Source:AAP (SBS)
NAIDOC வாரம் – பூர்வீக குடிமக்கள் குறித்த சரியான புரிதலை ஏற்படுத்த இந்த வாரம் பொருத்தமான வாரம். "Heal Country” (நாட்டை குணமாக்குவோம்) என்பது இந்த ஆண்டின் NAIDOC வார கருப்பொருள்.
இந்த நாடு தான் நம்மை வாழவைக்கிறது. அதை நம் முன்னோர்களின் வழியில், பாதுகாத்து பராமரிக்கவேண்டும் என்ற அடிப்படையில் இந்த ஆண்டின் NAIDOC வார கருப்பொருள் அமைந்திருக்கிறது. நமது நிலத்தையும், நீர் நிலைகளையும் பராமரிக்க வேண்டும். நமது புனித இடங்களையும் பண்பாட்டு பாரம்பரியத்தையும் பாதுகாக்க வேண்டும். அவைகளை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும். அவைகளை யாரும் அவதூறு கூற அனுமதிக்க கூடாது என்பதே அதன் பொருள்.
சிவப்பு மண்தளங்கள், பச்சைப் புல்வெளிகள், அடர்ந்தக் காடுகள், கடலோரப் பகுதிகளில் உள்ள சமூகங்கள், மக்கள், மிருகங்கள், பச்சிலை மருந்துகள் ஆகியவை நமது வாழ்க்கைப் பயணத்தில் பல வழிகளில் எப்படி இந்த நாடு குணப்படுத்தி வருகிறது என ஆய்ந்து அதை மேம்படுத்தவே ‘நாட்டை குணமாக்குவோம்’ என்கிற தலைப்பு.
The official 2021 NAIDOC theme is 'Heal Country'. Instagram/@naidocweek. (SBS)
வளம் மற்றும் மரபுகளின் அழிவு
கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக நம் நாட்டின் வளமும் மரபும், அவதூறுகளுக்கும் சுரண்டலுக்கும் உள்ளாகி, அழிக்கப்பட்டு வருகிறது என சிட்னி பல்கலைக்கழக மரபியல் செயல்முறை மற்றும் சேவையின் இணை துணைவேந்தர் பேராசிரியர் லீசா ஜாக்சன் புல்வர் கருதுகிறார். “இந்த நாடு ஓர் இடம் மாத்திரம் அல்ல. இது நமது அடையாளம். நாட்டை குணப்படுத்துவோம் என்கிற அழைப்பு நமது நாட்டு வளங்களையும், பூர்வீக மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களின் வளமான மரபையும் பண்பாட்டையும் அறிவையும் பாதுகாக்க நம் ஒவ்வொருவரையும் அழைக்கிறது” என அவர் மேலும் கூறுகிறார்.
“நமது எதிர்காலத்தைப் பற்றி கவலைப்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. நம் உலகை நாம் கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறோம். இந்த நாட்டை கெடுக்கக் கூடாது. பாதுகாக்கவேண்டும் என பல்லாண்டுகளாக பூர்வீகக் குடிமக்கள் சொல்லிவருகின்றனர்.” என ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக, பூர்வீக குடிமக்களின் பொருளாதார கொள்கை ஆய்வு மைய பேராசிரியர் டாக்டர் எட் வென்சிங் கூறுகிறார்.
நீர்நிலைகளையும் நிலத்தையும் குணப்படுத்துவோம்
நீர்நிலைகளும் நிலமும் வெகுவாக பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. எடுத்துக்காட்டாக NSWல் தொடங்கி விக்டோரியா, ACT, குயின்ஸ்லாந்தின் ஒரு பகுதி மற்றும் சௌத் ஆஸ்திரேலியா வரை 3375 கி.மீ நீளுகிற நீர்நீலை Murray-Darling Basin (MDB)ஐ எடுத்துக்கொள்வோம். அது, 1970க்குப் பிறகு பருத்தி, சிட்ரஸ், பாதாம் என பாசன பயிர்களுக்காக அளவுக்கதிகமாக நீரை உறிஞ்சுவதால், நீர்நிலைகள் வறண்டு, அதை நம்பியுள்ள வனமும் ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது என அன்னா டேவிஸ் தி கார்டியன் பத்திரிக்கையில் விரிவாக எழுதுகிறார்.
