்னும் கண்டுபிடிக்கப்படாத, பெயரிப்படாத உயிரினங்கள் கோடிக்கணக்கில் இருக்கும் போது, அவைகளுக்குரிய இடத்தை கொடுக்காது தன்னையே முன்னிலைப்படுத்திக் கொள்கிறான்.

தமிழர் அறம் அப்படிச் சொல்லவில்லை. மனிதன் இயற்கையின் ஒரு கூறு. எல்லா உயிர்களையும் அன்பு செய் என்று சொல்கிறது. எல்லா உயிர்களையும் நேயத்தோடு பார்க்கவேண்டும் என்று சொல்லியதோடு மட்டுமல்ல, அதற்கான உத்தியையும் சொல்லியிருக்கின்றனர்.

‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.’ (திருக்குறள். அறத்துப்பால். 322)

(பொருள்: அறநூலார் தொகுத்த அறங்கள் எல்லாவற்றிலும் தலையான அறம் எது தெரியுமா? இருப்பதை பகிர்ந்து உண்டு பல உயிர்களையும் பாதுகாத்தல் தான்.)


திருவள்ளுவர், பசியால் வாடும் பல ‘மனிதர்களுக்கும்’ உணவளிப்பது அறம் எனச் சொல்லி நிறுத்தவில்லை. பல ‘உயிர்களுக்கும்’ பகுத்துண்டு வாழ்வதே அறம் என்கிறார்.


அப்படிப் பகுத்துண்டு வாழ்வதற்கு எளிய வழியை இராமலிங்க அடிகளார் எடுத்துக்கூறுகிறார். ‘அருட்பெருஞ் ஜோதி, தனிப்பெருங் கருணை’ என்று தெளிவு படுத்திய வள்ளலார், மனதில் சுரக்க வேண்டிய கருணையை, தயவை, இரக்கத்தை, பரிவை முதன்மைப் படுத்துகிறார். ஆகவேத் தான் அவர் ‘மனித நேயம்’ என்பதைத் தாண்டி ‘ஜீவ காருண்யம்’ (உயிர்மநேயம்) என்பதை வலியுறுத்தினார்.

அப்பா நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்

ஆருயிர்க்கெலாம் அன்பு செய்தல் வேண்டும்.’ (திருவருட்பா -2. ஆறாம் திருமுறை. 21ம் பதிகம்)

என்றும்

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்

தம் உயிர் போல் எண்ணி உள்ளே

ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்

யாவர் அவர் உளந்தான் சுத்த

சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்

இடம் என நான் தெரிந்தேன் அந்த

வித்தகர் தம் அடிக்கேவல் புரிந்திட என்

சிந்தை மிக விழைந்த தாலோ! (திருவருட்பா - 5298)

(பொருள்; உயிர்களிடத்துச் சிறு வேற்றுமை உணர்ச்சியுமின்றி எல்லா உயிர்களையும் தம்முயிர்போல எண்ணி மனமுவந்து அருள் புரியும் உரிமை தமக்கு உண்டென்னும் உணர்வை உடையவராய் மகிழ்கின்றவர் யாவரோ அவருடைய மனமே சுத்த ஞான உருவாய் எங்கள் சிவபெருமான் திருக்கூத் தியற்றும் ஞான சபையாகிய இடம் என்று நான் தெரிந்து கொண்டேன்; ஆதலால் அந்த ஞானவான்களின் திருவடிக்கு அடித்தொண்டு புரிதற்கு என் சிந்தை மிகவும் விரும்புகின்றது.)


என்றும்


‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்

வாடினேன் பசியினால் இளைத்தே

வீடு தோறிரந்தும் பசியறாது அயர்ந்த

வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்.’

(பொருள்: தண்ணீரின்றி வாட்டமுற்ற பயிர்களைக் கண்ட போதும், பசியால் மேனி மெலிந்து, வீடு தோறும் சென்று இரப்போரையும் கண்டு மிக வருந்தி நொந்தேன்.)


