ஒரு நாட்டுல ஒரு ராஜா இருந்தார். அவருக்குப் பிள்ளைகளே இல்லை. அடுத்த ராஜாவாக வாரிசு வேணுமே! நாடு முழுக்கத் தண்டோராப் போட்டார்கள்.
‘ டும்! டும்! டும்!. ….இதனால் சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால், அடுத்த ராஜாவாகிறதுக்கு இப்போ இளவரசரைத் தேர்ந்தெடுக்கப் போறாங்க. வர்ற பௌர்ணமியன்று அரண்மனையிலே நேர்காணல் இருக்கு. விருப்பப்படுற எல்லா இளைஞர்களும் கலந்துக்கலாம். டும்! டும்! டும்!. …. ’
நிறைய இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துக் கொள்ள முற்பட்டார்கள்.
நாட்டின் எல்லையில் ஒரு குக்கிராமம் இருந்தது. அங்கு வாழ்ந்து வந்த எழிலனுக்கும் அந்தச் செய்தி எட்டியது. தானும் கலந்து கொள்ள விரும்பினான். ஆனால் அரண்மனைக்குப் போகிற அளவுக்கு, சரியான உடை அவனிடம் இல்லை. அவ்வளவு தூரப் பயணத்திற்குத் தேவையான உணவுப் பொருட்களும் இல்லை.
‘ கடுமையா உழைப்போம். நன்கு சம்பாரிச்சு நல்ல உடையும் போதுமான உணவும் வாங்குவோம் ’ எனத் தீர்மானித்தான். அப்படியே கடுமையாக உழைத்து பட்டு வேட்டி, துண்டு போன்றவைகளையும் உணவுப் பொருட்களையும் தயார் செய்து கொண்டான். அரண்மனையை நோக்கி, பயணத்தைத் துவங்கினான்.
*****
வழியில் மக்கள், இளவரசரைத் தேர்ந்தெடுக்கும் நேர்காணலைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர்.
அரண்மனை வந்துவிட்டது.
வெளியே ஒரு பிச்சைக்காரரைப் பார்த்தான். பிச்சைக்காரரின் முகம் வாடியிருந்தது.
‘ ரொம்ப குளிருது! சாப்பிட்டு ரெண்டு நாளாகுது. பசிக்குது. ஏதாவது குடுங்க ஐயா! மகராசனா இருப்பீங்க’ ன்னு மெல்லிய குரலில் சொன்னார். எழிலன் நின்றான். ‘நம்மிடம் நல்ல உடை ஒன்று மட்டும் தானே இருக்கிறது. இதை இவரிடம் கொடுத்துவிட்டால் என்ன செய்வது? நேர்காணலில் கலந்துக் கொள்ள முடியாது.’ என நினைத்துக் கொண்டே பிச்சைக்காரரைக் கடந்தான்.
சற்றுத் தூரம் சென்று திரும்பிப் பார்த்தான் எழிலன்.
என்ன தோன்றியதோ தெரியவில்லை. ‘பாவம்!’ என மனதில் சொல்லிக் கொண்டான். பிச்சைக்காரருக்கு பட்டு வேட்டியையும் துண்டையும் கொடுத்தான். கொஞ்சம் உணவையும் உண்பதற்கு கொடுத்தான். பிச்சைக்காரர் இரண்டு கைகளையும் எடுத்து வணங்கினார். அப்பொழுது திடீரென ஒரு காளை பாய்ந்து வந்தது. அவன் ஓடி விடலாம். ஆனால் பிச்சைக்காரரால் ஓட முடியாதே என வருந்தினான். எழிலன் அதன் கொம்புகளைப் பிடித்து அடக்கினான். எழிலனுக்கு கையில் காயம் ஏற்பட்டது. பிச்சைக்காரர் தன் உயிரைக் காப்பாற்றியதற்காக எழிலனை கனிவுடன் பார்த்தார்.
பிச்சைக்காரர் கேட்டார்.
‘இளைஞனே, நீங்கள் எங்கே போகிறீர்கள்?’
‘இளவரசராக தேர்ந்தெடுக்கும் நேர்காணலில் கலந்துக் கொள்ள விரும்பினேன். ஆனால், இந்த பழைய உடையுடன் உள்ளே போக கூச்சமாக இருக்கிறது. ஆகவே, நான் என் கிராமத்திற்கு திரும்பிச் செல்கிறேன்’ என்று எழிலன் சொன்னான்.
அவ்வழியே வந்த அரண்மனை சேவகன்,
‘ தம்பி! அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள். எல்லோரையும் அனுமதிக்கச் சொல்லி உத்தரவு. நீங்கள் தாராளமாகப் போகலாம்’ என்றான்.
