எழில் மிகு மலைகளும், பயிர் தரும் நிலங்களும் கொண்டு, தடை புரண்டு ஓடும் பஞ்ச்ஷீர் நதியால் வளம் கொழிக்கும் பஞ்ச்ஷீர் மாகாணம் பற்றியே இன்று உலகம் பேசிக்கொண்டு இருக்கிறது.
பஞ்ச்ஷீர் மலைகளுக்கு மத்தியில், பசுமையான தென்றலில் அசைந்து, வெள்ளை நிற தலிபான்களின் புதிய ஆப்கானிய கொடி மெதுவாக மேலே எழுந்தது. வடக்கத்திய போராளிகள் என்று அழைக்கப்பட்ட ‘பஞ்ச்ஷீர் போராளிகள்’ தோற்றுப்போனார்களா? தலிபான்களின் வசம் ஆப்கானிஸ்தான் முழுமையாக வந்தடைந்துவிட்டதா? உலகம் உற்றுநோக்குகிற தருணத்தில் பல கேள்விகள் எழும்புகின்றன.
மாவீரன் அலெக்ஸாண்டர் படைகளை மார்தட்டி எதிர்த்தவர்கள், இங்கிலாந்தின் பிரிட்டிஷ் படைகளை இந்தியாவிற்கு விரட்டியடித்தவர்கள், சோடை போகாத சோவியத் படைகளை சின்னாபின்னமாக்கியவர்கள், தனியாய் நின்று விளையாடிய தலிபான்களை தவிக்கவிட்டவர்கள் என்ற வீர வரலாற்றை தன் நெஞ்சில் ஏற்றியுள்ள பஞ்ச்ஷீர் மாகாணம், தலிபான்களிடம் வீழ்ந்து விட்டதா?
யார் இந்த பஞ்ச்ஷீர் போராளிகள்? எதற்காக படையாக திரண்டார்கள்? நாற்பது வருடங்களாய் யாரை எதிர்த்து போராடினார்கள்? எதற்காக போராடினார்கள்? வடக்கு கூட்டணிப்படை எதற்கு அமைக்கப்பட்டது? தலிபான்கள் ஏற்றிய கொடி தொடர்ந்து பறக்குமா? பல கேள்விகள் எழுகின்றன.
பஞ்ச்ஷீர் மாகாணம் எங்கு இருக்கிறது? அங்கு என்னதான் இருக்கிறது?
ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் இருந்து வடக்கே 150 கி.மீ தூரத்தில் பஞ்ச்ஷீர் மாகாணம் இருக்கிறது. சுற்றி மலைகள் அரண்களாய் பாதுகாக்க, டாரி மொழியைப் பேசும் தஜிக் இனத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 200,000 பேர் அங்கு வசித்துவருகின்றனர். ஒரே பள்ளத்தாக்கு போல் காட்சியளிக்கும் மாகாணம், உண்மையில் 21 சிறு பள்ளத்தாக்குகளைக் கொண்டது.
பள்ளத்தாக்கின் வடக்கே, இந்துகுஷ் மலைகளுக்குச் செல்லும் குறுகிய வழியான அஞ்சமோன் கணவாய் வழியாகத்தான் மாவீரன் அலெக்ஸாண்டர் மற்றும் மங்கோலியப் படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்தன.
மௌனமாய் இருக்கும் இந்த மலைகளுக்குக் கீழே விலைமதிப்பில்லா மரகதக் கற்கள் வண்டி வண்டியாய் கொட்டிக் கிடக்கின்றன. அதோடு இரும்பும், தாமிரமும், லித்தியமும் பதுங்கி இருக்கின்றன. ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுகளில் வெள்ளிச் சுரங்கத்திற்குப் பெயர் போன பகுதி இது.
யார் இந்த பஞ்ச்ஷீர் போராளிகள்?
பத்தொன்பதாம் நூற்றாண்டில், பிரித்தானியப் படைகளை, ‘துண்டைக் காணோம், துணியைக் காணோம்’ எனப் பதறிக்கொண்டு ஓடவிட்டவர்கள் தான் இந்த பஞ்ச்ஷீர் போராளிகள்.