இப்படியான புதிய பயிரிடல் முறைகள் மூலம் நீர் அதிகமாக உறிஞ்சப்படுவதால் பெரும் பாதிப்பு நிகழ்ந்துள்ளது. குறிப்பாக, 30,000 சதுப்புநிலங்களையும், சுமார் 120 நீர் பறவை இனங்கள், 46 உள்நாட்டு மீன் வகைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்ல Murray-Darling Basin பகுதி 35 பறவை இனங்கள், 16 விலங்கினங்க, 5 வகை பாம்பு இனங்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன.
Flowing Murray River. Murray Lower Darling Rivers Indigenous Nations. (SBS)
கான்பரா மற்றும் அடிலெய்ட் உட்பட 30 லட்சம் மக்கள் குடிநீருக்கு Murray-Darling Basin நீர்நிலையையே நம்பியிருக்கிறார்கள். பூர்வீகக் குடிகளின் பண்பாட்டு, சமூக, சுற்றுச்சூழல், பொருளாதார, ஆன்மீக தொடர்புகள் கொண்ட 40 தேசங்களையும் உள்ளடக்கிய பகுதியாக இது இருக்கிறது. மட்டுமல்ல, ஒவ்வொரு வருடமும் 22 பில்லியன் டாலர் மதிப்புள்ள உணவு உற்பத்தி செய்ய Murray-Darling Basin நீர்நிலை ஆதாரமாக இருக்கிறது. சுற்றுலாவிலிருந்து 7 பில்லியன் டாலர்கள் வருமானம் தரக்கூடிய இந்த நீர்நிலை எவ்வளவு முக்கியம் என தெற்கு ஆஸ்திரேலிய அரசின் இணையதளத்தில் குறிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த மார்ச் மாதத்தில் நாட்டையே புரட்டிப் போட்ட வெள்ளம் குறித்து Bureau of Meteorology நிறுவனத்தில் senior Climatologistயாக பணியாற்றும் Blair Trewin கூறுகையில், கிட்டத்தட்ட 82 லட்சம் கிகா லிட்டர் நீர் NSW மாநிலத்தில் மாத்திரம் விழுந்தது என்றும் அது 1929 ம் ஆண்டில் நடந்த பேராபத்தை விட கொடுமையானது என்றும் விவரிக்கிறார். இது போன்ற நிகழ்வுகளால் நமது எதிர்கால சந்ததி பாதிக்கப்படாமலிருக்கவேண்டுமானால், இன்றே நமது நீர் நிலைகளையும் நிலத்தையும், வனத்தையும் சுற்றுச்சூழலையும் காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்.
வனத்தையும் விலங்குகளையும் குணப்படுத்துவோம்
வனங்களும் அதை நம்பியிருக்கிற விலங்கினங்களும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. ஆஸ்திரேலியாவின் கருப்பு கோடை Black Summer என்று அழைக்கப்படுகிற 2019-20 கோடைகாலத்தை நினைவுகூருங்கள். NSW, ACT, விக்டோரியா, குயின்ஸ்லாந்து, தெற்கு ஆஸ்திரேலியா, மேற்கு ஆஸ்திரேலியா, டாஸ்மேனியா என 70% ஆஸ்திரேலியாவை Bushfire என்கிற காட்டுத்தீ புரட்டி போட்டது. குறைந்த மழையினாலும், தொடர்ந்த வறட்சியினாலும் ஏற்பட்ட சூட்டினால் இந்த காட்டுத்தீ பரவியது. இதனால் கிட்டத்தட்ட எண்பது சதவீத ஆஸ்திரேலிய மக்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ பாதிக்கப்பட்டனர். காட்டுத்தீ சுமார் 15 லட்சம் ஏக்கர் காட்டை எரித்து, சுமார் 10 கோடி விலங்குகளைக் கொன்றது. அதனால் 120 கோடி டன் கார்பன்-டை-ஆக்ஸைடு, வாயு மண்டலத்தில் சேர்ந்தது. சுற்றுலாத்துறைக்கு 450 கோடி டாலர்கள் நஷ்டம் ஏற்பட்டது.
