ஓர் ஊரில் ஒரு ஞானி இருந்தார். அவரிடம் நிறைய சீடர்கள் இருந்தார்கள். விஷ்ணு ரதன் என்கிற சீடரும் அவரிடம் இருந்தார்.
ஒரு நாள் சில சீடர்கள் குருவிடம் வந்தார்கள்.
“ குருவே! உங்களிடம் பேசவேண்டும்.”
“ சொல்லுங்கள்…”
“ குருவே! விஷ்ணுரதன் என்கிற சீடர், எங்கள் உடமைகள் சிலவற்றை, அவ்வப்போது திருடிவிடுகிறார். அவரைக் கண்டித்துவையுங்கள்” என்று சொன்னார்கள்.
சில நாட்கள் கடந்தன. குரு விஷ்ணுரதனைக் கண்டித்தது போலத் தெரியவில்லை. அவர் அதைக் கண்டு கொள்ளவேயில்லை.
ஒரு நாள். அதே சீடர்கள் குருவிடம் வந்தார்கள்.
“ குருவே! உங்களிடம் பேசவேண்டும்.”
“ சொல்லுங்கள்…”
“ குருவே! இதோ பாருங்கள். விஷ்ணுரதனை கையும் களவுமாகப் பிடித்துவிட்டோம். இதோ சாட்சி. இதோ அவர் திருடியப் பொருள். அவரை உடனடியாக மடத்தை விட்டு வெளியேற்றுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்கள்.
சில நாட்கள் கடந்தன். குரு விஷ்ணுரதனைக் கண்டித்ததாகத் தெரியவில்லை. அவரை மடத்தை விட்டும் வெளியேற்றவில்லை. மற்ற சீடர்களுக்கு அது கவலையையும் எரிச்சலையும் தந்தது.
ஒரு நாள். அந்த சீடர்கள் எல்லோரும் கூடினார்கள்.
“ குருவிடம் முறையிட்டோம். அவர் கண்டுக்கொள்ளவில்லை. பிறகு கையும் களவுமாகப் பிடித்து முறையிட்டோம். குரு அவரை வெளியேற்றவில்லை. வாருங்கள். அவரை வெளியேற்றாவிட்டால், நாமெல்லோரும் வெளியேறுவோம் என குருவிடம் சொல்வோம்” என்று சொல்லி அவ்வாறே குருவிடம் முறையிட்டார்கள். இந்த தடவையும் குரு கேட்டுக்கொண்டாரே தவிர, விஷ்ணுரதனை வெளியேற்றவில்லை.
சில நாட்கள் கழிந்ததும், மற்ற எல்லா சீடர்களும் மடத்தை விட்டு வெளியேற முடிவு செய்து குருவைச் சந்தித்தார்கள். விஷ்ணுரதன் என்கிற சீடரும் அங்கு இருந்தார். அப்பொழுது குரு பேசினார்.
“ என் அருமைக்குரிய சீடர்களே! நீங்கள் அனைவரும் நல்லது எது கெட்டது எது என்று அறிந்து உள்ளீர்கள். ஆனால் விஷ்ணுரதனுக்கு அது தெரியவில்லை. ஒரு குரு யாருக்குத் தேவை? நல்லது கெட்டது தெரிந்தவர்களுக்கா? அல்லது தெரியாதவர்களுக்கா? நீங்கள் மடத்தை விட்டு வெளியே போனாலும், ஒழுக்கமாக நடத்துக் கொள்வீர்கள். ஆனால் அவர்? அதனால் அவர் மடத்தில் நம்மோடு இருப்பதே அவருக்கு நல்லது” என்றார்.
குரு பேசிக்கொண்டிருக்கும் போதே, விஷ்ணுரதனின் கண்களில் நீர் வழிந்தது. தன் தவறைப் புரிந்துக்கொண்டார். மன்னிப்புக் கேட்டார். இனி அந்தத் தவறை செய்யமாட்டேன் என உறுதி கூறினார். மற்ற சீடர்களும், நோயாளிக்கே மருத்துவர் மிகத் தேவை என்பதை குரு நமக்கு விளக்கிவிட்டார் என்று புரிந்துக் கொண்டனர்.
*****
Comments