புதைபடிவ எரிசக்தி (Fossil Fuel) தீர்ந்து போனால், அதை நம்பியே கட்டப்பட்டுள்ள மனிதகுல வாழ்க்கை என்னவாகும்?
விளைச்சலுக்கு, விற்பதற்கு, சமைப்பதற்கு, பயணிப்பதற்கு, கொண்டாடுவதற்கு என வாழ்க்கையின் எல்லா தளங்களுக்கும், புதைபடிவ எரிசக்தியை பயன்படுத்தினால், என்றோ ஒரு நாள் அது தீர்ந்து போகும். புதைபடிவ எரிசக்தியை நம்பி தன் வாழ்வையே கட்டியமைத்திருக்கும் மனிதன், அது தீர்ந்து போகும் போது, கையறு நிலையில் நிற்பானா? இந்த நாகரீகம் ஒரேயடியாக அழிந்துவிடுமா? இதற்கு வேறு வழியே இல்லையா? – இப்படி பல கேள்விகள் எழுகின்றன.
அப்படி கேள்விகள் எழும்போது, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (Renewable Energy) எட்டிப் பார்த்து, ‘நான் இருக்கிறேன். கவலைப்படாதே’ என உற்சாகம் ஊட்டுகிறது.
அது என்ன புதுப்பிக்கத்தக்க எரிசக்தி? அதன் முக்கியத்துவம் என்ன? அரசாங்கங்களும் நீங்களும் நானும் உடனடியாக செய்யவேண்டியது என்ன? காலநிலை மாற்றம் குறித்து அனைத்து நாட்டுத் தலைவர்களும் ஒன்று கூடி விவாதித்திருக்கிற இந்த சூழ்நிலையில் இதையெல்லாம் பற்றி நாம் சிந்தித்தாகவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்ன என்று அறியும் முன்பு புதைபடிவ எரிசக்தி என்றால் என்ன என்றும் முதலில் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
நிலத்திலிருந்து உறிஞ்சப்படும் எண்ணெய், வெட்டப்படுகிற நிலக்கரி, எடுக்கப்படுகிற இயற்கை வாயு என, இன்னும் சில ஆண்டுகளில் முடிந்துவிடப்போகிற, மூல வைப்புகளிலிருந்து தயாரிக்கிற எரிசக்தியை புதைபடிவ எரிசக்தி என்கிறோம். ஆனால் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்பது என்றைன்றைக்கும் முடிந்துவிடாத மூலங்களிலிருந்து எடுக்கப்படுகிற எரிசக்தி. அமுத சுரபி போல் அள்ளிக் கொடுத்துக் கொண்டே இருக்கும் மூலங்கள் மூலம் அவை பெறப்படுகின்றன.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பெறப்படும் வழிகள்
காலமெல்லாம் கரையாத சூரியனின் சூட்டிலிருந்தும், ஒளியிலிருந்தும் உண்டுபண்ணுகிற solar energy என்று சொல்லப்படுகிற சூரிய ஒளி சக்தி, பூமியைச் சுற்றிச் சுற்றி அடித்துக்கொண்டிருக்கும் காற்றின் வேகத்திலிருந்து எடுக்கப்படுகிற wind power energy என்று அழைக்கப்படுகிற காற்று அழுத்த எரிசக்தி, தடையின்றி ஓடும் தண்ணீரின் மூலம் கிடைக்கும் hydro power energy என்கிற நீர் எரிசக்தி ன்று மொன்று வகையான எரிசக்திகளை நாம் முக்கியமான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்று கூறலாம்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்பது அது மட்டுமல்ல. பூமியின் மேலோட்டில் உள்ள சூட்டின் வெளிப்பாட்டில் தயாரிக்கிற thermal energy என்கிற வெப்ப எரிசக்தி; மண்டிக்கிடக்கிற மரம், செடி கொடிகளிலிருந்து உருவாக்குகிற bio-mass energy எனச் சொல்லப்படுகிற தழை எரிசக்தி; கள்ளங்கபடமின்றி வியாபித்திருக்கிற கடலின் அலைகள் மூலம் கிடைக்கிற ocean energy என்கிற கடல் எரிசக்தி என்று மேலும் பலவற்றையும் கூறலாம்.
திடீரென தீர்ந்து போகிற மூலத்திலிருந்து உருவாக்கப்படுகிற புதைபடிவ எரிசக்தியை நாம் நம்பி இருப்பதா அல்லது காலத்திற்கும் தீர்ந்துபோகாத மூலத்திலிருந்து தயாரிக்கப்படுகிற மாற்றுஎரிசக்தி என்று அழைக்கப்படுகிற புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நாம் மேம்படுத்துவதா?
வங்கிக்கணக்கில் பணம் தீர்ந்தால், தீர்ந்துவிடும் பணஅட்டை (Credit Card) வேண்டுமா அல்லது தீரவே தீராத, எங்கு உரசினாலும், எப்பொழுது உரசினாலும் பணம் எடுக்கலாம் என்ற பணஅட்டை வேண்டுமா என்ற கேள்விபோல் உள்ளது. நிச்சயம் நாம் எப்பொழுது உரசினாலும் பணம் வரும் பண அட்டையைத்தான் தெரிவு செய்வோம்; அதுபோலவே புதுப்பிக்கத்தக்க எரிசக்திதான் நமது தெரிவு; உலகின் தெரிவு.
புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு ஏன் நாம் மாற வேண்டும்?
புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறினால் நமது பருவநிலை சீராகும். வாட்டி வதைக்கிற வறட்சி காணாமல் போகும். வெடித்து சிதறும் வெள்ளம் இல்லாமல் போகும். காட்டைத் தின்றுத் தீர்க்கும் தீ அணைந்து போகும். சுற்றுச் சூழல் வாழத்தகுந்ததாக இருக்கும்.
அது மட்டுமல்ல, Greenhouse gases வெளிப்படாததால் காற்று மாசுபடாது. ஓசோன் படலத்தில் ஓட்டை விழாது. மனிதர்கள் நோயின்றி வாழலாம். எரிசக்திக்காக நிலத்தையும் நீரையும் பயன்படுத்தும் அளவு குறையும். மனிதர்கள் மட்டுமல்ல மற்ற உயிரனங்களான மிருகங்கள், பறவைகள், தாவரங்கள், கடல் வாழ் உயிரனங்கள் என எல்லாமும் மகிழ்ச்சியாக வாழலாம்.
மொத்தத்தில், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு மாறினால் நாமும் நமது குழந்தைகளும் அவர்களது குழந்தைகளும் நல்ல வாழ்க்கை வாழலாம். இல்லையென்றால் நரக வாழ்க்கைக்கு இந்த உலகம் செல்லவிருக்கிறது என்று நம்பலாம்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியும் பொருளாதாரமும்
புதைபடிவ எரிசக்தியை உற்பத்தி செய்ய செலவை விட, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தயாரிக்க ஆகும் செலவு குறைவு. எனவே ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரமும் மேம்படும். நிலத்திலிருந்து வெட்டி எடுக்கப்படுகிற நிலக்கரியோ, உறிஞ்சப்படுகிற பெட்ரோல் போன்ற எண்ணையோ சில நாடுகளில் மட்டும் கிடைப்பதால், மற்ற நாடுகள் அதை இறக்குமதி செய்ய அதிக பொருட்செலவை செய்ய வேண்டி இருக்கிறது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அந்தந்த நாடுகளிலேயே உற்பத்தி செய்யமுடியுமென்பதால், செலவும் குறையும். உள்நாட்டு வேலை வாய்ப்பும் அதிகமாகும். எல்லோருக்கும் எரிசக்தி கிடைக்கும். வளமான, சுகாதாரமான, பாதுகாப்பான வாழ்க்கை கிடைக்கும். சுத்தமான சுற்றுச்சூழல், பக்குவமான பருவநிலை, நாளும் நலவாழ்வு, பொருத்தமான பொருளாதாரம், விரும்பும் வேலைவாய்ப்பு, மகிழ்ச்சியான மனிதகுலம், சமத்துவ சமூகம் என வாழ்க்கை சுகந்தமாகும்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்கை நோக்கி பல நாடுகள் நகர்கின்றன.நாடுகள் மெல்ல மாறிவருகின்றன. நீர்வழி போக்குவரத்தை நிர்மாணித்திருக்கின்றன. நிலவழிச் சாலைகளை நீடித்திருக்கின்றன. அரும்பெரும் அணைகளைக் கட்டியிருக்கின்றன. அதன் மூலம் மின்சாரம் கொண்டுவர முனைந்திருக்கின்றன. அதே வேளையில் ஆபத்தான அணுசக்தியிலிருந்து வெளியேற ஆலோசித்துவருகின்றன.
நீங்களும் நானும் என்ன செய்யலாம்?
புதைபடிவ எரிசக்தி மூலம் கிடைக்கிற மின்சாரத்தை உபயோகப்படுத்துவதை விட்டுவிட்டு சூரிய ஒளி மின்சார படலங்களை (Rooftop Solar Panel ) வீட்டுக்கூரையிலோ, வீட்டு முற்றத்திலோ வைக்க ஏற்பாடு செய்யலாம்.
கொஞ்சம் நிலம் கூடுதலாக இருந்தால், காற்றின் மூலம் சக்தி உண்டாக்கும் Wind Turbine என்கிற காற்றாடிகளை நிர்மாணிக்கலாம்.
சூரியனிலிருந்து கிடைக்கும் சூட்டை வைத்து உணவு சமைக்கக்கூடிய Solar Oven என்கிற சூரிய அடுப்பு கொண்டு உணவை சமைக்கலாம்.
உங்கள் பண்ணைகளில் நீண்ட தூரத்திற்கு நீர் வரத்து இருந்தால், Hydro Power என்கிற அமைப்பைக் கொண்டு பண்ணை வீட்டை எரியூட்டலாம்.
வீட்டில் ஓர் இடத்தில் நீரை சேமித்து Solar Water Heater மூலம் நீரை எரியூட்டி பயன்படுத்தலாம்.
Solar Air-Conditioning முறையைப் பயன்படுத்திக் கூட வீட்டை குளுமைப் படுத்தலாம்.
முக்கியமாக, மக்களாகிய நாங்கள் இதையெல்லாம் செய்கிறோம், நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்று உள்ளூர் மற்றும் நாட்டு அரசாங்கங்களை வற்புறுத்தலாம்.
ம்ஹூக்கும்! இதெல்லாம் ஆகிற காரியமா? என நாம் யோசித்து, இதெல்லாம் முடியாது என முடிவுக்கு வந்து, தற்போதைய வாழ்க்கை முறையையேத் தொடர்ந்தால், நம் குழந்தைகளையும் அவரது குழந்தைகளையும் நரக வாழ்க்கைக்கு நாமே தள்ளிவிடுகிறோம் என்பதே பொருள். என்ன செய்யப்போகிறோம்?
Picture Courtesy: SBS Tamil Radio, Australia
*****
Comments