என்றும் வள்ளலார் பாடுகிறார்.

ஆம். வாடும் பயிரைக் கண்டு வாடு. வருந்தும் உயிரைக் கண்டு வருந்து, என சக மனிதர்களைப் பற்றியும் கவலைப்படச் சொன்னது தமிழ் அறம். மனிதர்களும் வாழ்கிறார்கள். மனிதர்களும் இந்த இயற்கை பன்மயத்தின் ஒரு பகுதி. மனிதர்களுக்குள்ளும் பல வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குள் வேற்றுமை காணலாமா? உயர்வு தாழ்வு பாராட்டலாமா? தமிழர்கள் எல்லா ஊரையும் தம் ஊராகவும், எல்லா மனிதர்களையும் தங்கள் உறவினர்களாகவும் பாவித்தனர்.

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று கணியன் பூங்குன்றனார் பாடி வைத்தார். என் உயிர், என் உடல், என் குடும்பம், என் சுற்றம், என் வீடு என்பதல்ல, மாறாக எல்லா ஊரும் எம் ஊரே. எல்லா மக்களும் நம் மக்களே!

என்ன உயர் சிந்தனை!


பல ஞானிகள், மனித குலத்திற்கு வழிகாட்டியிருக்கிறார்கள். ஆவர்கள் மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தவேண்டியதன் அவசியத்தைக் கூறியுள்ளனர். ஆனால் உலகில் உள்ள உயிரினப் பன்மயத்தை மையப்படுத்தி, அவற்றோடு இயைந்து வாழ்ந்து, காப்பாற்றி, வாழ்வை அமைத்தது தான் தமிழ் அறத்தின் சிறப்பு.


இன்னும் சில சங்க இலக்கிய காட்சிகளை உய்த்துணரலாம்.

பூத்த பொங்கர்த் துணையொடு வதிந்த

தாதூண் பறவை பேதுறல் அஞ்சி மணிநா ஆர்த்த

மாண்வினைத் தேரன்’ - (அகநானுறு - 4: 10-12)


கார்காலம் வரும்போது வருவேன்என்று சொல்லிவிட்டு, பணம் ஈட்ட வெளியூர் சென்ற தலைவன், இன்னும் வீடு திரும்பவில்லை. கார்காலம் நேற்று துவங்கிவிட்டது. தலைவி கவலைப்படுகிறாள். தோழி ஆற்றுப்படுத்துகிறாள். இது தான் அகநானூற்றுப் பாடல்.

தலைவியே! கவலைப்படாதே. மலர்கள் அரும்பத்துவங்கிவிட்டன. வானில் மேகங்கள் திரண்டுவிட்டன. மழை பெய்யத் துவங்கிவிட்டது. பள்ளத்தில் நிறையும் நீரை மான்கள் குடிக்கின்றன. மக்கள் விழாக்கோலம் பூண்டு கார்காலத்தை கொண்டாடத் துவங்கிவிட்டனர். தலைவனுக்கு உன் நினைவு வந்திருக்கும். தேரைப்பூட்டி வந்து கொண்டிருப்பான்.

வருகிற வழியில் பூஞ்சோலை இருக்கும். அங்கே தேன் உண்டு விட்டு தேன்வண்டுகள், பொங்கர்பூவில் தன் இணையோடு இன்பமாக உறங்கிக்கொண்டிருக்கும். உன் காதலன் எப்படிப்பட்டவன் தெரியுமா? காதலில் திளைத்துக்கொண்டிருக்கும் தேன்சிட்டுகள், தன் தேரில் அழகுக்காக கட்டப்பட்டுள்ள மணிகளின் ஓசைக் கேட்டு பயந்துவிடக்கூடாது என்று, மணிகளின் நாக்குகளை கட்டிவைப்பவன்.


