இரண்டு வருடங்களுக்கு முன்பு கோவிட் தொற்று பரவல் செய்தி வந்த போது, அரக்க பரக்க எல்லோரும் கடைகளுக்கு விரைந்து, பொருட்களை வாங்கித் தீர்த்தார்கள். அந்தப் பழக்கம், கோவிட் தொற்று அதிகரித்த வேளையில், வீட்டிலிருந்து இணையத்தின் மூலம் பொருட்களை ஆர்டர் செய்யும் வழக்கமாகிப் போனது. அந்த வழக்கம் இப்பொழுது கோவிட் தொற்று வந்த மூன்றாவது வருட துவக்கத்தில், மனிதத் தொடர்புகள் அற்ற நுகர்வு நெறியாக மாறிப்போனது.
இந்த புதிய நுகர்வு முறை, இனி வருங்காலங்களில் நமது சமூகத்தின் பயனீட்டாளர் பண்பாடாகவே மாறிப்போகுமா? என்ன நடக்கும்? பெருங்கடைகள் நிறைந்த பேரங்காடிகளில் வழக்கமாக இருக்கும் கூட்டம் குறைந்து போனது ஏன்? வணிகமும், பயனாளிகளின் கலாச்சாரமும் எதை நோக்கி நகர்கிறது?
அடிச்சிப் பிடிச்சிப் பொருள் வாங்கிய காலம்
லாக் டவுன் செய்தி வந்ததும், தலைதெறிக்க ஒடி, கடைகளிலிலிருந்த அலமாரிகளை ஒரேயடியாக காலி செய்ததை மறக்க முடியுமா? முக்கியமாக டாய்லெட் பேப்பர்கள் இருந்த அறைகள் நிமிடங்களில் மாயமாகிப்போனதை மறக்க முடியுமா? இந்த விசித்திர நடத்தையைப் பார்த்து, ‘மனிதர்கள் சிந்தித்துத் தான் செயல்படுகிறார்களா? இப்படி நடந்துக்கொள்கிறார்களே’ என சிலர் விவாதிக்க, ‘இப்படி செய்யவில்லையென்றால், பிழைக்கத்தெரியாதவர் என்று சொல்லிவிடுவார்கள்’ என மற்றும் சிலர் விவாதிக்க, அந்தக் காலத்தையும் கடந்து வந்ததை மறக்க முடியுமா?
‘இதெல்லாம் பேரிடர் காலத்தில் சகஜமப்பா!’ என, ஒரு இடர் வரும்பொழுது மனிதர்கள் எப்படி நடந்துக்கொள்வார்கள் என்கிற வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுணர்ந்த காலத்தைத் தான் மறக்க முடியுமா?
வரவு பத்தணா, செலவு எட்டணாவா?
அப்பொழுது மாநில எல்லைகள் மூடப்பட்டன. தாராளமாக கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்குவதில் நிறைய தடைகள் வந்தன. வீட்டு உள்ளிருப்பு கட்டாயமாக்கப்பட்டது. பொழுதுபோக்கு சேவைகள் நிறுத்தப்பட்டன. வெளியில் போய் சாப்பிடுவது முடியாத ஒன்றாகிப்போனது. அதுவரை வரவு எட்டணா, செலவு பத்தணா என்று இருந்த நிலை, தலைகீழாய் மாறி செலவு செய்வது குறைந்து போனது. போக்குவரத்து, விடுதிச் சேவைகள், பொழுதுபோக்கு சேவைகள், விடுமுறைப் பயணங்கள் போன்றவற்றிக்கு வழக்கமாகச் செய்யும் செலவுகள் வெகுவாய் குறைந்து போனது.
பலருக்கு இப்படியான செலவுகள் குறைந்தாலும், கையில் காசு தங்கவில்லை. ஏன் தெரியுமா? உணவுக்கும், மதுபானங்களுக்கும் ஆன செலவு கூடிப்போனது. அதற்கு, மன உளைச்சலும் ஒரு காரணம் என்று அறியப்படுகிறது. அது மட்டுமல்ல, வீட்டிலும் தோட்டத்திலும் கவனம் அதிகமாகக் குவிந்ததால், வீட்டிற்குத் தேவையான எலக்ட்ரானிக் பொருட்கள், தளவாடங்கள், செல்லப் பிராணிகள் மற்றும் அவைகளுக்குத் தேவையானப் பொருட்கள் என செலவு அதிகரித்தது. பொழுது போக்கு அம்சங்களுக்குத் தேவையான ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கான செலவும் கூடியது.
