top of page
Writer's pictureJohn B. Parisutham

கதை 5 - பாண்டியன் கற்றுக்கொண்ட வெற்றிப்பாடம்

Updated: Jul 12, 2021

‘பாண்டியா! ஞாபகம் இருக்கா? பொங்கல் விழா வருது. நீ ஆயத்தமா இருக்கியா?’ பாண்டியனின் பாட்டி கேட்டாள். பாட்டிக்கு கால் அமுக்கி விட்டுக் கொண்டிருந்த பாண்டியன் சிரித்துக் கொண்டே சொன்னான். ‘ஞாபகம் இருக்கு பாட்டி. ஓட்டப் பந்தயம் தானே! ரெடியா இருக்கேன். எப்ப ஒடுனாலும் நான் தான் முதல்ல வருவேன்.’

பாண்டியனின் பாட்டி அந்த ஊரில் ரொம்ப பிரசித்தம். எல்லோருக்கும் நல்லது கெட்டது சொல்லக்கூடிய அறிவுள்ள பாட்டி. பாண்டியன், சிறு வயதிலேயே மிகவும் கெட்டிக்காரனாக இருந்தான். எதிலும் வெற்றி பெற வேண்டும் என்கிற ஆவல் எப்பொழுதும் அவனுக்கு இருக்கும். ஊரில் நடைபெறவிருந்த பொங்கல் விழாவிற்காக காத்திருந்தான்.

பொங்கல் விழாவும் வந்தது. ஊரே கொண்டாட்டமா இருந்தது.

‘ஓட்டப்பந்தயத்தில கலந்துக்க விருப்பமுள்ளவங்க வந்து பேரு குடுங்க.’ என்று அறிவிப்பு வந்ததும், பாண்டியன் ஓடிச் சென்று தன் பெயரைக் கொடுத்தான். ஓட்டப்பந்தயம் ஓடுவதற்கு தோதுவாக மைதானம் தயாராய் இருந்தது. ஏழெட்டு சிறுவர்கள் ஓடுவதற்காக கோட்டில் நின்றார்கள். பார்வையாளர்கள் பலர் உட்காருவதற்கு வசதியாக கூரைப் போடப்பட்டிருந்தது. பாட்டி அந்தக் கூரைக்கடியில் உட்கார்ந்துக் கொண்டார்.

’15 வயதிற்குட்ட சிறுவர்களுக்கான ஓட்டப் பந்தயம் இப்பொழுது நடைபெறப் போகிறது.’ என்ற அறிவிப்பு வந்தது. யாரோ விசில் ஊதினார்கள். சிறுவர்கள் ஓடத்தொடங்கினார்கள். கூட்டத்தினர் உற்சாகக் குரல் எழுப்பினார்கள்.

பாண்டியன் கருமமே கண்ணாக ஓடினான். வெற்றி நிலையில் இருந்த கயிறு மட்டும் தான் அவன் கண்களுக்குத் தெரிந்தது. பாட்டி பார்த்துக் கொண்டே இருந்தார். பாண்டியன் ஓடி முதல் நிலைக்கு வந்துவிட்டான்.

ஊரே கை தட்டியது. ஆரவாரித்தது. பாண்டியன் பூரிப்பானான்.

‘எல்லோரும் என்னைப் பார்த்து கையசைக்கிறாங்க. வாழ்த்துச் சொல்றாங்க.’ என நினைத்து மனம் குளிர்ந்து மகிழ்ச்சியின் உச்சிக்கேப் போனான். வெற்றிக் கோட்டிலிருந்து பாட்டியைப் பார்த்தான். ம்ஹீம். பாட்டி சிரிக்கவில்லை. கை தட்டவில்லை.

‘ இந்த பாட்டிக்கு என்ன ஆச்சு? நான் கஷ்டப்பட்டு ஓடி முதலில் வந்தேன். எல்லோரும் என்னை பாராட்டுகிறார்கள். இந்தப் பாட்டி பேசாமல் உட்கார்ந்திருக்கிறார்களே!’ கொஞ்சம் கோவம் வந்தது பாண்டியனுக்கு.

இந்த வெற்றியை இன்னும் சுவைக்க ஆசையாயிருந்து பாண்டியனுக்கு. போட்டி நடத்துபவர்களிடம் கேட்டான். ‘ நான் மறுபடியும் ஓடுகிறேன். என்னோடு ஓட வேறு யார் வருகிறார் எனக் கேளுங்கள்’ எனக் கேட்டான். கூட்டமும் அதையே அமோதித்தது. இன்னொரு போட்டி வைக்க வலியுறுத்தியது.

‘பாண்டியனோடு ஓட வேறு யாரும் தயாரா இருக்கீங்களா? பாண்டியனை உங்களால் வெல்ல முடியுமா?’ அறிவிப்பு வந்ததும் வேறு சிலர் போட்டிக்குத் தயாராய் வந்தார்கள்.

