ஒரு காட்டுல ஒரு குட்டிச் சிங்கமும் ஒரு குட்டிப் புலியும் அநாதையா ஓர் இடத்தில் சந்தித்தன.
“ ஒனக்கு அம்மா அப்பா இருக்காங்களா?”
“ இல்ல. கிடையாது. ஒனக்கு?”
“ எனக்கும் இல்ல…”
இரண்டும் விளையாடிக்கொண்டு, ஒன்றுக்கொன்று ஆதரவாக வளர்ந்தன. கிடைக்கிற உணவை பகிர்ந்து உண்டன. சிங்கக்குட்டியும் புலிக்குட்டியும் நன்கு வளர்ந்து வாலிப பருவம் வந்தன. அப்பொழுதும் இரண்டும் நட்பாக இருந்தன.
ஒரு நாள்
“ அமாவாசை முடிந்து நிலா கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பௌர்ணமி ஆகும் போது, அதாவது வளர்பிறையில் நமக்கு குளிர் அடிக்குது ” என்று சிங்கம் சொன்னது.
அதற்கு புலி,
“ கிடையாது. பௌர்ணமி முடிந்து நிலா கொஞ்சம் கொஞ்சமா தேய்ஞ்சி அமாவாசை ஆகும் போது, அதாவது தேய்பிறையில் நமக்கு குளிர் அடிக்குது” என்ற சொன்னது.
இரண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டன.
சிங்கம் சொல்வதை புலி ஏற்கவில்லை. புலி சொல்வதை சிங்கம் ஏற்கவில்லை. முதலில் எட்டி எட்டி படுத்துக்கொண்டே பேசிக் கொண்டிருந்தவை, பிறகு தலையை தூக்கி, எழுந்து, அருகருகே வந்து என்று கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி சத்தமாக பேசத்துவங்கின. தான் பிடிச்ச முயலுக்கு மூணே கால் என்கிற பாணியில் வாதம் உச்சத்திற்குச் சென்று கொண்டிருந்தது.
ஒரு கட்டம் வந்தது.
“ உன் பிடரி மயிறை வைத்துக்கொண்டு உன்னால் இப்படித்தான் சிந்திக்க முடியும்” என்று புலி சொன்னது.
“உடம்பு பூரா வரி வரியா இருந்தா இப்படித்தான் சிந்திக்க வரும்” என்று சிங்கமும் பதிலுக்குச் சொன்னது.
ஒருவரையொருவர் திட்டிக்கொண்டனர். கொதி நிலைக்குச் சென்ற விவாதம், சற்று அடங்கி,
“ சரி! பக்கத்தில் உள்ள துறவியிடம் கேட்டு விடுவோம்” எனச் சொல்லி துறவியிடம் சென்று நடந்ததைச் சொன்னார்கள்.
துறவி சிங்கத்தையும் புலியையும் பார்த்துச் சிரித்தார்.
“ காற்றினால் வருகிறது குளிர். காற்று வளர்பிறையிலும் வரும். தேய்பிறையிலும் வரும். அப்படிப்பார்த்தால் நீங்கள் இருவர் சொல்வதும் சரிதான்” என துறவி தெளிவுபடுத்தினார்.
சிங்கமும் புலியும் ஒன்றையொன்றைப் பார்த்துச் சிரித்துக் கொண்டன.
“ இனி இது போல சில்லறை விஷயத்துக்கெல்லாம் சண்டை போடக்கூடாது. ஒருவருக்கொருவர் வித்தியாசமான கருத்து இருந்தாலும் நட்புடன் இருப்போம்” என்று சொல்லி இரண்டும் மகிழ்ச்சியாக வாழ்ந்தன.
*****
Comments