இப்படி இருக்கும் நடைமுறைகள் வழக்கமாகி, நிரந்தர பண்பாடாக ஆகிவிடுமா என்று இப்பொழுது உடனடியாக சொல்லமுடியாது என்றும் நிபுணர்கள் கூறினாலும், போன மாதம் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி ஒன்று அதிர்ச்சியளிக்கிறது. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில், 7500 குடும்பங்களை ஆய்வு செய்தார்கள். அந்த ஆய்வில், பயனீட்டாளர்கள் நடத்தையில் நீண்டகால மாற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவே சொல்லப்படுகிறது.
கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்
உங்களுக்கு நினைவிருக்கிறதா? உலகம் 1920களில் எதிர்கொண்ட முதல் உலகப்போர் மற்றும் ஸ்பானிஷ் ஃப்ளூ தொற்றுக்குப்பிறகு, பொருளாதார நடவடிக்கை திமிறிக்கொண்டு மேலெழுந்தது. மேற்கத்திய உலகில் பொருளாதாரச் செழிப்பு மேலோங்கியது. ஒருவித கலாச்சார விறுவிறுப்பு எல்லா இடத்திலும் பற்றிக்கொண்டது. அப்படி சில வருடங்களாக அடக்கி வைக்கப்பட்ட ஆசைகளைத் தீர்த்துக்கொள்ள, கையில் இருக்கும் சேமிப்பை ‘தண்ணி’ யாக செலவு செய்யும் பழக்கம் மறுபடியும் வரலாம் என கருதுகின்றனர்.
தொற்றுக் கட்டுப்பாடுகள் தளரத் தளர, கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்கிற பழி தீர்க்கும் படலம், நுகர்வு பழக்கத்தில் வருவதாக கணிக்கின்றனர். புதிய கார்களை வாங்கவோ, இருக்கும் வீட்டை புதுப்பிக்கவோ அல்லது குடும்ப விடுமுறையை உல்லாசமாக அனுபவிக்கவோ கையில் இருக்கும் கூடுதல் பணத்தை செலவு செய்யும் வாய்ப்பு இருக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பில்லியன் டாலர்களை கூடுதலாக சேமிப்பு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. National Australia Bank செய்த ‘வங்கி காலாண்டு பயனீட்டாளர் ஆய்வில்’ வேறு ஒரு செய்தியும் காணப்படுகிறது. அதில், கோவிட் தொற்று நோய், ‘செலவு செய்வதில் எச்சரிக்கை தேவை’ என்ற எச்சரிக்கை உணர்வை பயனீட்டாளர்கள் மத்தியில் உருவாக்கியிருப்பதாகச் சொல்கிறது. அந்த ஆய்வில் 37 சதவீதம் பேர் தங்கள் பணத்தை எங்கு செலவழிக்கிறோம் என்பதில் கவனமாக இருப்பதாகவும், கிட்டத்தட்ட 43 சதவீதம் பேர் உள்ளூர் வணிகங்களை ஆதரிப்பதாகவும் சொல்லியுள்ளனர்.
நீ யாரோ, நான் யாரோ
தரையில் நடந்து வந்த வியாபாரம் இப்பொழுது திரையில் நடக்கத் துவங்கிவிட்டது. யாரும் யாருடனும் கலந்து பேசி பொருட்களை வாங்கவோ, விற்கவோ வேண்டாம். அமைதியாக, கணினியிலோ, கைபேசியிலோ சில கிளிக்குகள் செய்தால் போதும். நீ யாரோ, நான் யாரோ என்கிற ரீதியில் வர்த்தகம் நடக்கிறது.