அப்படிப்பட்ட உயிர்நேயன். வண்டுகளை வாட விடாதவன், வண்டு விழியாளை வாட விடுவானா? கவலைப்படாதே! விரைவில் வந்துவிடுவான்.’ எனத் தோழி சொல்வதாக குறுங்குடி மருதனார் எழுதிய அகநானூற்றுப் பாடல்.


சிறுபாணாற்றுப்படையில் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடல்.

‘வானம் வாய்த்த வளமலைக் கவாஅன்

கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய

அருந்திறல் அணங்கின் அவியர் பெருமகன்

பெருங்கல் நாடன் பேகன்’ (சிறுபாணாற்றுப் படை: 85-87)

(பொருள்: மழை வளம் வாய்ந்த மலைநாட்டுக்குச் சொந்தக்காரன். மயில் அகவ, குளிரால் வருந்திக் கூவுவதாக்க் கருதி போர்வைத் தந்தான் பேகன்.)


பேகன், மழை வளம் வாய்ந்த மலைநாட்டைச் சேர்ந்த சிற்றரசன். ஒரு தடவை பேகன் மலையில் நடந்து போய்க்கொண்டிருக்கிறான். ஒரு மயில் அகவுகிறது. அது குளிரால் வருந்திக் கூவுகிறது. உடனே பேகன் தான் போர்த்தியிருந்து போர்வையை எடுத்து மயிலுக்குப் போர்த்துகிறான். பேகனின் கொடை உணர்வு அப்படி!

ஆவின் கடைமணி நெஞ்சு சுடத்தன்

அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்’ என்ற, பசுவின் கன்றுக்காக, தன் மகனை இழந்த மனுநீதிச் சோழன் போல்,


கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித்து ஓரிஇத்

தன்னகம் புக்க குறுநடைப் புறவின்

தபுதி அஞ்சிச் சீரை புக்க

வரையா ஈகை உரவோன் மருக’ என்ற, புறாவின் துயர்நீக்க, தன் சதையை கொடுத்த மன்னன் போல, பாரியைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.


முதலில் பாடல்.

‘…… சுரும்பு உண

நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச்

சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய

பிறங்கு வெள்ளருவி விழும் சாரல்

பறம்பின் கோமான் பாரி’ (சிறுபாணாற்றுப் படை: 89-91)

(பொருள்: அருவிகள் விழும் வளம் பொருந்திய பறம்பு மலைக்குத் தலைவன். சுரபுன்னையும் முல்லைக் கொடிகளும் உடைய மலை. அங்கே வண்டுகள் உண்ணும்படி தேன் தருகிற சிறிய மலர்களை உடைய முல்லைக்கொடி கொழுகொம்பு இன்றிப் படரத் தவித்த்து கண்டு தன் பெரிய தேரினை அளித்தான் பாரி.)


பாரி பறம்பு மலைக்குத் தலைவன். அருவிகள் விழும் வளம் பொருந்திய மலை அது. ஒரு நாள் பாரி தேரில் போய்கொண்டு இருக்கிறான். வண்டுகள் உண்ணும் படி, தேன் பிலிற்றுகின்ற சிறிய மலர்களை உடைய ஒரு முல்லைக்கொடி கொழு கொம்பு இன்றி படரத் தவிப்பதைப் பார்க்கிறான். பாரியின் உள்ளம் பதை பதைக்கிறது. உடனே தன் தேரை விட்டு இறங்குகிறான். முல்லைக்கொடிக்கு அருகே தேரை நிறுத்தி, கொடியை எடுத்து தேரில் மேல் சாத்திவிட்டு, நடந்தே தன் அரண்மனை செல்கிறான்.


பாரியின் உயிர்மய நேயம் அப்படி.

காரியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

‘…….. கறங்குமணி

வால்உளைப் புரவியொடு வையகம் மருள

ஈர நன்மொழி இரவலர்க்கு ஈந்த

அழல் திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல்

கழல்தொடித் தடக்கைக் காரி’ (சிறுபாணாற்றுப் படை: 93-95)

(பொருள்: வீரக் கழலும் தொடியும் அணிந்த பெரிய கைகளை உடையவன். நெருப்பு போன்ற சினம் கொண்டவன். பகைவர் அஞ்சும் வேல் வைத்திருப்பவன். இனிய மொழி பேசி, ஒலிக்கும் மணியும் பிடரி மயிரும் உடைய குதிரையோடு பெரும் பொருட்களை தானமாக அளிப்பவன் காரி.)


காரி ஓர் சிற்றரசன். அவனுக்கு மலையமான் எனவும் ஒரு பெயர் உண்டு. ஒரு நாள் அவனது அரசவையில் அமர்ந்திருக்கிறான். வறுமையில் வாடும் ஏழை ஒருவன் இரந்து நிற்கிறான். காரிக்கு உள்ளம் துடிக்கிறது. ஏழையைக் கண்டு மனமிரங்கியது மட்டுமல்ல, தன் சிம்மாசனத்திலிருந்து இரங்கி, ஓடோடி வந்து, அந்த ஏழையின் தோளைத் தொடுகிறான். மனதில் ஈரத்தில் முளைத்த நன்மொழிகளை ஆறுதலாகப் பேசுகிறான். பொன்னையும் பொருளையும் கொடுக்கிறான். ‘இப்படியும் ஈக முடியுமா?’ என உலகம் மருள தன் குதிரையை கொடையாக கொடுக்கிறான். இப்படி பல நாட்கள் நடக்கின்றன.


காரியின் கருணை உள்ளம் அப்படி.


அதியமானைப் பற்றி உங்களுக்குத் தெரிய அதிக வாய்ப்புண்டு.


‘…….மால்வரைக்

கமழ்பூஞ் சாரல் கவினிய நெல்லி

அமிழ்து விளை தீங்கனி ஔவைக்கு ஈந்த

உரவுச்சினம் கனலும் ஒளிதிகழ் நெடுவேல்

அரவக்கடல் தானை அதிகன்’ (சிறுபாணாற்றுப்படை: 101-103)

(பொருள்: கொற்றவையின் கோபம் திகழும் நீண்ட வேல் உடையவன். ஆரவாரமிக்க கடல் போன்ற படை கொண்டவன். மலர்களின் மணம் கமழும் மலையில் விளைந்த, நீண்ட நாள் வாழும் தகைமைக் கொண்ட நெல்லிக்கனியை, தான் உண்டு நீண்ட நாள் வாழலாம் என்று எண்ணாது, ஔவைக்கு கொடுத்தவன் அதியமான்.)


அதியமான் வேட்டையாடச் சென்றான். மலைச்சாரலில், மருத்துவக் குணம் உள்ள ஒரு நெல்லிக்கனி கிடைக்கிறது. அதை உண்டால் நீண்ட நாள் வாழலாம் என்கிற அற்புதக் கனி அது. அதை ஔவையாருக்கு கொடுத்து மகிழ்கிறான்.


அதியமானின் அகண்ட இதயம் அப்படி.


பேகனுக்கு மயில்!

பாரிக்கு முல்லை!!

காரிக்கு ஏழை!

அதியமானுக்கு ஔவை!

பறவையோ, தாவரமோ, மனிதரோ, மற்றவையோ அனைத்தையும் அன்பு செய். இரக்கப்படு. கருணை காட்டு. பாசம் கொள். பரிவு புரி. என்று தமிழர்கள் சொல்லியது மட்டுமல்ல. தங்கள் வாழ்க்கை நெறியாக வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். கோயில்கள், சடங்குகள் என்று சிக்கிக் கொள்ளாமல், கண் முன்னால் நடமாடும் உயிர்களுக்கு ஈந்தால், அந்த பர இறைக்கே ஈந்த மாதிரி என்று திருமூலர் கூறுகிறார்.

