top of page

தமிழே என் உயிர் - கவிஞர் தஞ்சை ம. பீட்டர் - பாராட்டுரை

Writer's picture: John B. ParisuthamJohn B. Parisutham

பாராட்டுரை


கவிஞர். தஞ்சை. ம. பீட்டர் அவர்களை, பால்ய பருவத்திலிருந்து எனக்குத் தெரியும். தஞ்சையில், பள்ளிப் படிப்பின் போது பக்கத்து பக்கத்து வீட்டில் குடியிருந்தோம். அறுபது வருடங்களுக்கு மேலாக அவரோடு பழகியிருக்கிறேன் என்கிற முறையில், அவரது இந்த நூலுக்கு என் பாராட்டுரையை சமர்ப்பிப்பது எனக்குப் பெருமையாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இந்த நூலில் கவிஞர் எழுதிய மூன்று நாடகங்கள் உள்ளன. குயிலி, தமிழுக்கு உயிரென்று பேர், உறவே உறவு, என்று பெயர் கொடுத்திருக்கிறார்.

மூன்றையும் படிக்கும் போது அதில் உள்ள கதாபாத்திரங்கள் கவிஞரையும், அவரது தந்தையாரையும், அவரது தாயாரையும் பிரதிபலிப்பதைக் கண்ணுற்றேன். அதையே இந்தப் பாராட்டுரையில் வடிக்கிறேன்.


முதலில் கவிஞரின் அப்பா. 

  • ஏ. ஒய். மரியசூசை என்பது அவரது இயற்பெயராக இருந்தாலும் எங்களுக்கும் தஞ்சை மக்களுக்கும் ‘பைண்டர்’ என்றே தெரியும். புத்தகங்கள் பைண்ட் செய்யும் கடையை சிறப்பாக நடத்தி வந்தார். அது மட்டுமல்ல அவர் ஒரு முற்போக்கு கட்சியின் வட்டச் செயலாளரும், மாவட்டத்தில் முக்கிய பிரமுகராகவும் இருந்தார். அதன் துணைக் கொண்டு சமூக முன்னேற்றப் பணிகளில் ஈடுபடுவார். துணிவும் பணிவும் ஒரு சேர இருக்கும் தலைமைப்பண்பைக் கொண்டவர். 

  • ‘குயிலி’ நாடகத்தில், சிவகங்கைச் சீமையைப் போரிட்டுப் பிடித்த ஆங்கிலேயர், காளையார் கோவிலில் தன் கணவர் முத்துவடுகநாதரைக் கொன்று விட்டனர் என்று தெரிந்தும், வேலுநாச்சியார், கிஞ்சித்தும் அச்சமின்றி, துணிந்து, தன் படை கொண்டு சிவகங்கயை மீட்டக் காட்சிகளை கவிஞர் எழுதியுள்ளார். அவரது தந்தையாரின் துணிவையும், தலைமைப்பண்பையும் உள்வாங்கியதால் தான் சிறப்பாக எழுத முடிந்தது என்பது திண்ணம். 

  • குயிலி என்கிற வீரப்பெண்மணியின் தந்தை, ஒரு காட்சியில், கூறுவார்: ‘கத்துகிட்ட வித்தை எப்பவுமே வீணாகாது’. அது உண்மை. பல தடவை கவிஞரின் தந்தையார் நடத்திய பைண்டிங் கடைக்குப் போயிருக்கிறேன். அப்பொழுது கவிஞரும் அங்கு இருப்பார். அவரது தந்தையாரிடமிருந்து எல்லா வித்தைகளையும் கற்றுக்கொள்வதைக் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். அதனால்தான் அந்த வசனம் வந்து விழுந்திருக்கிறது. 

  • கவிஞரின் தந்தையார் ஒரு கலைஞர். நாடகங்கள் நடிப்பது, இலக்கியக் கூட்டங்களிலும் அரசியல் கூட்டங்களிலும் சமூகக் கூட்டங்களிலும் கலந்துக்கொள்வது என வாழ்நாள் முழுக்க சமூகத்திற்காக பணி செய்த சமூக சேவகர். அதனால் தான் கவிஞரின் 12வது வயதிலேயே ஒரு நாடகத்தை எழுதி எங்களையெல்லாம் அதில் நடிக்க வைத்தார். நாங்கள் குடியிருந்த அருளானந்த நகர் சங்கத்திற்கு பொறுப்பாளராக உயர்ந்து பணியாற்றினார். கவிதைகள் எழுதுவார். அதனால் தான் நாடகத்தின் முகப்பிலேயே மன்னர் 7ம் திருமுறையிலிருந்து ஒரு பாடலை எடுத்துப் பாடிக்கொண்டே பூசை செய்வதாக நாடகத்தைத் தொடங்கியிருக்கிறார்.


அடுத்து கவிஞரின் அம்மா. 

