top of page
Writer's pictureJohn B. Parisutham

கண்மணி பிழைப்பாளா?


“ஓடுங்க!…” கொற்றவை தன் கணவன் செழியனை அவசரப்படுத்தினாள்.

“புள்ளய என்னுட்ட குடு” செழியன் கண்மணியை, கொற்றவையிடமிருந்து பறித்துக்கொண்டு முன்னே ஓடினான்.

“புள்ள கண்ணு சொருகுது!….”அழுது கொண்டே கொற்றவை பின்னே ஓடினாள்.


வானம் பொத்துக்கொண்டு ஊற்றிக் கொண்டிருந்தது. சேறும் சகதியும் சாலையில் நிரம்பி வழிந்தது. கொற்றவையும் செழியனும் கால் வைத்து, அது மரக்கால் அளவு பதிய, அதில் சிறு குளமாய் தண்ணீர் தேங்கியது. கொற்றவை முந்தானையால் கண்மணியை மூடிப் பார்த்தாள். இப்பொழுது முனகல் சத்தம் கூட இல்லை.


“பயமா இருக்குங்க!…” கொற்றவை வெடித்து அழுதாள்.

“ வா!…தெரு திரும்புனா பூசாரி வீடு… அழுவாம வா!” செழியன் தன் மனைவியை தேற்றினாலும், தன் எட்டு வயது பெண் குழந்தை, மரக்கட்டை போல் ஆவதை அவன் உணர்ந்ததால்… ஓட்டத்தை அவசரப்படுத்தினான். வானம் உறுமியது. மாலை 4 மணி என்றாலும், இருட்டு சூழ்ந்து, சூழலை இன்னும் பயமுறுத்தியது.


மின்னல் ஒன்று வெட்டும் போது, செழியன் தெருவில் திரும்பிவிட்டான். வெளியில் விழும் தண்ணீரை விட அதிகமாக கண்ணீர் விட்டுக் கொண்டு, பின்னேயே ஓடினாள். கண்மணியின் கழுத்து சற்று சரிந்து செழியனின் மார்பில் விழுந்தது.


“ டேய் செழியா!… இந்த பேய் மழையில, பொட்ட புள்ளய தூக்கிகிட்டு எங்கடா போற?” அந்த திண்ணையிலிருந்து ஒரு பெரியவரின் குரல்.


அதைப் பொருட்படுத்தாமல் செழியன் ஓடினான். ஒரு கல் தடுக்கி… நல்ல வேளை…விழவில்லை. கொற்றவை தான் அவசரம் அவசரமாகச் சொன்னாள். முக்காடு போட்ட முந்தானையை சற்று விலக்கி,


“ ஆதிரை அப்பா! கண்மணிக்கு என்ன ஆச்சுன்னு தெரியல… ரெண்டு கண்ணும் சொருகிகிச்சு…அதான்… பூசாரிய…”என்று ஒடிக்கொண்டே சொல்லிக்கொண்டு இருக்கும் போதே அந்தக் குடிசை வீடு வந்து விட்டது. தண்ணீர் சொட்டச் சொட்ட செழியன் முன்னே நுழைந்துவிட்டான்.


உள்ளே உத்தமநாதன் ஏதோ குடித்துக் கொண்டிருந்தார். ஜன்னல் ஓரத்தில் ஓர் உடுக்கையும் சாமி படமும் இருந்தது. கொற்றவையும் செழியனும் ஏதோ ஏதோ பிதற்றினார்கள்… நடு நடுவே… கண்மணி… கண் சொருகி… என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது.


வெளியே மழை விட்டபாடில்லை… வானம் குமுறிக்கொண்டே இருந்தது.


“ செழியா! பயப்படாத… இங்க வந்துட்டீல… புள்ளய அந்த பாயில போடு”. பூ போல வைத்தான். தலை திருகி, கண் செருகி, காய்ந்த மலராய்…


“ அந்த டப்பாவ எடு…” என ஏதேதோ கட்டளைகளை உத்தமநாதன் சொல்ல, செழியன் செய்தான். கொற்றவை கண்மணியின் அருகே மண்டியிட்டு அழுது தீர்த்தாள்.