அதன் பிறகு, 1980களில் சோதனை கொடுத்த சோவியத் படைகளை, சின்னா பின்னமாக்கி, சீரழித்து ‘இந்தப் பக்கம் இனி தலைவைத்துப் படுக்க மாட்டோம்’ என சத்தியம் செய்து விட்டு ஓடவிட்டவர்கள் தான் இந்த பஞ்ச்ஷீர் போராளிகள்.
ஆனானப்பட்ட அமெரிக்கப் படை, ஆப்கானிஸ்தானின் அரசுப் படையினரோடு இணைந்து, இருபது வருடம் அங்கு இருந்த போதும், ‘இங்கு மட்டும் உங்கள் வாலை ஆட்டாதீர்கள், ஒட்ட நறுக்கிவிடுவோம்’ என்பதைப் போல, அந்தப் பிரதேசத்திற்குள்ளேயே அண்ட விடாமல், அந்தப் படைகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர்கள் தான் இந்த பஞ்ச்ஷீர் போராளிகள்.
பாகிஸ்தானின் வடக்கேயிருந்து, அதாவது ஆப்கானிஸ்தானின் தெற்குப் பகுதியிலிருந்து, கந்தகார், காபூல் என நகரங்களை தலிபான் பிடித்து வந்தாலும், அவர்கள் கண்ணிலும் மிளகாயைத் தூவி, மிடுக்காய் வலம் வந்தவர்கள் தான் இந்த பஞ்ச்ஷீர் போராளிகள்.
எதற்காகப் படை திரண்டார்கள்? என்ன வரலாறு?
ஆப்கானிஸ்தான் ஜனநாயக குடியரசுவின் வேண்டுகோளின் பேரில், 1979ல் சோவியத் யூனியன் தன் படைகளை ஆப்கானிஸ்தானுக்குள் அனுப்பியது. Hafixullah Amin கொலை செய்யப்பட்டு Karmal என்பவரை தலைவராக்கினர். இஸ்லாம் மத சட்டங்களும், நடைமுறைகளும் அப்புறப்படுத்தப்பட்டு, மார்க்ஸிய-லெனினியக் கோட்பாட்களுக்கு உட்பட்டு ஆட்சி துவங்கப்பட்டது.
அதனை எதிர்த்து, ஆப்கானிஸ்தானின் இறையாண்மையை காக்க வேண்டி ஜிகாத் என்கிற புனிதப்போரைத் துவங்கினார்கள் இந்தப் பஞ்ச்ஷீர் போராளிகள்.
முஜாஹீதீன், அதாவது புனிதப்போர் செய்பவர்கள், என்று தங்களை அழைத்துக்கொண்டார்கள். அவர்களுக்கு பாகிஸ்தான், அமெரிக்கா, பிரிட்டிஷ், சைனா மற்றும் சௌதி அரசாங்கங்கள் அப்போது உதவி செய்தன.
அஹமத் ஷா மசூத் என்பவரின் கீழ் கொரில்லா கோட்டையாக மாறியது பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கு. சோவியத் யூனியன் படைகளோடு 9 போர்கள் நடந்தன. இந்த வேளையில் Mohammad Najibullah ஆட்சியைப் பிடித்து 1988ல் ஜனநாயகத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்தத் தேர்தலை முஜாஹீதின் போராளிகள் புறக்கணிப்பதாக அறிவித்தனர். தொடர்ந்த போராட்டத்தாலும், சோவியத் யூனியன் கலைக்கப்பட்டதாலும், 1991ல் நஜிபுல்லா அரசு கவிழ்ந்தது.
அதனைத் தொடர்ந்து, ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க வெவ்வெறு குழுக்களிடையே உள்நாட்டு போர் துவங்கியது. ‘மாணவர்கள்’ என்கிற பொருள் பதிந்த தலிபான்கள் குழு உருவான நேரமும் அது தான். தெற்கு மாகாணங்கள் பலவற்றை, 1994 வாக்கில், தலிபான்கள் தங்கள் வசம் கொண்டு வந்தனர். காபூலைப் பிடிக்க, 1995ல், தலிபான்கள் பிரயத்தனம் செய்த போது, அஹமத் ஷா மசூத் தலைமையிலான பஞ்ச்ஷீர் போராளிகள் தான் அந்த முயற்சியை முறியடித்தனர்.
