ஓர் ஊரில் செந்தில் வேலன்’னு ஓர் இளைஞன் இருந்தான். அவனுக்கு குஸ்தி கற்றுக்கொள்ள ஆசை. ஒரு தற்காப்புக்கலையைக் கற்றுக்கொண்டால் நல்லது என்று செந்தில் வேலன் ஆசைப்பட்டான். ஆனால் அவனுக்கு ஒரு கை தான் இருந்தது. இடது கை இல்லை.
“ நான் குஸ்தி கத்துக்கப்போறேன்” என்று சொல்வான்.
“ ஆமா! நீ கத்து கிழிச்ச… ரெண்டு கை இருக்கறவங்களே ததிங்கிணத்தோம் போடுறான்.. ஒத்த கையை வச்சிகிட்டு, நீ என்ன பண்ணுவ… ஆசைப்படலாம்…ஆனா முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படலாமா?” என எல்லோரும் செந்தில் வேலனைப் பழித்தார்கள். எள்ளி நகையாடினார்கள்.
ஆனால் செந்தில் வேலன் மனம் தளரவில்லை. ஒரு குருவிடம் சேர்ந்தான். ஓர் அசைவோடு கூடிய பிடியையும் அடியையும் சொல்லிக் கொடுத்தார். அதை நன்றாகக் கற்றுக் கொண்டான். மற்ற மாணவர்கள் அடுத்த அடுத்த பிடியையும் அடியையும் கற்றுக் கொண்டிருந்தார்கள்.
“ குருவே! எனக்கும் அடுத்த அடியைக் கற்றுத்தாருங்கள்” என செந்தில் வேலன் கெஞ்சினான்.
“ நீ அதே அடியைப் பயிற்சி செய்…” என்று குரு சொல்லிவிட்டார்.
இரண்டு மூன்று மாதங்கள் கழிந்து விட்டன. அந்த ஒரே அடியை மட்டும் பயிற்சி செய்துக் கொண்டிருந்தான். மற்ற மாணவர்கள் ஏழாவது எட்டாவது அடிபிடிக்கு போய்விட்டார்கள்.
“ குருவே! எனக்கு இரண்டாவது அடியைக் கற்றுக் கொடுங்கள்” என செந்தில் வேலன் மறுபடி மறுபடிக் கேட்டான்.
“ நீ அதே அடியைப் பயிற்சி செய்..” என்று குரு ஒவ்வொரு முறையும் பதில் சொல்லிவிட்டார்.
ஒரு வருடம் கழிந்தது. செந்தில்வேலனுக்கு மனம் சோர்வாகிவிட்டது. மற்ற மாணவர்கள் பதினைந்தாவது அடியைக் கற்றுக் கொண்டிருந்தார்கள்.
நாட்டில் குஸ்தி போட்டி வந்தது. அப்பொழுது குரு செந்தில் வேலனை அழைத்தார்.
“ வேலா! நாட்டில் உள்ள எல்லா தற்காப்புக்கலைப் பள்ளிகளிலிருந்தும் குஸ்தி வீரர்கள் வருகிறார்கள். நமது பள்ளியிலிருந்து நீ தான் அந்தக் குஸ்திப் போட்டியில் கலந்துக்கொள்ள வேண்டும்” என்றார் குரு.
“ நானா?” என செந்தில் வேலன் தயங்கினான். ஒரு பக்கம் ஆசை. இன்னொரு பக்கம் பயம். கற்றுக்கொண்ட ஓர் அடியை வைத்துக்கொண்டு என்ன செய்வது எனக் கவலை. மற்ற மாணவர்களும் இழிவாகப் பார்த்தார்கள்.
ஆனால் குரு அசரவில்லை. தனது முடிவில் உறுதியாக இருந்தார்.
