ஓர் ஊர்ல ஒரு ராஜா இருந்தார். அவருக்குத் தன்னை ஓர் ஓவியமாக வரைந்து வைத்துக் கொள்ள ஆசைப்பட்டார். அந்த ஊரில் குமரேசன் என்ற ஓவியன் இருந்தான். அவனை அரண்மனைக்கு வரச் சொல்லி உத்தரவு வந்தது. குமரேசனுக்கு மிகுந்த மகிழ்ச்சி.
குமரேசன் தன் மனைவியிடம், ‘அரும்பு! அரண்மனைக்குப் போய் வாரேன்’ னு சொல்லிட்டு கிளம்பினான்.
***
அரண்மனையில் அரசனைச் சந்தித்தான்.
‘நீர் திறமையான ஓவியர் என்று கேள்விப்பட்டோம். என்னை வரைந்து தரமுடியுமா?’
‘அது என் பாக்கியம் அரசே!’
மகிழ்ச்சியுடன் வெளியே கிளம்பினான் குமரேசன். வாயிலில் நின்றிருந்த ஒரு சேவகன் மற்றொரு சேவகனிடம், ‘இவருக்கு எத்தனை கசையடிகளோ, எத்தனை வருட சிறைத்தண்டனைகளோ’ எனச் சொன்னான்.
குமரேசனுக்கு அவன் சொன்னது காதில் விழுந்து விட்டது.
‘என்ன சொல்கிறீர்கள்?’ எனக் கேட்டான். அதற்கு அந்த சேவகன்,
‘போன மாசம் ஓர் ஓவியர் வந்தார். அவர் ராஜாவை அப்படியே அச்சு அசலாக வரைந்துக் கொடுத்தார். அவருக்கு நூறு கசையடிகளும் இரண்டு ஆண்டு சிறைத் தண்டனையும் கிடைத்தது’ என்றான்.
‘ஏன்?’
‘நம்ம ராஜாவுக்கு ஒரு கண் குருடல்லவா! அதை அப்படியே தத்ரூபமாக வரைந்திருந்தார். என்ன ஆணவம் உனக்கு! நான் குருடன் என எல்லோரும் எள்ளி நகையாடட்டும் என இப்படி வரைந்திருக்கிறாயா? என அரசர் சொல்லி அந்தத் தண்டனைக் கொடுத்தார்.’
‘ஐயோ! அப்படியா?’
இன்னொரு சேவகன் தொடர்ந்தான்.
‘அது மட்டுமா! அப்புறம் ஓர் ஓவியர் வந்தார். முன்னால் நடந்ததைக் கேள்விப்பட்டு இரண்டு கண்களும் நன்கு தெரிவதைப் போல வரைந்துக் கொடுத்தார்.’
‘அரசர் மகிழ்ச்சி அடைந்தாரா?’
‘எங்கே! அவருக்கும் தண்டனை தான். இப்பொழுது இருநூறு கசையடிகள். நான்கு ஆண்டுகள் சிறை.’
‘ஏன்?’
‘என்னை வரைந்துக் கொடுக்கச் சொன்னால், யாரையோ வரைந்துக் கொடுக்கிறாயே. எனக்கு இரண்டு கண்களும் இருக்கிறதா? என அரசர் திட்டிவிட்டார்.’
‘ஐயோ! அப்பறம் எப்படித்தான் வரைவது?’
‘அதான் தங்களுக்கு எத்தனை கசையடிகளோ சிறைவாசமோ எனச் சொன்னோம்.’
***
குமரேசன் வீடு திரும்பினான். அரும்பு ஓடி வந்து,
‘அரசரைப் பார்த்தீர்களா? ஓவியம் வரையச் சொன்னாரா? எவ்வளவு வெகுமதி தருவதாகச் சொன்னார்?’ என ஆர்வமுடன் கேட்டாள். குமரேசன் தொங்கிய தலையோடு வாடிய முகத்தோடு இருப்பதைப் பார்த்தாள்.
‘ஏன் சோகமாக இருக்கிறீர்கள்?’
குமரேசன் சேவகர்கள் சொன்னதை எல்லாம் சொன்னான். அரும்பு சிந்தனையில் ஆழ்ந்தாள். சற்று நேரத்திற்குப் பிறகு,’கவலையை விடுங்கள். எனக்கு ஒரு யோசனை வருகிறது. இப்படி செய்யலாமா?’
இருவரும் கலந்தாலோசித்தார்கள். ஒரு முடிவுக்கு வந்தார்கள்.