எங்கு பார்த்தாலும் QR code நீக்கமற நிறைந்து இருக்கிறது. ஸ்மார்ட் போன்களை அல்லது கார்டுகளைக் கொண்டு வணிகம் நடக்கத் துவங்கிவிட்டது. கடைகளுக்குள் செல்லாமலேயே ‘curbside pick-up’ செய்துகொள்ளலாம். இல்லையென்றால் இருக்கவே இருக்கு home delivery. ‘பதினைந்தே நிமிடங்களில் மளிகைப் பொருட்கள் உங்கள் இல்லம் தேடி வரும்’ என்ற விளம்பரத்தோடு பல புதிய தொழில்கள் 2021ல் தொடங்கப்பட்டதே அதற்கு சாட்சி.
நெதர்லாந்தில் நடந்த ஆராய்ச்சி ஒன்றில், இந்த ‘திரை மறைவு’ வியாபாரப் பழக்கம் நமது நீண்ட நாளையப் பழக்கமாக மாறும் என்றும், கையில் காசு புழங்கும் பழக்கம் படிப்படியாக மறையும் என்றும் தெரிவதாக கண்டறிப்பட்டிருக்கிறது. அப்படியென்றால் எதிர்காலத்தில் என்ன நடக்கும்?
பல பலகணி நுகர்வு
பல கடையில் சென்று வாங்கும் பழக்கம் இப்பொழுது பல முறையில் வாங்கும் பழக்கமாக உருமாறிவிட்டது. உதாரணமாக, ஒரு கடைக்குள் ஒருவர் நுழைவதாக வைத்துக்கொள்வோம். அங்கு உள்ள headphone-இல் தான் வாங்கப்போகும் பொருளைப்பற்றி அவர் விபரங்களைக் கேட்கலாம். பிறகு இணையத்திற்குச் சென்று, வலையொளியில் உள்ள காணொளிகளைப் பார்க்கலாம். சந்தையில் கிடைக்கும் சில மொபைல் செயிலிகள் மூலம் அந்தப் பொருட்களை எப்படி பயன்படுத்துவது என்று செய்து பார்க்கலாம். (எடுத்துக்காட்டு IKEA Place apps). ஏற்கனவே வாங்கியவர்கள் சொல்லுகிற மதிப்பீடுகளைக் கேட்கலாம். வெவ்வேறு கம்பெனிக்காரர்களின் விற்கும் விலையை ஒப்பிட்டுப் பார்க்கலாம். பிறகு வாங்குவதா அல்லது வேண்டாமா என்று முடிவு செய்யலாம்.
இவ்வாறாக, பொருளை வாங்குவதற்கு முன்பு அல்லது சேவையைப் பெறுவதற்கு முன்பு அதை ‘பயன்படுத்திப் பார்த்து வாங்கும் கலாச்சாரம்’ பெருகி வருவதை பார்க்க முடிகிறது. இது பொருட்களை வாங்குவதில் மட்டுமல்ல. ஒரு பல்கலைக்கழகத்தில் சேரவேண்டுமென்றாலும், ஒரு மருத்துவரைச் சந்திக்க வேண்டுமென்றாலும், ஒரு பொருட்காட்சி சாலையை சுற்றிப் பார்க்க விரும்பினாலும் இப்படி பல முறைகளில் ‘முன்கூட்டியே முயற்சி’ செய்து பிறகு வாங்கவோ, சேவையைப் பெறவோ முடியும்.
மனித ஆசை மாறாது
நேரடி மற்றும் இணையவழி நுகர்வு கலந்த கலாச்சாரம் எனும் புதிய நுகர்வு போக்கு கொரோனா தொற்றினால் நம்மிடையே தொற்றிக்கொண்ட பழக்கம் எனலாம். இந்த போக்கு, நீண்ட காலத்திற்கு நம்மிடையே தங்கி அதுவே சமூகத்தின் பண்பாடாக ஆகிவிடும் என்றுதான் வல்லுனர்கள் கருதுகிறார்கள். இந்த மாற்றம் நிகழ்ந்தாலும், நுகர்வு கலாச்சாரத்தை, எப்பொழுதும் தனக்கு வசதியாகவும், கலகலப்பைக் கொடுப்பதாகவும், பொருள் பதிந்ததாகவும் மாற்றிக்கொண்டே இருக்கும் மனித ஆசை மட்டும் மாறாது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
*****
Comments