  • குயிலி கதாபாத்திரம் அப்படியே கவிஞரின் தாயார் தான். கடுமையான உழைப்பாளி. எடுத்தக் காரியத்தை முடிக்கும் திறனாளி. வேலைக்குச் செல்லும் தன் கணவரையும், பள்ளிக்குச் சென்றுக்கொண்டிருக்கும் தன் ஏழுப்பிள்ளைகளையும், தான் வளர்த்த இருபதுக்கும் மேலான ஆடுகளையும் தன் வியர்வையையும், இரத்தத்தையும், கண்ணீரையும் கொண்டு பாதுகாத்த குயிலி அவர்கள். 

  • வேலு நாச்சியாரோடு இணைந்து, சிவங்கைச் சீமையை முற்றுகையிட்டு மீட்கப் போகும் போது, குயிலி தன் மேல் தீயிலிட்டு, ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்குக்குள் குதிக்கும் போது, குடும்பத்திற்காக கவிஞரின் தாயார் செய்த தியாகம் தான் என் நினைவுக்கு வந்தது. தன் தாயை அடிப்படையாக வைத்துத் தான், கவிஞர் குயிலி கதாபாத்திரத்தைப் படைத்துள்ளார். போகிற போக்கில் வேலு நாச்சியாரிடம் குயிலி ‘இனியும் காலந் தாழ்த்தினால் பெற்றத் தாயை கவனிக்காமல் விட்ட பாவத்திற்கு ஒப்பாகும்’ என்ற வசனத்தை சொல்லவைத்து, அவரது தாயின் மேல் அவருக்கிருந்த அளவிடற்கரிய பாசத்தை கவிஞர் காட்டியிருக்கிறார்.


நிறைவாகக் கவிஞர்.

  • கவிஞர் படிப்பாளி. எழுத்தாளர். எதையும் ஆய்ந்து அறிந்து எளிமையாக சொல்லக்கூடிய வல்லமை படைத்தவர். அதனால் தான் 3ம் நந்தி வர்மன் பற்றிய இந்நூலின் இரண்டாவது நாடகத்தில், அரசரை, புகழ்மாலைச் சூட்டி, ‘முரசு அறையோன்’ அறிவிக்கும்போதெல்லாம், பல வரலாற்று ஆய்வுகளைச் செய்ததன் எதிரொலியாக பல தகவல்களை அள்ளி வீசுகிறார். அவைகளை இங்கு நான் அடுக்காமல், நீங்களே நாடகத்தில் படித்துத் தெரிந்துக்கொள்ளுங்கள். 

  • கவிஞருக்கு தமிழ் மேல் காதல். அதனால் தான் ‘உறவே உறவு’ என்கிற அவரது மூன்றாவது நாடகத்தில் கதாநாயகன், தன் காதலிக்கு காதல் கவிதைகளாக எழுதித் தள்ளுவார். கவிஞரது இளமைக்கால காதல் கவிதைகளை படித்தவன் என்கிற முறையில், துணிவுடன் சொல்ல முடியும்: இந்தக் கவிதைகளில் காதல் ரசம் கொட்டுகிறது. குடித்து, மன்னிக்கவும், படித்து மகிழுங்கள். கவிஞர் கிட்டத்தட்ட 3ம் நந்தி வர்மனைப் போன்றவர் தான். சமண முனிவர், நந்திக் கலம்பகம் பாடும் போது, நூறாவது பாடல் பாடும் போது அரசர் உயிரை விட நேரிடும் என்று சொல்லியும், தமிழ் மொழியின் மேல் உள்ள பற்றால், அரசர் பாடச் சொல்லி உயிரை விடுவார். அப்படிப்பட்ட பற்றால் தான், வள்ளுவம் பற்றிய மூன்று நூல்களை எழுதியுள்ளதால் தான், சமண முனிவரின் வசனத்திலும் ‘வள்ளுவரின் ஊழ் வலியது’ பற்றிக் குறிப்பிடுவார்.

  • கவிஞர் இயற்கையிலேயே நடைமுறை வாழ்க்கையில் நகைச்சுவையோடு பேசுவார். கணவரிடம் மனைவி சீரியஸாக ‘சொல்றத கேளுங்க…இங்க ஃப்ளாட்ட எடுத்துக்குங்க’ என்று சொல்லி ஃப்ளாட்டில் நடக்கும் ஒரு செய்தியைச் சொல்லப் போக, கணவர் ‘அதுக்குத்தானே இருக்கேன்…ஃப்ளாட்ட கொடு’ என்று நகைச்சுவையாக பதிலளிப்பார். இப்படியே நகைச்சுவை நாடகம் முழுக்க மின்னுகிறது.


இறுதியாக

‘கதையில வில்லங்கம் இல்லாம விறுவிறுப்பு இல்லேம்பாங்க’ என்கிற அவரது நாடக வசனத்திற்கொப்ப, மூன்று நாடகங்களிலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. தனது பண்பையும், தன் தந்தையாரி்ன் திறமையையும், தன் தாயாரின் குணத்தையும் குழைத்து இந்த மூன்று நாடகங்களைப் படைத்துள்ளது தெரிகிறது. தமிழ் நெஞ்சங்கள் படித்து மகிழுங்கள்.


பேராசிரியர். முனைவர். ஜான் பிரிட்டோ பரிசுத்தம், ஆஸ்திரேலியா



4 views0 comments

Comments


© 2021 - John B. Parisutham | All rights reserved

bottom of page