இரண்டாவது தடவையாக ஓட்டப் போட்டி நடந்தது.

இப்பொழுதும் பாண்டியன் கூர்மையான கவனத்தோடு ஓடினான். முதல் இடத்தை மறுபடியும் பிடிப்பதுதான் அவனது ஒரே இலக்காக இருந்தது. கொஞ்சம் சிரமப்பட்டாலும் கஷ்டப்பட்டு ஓடினான். முதல் இடத்தைப் பிடித்தான்.

இந்தத் தடவை கைதட்டல் ஒலி காதைப் பிளந்தது. ஆரவாரம் அமர்க்களமானது.

‘பாண்டியா! நீ சிறந்த விளையாட்டு வீரன். நீ ஒரு வெற்றியாளன்.’ என பாராட்டுகள் குவிந்தன.

பாட்டியைப் பார்த்தான். என்ன இது? ஏன் பாட்டி முகத்தில் ஈயாடவில்லை. ஒரு புன்னகை கூட இல்லை. என்ன ஆச்சு இந்தப் பாட்டிக்கு?

பாண்டியன் இதையெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, பாட்டி ஓடு தளத்திற்கு வந்தார். ஆரம்பக்கோட்டில் ஒரு வயதான முதியவரையும், கண் பார்வையற்ற ஒரு பெண்மணியையும் நிறுத்தினார். போட்டி நடத்துபவர்களிடம் சிறப்பு அனுமதி கேட்டுக் கொண்டார்.

‘ பாண்டியா! இங்க வா. இதோ இரண்டு பேரை நிறுத்தி இருக்கிறேன். இவர்களோடு ஓடி உன் திறமையைக் காண்பி’ என்றார் பாட்டி.

‘ இது என்ன பந்தயம்? முட்டாள் தனமாக இருக்கு. அவரு ஒரு தாத்தா. இவங்களுக்கு கண்ணு தெரியாது. நியாயமா இல்லையே!’ பாண்டியன் கேட்டான்.

‘ அது பரவாயில்லை. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால், நீ சிறந்தவன் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.’ என்று பாட்டி பிடிவாதமாக இருந்தாள்.

‘சரி! இது எனக்கு எளிது’ என்று சொல்லிவிட்டு, அந்த வயதான தாத்தாவோடும், கண்ணு தெரியாத பாட்டியோடும், துவக்கக் கோட்டில் போய் நின்றான்.

‘ ஒன்று, இரண்டு, மூன்று’ என்றதும் பாண்டியன், பின்னே திரும்பிப் பார்க்காமல் கூட ஓடினான். வெற்றிக் கோட்டைத் தொட்டுவிட்டு திரும்பிப் பார்த்தான். வயதான முதியவரும், கண் பார்வையற்ற அந்தப் பெண்மணியும் துவக்கக் கோட்டிலேயே நின்று கொண்டிருந்தார்கள்.

மயான அமைதி. ஊர் மக்கள் கைத் தட்டவில்லை.

பாண்டியன் இரண்டு கைகளையும் தூக்கி, ‘வெற்றி, வெற்றி’ என்றான். ஆனால் ஊர் மக்கள் அமைதி காத்தனர். பாண்டியனுக்கு ஒன்றும் புரியவில்லை.

‘பாண்டியா! இங்க வா.’ பாண்டியன் துவக்கக் கோட்டிற்கு வந்தான்.

பாட்டி பாண்டியன் காதில் ஏதோ சொன்னார்.

பாண்டியன், வயது முதிர்ந்தவரின் கையையும், பார்வையற்றவர் கையையும் பிடித்துக் கொண்டு, மெதுவாக நடந்து இறுதிக் கோட்டை அடைந்தான்.

ஊர்மக்கள் கைதட்டினர். ஆரவாரம் செய்தனர். பாண்டியனைத் தூக்கிவைத்துக் கொண்டாடினர்.

அப்பொழுது பாட்டி சிரித்துக் கொண்டேச் சொன்னார்.

‘ நாம் தனியாகச் சாதிப்பது வெற்றிதான். நீ முதல் இரண்டு தடவை செய்தது மாதிரி. ஆனால் நம் கூட இருப்பவர்களோடு இணைந்து சாதிப்பது தான் நிஜ வெற்றி. பெரு வெற்றி. நீ இப்பொழுது செய்தது மாதிரி’

பாண்டியன் புரிந்துக் கொண்டான்.

*****

படிப்பினை: வெற்றி, சாதனை, கூட்டு செயல்பாடு, கூட்டு வெற்றி, குழு செயல்பாடு, எழுதியவர்: ஜான் பி. பரிசுத்தம்

8 views0 comments

תגובות


bottom of page