தேனூர் என்ற ஊர்ல ஒர் ஆடு இருந்தது. அந்த ஆட்டிற்கு கரண்டி என்று பெயர் வைத்திருந்தார்கள். கரண்டிக்கு மானூரில் உறவினர்கள் இருந்தார்கள். ஒரு நாள், கரண்டி, தன் உறவினர்களைப் பார்ப்பதற்காக தன் பயணத்தைத் தொடங்கியது. உறவினர்களுக்குக் கொடுப்பதற்காக ஒரு குடம் நிறையத் தேன் எடுத்துக் கொண்டு, தேனூரிலிருந்து மானூருக்கு கரண்டி புறப்பட்டது. போகிற வழியில் ஒரு காடு இருந்தது. அக்காட்டைக் கடந்து தான் மானூருக்குப் போக வேண்டும்.
தேன் குடத்தைத் தூக்கிக் கொண்டு, கரண்டி காட்டின் வழியே நடந்து வந்துக் கொண்டிருந்தது.
அடர்ந்த காடு.
திடீரென இடி மின்னல் அடித்தது. சோ’வென மழைப் பிடித்துக் கொண்டது. கரண்டி ஒண்டுவதற்கு இடம் தேடியது. நல்லவேளையாக ஒரு சிறு குகை தென்பட்டது. அந்தத் தேன் குடத்துடன் குகையில் நுழைந்தது.
உள்ளே ஒரு சிங்கமும், ஒரு புலியும், ஒரு நரியும் இருந்தன. கரண்டிற்கு அதிர்ச்சியாகப் போய்விட்டது. அவைகளும் ஆட்டைப் பார்த்துவிட்டன.
“ ஆஹா! நன்றாக மாட்டிக் கொண்டோமே! சிங்கத்துக்கு நம்மைப் பார்த்ததும் எச்சில் ஊறி இருக்குமே! கூடவே புலியும் நரியும் இருக்கின்றன. ஒன்றுக்கொன்று பதறிக்கொண்டு என்னைக் கிழித்துத் திங்க அதிக நேரம் ஆகாது.” என கரண்டி எண்ணிக் கொண்டிருக்கும் போதே
சிங்கம் தன் வாயில் ஊறிய எச்சியை முழுங்கிக் கொண்டே,
“ ஆடே! வா வா… மழை நன்றாகப் பெய்கிறது. நனைந்து விடப் போகிறாய். இப்படி உள்ளே வா…பயப்படாதே!” என ஆசை வார்த்தைப் பேசியது.
புதிய இரை கிடைத்த சந்தோஷத்தில் புலியும்,
“ மழைக்காக ஒதுங்கினாயா?... நாங்கள் உன் நண்பர்கள் தான்... கிட்ட வா!” என்று மகிழ்ச்சியில் சொன்னது.
நரி பார்த்தது. தன் பங்குக்கு ஏதாவது சொல்லவேண்டும் என்று நினைத்தது.
“ நாங்களும் மழைக்காகத்தான் ஒதுங்கி இருக்கிறோம். நீ ரொம்ப அழகாக இருக்கிறாய். மழையில் நனைந்து தடுமன் வந்துவிடப் போகுது… தைரியமாக உள்ளே வா.” என நரி சொல்லில் விஷம் வைத்து தந்திரமாக அழைத்தது.
அப்பொழுது தான் கரண்டியின் அம்மா சொன்னது கரண்டிக்கு ஞாபகம் வந்தது.
“ அழகு மகளே! அறிவு நம்மை எல்லா ஆபத்திலிருந்தும் காப்பாற்றும். எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் தடுமாறி விடாதே! சோர்வடையாதே! கவலைப்படாதே!! கவலைப்படுவதால் ஒன்றையும் மாற்றிவிட முடியாது. வித்தியாசமாகச் சிந்தி. பிரச்சனைக்குள்ளேயே தீர்வும் இருக்கிறது.”
கரண்டி ஃப்ளாஷ் பேக்கிலிருந்து வெளியே வந்தது. கரண்டி சிரித்துக் கொண்டது.
“ நல்லது நண்பர்களே! உங்களின் விருந்தோம்பல் கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.” என்றது.