அப்பொழுது ஆதிரை பூசாரி வீட்டிற்குள் வந்தாள். பிடித்து வந்த குடையை, மடக்கி, தண்ணீரை உதறி, மூலையில் வைக்கும் போதே, அவள் ஒரு ஆரம்பப் பள்ளி ஆசிரியை என்று எல்லோருக்கும் புரிந்து விடும்.


“ அட! பார்டா… வாத்திச்சியே நம்ம வீட்டுக்கு வந்திருக்கா… ஓன் ஒடம்புக்கு என்ன?” என்று உத்தமநாதன் கிண்டலாகக் கேட்க, அவனை உதாசீனப்படுத்தி விட்டு, ஆதிரை கொற்றவையின் தோளைத் தொட்டு,


“அழாதீங்க அக்கா…” என்று பரிவாகச் சொன்னாள். அது வரை அடக்கிவைத்திருந்த வெள்ளம், மடையை உடைத்துக்கொண்டு, ஆதிரையின் தோளில் பாய்ந்தது. கொற்றவை, ஆதிரையைக் கட்டிப் பிடித்துக் கொண்டு அழுதாள்.


“ மூணாம் வகுப்பு டீச்சர் ரொம்ப நல்லவங்கம்மா…ன்னு சொல்வாளே…. கண்ணும் தொறக்கல… மூச்சும் உடுறாளான்னு தெரியல… கட்டை மாதிரி…” கொற்றவை கொட்டித் தீர்த்தாள்.

“ செழியா!…துட்டு எடுத்துட்டு வந்திருக்கியா?” ஆதிரைக்கு கோபம் வந்தது. இந்த நேரத்தில் என்ன கேட்கிறான் பாரு என நினைத்துக் கொண்டாள்.


“ இல்ல பூசாரி ஐயா!… விடிஞ்சா கொண்டு வந்து தாரேன். வீட்டுல இருக்கு… அவசரத்துல..”


“ குடிச்ச குவாட்டர் பத்தல… ஓடிப்போயி ஒரு குவாட்டர் வாங்கிட்டு வாரியா?” ஆதிரையின் நெஞ்சு கோபத்தில் விம்மியது.

“ ஐயா!…புள்ள…” கெஞ்சினான் செழியன்


“ இங்க வந்துட்டீல்ல… நா பாத்துக்கறேன்… புள்ளக்கு ஒன்னும் ஆவாது. கடை பூட்டிடுவான்.. ஒடு”


ஆதிரைக்கு அடக்க முடியல. கொந்தளித்து, “ நீயெல்லாம் ஒரு மனுஷனா? மூஞ்சையும் மொவரக்கட்டையும் பாரு...குடிக்க சாராயம் வேணுமா? ஒன்ன எல்லாம்...”

கொற்றவை தடுத்தாள்.


“டீச்சர்!… வேணாம்…” என ஆதிரையைத் தடுத்துவிட்டு, “போயா… கடுகு டப்பாவுல துட்டு வச்சிருக்கேன்…ஓடிப்போய்..” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே…கண்மணியின் கால்கள் உதறின. உடம்பே தூக்கி தூக்கிப் போட்டது.


“ ஐயோ!…புள்ள… புள்ள..” என கத்தியதில், கொட்டும் மழையையும் மீறி, பக்கத்திலிருந்து ரெண்டு மூணு பேர் பூசாரி வீட்டிற்குள் என்னவென்று பார்க்க வந்து விட்டார்கள்.


உத்தமநாதன் வாய் குளறி ஏதோ சொன்னான். குடிபோதையில் மயங்கினான்.


அதிரை கண்மணியைத் தொட்டுப் பார்த்தாள்.

“ அக்கா!.. இங்க சரிப்படாது… வாங்க நம்ம ரத்னம் ஐயா’ட்ட தூக்கிட்டு போவலாம்”. கொற்றவைக்கும் செழியனுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை.


