ஓர் ஊரில் கேசவன் என்கிற மீனவன் இருந்தான். அவன் தன்னைவிட வேறு யாரும் புத்திசாலிகள் இல்லை என்று நினைப்பவன். எப்பொழுது கிண்டலும் கேலியாகவுமே பேசுவான். அது மட்டுமல்ல, மற்றவர்கள் சரியான முட்டாள்கள், அவர்களை எளிதாக ஏமாற்றலாம் என எண்ணுவான்.
ஒரு நான் கேசவன் குளத்தில் தூண்டிலைப் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தான். அந்த வழியாக முகிலன் என்கிற பணக்கார வாலிபன், விலையுயர்ந்த ஆடை ஆபரணங்களை அணிந்துக் கொண்டு நடந்து வந்தான்.
முகிலன் அந்த குளத்தருகே வந்ததும், கேசவன் தூண்டிலைப் போட்டு மீன் பிடிப்பதை ஆர்வமாகப் பார்த்தான். கேசவன் மேலாடையில்லாமல் மிகுந்த ஏழ்மையில் இருப்பதைப் பார்த்து வேதனைப்பட்டான். அதே நேரம், கேசவன் தூண்டிலில் மண்புழுவைக் கோர்த்து நீரில் தூக்கிப் போடுவதையும், மீன் தூண்டிலில் மாட்டிக்கொண்டு வருவதையும், வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான். இதுவரை இப்படி மீன் பிடிப்பதை அவன் பார்த்ததே இல்லை.
“ ஐயா! ஆச்சரியமாக இருக்கிறதே!! இந்தக் குளத்துக்குள் யார் இருக்கிறார்? ஒவ்வொரு மீனாக தூண்டிலில் கோர்த்து அனுப்புகிறார்களே!!!” என்று ஆச்சரியமாக கேட்டான்.
கேசவன் நினைத்தான்.
“ சரியான முட்டாள் பயலா இருப்பான் போலிருக்கே! பார்த்தா பெரிய குடும்பத்து பையன் மாதிரி இருக்கான். விலையுயர்ந்த ஆடை அணிகலன்கள் எல்லாம் போட்டிருக்கான். ஆனா… ரொம்ப வெகுளியா இருக்கான். முன்ன பின்ன ஊர் உலகத்தை பார்த்தது இல்லை போலிருக்கு. குளத்துக்குள் யார் இருக்கிறா’ என்று அல்லவா கேட்கிறான்… இவனை நல்லா ஏமாத்தலாம்” என்று மனசுக்குள் நினைத்தான்.
“ ம்! குளத்துக்குள் யார் இருக்கறா? என்றா கேக்குற...ஒங்க அப்பன் தான் இருக்காரு” என்று கிண்டலாகச் சொன்னான் கேசவன்.
அதற்கு முகிலன், “ எங்க அப்பா இறந்து சில வருடங்கள் ஆகிடுச்சே!” என்றான் அப்பாவியாக. கேசவன் சற்று அதிர்ந்தான். இருந்தாலும் சுதாரித்துக்கொண்டு,
“ சொர்க்கத்திலிருந்து உங்கள் அப்பாவை அனுப்பி வைத்தார்கள்.”
“ ஓ! அப்படியா? நான் என் அப்பாவைப் பார்க்கலாமா?” என்றான் முகிலன்.
இதற்கு என்ன சொல்லி சமாளிக்கலாம் என கேசவன் சற்றே யோசித்துவிட்டு,
‘ ம்ஹீம்! முடியாது. அவர் கண்ணுக்குத் தெரியாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார். உங்கள் அப்பா இல்லையென்றால் எனக்கு வருமானமே கிடையாது. அவர் குளத்திலிருந்து வெளியே வந்தால் அவ்வளவு தான், மறுபடி வரமாட்டார்” என்று ஏதேதோ பிதற்றினான் கேசவன்.
“ ஐயோ! அப்படியா? அப்ப வேண்டாம். பரவாயில்லை..” என வாலிபன் இரக்கப்பட்டான். அவன் இரக்கப்படுவதை சாக்காக வைத்துக்கொண்டு
" ஒங்க அப்பா ஒரு நாள் சொன்னாரு. கொளத்துக்குள்ள ரொம்ப குளிருதாம். ஒன் சட்டையை கழட்டி கொடு. அவருக்கு ரொம்ப உதவியா இருக்கும்.” என்றான் கேசவன். உடனே முகிலன் தன் விலையுயர்ந்த ஆடையைக் கழற்றிக் கொடுத்தான். கேசவனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. முகிலனை வெற்றிகரமாக ஏமாற்றியாச்சே!