ஆனால் 1996இல் பாகிஸ்தான் மற்றும் சௌதி அரேபியாவின் உதவியுடன், தலிபான்கள், காபூலைக் கைப்பற்றி இஸ்லாமிக் எமிரேட் ஆஃப் ஆப்கானிஸ்தானை உருவாக்கினர். அப்பொழுது பஞ்ச்ஷீர் படை பின்வாங்கியது. அப்பொழுது தான் அஹமத் ஷா மசூத் தன் பரம எதிரியாக இருந்த Abdul Rashid Dostum-வுடன் இணைந்து வடக்கு கூட்டணிப்படையைத் துவக்கினார்.
வடக்கு கூட்டணிப்படை அல்லது ஐக்கிய முன்னணி
இந்த முன்னணியில் பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கைச் சேர்ந்த, மசூத் தலைமையில் இயங்கிய தஜிக் இனப் போராளிகளும், Dostum தலைமையில் இருந்த உஸ்பெக் இனப் போராளிகளும், ஹசாரா இனக்குழுக்களும், Abdul Haq தலைமையில் இருந்த பெஸ்தூன் இனப் போராளிகளும் இருந்தனர். தலிபான்கள் ஆப்கானிஸ்தானை 1996லிருந்து 2001வரை ஆண்ட போது, வடக்கு கூட்டணிப்படையினர் வசம் ஏறக்குறைய 30% நாடு இருந்தது.
அதற்குள் அல்-கொய்தா அமைப்பை ஏற்படுத்தி இருந்த, சௌதி அரேபிய குடிமகனான ஓசாமா பின்லேடன், முஜாகைதீன் குழுவில் தன்னை இணைத்து இருந்தார். அவர்களுக்கு பெருமளவில் பணமும், போர்த்தளவாடங்களும் வந்து சேர பேருதவியாய் இருந்தார். பிறகு பாகிஸ்தானோடு இணைந்து தலிபான்கள் அமைப்பை ஆதரித்தார்.
இந்த நிலையில், வடக்குக்கூட்டணியினரோடு சண்டையிட, தலிபான்கள் மற்றும் அல்கொய்தாவோடு இணைந்து பாகிஸ்தான் பெரும்படையை அனுப்பியது. Dostum தோற்கடிக்கப்பட, வடக்கு கூட்டணிப்படைக்கு மசூத் ஒற்றைத்தலைமையானார். தலிபான்கள் அவருக்கு பெரிய பதவிகளை வழங்கத் தயாராக இருந்தார்கள். ஆனால் அவர் ஏற்கவில்லை.
வெளிசக்திகள் நம்மை ஆளக்கூடாது என்பதிலும், இஸ்லாத்தின் ஷரியா சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதிலும், அதே நேரம் பெண்களுக்கு உரிய உரிமைகள் அளிக்கப்படவேண்டும் என்பதிலும், நவீன ஜனநாயகம் மலரவேண்டும் என்பதிலும் குறியாக இருந்தார்.
பொதுத்தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று மசூத் அறைகூவல் விடுத்தார். இஸ்லாத்தைப் பற்றிய மிகத் தவறான பார்வையை தலிபான்களும் அல்கொய்தாவும் கொடுக்கிறது என்று கூறினார். இதில் தான் தலிபான்களுக்கும் வடக்குப்படையினருக்குமான தத்துவார்த்த மற்றும் கொள்கை ரீதியான வேறுபாடு இருக்கிறது.
அப்பொழுதுதான் 2001இல் எதிர்பாராத பெரிய திருப்புமனை நடந்தது.