RFS volunteers and NSW Fire and Rescue officers fight a bushfire south of Sydney during the Black Summer bushfires. AAP (SBS)
இப்படியான சமூக, பொருளாதார, சுற்றுச்சூழல் இழப்பிற்கு காரணம், பருவநிலை மாற்றம் என்று Climate Council வெளியிட்ட The Summer of Crisis Report விளக்குகிறது. நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயுவை கொஞ்சம் கொஞ்சமாக நிறுத்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு மக்கள் மாறவில்லையென்றால் நிலைமை இன்னும் மோசமாகும் என்றும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது.
நம் நாட்டை வெறும் ஆறுகளாகவோ, காடுகளாகவோ பார்க்காமல், பூர்வீகக் குடிமக்கள் பார்ப்பது போல் மரபுகளும் மாண்புகளுடனுமான, சதையும் இரத்தமும் கொண்ட, ஆன்மாவுடன் இயங்கும் உயிராக பார்த்தால் தான் இவைகளை நாம் பாதுகாக்க முடியும்.
மக்களையும் மொழியையும் குணப்படுத்துவோம்
பூர்வீகக் குடிகளைப் பொறுத்தவரை நாடு என்பது வெறும் நிலப்பரப்பு மட்டும் அல்ல. அது நம் முன்னோர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்து வைத்திருக்கிற ஆவணம். வடுக்கள் நிறைந்த மரங்கள், ஒழுங்கமைக்கப்பட்ட கற்கள், பாறை ஓவியங்கள், பழங்காலக் கருவிகள், பாரம்பரியக்கலைகள் என 65,000 ஆண்டுகளான பாரம்பரிம் மிக்க வாழ்க்கையை அடைகாக்கும் கூடு. நமது நாடு என்பது இறந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் கொண்ட உணர்வு கொண்ட மனிதன் போன்றது என்று மறைந்த தொல்லியல் இனவியலாளர் டெபோரா பேர்டு ரோஸ் கூறுகிறார்.
Aboriginal land map, NITV (SBS)
“மண்ணரிப்பால், நமது முன்னோர்களின் கல்லறைகள் பாழாகின்றன. அவைகளை பாழாகவிடுவது நம் முன்னோர்களுக்கு நாம் செய்யும் அவமரியாதையாகும். என் நெஞ்சே வெடித்துவிடும் போல் இருக்கிறது. ஆகவே அவர்களது எலும்புகளை நான் சேகரிக்கிறேன்” என டோரஸ் ஸ்ட்ரெயிட் மாசித் தீவில் உள்ள குல்கலைக் பெண்மணியான Tishiko King மன வலியுடன் கூறுகிறார்.
ஒரு சமூகத்தின் மொழி, அவர்கள் அதுவரை சேமித்துவைத்திருக்கும் வாழ்வியல் அறிவை உள்ளடக்கியது. ஆஸ்திரேலியாவில் ஏறக்குறைய 250 பூர்வீகக் குடிமக்களின் மொழிகள் உள்ளன. அவைகளுக்குள்ளேயே 800 க்கும் மேற்பட்ட வழக்கு மொழிகள் உள்ளன. அவைகளில் பல வழக்கொழிந்து வருகின்றன. அவைகளை பாதுகாக்கவேண்டிய கடமை அனைவருக்கும் இருக்கிறது.
ஆன்மீகத்தையும் புனிதத்தலங்களையும் குணப்படுத்துவோம்
பூர்வீகக் குடிமக்களின் புனிதத் தலங்களும் காக்கப்படவேண்டும். வரலாறையும் பண்பாட்டையும் தன்னகத்தே கொண்டிருக்கும், 46,000 வருடத்திய Juukan Gorge 1 மற்றும் 2 எனும் பூர்வீக பாறை குகை வீடுகள் சுக்கு நூறாக்கப்பட்டிருக்கின்றன. அவைகள் மட்டும் தான் பனியுகத்தையும் தாண்டி ஆஸ்திரேலியாவில் மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஒரே அடையாளம். அவைகள் மேற்கு பில்பாராவில், இரும்பு தாது சுரங்கத்திற்காக இடிக்கப்பட்டதாகவும், அதனால் புட்டு குன்ட்டி குர்ராமா பாராம்பரிய மக்கள் வேதனை அடைந்திருப்பதாகவும் Misha Ketchell தன் கட்டுரையில் எழுதுகிறார்.
