top of page
Writer's pictureJohn B. Parisutham

கதை 14 - குட்டி மானும் கொடூர கரடியும்


மேட்டுப்பட்டி என்ற ஊருக்கருகில் ஒரு பெரிய காடு இருந்தது. அந்தக் காட்டுல ஒரு கரடி இருந்தது. அது மிகவும் மோசமான கரடி. தனக்கு பசித்தால் சிறு குட்டிகள் என்றாலும் விடாது. பசி தீர்ந்தாலும், கிடைக்கும் மிருகத்தைப் பிடித்து ஒரு பள்ளத்தில் போட்டு வைக்கும். பிறகு பசி எடுக்கும் போது சாவகாசமாக பிடித்துச் சாப்பிடும். எல்லா மிருகங்களும் அந்தக் கொடூரக் கரடியைப் பார்த்துப் பயப்பட்டார்கள். இந்த கரடி செத்து தொலையாதா என எல்லா மிருகங்களும் பிரியப்பட்டன. ஆனால் அதற்கு எந்த வழியும் இல்லாமல் சிரமப் பட்டன.


ஒரு நாள் ஒரு சிறு மான் குட்டி அந்த கரடியிடம் மாட்டிக் கொண்டது.


“ என்னை விட்டுவிடு” என மான் குட்டி கெஞ்சியது.

“ முடியாது. உன்னை திங்காமல் விடமாட்டேன். ஆனால் எனக்கு இப்பொழுது பசிக்கவில்லை. அதனால் அந்தப் பள்ளத்தில் உன்னைப் போட்டு விடுகிறேன். பிறகு பிடித்து சாப்பிடுகிறேன்.” என கரடி கத்தியது.

மான்குட்டி கேவிக் கேவி அழுதது. எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தது. கரடி விடுவதாக இல்லை. தூக்கி அந்தப் பள்ளத்தில் போட்டுவிட்டது.


அந்தப்பள்ளத்திலிருந்து தப்பிக்க வழியே இல்லை. மான்குட்டி தேம்பித் தேம்பி அழுதுக் கொண்டே இருந்தது.


கரடித் தூங்கிக் கொண்டிருந்தது.

அப்பொழுது அந்த வழியே ஓர் ஒட்டகச்சிவிங்கி அந்த வழியே போனது. மான் அழுகையை நிறுத்திவிட்டு வித்தியாசமாக கத்தியது. அந்தச் சத்தத்தைக் கேட்ட ஒட்டகச்சிவிங்கி அந்தப் பள்ளத்தில் எட்டிப் பார்த்தது.

“ என்ன மான் குட்டியே! ஏன் பள்ளத்துக்குள்ள கெடக்கிற?” எனக் கேட்டது.

அப்பொழுது மான் குட்டி கொஞ்சம் யோசித்தது. ஒரு திட்டம் தீட்டியது. பிறகு ஒட்டகச்சிவிங்கியைப் பார்த்து,

“ ஐயோ! உனக்கு விஷயம் தெரியாதா? கடவுள் நேத்து என் கனவுல வந்தார்” என்றது மான் குட்டி.

“ கனவுல வந்தாரா? வந்து என்ன சொன்னார்?” என்று ஒட்டகச்சிவிங்கி கேட்டது.

“ இந்த உலகம் முடியப்போகுது. எல்லாரும் அழிஞ்சிடுவாங்க. ஆனா, இந்தப் பள்ளத்துக்குள்ள ஒளிஞ்சிக்கிட்டா, அவங்கள மாத்திரம் நான் காப்பாத்திடுவேன்’னு சொன்னாரு.”

“ அப்படியா? நானும் வரலாமா?” என ஒட்டகச்சிவிங்கி கேட்டது.

“ தாராளமா…”


ஒட்டகச்சிவிங்கி பள்ளத்துக்குள் இறங்கிவிட்டது. சிறிது நேரத்தில் கரடி வரும் சத்தம் கேட்டது. மான்குட்டி ஒட்டகச்சிவிங்கியின் காதில் ஏதோ சொன்னது.