“ இவன் வூட்டுல இடி உழ,… போங்க.. டீச்சரம்மா சொல்ற மாதிரி ரத்னம் ஐயா’ட்ட கொண்டுட்டு போங்க” யாரோ சொன்னார்கள்.


ரத்னம் உள்ளூர் கிராம மருத்துவர். மாரியம்மன் கோவில் அருகே வீடு. அஞ்சு நிமிஷ நடைதான். ஆனால் மழை!


செழியன் கண்மணியைத் தூக்கிக்கொண்டான். குடிசையை விட்டு வெளியேறினான். கொற்றவை பதறி அடித்து பின்னே ஓடினாள். ஆதிரை குடையை எடுத்துக்கொண்டு, பிரிக்காமலேயே அவர்கள் பின்னே ஓடினாள். அவர்களைப் போலவே, வெள்ளமும் சாலையில் பதறி அடித்துக் கொண்டு, எங்கு போகிறோம் எனத் தெரியாது ஒடிக் கொண்டிருந்தது.


திண்ணையிலேயே உட்கார்ந்திருந்தார் ரத்னம். ஒல்லியான தேகம். வடிவான முகம். தெளிந்த பார்வை.


“ என்னப்பா செழியா? என்னாச்சு?” என்று கேட்டுக்கொண்டே, துண்டை எடுத்து உதறி தோளில் போட்டுக்கொண்டு, எழுந்து, வேட்டியை சரியாகக் கட்டினார்.


ஆதிரைதான் நடந்ததைச் சொன்னாள். “உள்ள தூக்கி வா…” என்று சொல்லிவிட்டு, “ஆதிரை!..அந்த கட்டில் கிட்ட ஒரு டப்பா இருக்கும். எடும்மா” என்றார். வீட்டிற்கு முன்னே இருந்த முருங்கை மரத்திலிருந்து ஒரு கிளை, பேய்க் காற்றில் சட சடவென முறிந்து விழுந்தது. மின்னல் ஒன்று மின்னி, சூழலில் கலவரத்தை கலந்தது.


ரத்னம் சொல்லச் சொல்ல, ஆதிரை ஏதோ கலக்கி, கண்மணி வாயில் ஊற்றினாள். மழை கொஞ்சம் நின்றது. வெறும் தூறல் மட்டும் இருந்தது.


“ அழாதம்மா! செழியா… ஒன் பொண்டாட்டிய அழ வேண்டாமுன்னு சொல்லு” என ரத்னம் ஐயா , வேலைகளுக்கு நடுவே, தேற்றினார். கொற்றவை, அந்த தூணில் சாய்ந்து உட்கார்ந்தாள்.

கண்மணிக்கு தலைசீவி, பவுடர் அடித்து, பொட்டு வைத்து, பூ வைத்து பள்ளிக்கு அனுப்பிய காட்சி ஏதோ வந்து போனது. திரும்ப கிடைப்பாளா? என நெஞ்சம் ஏங்கியது. எங்கோ, சங்கு ஊதி, மணி அடிக்கும் சத்தம் கேட்டது. இந்த சத்தம் இப்பொழுது ஏன் கேட்கிறது என கொற்றவை குழம்பிப் போனாள்.


ஆதிரை தோளில் கை வைத்து, “ அக்கா! அக்கா!! “ என எழுப்பிய போது தான், திடீரென தலையை தூக்கினாள் கொற்றவை. செழியன் குத்துக்கால் இட்டு அம்மி அருகே உட்கார்ந்திருந்தான். கண்மணி கட்டிலில் கிடந்தாள். ரத்னம் ஐயா பக்கத்தில் நாற்காலியில் அமர்ந்திருந்தார். ஆதிரை கண்மணியின் கால்மாட்டில் போய் நின்றாள்.


மழை முழுவதுமாக நின்றிருந்தது. எங்கோ குயில் கூவியது.


கண்மணி கண் திறந்தாள்.


