ஓர் ஊரில் வசந்த காலம்.
ஒரு வெட்டுக்கிளி ஆடிப்பாடிக் கொண்டிருந்தது. அந்த வழியாக எறும்பு ஒன்று உணவை எடுத்துக்கொண்டு விறுவிறுப்பாகப் போனது.
“ அடேய்! எறும்பே!… நல்ல வசந்த காலம். வந்து என்னோடு பாட்டுப் பாடு… சேர்ந்து ஆடலாம்…”
“ ம்ஹூம்!.. முடியாது. நான் உணவு சேமித்துக் கொண்டிருக்கிறேன்.”
“ உன்னையே ஏன் வருத்திக் கொண்டிருக்கிறாய்? மகிழ்ச்சியாக இரு. எப்பப் பார்த்தாலும் கடுமையாக உழைக்கனுமா? என்னைப் பார்... ஆடு. பாடு. கொஞ்ச நேரம் ஓய்வெடு...தூங்கு...”
“ முடியாது நண்பா!… குளிர்காலம் நெருங்குகிறதே!”
“ ஐயோ!… குளிர்காலம் வர்றதுக்கு இன்னும் எத்தனை நாள் இருக்கு… அதுக்குள்ள அதைப்பத்தி கவலைப்படனுமா? வேலே செய்றத நிறுத்து. வந்து ஜாலியா இரு…”
“ ம்ஹூம்!… முடியாது…”
வெட்டுக்கிளி தொடர்ந்து நடனமாடிக் கொண்டிருந்தது. எறும்பு தொடர்ந்து உணவு சேகரித்துக்கொண்டிருந்தது.
***
குளிர்காலம் வந்தது.
எங்கும் பனி. உணவுக்குத் தட்டுப்பாடு வந்தது.
அந்த வெட்டுக்கிளி உணவைத் தேடி அங்குமிங்கும் அலைந்தது.
எங்கும் உணவு கிடைக்கவில்லை. பசி மயக்கம்.
அப்பொழுது ஒரு சத்தம் வந்தது. யாரோ பாட்டு பாடும் சத்தம். உன்னிப்பாக கவனித்தது.
எறும்பு தன் புற்றில் உணவருந்தி விட்டு உரக்கப் பாடிக் கொண்டு, நடனம் ஆடியது தெரிந்தது.
வெட்டுக்கிளி வெட்கி தலை குனிந்தது.
எறும்பின் அறிவுரையைக் கேட்காமல் விட்டோமே. வேலை செய்ய வேண்டிய நேரத்தில் எல்லாம், நேரத்தை வீணாக்கி விட்டோமே. இப்பொழுது கஷ்டப்படுகிறோமே என வருந்தியது.
*****
Comments