அதனால் எழிலன் அரண்மனைக்குள் போனான். அவன் அரண்மனைக்குள் போவதை அந்த பிச்சைக்காரர் பார்த்துக் கொண்டே இருந்தார்
*****
அரசவை.
மந்திரிகள், தளபதிகள், புலவர்கள், வேலையாட்கள், நேர்காணலுக்கு வந்திருந்த இளைஞர்கள், பொதுமக்கள் என அவை நிரம்பி வழிந்தது. எழிலனுக்கு அந்த அறைக்குள் நிற்க கூச்சமாக இருந்தது. மன்னர் வரப்போகிற நேரம். இது நமக்குச் சரிப்பட்டு வராது என முடிவு செய்தான். மன்னர் வருகிறார் என அறிவித்தார்கள். அவர் வருவதற்குள் வெளியேறிவிட முடிவெடுத்தான். மன்னர் வந்து விட்டார். எழிலன் கதவருகே போய்விட்டான்.
‘இளைஞனே! நில்’ என்றது ஒரு குரல். அழைத்தது அரசர் தான். திரும்பினான். எழிலனை அவரது சிம்மாசனம் அருகே அழைத்தார். இப்படி அலங்கோலமாக உடை அணிந்து வந்ததற்கு தண்டனை கொடுக்கப்போகிறார் எனப் பயந்தான். வெட்கத்தால் நெளிந்தவாறே அரசரின் இருக்கையை நோக்கி நகர்ந்தான்.
அரசர் பேச ஆரம்பித்தார்.
‘பெரியோர்களே! நாட்டு மக்களே!! அனைவருக்கும் வணக்கம். நான் பிச்சைக்காரர் வேடத்தில் அரண்மனையின் வெளியே நின்றிருந்தேன். குளிருது என்றேன். இந்த இளைஞன் தான் வைத்திருந்த ஒரே பட்டு வேட்டி துண்டை எனக்கு தானமாகக் கொடுத்தான். பசிக்கிறது என்றேன். உணவுகொடுத்தான். பாய்ந்து வந்த காளையிடமிருந்து என் உயிரைக் காப்பாற்றினான். தன் உயிரைத் துச்சமென மதித்தான். இவன் என் வாரிசாக வர என் விருப்பம். ஆனால் முறைப்படி அவையோர் நேர்காணல் செய்யலாம்’ என அறிவித்தார்.
முதன்மைப் புலவர் பலரையும் நேர்காணல் செய்தார். அவர் கேட்கும் கேள்விகளுக்கு திருப்திகரமான பதிலை யாரிடமிருந்தும் பெறவில்லை. கடைசியில் எழிலனும் இன்னொரு இளைஞனுமே மிஞ்சினார்கள்.
சரி! இருவரிடமும் கேள்வியைக் கேட்பேன். பதிலைச் சொல்லுங்கள்’ என முதன்மைப் புலவர் கூறினார்.
‘இளைஞர்களே! பூவிலே சிறந்த பூ எது?’
‘ தாமரை. அது தான் நீரின் உயரத்திற்கு ஏற்றாற் போல நீளும் குறையும்.’ என்றான் அந்த இளைஞன்.
‘ இல்லை. பருத்திப் பூ தான். அது தான் மனிதர்களின் மானத்தைக் காக்கும்’ என்றான் எழிலன்.
‘ சரி! இரண்டாவது கேள்வி. ஒளியிலே சிறந்த ஒளி எது?’
‘ சூரிய ஒளி. அது தான் உயிர்களுக்கு ஆதாரம்.’
‘ இல்லை. கண்ணொளி தான். அது தான் அந்த சூரிய ஒளியையே காண உதவும்.’ என்றான் எழிலன்.
‘ மூன்றாவது கேள்வி. ஆயுதங்களிலே சிறந்து ஆயுதம் எது?
‘ கூரிய வாள். அது தான் பகைவர்களை துவம்சம் செய்யும்.’
‘ இல்லை. பகுத்தறிவு தான். அது தான் நல்லது எது கெட்டது எது என மனிதர்களுக்கு உணர்த்தும்.’ என்றான் எழிலன்.
அரசர் சொன்னது உண்மைதான். எழிலனே வாரிசாவதற்குப் பொருத்தமான நபர் என எல்லோரும் சொன்னார்கள்.
எழிலனைத் தன் வாரிசாக அரசர் அறிவித்தார்.
******
படிப்பினை: அறிவு, துணிவு, பரிவு, கடுமையான உழைப்பு, தலைமைத்துவம் எழுதியவர்: ஜான் பிரிட்டோ பரிசுத்தம்
Commenti