ஆடு நன்றாக ஏமாந்துவிட்டது என்ற முடிவுக்கு வந்த சிங்கம், ஆட்டின் இருப்பை இலகுவாக்க,
“ குடத்தின் என்ன வைத்திருக்கிறாய்?” என்று சாதாரண குரலில் கேட்டது. ஆட்டிற்கு ஒரு யோசனை வந்தது.
“ நண்பர்களே! இந்தக் குடத்தில் மருந்து இருக்கிறது. இதைக் குடித்தால் சாதாரணமானவர்கள் வலிமையாகலாம். வலிமையானவர்கள் கூடுதல் வலிமையாகலாம்.” என்றது கரண்டி.
சிங்கம், ஆட்டைச் சாப்பிடுவதற்கு முன் அந்த மருந்தைக் குடித்துவிட வேண்டும் என்று ஆசைப்பட்டது. சிங்கம் மெதுவாக எழுந்து ஆட்டை நெருங்கிக் கொண்டே,
“ ஓ! அப்படியா! எனக்குக் கொஞ்சம் குடிக்கத் தருவாயா?” என முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு கேட்டது.
“ உங்களுக்குத் தருவதற்கு எனக்கு என்ன பிரச்னை!. தாராளமாக தருகிறேன். நீங்கள் குடிக்கலாம். ஆனால் அதில் ஒரு பிரச்னை இருக்கிறது.”
“ என்ன பிரச்னை?” சிங்கம் ஆர்வத்துடன் கேட்டது.
“ இதில் இன்னொரு பொருள் சேர்க்க வேண்டும்” என்றது கரண்டி.
“ அப்படியா? என்ன பொருள்?” என்று கேட்டது சிங்கம்.
“அருகில் வா… உன் காதில் சொல்கிறேன்” என்று துணிவை வரவழைத்துக்கொண்டு சொன்னது கரண்டி.
“ ம்! சொல்லு..” என்றது அருகில் வந்த சிங்கம்.
“ இதில் ஒரு நரியில் வாலைச் சேர்க்க வேண்டும்.” என சிங்கத்தின் காதில் ரகசியமாகச் சொன்னது கரண்டி.
“ அவ்வளவு தானே! நரியின் வால் தானே… சேர்த்தால் போச்சு.” என்று சொல்லிக் கொண்டு சிங்கம் நரியின் மேல் பாய்ந்தது.
“ ஐயோ!” எனக் கத்திக்கொண்டு நரி குகையை விட்டு ஓடியது.
“ உன்னை விடுவேனாப் பார்” எனச் சொல்லிக் கொண்டு சிங்கம் கர்ஜித்துக்கொண்டே ஓடியது.
புலி நடந்ததையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்க,
“ புலியாரே! நீ எனக்கு நன்றி சொல்ல வேண்டும்” என்றது கரண்டி.
“ ஏன்?” எனக் கேட்டது புலி.
“ உண்மையில் புலியின் இதயத்தைத்தான் சேர்க்க வேண்டும். அதைச் சொல்லியிருந்தால் சிங்கம் உன்னை அடித்து சாகடித்திருக்குமே. உன்னைப் பார்த்தால் நல்ல புலி போல இருக்கிறாய்… அதுதான் சொல்லவில்லை.” என்றது கரண்டி.
புலிக்கு வயிற்றில் புளி கரைத்தது. புலி யோசித்தது.
“ ஒருவேளை சிங்கம் மறுபடி குகைக்கு வந்தால் ஆடு சொன்னாலும் சொல்லிவிடும். இந்த இடத்தை விட்டு உடனே சென்று விடுவது தான் நமக்கு நல்லது” என்று நினைத்துக் கொண்டு புலி
“ ஆடாரே! உம்மைச் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது. உடனே போகவேண்டும் வழியை விடும். நான் வருகிறேன்.” என்று சொல்லிக்கொண்டே கிளம்பியது.
“ மழை விட்டதும் போகலாமே!” என்றது கரண்டி.
“ ஆஹா! நம்மை மாட்டிவிடுவதற்குத் தான் ஆடு திட்டம் போடுகிறது..” என முடிவிற்கு வந்த புலி, ஆளை விட்டால் போதும் என பின்னங்கால் பிடரியில் பட ஓட்டம் எடுத்தது.
மழை நின்றது.
கரண்டி தேன்குடத்தைத் தூக்கிக்கொண்டு தன் பயணத்தைத் தொடர்ந்தது.
*****
Comments