குஸ்தி போட்டி நடக்கவேண்டிய நாளும் வந்தது. செந்தில் வேலன் ஊர் மக்கள் உட்பட, பல ஊர்களிலிருந்தும் மக்கள் ஆடுகளத்திற்கு வந்து விட்டார்கள். போட்டி துவங்கியது. முதல் போட்டி.
செந்தில் வேலன் களத்தில் இறங்கினான். எதிராளியும் இறங்கினான். எல்லோரும், “ இடது கை இல்லாத இவன் எப்படி சமாளிக்கப்போகிறான். ஐயோ! பாவம்..” என பரிதாபப் பட்டார்கள். போட்டி துவங்கியது. செந்தில்வேலன் தனக்குத் தெரிந்த ஒரே அடிபிடியை உபயோகித்தான். சிறிது நேரத்தில் முடிவு அறிவிக்கப்பட்டது.
“ நடந்துமுடிந்த குஸ்தி போட்டியில் செந்தில் வேலன் வெற்றி” என அறிவிக்கப்பட்டது. செந்தில் வேலன் உட்பட எல்லோருக்கும் ஆச்சரியம்.
இரண்டாவது, மூன்றாவது போட்டிகள் நடந்தன. அதிலும் அந்த ஒற்றை அடிதான்!! ஆனால் அவனே வெற்றி பெற்றான்.
இறுதிப்போட்டி. இதில் எதிர் போட்டியாளன் சற்று வலிமையான ஆள். இதுவரை ஏதோ அதிர்ஷடத்தில் வந்துவிட்டான். இந்தப் போட்டியில் ஆள் அம்போ தான் என மக்கள் பேசிக்கொண்டார்கள். குஸ்தி துவங்கியது. செந்தில்வேலன் அந்த ஒற்றை அடி பிடியைத் தான் பயன்படுத்தினான். எதிராளி மிகவும் ஆவேசமாக சண்டையிட்டான். போட்டி முடிந்தது
“ நடந்து முடிந்த இறுதி குஸ்தி போட்டியில்…..”
மக்கள் அனைவரும் ஆவலோடு, முடிவை எதிர்பார்த்தார்கள். செந்தில் வேலனின் ஊர் மக்களும் எதிர்பார்த்தார்கள்.
“ நடந்து முடிந்த இறுதி குஸ்தி போட்டியில் செந்தில் வேலனே வெற்றி பெற்றான். வெற்றி பெற்று ‘குஸ்தி இளவரசன்’ என்ற பட்டத்தைப் பெறுகிறான்” என்று அறிவித்தார்கள். எல்லோருக்கும் ஆச்சரியம்.
“ இது எப்படி நடந்தது?” என்று தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள். அப்படியே கலைந்துப் போனார்கள்.
செந்தில் வேலனும் மற்ற மாணவர்களும், குருவோடு இணைந்து பள்ளிக்குத் திரும்பினார்கள். பள்ளிக்குப் போய் சேர்ந்ததும் குருவிடம் செந்தில் வேலன் கேட்டான்.
“ எப்படி குருவே? எனக்கு ஒரே ஒரு அடிமுறை தான் கற்றுக்கொடுத்தீர்கள். அதைமட்டுமே நான் பயன்படுத்தினேன். என்னை குஸ்தி இளவரசன் என்று நாடே கொண்டாடுகிறதே! எப்படி?” என்று செந்தில் வேலன் கேட்டான்.
“ நான் சொல்லிக்கொடுத்த அந்த அடிமுறையில், எதிராளி தப்பிக்க வேண்டுமென்றால், உன் இடதுகையை மடக்கிப் பிடித்தால் தான் முடியும்…” என்றார் குரு.
அப்பொழுது தான் செந்தில் வேலன் புரிந்துக் கொண்டான்.
“ நமக்கு எது குறை என்று நினைக்கிறோமோ, அதையே நிறையாக்க முடிவு செய்தால்…. நாம் வெற்றியாளர்கள் தான்!!!”
*****
תגובות