இரட்டைக்கோபுரத் தாக்குதலும் இருபது வருட அமெரிக்க ராணுவமும்
இரட்டைக்கோபுரத் தாக்குதல் நடக்கும் முன்பு இரண்டு தற்கொலை குண்டுதாரிகளால், 2001 செப்டம்பர் 9ம் தேதி, மசூத் கொலை செய்யப்பட்டார். அதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, அமெரிக்காவின் வணிகத் தளமான இரட்டைக் கோபுரம் தாக்கப்பட்டது.
பின்னர் நடந்தது தெரியும்.
அமெரிக்கப்படை ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்தது. அப்போது மசூத்தின் 32வயது நிரம்பிய மகன், அகமத் மசூத் வடக்கு கூட்டணிப்படைக்குத் தலைமைத் தாங்கி அமெரிக்கப்படைகளையும், அவர்களின் ஆதரவுடன் போரிட்ட ஆப்கானிஸ்தானின் அரசு ராணுவத்தையும், வளர்ந்து வந்த தலிபான்கள் படையையும் விரட்டி அடித்துக்கொண்டே இருந்தார்.
இருபது வருட இருப்பிற்குப் பிறகு 2021 ஆகஸ்ட் 15ல், அமெரிக்கா தன் படைகளை திரும்ப பெற்றுக்கொண்டது. தலிபான்கள் காபூலைக் கைப்பற்றினர். ஆனால் வடக்கு கூட்டணி மாத்திரம் தலிபான்களுக்கு அடிபணியவில்லை. ஆப்கன் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலெ உட்பட ஆயிரக்கணக்கானோர் பஞ்ச்ஷீர் மாகாணத்தில் தஞ்சம் புகுந்தனர்.
காபூலைப் பிடித்து இருபது நாட்களாக ஆகியும் தலிபான்கள் ஆட்சியை அமைக்கமுடிய வில்லை. அதற்கு முக்கிய காரணம் வடக்குப் படையினரை அடக்க முடியவில்லை. அதோடு ஆப்கானை கைப்பற்ற தலிபான்களோடு தோளோடு தோள் நின்று போராடிய ஹக்கானி குழுவினரோடு ஏற்பட்டுள்ள முரண்பாடு.
தலிபான்களின் அரசியல் குழுத்தலைவரும், ஆப்கனின் புதிய அதிபராக எதிர்பார்க்கப்படும் முல்லா அப்துல் கானி பராதர் அவரைச் சார்ந்தவர்களும், உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளும் வகையில் ஆப்கனின் அனைத்து தரப்பினரும் இணைந்த ஓர் அரசை ஏற்படுத்த வேண்டும் என்று கூற, ஹக்கானி குழுவினரோ சன்னி பஷ்தூன்கள் மட்டுமே இடம் பெறக்கூடிய தூய அரசாங்கம் தான் வேண்டுன் எனக் கூற, இழுபறி ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் 2021 செப்டம்பர் 6ம் நாள், பஞ்ச்ஷீர் மாகாண கவர்னர் அலுவலகத்தில் தலிபான்கள் தங்கள் புதிய கொடியை ஏற்றினர். அப்படியானால் வடக்குப்படையினர் தோற்றுப்போயினரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பஞ்ச்ஷீர் வீழ்ந்ததா?
பஞ்ச்ஷீர் மாகாணம் முழுக்க தங்கள் கையில் வந்துவிட்டதாக தலிபான்களின் தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால், வடக்குப் படையினர் இதை ஒத்துக்கொள்ளவில்லை.
‘முழுமையாக வெற்றி பெற்றுவிட்டதாக, தலிபான்கள் பொய்களை பரப்பிவருகின்றனர். இந்த சண்டையில் 700 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 600க்கும் மேற்பட்டவரைகள் பிணைக்கைதிகளாக சிறைபிடித்துள்ளோம். நாங்கள் வேண்டுமென்றே தலிபான்களை உள்ளே விட்டிருக்கிறோம். இது அவர்களுக்கு விரித்த வலை என்று அவர்கள் உணரவில்லை. இந்த உத்தியைத்தான் சோவியத் படைக்கும் செய்தோம்’ எனச் சொல்கின்றனர். இன்னும் வரப்போகிற குளிர் காலத்தில் தலிபான்களின் படை மிகுந்த சேதாரத்திற்கு உட்படும் எனவும், வடக்குப்படையினருக்கு சர்வதேச உதவி வந்து சேரும் எனவும் சொல்லப்படுகிறது.