***
குமரேசன் அரண்மனைக்குச் சென்று அரசரை நிற்க வைத்து வரைந்தான். கொஞ்சம் கொஞ்சமாக ஓவியம் உயிர் பெற்று வந்தது. சில நாட்களுக்குப் பிறகு ஓவியத்தை தன் வீட்டிற்கு எடுத்துச் சென்று கடைசிக் கட்ட வேலைகளை முடித்து, இன்னும் ஒரு வாரத்தில் தருவதாக, அரசரிடம் சொல்லிவிட்டு, ஓவியத்தை தன் வீட்டிற்கு எடுத்துச் சென்றான் குமரேசன்.
ஒரு வாரம் முடிந்தது. அரண்மனையிலிருந்து ஆட்கள் வந்தார்கள்.
‘ஓவியம் முடிந்துவிட்டதா? இன்றைக்குத் தருவதாகச் சொல்லியிருந்தீர்களாமே. அரசர் கேட்டுவரச் சொன்னார்.
‘இதோ!’ எனச் சொல்லிவிட்டு, ஆள் உயர ஓவியம் ஒன்றை துணி போட்டு மூடி எடுத்துக் கொண்டு குமரேசன் அரண்மனைக்குக் கிளம்பினான்.
***
அரண்மனை.
அரசர், அரசி, மந்திரிகள், தளபதிகள், சேவகர்கள், சில பொதுமக்கள் என எல்லோரும் கூடியிருந்தார்கள். சில நாட்களுக்கு முன்பு குமரேசனிடம் பேசிய சேவகர்கள் இவனைப் பரிதாபமாகப் பார்த்தார்கள். ‘இவருக்கு எத்தனை கசையடிகளோ, எத்தனை வருட சிறைத்தண்டனைகளோ’ என்று அவர்கள் சொன்னது அசரீரீயாகக் கேட்டது.
ஓவியத்தை அரசரிடம் கொண்டு சென்றார்கள். அரசர் மட்டும் பார்க்குமாறு துணியைப் பிரித்து காண்பித்தார்கள். அரசர் பார்த்தார். எல்லோரும் அரசரையேப் பார்த்தார்கள். அரசர் ஓவியத்தையேப் பார்த்துக் கொண்டிருந்தார். வைத்த கண்ணை எடுக்கவேயில்லை. குமரேசனுக்கு என்ன தண்டனைக் கொடுக்கப் போகிறார் என எல்லோரும் காத்திருந்தார்கள்.
அரசர் கைதட்டி,
‘யாரங்கே! குமேரசருக்கு முத்து மாலையும் ஆயிரம் பொற்காசுகளும் சன்மானமாகக் கொடுங்கள்.’ என்றார்.
எல்லோருக்கும் ஓவியத்தைப் பார்க்கும் ஆவல் மிகுந்தது.
அரசர் தொடர்ந்து,
‘பலே! இது போன்ற திறமையை நான் பார்த்ததில்லை. அச்சு அசல் என்னைப் போலவை இருக்கிறது. குமரேசன் தான் ஒரு சிறந்து ஓவியர் என்று நிருபித்துவிட்டார்.’ என்று சொன்னதும் அவையில் எல்லோரும் ஓவியத்தை நாங்களும் பார்க்கிறோம், காண்பியுங்கள் எனக் கூச்சலிட்டார்கள்.
ஓவியம் திருப்பி எல்லோரும் பார்க்கும் வண்ணம் வைக்கப்பட்டது.
எல்லோரும் ஆச்சரியத்தில் உறைந்துப் போனார்கள்.
அரசர் ஒரு கண்ணை மூடி, இன்னொரு கண்ணால் குறிவைத்து, வில்லில் அம்பு பூட்டி மானை குறிவைப்பது போல ஓவியம் இருந்தது.
‘ஐயா குமரேசன் வாழ்க! ஐயா குமரேசன் வாழ்க!!’ என்கிற கோஷம் விண்ணைப் பிளந்தது.
குமரேசன் அரசரிடம் சென்று
‘அரசே! இந்தப் பெருமை என் மனைவி அரும்புக்கே சொந்தம். அவள் தான் இந்த கருத்தை எனக்குச் சொன்னாள்.’
அரும்பை அழைத்து கௌரவித்தார்கள். அந்த இரண்டு சேவகர்களும் குமரேசனைப் பார்த்து புன்முறவல் பூத்தார்கள்.
**********
படிப்பினை: அறிவு, படைப்பாற்றல் சிந்தனை, திறமை, கூட்டு சிந்தனை, பிரச்னைகளைத் தீர்த்தல் எழுதியவர்: ஜான் பிரிட்டோ பரிசுத்தம்
Commenti