“ சரி. நான் போய்ட்டு வாரேன். அப்பாட்ட நான் கேட்டதா சொல்லுங்க ஐயா!” என்று சொல்லிவிட்டு முகிலன் போய்விட்டான்.
****
சில நாட்கள் கழித்து, முகிலன் மீண்டும் அங்கே வந்தான். கேசவன் மீன் பிடித்துக்கொண்டிருந்தான்.
“ அப்பா எப்படி இருக்காரு?” என்று விசாரித்தான்.
“ இப்ப குளிர் இல்லையாம்..” என கேசவன் சொன்னான். “ ஆனா என் மகன் வந்தா அவன் நகைகளை கேட்டு வாங்கி வை என்றார்” என சோகமாகச் சொன்னான்.
“ அப்படியா? ஆனால் எதுக்கு அவருக்கு நகைகள்?” என முகிலன் கேட்டான்.
கேசவன் சற்று திக்கு முக்காடிப்போனான்.
“ ஏன்னு தெரியல. ஏதோ பழைய பாக்கி இருக்காம். யாருக்கோ குடுக்கனுமாம். ஒனக்கு விருப்பம் இல்லைன்னா குடுக்க வேண்டாம். ஒங்க அப்பா கவலைப்பட்டா, கவலைப்பட்டுட்டு போகட்டும்” என்று கேசவன் சொல்லில் விஷம் வைத்துப் பேசினான்.
“ ஓ! அப்படியா? சரி குடுத்துவிடலாம்” என்றதும் கேசவனுக்கு மகிழ்ச்சி தாளவில்லை.
“ ஆனால் அதுக்கு முன்னாடி சிலவற்றை ஒங்கள்ட்ட கேட்டு தெரிஞ்சிக்க ஆசைப்படுறேன்” என முகிலன் சொல்ல,
“ தாராளமா கேளு” என்றான் கேசவன்.
“ அப்பா இல்லையென்றால் ஒங்களுக்கு மீன் கிடைக்காது இல்லையா?”
“ ஆமாம்…”
“ வருமானம் இருக்காது…”
“ ஆமாம்…”
“ ஒரு வருடத்தில், அப்பா கொடுக்கும் மீன்களை விற்று எவ்வளவு சம்பாரிப்பீர்கள்?”
“ கிட்டத்தட்ட ஆயிரம் பொற்காசுகள் இருக்கும்.”
“ அப்படியா?” என முகிலன் கேட்டுவிட்டு, குரலைச் சற்று உயர்த்தி “ ஆயிரம் பொற்காசுகளா! அப்படியானால் அப்பாவின் உழைப்புக்கு கூலியாக உங்கள் வருமானத்தில் பாதி 500 பொற்காசுகளை, அவரின் மகனான என்னிடம் கொடுங்கள்” என்று சொன்னான்.
கேசவன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.
“ ஐயோ! அது முடியாது.”
“ அப்படியா! சரி! நான் இப்பொழுதே ஊரைக் கூட்டி நியாயம் கேட்கிறேன்” எனச் சொல்லிவிட்டு முகிலன் நகர்ந்தான்.
ஊரைக்கூட்டினால் நம் மானம் கப்பல் ஏறிவிடுமே என பயந்து,
“ இதோ! நீங்கள் கொடுத்த சட்டை. ஆள விடுங்க” என சட்டையை முகிலனிடம் கொடுத்து விட்டு கேசவன் தலை தெறிக்க ஓடினான்.
“ மீனை யார் கோர்த்து தருவது என விளையாட்டாக கேட்டேன். அதற்கு பொய் சொல்லிவிட்டார். பொய் சொன்னாலும் பொருந்தச் சொல்லாமல் என் அப்பாவையும் இழுத்துவிட்டார். என் சட்டையைக் கேட்ட பொழுது, அவருடைய ஏழ்மையைக் கருதி, என் சட்டையை கழற்றிக் கொடுத்தேன். ஆனால் என்னை ஏமாளி என்று கருதிவிட்டார். இப்பொழுது நகைகளைக் கேட்கிறார். அதற்குத்தான் ஊரைக்கூட்டுவேன் என பயமுறுத்தினேன். இனி யாரையும் ஏமாற்ற மாட்டார் என நினைக்கிறேன்” என தனக்குள் பேசிக்கொண்டு முகிலன் நடந்தான்.
*****
Comments