கரடி பள்ளத்தில் எட்டிப் பார்த்தது. ஒட்டகச்சிவிங்கியைப் பார்த்ததும், “ஆஹா!… ஒரு மாசத்துக்கு தேவையான இரை கிடைத்துவிட்டது.” என நினைத்துக்கொண்டே,

“ அட சிவிங்கியாரே! நீங்கள் எப்படி பள்ளத்துக்குள் போனீர்கள்?” என்றது கரடி.

“ கரடியாரே! உமக்கு விஷயம் தெரியாதா? கடவுள் உலகத்தை அழிக்கப் போகிறார். இந்தப் பள்ளத்துக்குள் ஒளிந்துக் கொள்கிறவர்களை மாத்திரம் அழிக்க மாட்டார்.” என ஒட்டகச்சிவிங்கி சொன்னது.


கரடிக்கு பயம் தொற்றிக்கொண்டது.

“ ஓ! அப்படியா? நானும் பள்ளத்துக்குள் இறங்கி தப்பித்துக்கொள்ளலாமா?” என்று கரடி ஆர்வத்துடன் கேட்டது.

“ ஆனால் ஒரு நிபந்தனை…” என்றது மான்குட்டி.

“ என்ன அது?” - கரடி

“ பள்ளத்திற்குள் இருக்கும் போது, யார் தும்மினாலும் அவர்களோடு சேர்ந்து பள்ளத்திற்குள் இருக்கும் எல்லோரையும் கடவுள் அழித்துவிடுவார். நீ தும்ம மாட்டேன் என்று சத்தியம் செய்தால் பள்ளத்திற்குள் இறங்கலாம்.” என்றது மான்குட்டி.

“ சத்தியமாக தும்மமாட்டேன்” என்று சொல்லி கரடி பள்ளத்துக்குள் அவசர அவசரமாக இறங்கியது.


அப்பொழுது அங்கே ஒரு யானை வந்தது. விபரத்தைக் கேட்டது. ஒட்டகச்சிவிங்கியிடம் மான்குட்டி சொன்ன விபரத்தைக் கேட்ட கரடி, இப்பொழுது யானையிடம் ஒப்பித்தது.


“ நானும் பள்ளத்துக்குள் இறங்கிக் கொள்ளலாமா?” என யானைக் கேட்டது.

“ ம்ஹூம்! இங்கே இடநெருக்கடி ஆகிவிடும் வராதே!” என கரடி தடுத்தது.

அப்பொழுது மான்குட்டி தும்மியது.

“ ஐயோ! தும்மி விட்டாயே! உன்னால் நாங்கள் அழியப் போகிறோமே! சிவிங்கியாரே இந்த மான் குட்டியை தூக்கி வெளியில் எறிங்க…” என்று கரடி கத்தியது.

“ அப்படியே ஆகட்டும் கரடியாரே!” என்று சொல்லி ஒட்டகச்சிவிங்கி மான்குட்டியை பள்ளத்திலிருந்து வெளியேற்றியது. வெளியில் வந்த மான்குட்டி யானையின் அருகில் சென்று காதில் ஏதோ சொன்னது.


“ ஓ! அப்படியா?” எனச் சொல்லிய யானை பக்கத்தில் இருந்த மரத்தின் கிளையைத் தணித்தது. அதைப் பிடித்துக் கொண்டு ஒட்டகச்சிவிங்கி பள்ளத்திலிருந்து வெளியே வந்தது.


“ எங்கே போகிறாய்? கடவுள் உலகத்தை அழிக்கப்போகிறார். இந்த நேரத்தில் பள்ளத்தில் இருப்பது தான் ஷேமம். வெளியே போனால் சொர்க்கத்துக்கு போகவேண்டியது தான்” என கரடி சொல்லியது.

“ நீ இப்பொழுது சொர்க்கத்துக்குப் போ!” எனச் சொல்லி யானை, ஒட்டகச்சிவிங்கி, மான் எல்லோரும் சேர்ந்து பள்ளத்தில் மண்ணை அள்ளிப் போட்டு மூடினார்கள்.


ஒரு வழியாக கரடியின் அராஜகத்திலிருந்து எல்லா மிருகங்களும் தப்பித்தன.

மான்குட்டியின் புத்திக்கூர்மையை மெச்சி அதனை வாழ்த்தினார்கள்.


*****

5 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page