“ அம்மா!…”


முந்தானையால் வாயை மூடிக்கொண்டிருந்த கொற்றவை, “ கண்ணுஉஉஉஉஉ!” என கத்திக்கொண்டே கட்டிலை நோக்கி ஓடினாள். கண்மணி எழ எத்தனித்தாள். செழியன் சடாலென எழுந்து கண்மணியை நோக்கி வந்தான்.


“ அவ்வளவு தான்… இனி புள்ள உங்களுக்கு” என ரத்னம் ஐயா சொன்னார். ஆதிரை, “ ரொம்ப நன்றி ஐயா!” என்றாள். “நீங்க மவராசனா இருக்கனும்” என கொற்றவை ரத்னம் ஐயாவின் காலில் விழுந்தாள். செழியன் கண்களில் கண்ணீர் வழிந்தது.


“ புள்ளய கூட்டிட்டு போங்க.. செழியா! நாளைக்கு கோயில் மண்டபத்துக்கு வாங்க… முக்கியமான ரகசியம் சொல்றேன்” என்றார் ரத்னம். ஆதிரையை அவரது வீட்டில் விட்டு விட்டு, கொற்றவையும் செழியனும் கண்மணியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார்கள்.


வானம் தெளிவாக இருந்தது.


****

அடுத்த நாள்.


கோயில் மண்டபம். ரத்னம் ஐயாவைச் சுற்றி சிலர் உட்கார்ந்து ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். செழியனும், கொற்றவையும் வந்தனர்.

“ இந்தாங்க ஐயா! இருபத்தி ஆறு ரூபா இருக்கு… வச்சுக்குங்க.. மீதி வேணுமின்னா, வேலை செஞ்சி கூலி வாங்கி..”


“அதெல்லாம் வேணாம். வச்சிக்குங்க. இத கேளுங்க.” என்று சொல்லி ரத்னம் தொடர்ந்தார். எல்லோரும், வெத்தலை போட்ட அவர் வாயையேப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.


“ பசி மயக்கம் வர்றது சகஜம் தான். நல்லவேளை கண்மணியை சரியான நேரத்துல கொண்டு வந்ததால காப்பாத்திட்டோம். நம்ம நல்லா இருக்க நாலு வழி இருக்கு. ஒன்னு சாப்புடுற சாப்பாடு. நான் காலையில ஒரு இட்லி, ஒரு முட்டை சாப்டுறேன். ராத்திரி ஒரு தோசை ஒரு முட்டை. மத்தபடி மத்தியானத்துல பாதி சோறு, பாதி காய்கறி. அவ்வளவுதான். வயிறு முட்ட சாப்டனும்னு தேவையில்ல


ரெண்டாவது நல்லா இருதயம் துடிக்கிற மாதிரி, உடல் வேலை செய்யனும், அல்லது உடற்பயிற்சி செய்யனும். நா தெனமும் 5 மைலு ஒடுறத நீங்க பாத்திருப்பீங்க. இல்லையா? அதுமாதிரி ஏதாவது செய்யனும்.


மூணாவது ஏழு மணி நேரம் நல்லா தூங்கனும். அது நல்லா பண்ணுவோம்.

நாலாவது, நல்லதே நெனக்கனும். மனச அமைதியா வச்சுக்கனும். வேகமா ஒடுற புலி சிங்கம் எல்லாம் பாருங்க இருபது முப்பது வருஷம் இருக்கும். ஆனா, மெதுவா போற ஆமை இருநூறு வருஷம் இருக்கும்.”


அப்பொழுது உத்தமநாதன் பூசாரி அங்கே வந்தார்.


“என்ன பிரசங்கம் ஆரம்பிச்சாச்சா?” என கிண்டலாகக் கேட்டார்.