AAP (SBS)
வடமேற்கு ஆஸ்திரேலியாவில் பரூப் பெனின்சுலாவில் பழமையான பாறை ஓவியம், தற்போது ஒரு எரிவாயுத் திட்டத்தால் அச்சத்துக்கு உட்பட்டிருக்கிறது. திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட கிட்டத்தட்ட ஒரு லட்சம் ஏக்கரில் பத்து லட்சத்திற்கும் மேலான பாறை சிற்பங்கள் இருப்பதாகவும், அவைகள் கர்லூமா மற்றும் நான்கு மற்ற பூர்வீக குடிமக்களின் பாதுகாப்பில் இருக்கக்கூடிய நிலப்பகுதி என்றும் Misha Ketchell மேலும் குறிப்பிடுகிறார்.
நாட்டை குணமாக்குவோம்
"Heal Country - நாட்டை குணமாக்குவோம் எனும் இந்த ஆண்டின் NAIDOC கருப்பொருள் நம்மை யோசிக்கவைக்கிறது. நமது நிலத்தையும், நீர் நிலைகளையும் பராமரிக்க வேண்டும். நமது புனித இடங்களையும் பண்பாட்டு பாரம்பரியத்தையும் பாதுகாக்க வேண்டும். அவைகளை அழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும். அவைகளை யாரும் அவதூறு கூற அனுமதிக்க கூடாது என்பதை புரிந்து கொள்ள அழைப்புவிடுக்கிறது. சிவப்பு மண்தளங்கள், பச்சைப் புல்வெளிகள், அடர்ந்தக் காடுகள், கடலோரப் பகுதிகளில் உள்ள சமூகங்கள், மக்கள், மிருகங்கள், பச்சிலை மருந்துகள் ஆகியவைகளை நமக்காகவும், நமது பிள்ளைகளுக்காகவும், மனித சமூகத்திற்காகவும் காப்போம் என உறுதிமொழி எடுத்து அதற்காக ஒரு செயல்பாட்டையாவது செய்வது NAIDOC வாரத்தைக் கடைப்பிடிப்பதாக அமையும்.
அளப்பரிய பாரம்பரியம் உள்ள இந்த நாட்டையும் பண்பாட்டையும் குணப்படுத்துவதில் என் பங்கு என்ன என்று ஒவ்வொருவரும் நம்மை நாமே இந்த NAIDOC வாரத்தில் கேட்டுக்கொள்ளவேண்டும்.
Ref: 1. Jackson, Lisa. (2021, July 5). What it means to heal country. Celebrating NAIDOC Week. The University of Sydney. https://www.sydney.edu.au/news-opinion/news/2021/07/05/naidoc-week-2021-heal-country.html#:~:text=Heal%20Country!%20is%20about%20calling,Torres%20Strait%20Islander%20peoples%20hold. 2. Ketchell, Misha. ( 2021, July 5). Although we didn’t produce these problems, we suffer them: 3 ways you can help in NAIDOC’s call to Heal Country. https://theconversation.com/although-we-didnt-produce-these-problems-we-suffer-them-3-ways-you-can-help-in-naidocs-call-to-heal-country-163362. 3. Daivs, Anne., Bowers, Mike. Murray-Darling: When the river runs dry. Our Wide Brown Land. Retrieved from https://www.theguardian.com/environment/ng-interactive/2018/apr/05/murray-darling-when-the-river-runs-dry on 07.07.2021 4. Why the Murray-Darling Basin is so important. Department for Environment and Water. Government of South Australia. Retrieved from https://www.environment.sa.gov.au/topics/river-murray-new/basin-plan/importance-of-murray-darling-basin on 07.07.2021. 5. Summer of Crisis. Climate Council. Retrieved from https://www.climatecouncil.org.au/resources/summer-of-crisis/ as on 07.07.2021. 6. Deacon, Ben. (2021, Apr 20). NSW floods break 120-year-old rain records during March rain event BOM says. https://www.abc.net.au/news/2021-04-20/nsw-floods-break-120-year-old-rain-records/100079400
Commentaires