ஓர் ஊர்ல ஓர் அப்பா அம்மாவுக்கு இரண்டு மகன்கள் இருந்தாங்க. இளங்கோவன் தம்பி. தென்னவன் அண்ணன். ஒரு நாள் அப்பா ரெண்டு பேரையும் அழைத்து,
‘ இரண்டு கிண்ணத்துல கேசரி இருக்கு. எடுத்துக்குங்க’ என்றார். இளங்கோவன் பார்த்தான். முதல் கிண்ணத்துல உள்ள கேசரி மேல ரெண்டு முந்திரி பருப்பு இருந்தது. இரண்டாவது கிண்ணத்துல உள்ள கேசரி மேல முந்திரி பருப்பு இல்ல.
இளங்கோவன், மேல இரண்டு முந்திரி பருப்பு உள்ள முதல் கிண்ணத்தை எடுத்துகிட்டான். தென்னவன், இரண்டாவது கிண்ணத்தை எடுத்துகிட்டான். சாப்பிடும் போது பாத்தா, இளங்கோவன் கேசரியில, மேல தான் முந்திரி பருப்பு இருந்தது. உள்ளே இல்ல. ஆனா தென்னவன் கிண்ணத்துல, மேல தான் இல்ல, ஆனா உள்ளே நிறைய முந்திரி பருப்புகள் இருந்தன. ஆஹா! ஏமாந்துட்டமே என இளங்கோவன் நினைத்தான். அதை அம்மா கவனித்தார். பிறகு அப்பாவும் அம்மாவும் சட்டியில் மீதி இருந்த கேசரியைச் சாப்பிட்டார்கள்.
ஒரு வாரம் கழிந்தது.
அதேப் போல அப்பா கேசரி சாப்பிட அழைத்தார். இப்பொழுதும் இரண்டு கிண்ணங்களில் கேசரி. அதேப் போல ஒரு கிண்ணத்தில் மேலே இரண்டு முந்திரி பருப்புகள் இருந்தன. மற்றொறு கிண்ணத்தில் உள்ள கேசரி மேலே முந்திரி பருப்புகள் இல்ல. இந்த முறை இளங்கோவன் ஏமாற விரும்பவில்லை. மேலே முந்திரி பருப்பு இல்லாத கிண்ணத்தை எடுத்தான். தென்னவன் மற்றொரு கிண்ணத்தை எடுத்துக் கொண்டான். என்ன ஆச்சரியம்! இளங்கோவன் எடுத்த கிண்ணத்தில் மேலேயும் முந்திரி பருப்பு இல்ல. உள்ளயும் இல்ல. ஆனால் தென்னவன் கிண்ணத்தில் மேலேயும் இருந்தன. உள்ளேயும் இருந்தன. ஆஹா! மறுபடியும் ஏமாந்துவிட்டோமே என இளங்கோவன் கோபமடைந்தான். அதை அம்மா கவனித்தார். பிறகு அப்பாவும் அம்மாவும் சட்டியில் மீதி இருந்த கேசரியைச் சாப்பிட்டார்கள்.
மறு வாரம் வந்தது.
அதேப் போல அப்பா கேசரி சாப்பிட அழைத்தார். இப்பொழுதும் இரண்டு கிண்ணங்களில் கேசரி. இரண்டு கிண்ணங்களில் உள்ள கேசரியிலும் மேலே இரண்டு முந்திரி பருப்புகள் இருந்தன. ஆனால் எந்தக் கிண்ணத்தில் கேசரிக்குள்ளே முந்திரி பருப்புகள் இருக்கின்றன எனத் தெரியவில்லை. இந்த தடவை இளங்கோவன் ஏமாற விரும்பவில்லை.
‘அப்பா! நீங்களே கிண்ணங்களைப் பிரித்துக் கொடுங்கள்.’ என்றான். அப்பா அவ்வாறே பிரித்துக் கொடுத்தார். இரண்டு கிண்ணங்களிலும் உள்ளே முந்திரி பருப்புகள் இல்லை. அம்மாவும் அப்பாவும் சட்டியில் இருந்த கேசரியைச் சாப்பிட்டனர். எல்லா முந்திரி பருப்புகளும் சட்டியில் இருந்தன. இளங்கோவனுக்கு ஏமாற்றம். கோபம். அதிருப்தி. அம்மா அதைக் கவனித்தார்.
அடுத்த வாரம்.
கேசரி வந்தது. இளங்கோவன் முந்திக் கொண்டான். ‘சட்டியை பொதுவில் வைப்போம். சமமாகப் பிரித்துக் கொள்வோம்’ என்றான்.
அப்பொழுது அம்மா சொன்னார்:
‘இளங்கோவா! முதல் தடவை கண்ணால் காண்பதை நம்பினாய். மேலோட்டமாக முடிவு செய்தாய். தவறாக முடிவெடுத்தாய். இரண்டாவது தடவை முன் அனுபவத்தை வைத்து நீயே ஒன்றை தீர்மானித்துக் கொண்டாய். முடிவு எடுத்தாய். ஏமாந்தாய். மூன்றாவது தடவை முடிவை மற்றவர்கள் கையில் கொடுத்துவிட்டாய். அவர்களுக்குச் சாதகமாக முடிவு எடுக்க வாய்ப்பைக் கொடுத்தாய். இப்பொழுது தான் சரியான முடிவெடுத்தாய்’
இளங்கோவனுக்கு மகிழ்ச்சி.
‘இனிமே காதுல விழற செய்திகளை வச்சி, அல்லது பாக்கற காட்சிகளை வச்சி, அவசரப்பட்டு முடிவு எடுக்க மாட்டேன். நான் எடுக்க வேண்டிய முடிவை நம்பிக்கையுரியவர்களிடம் மட்டும் ஆலோசனைக் கேட்பேன். ஆனால் கடைசியில் முடிவை நானே தீர ஆலோசிச்சு எடுப்பேன். ஒரு முடிவை எடுக்கும் போது, எல்லோருக்கும் பயனுள்ளதாக, எப்பொழுதும் பயனுள்ளதாக இருக்குமா என யோசித்து முடிவெடுப்பேன்’ என என இளங்கோவன் சொன்னான்.
*******************
படிப்பினை: முடிவெடுக்கும் கலை, கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், ஆலோசனை, தன் கையே தனக்கு உதவி, எல்லோருக்கும் பயன் எழுதியவர்: ஜான் பிரிட்டோ பரிசுத்தம்
Comentarios