“ யோவ்! பேசாம இரு” என யாரோ ஒருவர் உத்தமநாதனை அடக்கிவிட்டு, “ஐயா! என் புள்ள பரோட்டா தான் சாப்புடவேன்னு அடம்புடிக்கிறான் ஐயா”

“ மைதா, டால்டா, வெள்ளை சீனி எல்லாம் போட்ட பண்டங்களை அறவே சாப்புடக்கூடாது. வெல கொறவா இருக்கற, உள்ளூர் காய்கறிகள சாப்டனும். பழங்கள ஜூஸ் போட்டு சாப்புடாம, கடிச்சி சாப்டனும். ஒடம்பு இருந்தா தான உசிரு அதுல ஒட்டிகிட்டு இருக்கும். நாம ஒடம்பை நாம தான பாத்துக்கனும்.”


உத்தமநாதன் குறுக்கிட்டு, “ ரெண்டு கட்டிங் போட்டா… நம்ம ஒடம்பை நாம பாத்துக்க வேண்டாம். அதுவே பாத்துக்கும்” என்றான்.


“ ஒடம்பை கெடுக்கற பொருட்களை வாயுக்குள்ள போடக்கூடாது” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே, ஆதிரை, கண்மணியை அழைத்துக்கொண்டு, பள்ளிக்கூடத்திலிருந்து வந்துக்கொண்டிருந்தாள்.


“வணக்கம் ஐயா!” சொன்னது கண்மணி.


“ இங்க வா! இப்படி உக்காரு” என ரத்னம் அழைத்து பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார்.


“சந்தையில விக்கற கண்டதையும் கடையதையும் திங்கக் கூடாது. பசிச்சு சாப்டனும். பட்டினி இருக்கறது ஒடம்புக்கு ரொம்ப நல்லது.”


அப்பொழுது திடீரென கண்மணி மயங்கி விழுந்தாள். எல்லோரும் பதறி அடித்து “என்னாச்சி? என்னாச்சி?” என்று எழுந்தார்கள். செழியனும் கொற்றவையும், “பாப்பா! பாப்பா!!” எனக் கத்திக்கொண்டு அவளை நோக்கி ஓடி வந்தார்கள். ஆதிரை பதட்டத்துடன் கண்மணி பக்கம் வந்தாள்.


உத்தமநாதன் உச்ச ஸ்தாயியில் கத்தினான்.


“ நா அப்பயே சொன்னான். குவாட்டர் குடுத்திருந்தா, மந்திரம் போட்டு இவளுக்கு வந்திருக்கற பயங்கர வியாதியை வெரட்டி அடிச்சிருப்பேன்… இதோ! புட்டுக்குச்சா… வைத்தியம் பண்றேன் பேர்வழின்னு ஊரை ஏமாத்தற வேலை!… இதுல சாப்பாடு, உடற்பயிற்சி, தூக்கம், மன அமைதி’ன்னு பிரசங்கம்”


திடீர்’னு கண்மணி கண்விழித்தாள்.


“ என்ன எல்லாரும் பயந்துட்டீங்களா? ஐயா நல்ல விஷயமா நாலு விஷயம் சொல்றாரு. அதக் கேட்டுட்டு இந்தக் காதுல வாங்கி, அந்தக் காதுல விட்டுடாம, நம்மளும் செய்யனும். அத ஒரு ஷாக் குடுத்து சொன்னா, கேப்பீங்கன்னு தான் சும்மா நடிச்சேன். உத்தமநாதன் ஐயா! இனிமேயாவது பேருக்கு ஏத்தமாதிரி நடந்துக்குங்க.” என்று சொல்லிவிட்டு, ரத்னம் ஐயாவைப் பாத்து, “ நேத்து என்ன காப்பாத்துனதுக்கு நன்றி ஐயா!. எங்க ஆதிரை டீச்சருக்கும் நன்றி.” என்று சொன்னதும் தான் செழியனுக்கும் கொற்றவைக்கும் உயிர் வந்தது.


உத்தமநாதன் அங்கிருந்து ஓடினார்.

“எங்கயா ஒடுற?”

“இனி அஞ்சு மைல் தினமும் ஓடப்போறேன்”


**********





31 views0 comments

Comments


bottom of page