‘படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்

நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா;

நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்

படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே.’ (திருமந்திரம். 1857)

(பொருள்: படம்போல எழுப்பி வைத்திருக்கிற மாடக் கோயிலின் இறைவனுக்கு ஒன்றைக் கொடுத்தால், அது நடமாடுகிற கோயிலாகிய நம்மவர்களுக்குப் போய்ச் சேராது. ஆனால் நடமாடுகிற கோயிலாகிய நம்மவர்களுக்கு ஒன்று கொடுத்தால், அது படமாடக் கோயிலின் இறைவனுக்கு மிக உறுதியாய்ப் போய்ச் சேரும்.)


உயிர் மேல் கொண்ட பரிவு, வறியோரின் பசி தீர்க்கும் என்று மணிமேகலை கூறுகிறது.


குடிப்பிறப்பு அழிக்கும்; விழப்பம் கொல்லும்

பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉம்;

நாண்அணி களையும்; மாண்எழில் சிதைக்கும்;

பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்

பசிப்பிணி என்னும் பாவி! அது தீர்த்தோர்

இசைச்சொல் அளவைக்கு என் நா நிமிராது.’ (மணிமேகலை. 11: 76-81)

(பொருள்: பசிப் பிணி என்னும் பாவி என்ன செய்யும்? ஒருவருடைய குடிப் பிறப்பை அழிக்கும்; தனிச் சிறப்புகளை ஒழிக்கும்; கற்றவற்றையெல்லாம் கைவிடச் செய்யும்; வெட்கத்தை விரட்டும்; மாண்பைச் சீர்குலைக்கும். மாதர் முன் மானம் கெடுக்கும். ஆகவே, ஒருவரின் பசியைத் தீர்த்தவர்களின் புகழைச் சொல்வதற்கு என் நாக்குக்குத் தெம்பு கிடையாது என்கிறது மணிமேகலை)


ஆகவே, உயிர்மய நேயமே இயற்கை வாழ்வியலின் மையம்.


சரி! இதுவரை என்னென்ன கோட்பாடுகளைக் கற்றோம்?


1. தோழமை: தமிழர்கள் இவ்வுலகைக் கண்டு பயப்படவில்லை. யாரோ ஒருவர் படைத்தார் என்றும், புண்ணியம் செய்தால் சொர்க்கம், பாவம் செய்தால் நரகம் என்றும் பார்க்கவில்லை. மாறாக, தோழமையுடன் பார்த்தார்கள். ஐம்பூதங்களின் கலவை என்று பார்த்தார்கள்.

2. உயிரினப் பன்மயம்: அதனால் மனிதர்கள் இயற்கையின் மையம் என்றோ, தனக்காகப் படைத்தவற்றை ஆண்டு அனுபவிக்க வேண்டும் என்றோ கருதவில்லை. இயற்கையில் உள்ள பல்வேறு உயிர்களின் இருப்பை உணர்ந்திருந்தார்கள்.

3. உறவாண்மை: அந்த பல்லின உயிர்கள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து இருக்கின்றன. இயற்கை ஒரு வலைப் பின்னல். ஒரு பெரும் சுழற்சி என்பதை அறிந்திருந்தார்கள்.

4. சமநிலை: ஒன்றோடு ஒன்று உறவாடும் பல்லுயிர் மத்தியில் ஒரு சமநிலை இருந்து வருகிறது என்பதை அறிந்திருந்தார்கள்.

5. உயிர்ம நேயம்: பல்லின உயிர்களின் இருப்பையும், அதன் வலைப்பின்னலையும், மையத்தில் உள்ள சமநிலையையும் உணர்வதோடு மட்டுமின்றி, எல்லா உயிரினங்களையும் நேயத்தோடு அணுக வேண்டும் என்றும் கருதினார்கள். ஏற்றத் தாழ்வு பாராது, எல்லா உயிரினங்களையும் பரிவோடு பார்த்து வாழ விரும்பினார்கள்.

சரி! தொடர்வோம்.

19 views0 comments

Comments


bottom of page