இன்னும் போர் நடந்து கொண்டிருப்பதாகவே செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. இந்த மாகாணத்தை விட்டு தலிபான்கள் முழுமையாக வெளியேறினால் மட்டுமே, அவர்களுடன் பேச்சுவார்த்தைக்கு வரமுடியும் என்று, அகமத் மசூத் கூறியுள்ளதாகவும் செய்தி வெளிவருகிறது. அதோடு, தலிபான்களுக்கு எதிராகவும், ஜனநாயக சக்திகளுக்கு ஆதரவாகவும் மக்கள் வெகுண்டெழுந்து ஒரு ‘தேசிய பேரெழுச்சி’ வர வேண்டும் என அகமத் மசூத் அறைகூவல் விடுத்துள்ளதாக அறியப்படுகிறது.
இனி என்ன நடக்கலாம்?
கணவாய்கள் வழியாக பஞ்ச்ஷீர் மாகாணத்துக்கு வந்து சேர வேண்டிய உணவு மற்றும் மருந்துப் பொருட்களை, தலிபான்கள் தடுத்து நிறுத்தலாம். ஆனால் குளிர்காலத்தை கழிக்கப் போதுமான பொருட்கள் இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. இருந்தாலும், அமெரிக்கப்படையினர் விட்டுச் சென்ற, அதி பயங்கர ராணுவத் தளவாடங்களை எதிர்த்து போராடவேண்டிய நிலைக்கு வடக்குப்படையினர் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானின் புதிய அரசு அமையும் நிகழ்ச்சிக்கு, சீனா, பாகிஸ்தான் மற்றும் துருக்கி போன்ற நாடுகளுக்கு, தலிபான்கள் அழைப்பு விடுத்திருப்பதாக செய்தி வந்திருக்கிறது. ஆப்கானிஸ்தானை கட்டி எழுப்ப 630 மில்லியன் அமெரிக்க டாலர்களை சீன அரசாங்கம் கொடுக்க இருப்பதாகவும், துருக்கி, கத்தார் போன்ற நாடுகள் ஏற்கனவே, விமான நிலையங்களை புதுப்பிக்க பொறியாளர்களை அனுப்பிவைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிற சூழ்நிலையில், ஆப்கானிஸ்தானின் புதிய அரசு எப்படி இருக்கும்? வடக்குப்படையினர் மீண்டு வந்து பஞ்ச்ஷீர் மாகாணத்தை தங்கள் பிடியில் வைத்திருப்பார்களா? தலிபான்களுக்கு தலைவலியாக இருப்பார்களா? அல்லது அமைதிப்பேச்சு வார்த்தையில் இணக்கம் காணப்படுமா? என்கிற கேள்விக்கெல்லாம் காலம் தான் பதில் சொல்லும்.
ஐந்து சிங்கங்கள் எனப்படும் பஞ்ச்ஷீர் மாகாணப் போராளிகளின் வரலாறு, தொடர்ந்து வீர வரலாறாக இருக்கப்போகிறதா? இல்லை வீழ்ந்த வரலாறாக இருக்கப்போகிறதா? பொறுத்திருந்து பார்ப்போம்.
*****
Reference:
https://en.wikipedia.org/wiki/History_of_Afghanistan
https://www.msn.com/en-au/news/world/fighting-rages-in-afghanistan-s-panjshir-valley-as-taliban-and-resistance-claim-military-gains/ar-AAO7Nhd?ocid=msedgdhp&pc=U531
https://www.bbc.com/news/world-asia-58466647
India TodayTV
https://www.bbc.com/news/world-asia-58329527
https://en.wikipedia.org/wiki/Panjshir_Valley
https://www.vikatan.com/government-and-politics/international/an-analysis-on-why-taliban-unable-to-form-a-government-in-afghanistan
Kommentare