மலையூர் என்கிற ஓர் ஊரில் ஓர் இளைஞன் இருந்தான். அவன் பெயர் முத்துக்குமரன். அவனுக்கு வாள் சுற்றும் வீரனாகனும்’னு ஆசை.
முத்துக்குமரன் அவனிடம் அப்பாவிடம் கேட்டான்.
“ அப்பா! நான் ஒரு வாள் சுற்றும் வீரனாக ஆக வேண்டும் அப்பா!” என ஆசையாகக் கேட்டான். ஆனால் முத்துக்குமரனின் அப்பா,
“ நீ ஒன்னுக்கும் லாயக்கில்லாத பய. அதெல்லாம் ஒனக்கு சரிப்பட்டு வராது. பேசாம இருக்கற வேலையைப் பாரு” எனச் சொல்லிவிட்டார்.
ஆனால் முத்துக்குமரனுக்கு ஆசையை அடக்கு முடியவில்லை.
மலையூரின் அருகே ஒரு மலையடிவாரத்தில் ஒரு புகழ்மிக்க அன்னாவி (ஆசிரியர்) வாள் சுற்றும் வித்தையை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். முத்துக்குமரன் அவரிடம் சென்றான்.
“ குருவே! வணக்கம்”
“ வணக்கம்! சொல்லப்பா…”
“ நான் வாள் சுற்றும் வீரனாக ஆக வேண்டும். எவ்வளவு நாட்கள் ஆகும் ஐயா!”
“ குறைந்தது பத்து வருடம்…”
“ இரவு பகல் பாராமல் உழைக்கத் தயாராக இருக்கிறேன். அப்படியென்றால் எத்தனை வருடம் ஆகும்?”
“ ம்… அப்படியென்றால் முப்பது வருடம்…”
முத்துக்குமரனுக்கு தூக்கி வாரிப் போட்டது.
“ என்ன குரு இப்படிச் சொல்கிறார். நான் கேட்டது அவருக்குச் சரியாகப் புரியவில்லை என நினைக்கிறேன்.” என மனதுக்குள் நினைத்துக் கொண்டு,
“ ஒவ்வொரு மணித்துளியும் அதற்காகப் போராடி கற்றுக்கொள்வேன் குருவே! எவ்வளவு சீக்கிரம் நான் வீரனாகலாம் குருவே!” என குரலை சற்றே உயர்த்திக் கேட்டான்.
“ புரிகிறது இளைஞனே! அப்படியென்றால் ஒரு எழுபது வருடம் ஆகும்” என்றார் குரு.
முத்துக்குமரனுக்கு ஒன்றும் புரியவில்லை. குருவுக்கு சரியாக காதில் விழவில்லை போல் இருக்கிறது. பரவாயில்லை. பிறகு கேட்டுக்கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டு,
“ என்னைச் சேர்த்துக் கொள்வீர்களா?” என்றுக் கெஞ்சினான்.
“ சரி! சேர்ந்துக் கொள்…” என்றார் குரு.
முதலில் குருவுக்குப் பணிவிடை செய்யும் வேலைகள் கொடுக்கப்பட்டன. உணவு சமைக்க விறகுகள் பொறுக்கிக்கொண்டு வந்தான். அருகில் உள்ள குளத்திற்குச் சென்று குடத்தில் நீர் கொண்டு வந்தான். வீட்டைக் கூட்டிச் சுத்தம் செய்தான். அடுக்களையில் சோறு சமைத்துத் தந்தான். தோட்டத்தில் வேலை செய்தான்.
நாட்கள் கழிந்தன.
“ எப்பொழுது வாள் சுற்றற் கற்றுத் தருவார்” என ஆவலாகக் காத்திருந்தான்.
அப்படி விறகுகள் பொறுக்கும் போதோ, நீர் கொண்டு வரும்போதோ, வீட்டைச் சுத்தம் செய்யும் போதோ, சோறு சமைக்கும் போதோ, தோட்டத்தில் களை எடுக்கும்போதோ, குரு மரக்கட்டையிலான வாளைக் கொண்டு, பின்னாலிலிருந்து திடீரென முத்துக்குமரனை அடிப்பார்.
அவன் எதிர்பார்க்காத சமயமாக இருக்கும். ஏதாவது வேலை செய்துக் கொண்டிருக்கும் போது, அடி விழும்போது, அவனால் தடுக்க முடியாது. இப்படி சில தடவைகள் நடந்து விட்டது.
பிறகு சுதாரித்துக் கொண்டான்.
ஒவ்வொரு நொடியும் கவனமாக இருக்கத் தொடங்கினான். அப்படியே மூன்று வருடங்கள் கழிந்தன. அவன் உடலும் மனமும் விழிப்பு நிலையிலேயே இருக்கப் பழகிவிட்டது.
பிறகு வாள் சுழற்றக் கற்றுக் கொடுத்தார். பெரிய வீரனாகிவிட்டான்.
கடைசி நாள்.
முத்துக்குமரன் குருவிடம்,
“ குருவே! முதலில் நான் அவசரப்பட்டேன். எனக்கு பொறுமையைக் கற்றுக்கொடுத்தீர்கள். மனசு கொதி நிலையிலேயே இருந்தால் நாம் எதையும் கற்றுக் கொள்ள முடியாது எனப் புரிந்துக் கொண்டேன். அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு என்பதை சொல்லாமல் சொல்லிப் புரிய வைத்தீர்கள். பொறுமை கடலினும் பெரிது எனப் புரிய வைத்தீர்கள். அவ்வப்போது திடீரென அடி அடித்து, எப்பொழுதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தினீர்கள். எதிர்காலத்தையே நினைத்துக் கொண்டிருந்தால், இந்த நொடியில் கவனமாக கற்பது கடினம். ஒவ்வொரு கணத்திலும் அழகைக் காண வேண்டும். ஒவ்வொரு அசைவிலும், ஒவ்வொரு அடியிலும், ஒவ்வொரு செயிலிலும் நாம் வாழவேண்டும் என புரிய வைத்தீர்கள். ஒன்றே செய். அதை நன்றே செய். அதை இன்றே செய். என்பதைக் கற்றுக்கொடுத்தீர்கள்.” என்றான்.
குரு அவனை ஆசீர்வதித்து அனுப்பினார்.
ஊருக்குத் திரும்பினான்.
முத்துக்குமரனின் அப்பா உட்பட எல்லோரும் அவனை மெச்சினார்கள்.
*****
Comentarios