top of page
Writer's pictureJohn B. Parisutham

கட்டுரை 1 - மெல்ல இனி ஓயுமா மெல்பர்ன் முடக்கநிலை?

Updated: Jan 9, 2022



தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்கிறேன். போர்வைக்குப் பதில் கேள்விகளே என் மேல் ஊர்கின்றன.


மெல்பர்னில் இந்த முடக்கநிலை தேவைதானா? பாதிப்புகள் என்னென்ன? இந்தியாவிலிருந்து விமான சேவைகளை தடை செய்திருக்க வேண்டுமா? மைய அரசு ஊக்கத்தொகை வழங்குவது சரியானதா? போதுமானதா? ஓரிருவருக்கு தொற்று என்றதுமே பதறியடித்துக் கொண்டு மாநிலங்கள் எல்லைகளை மூடுகிறதே, அது சரியா?


வாழ்க்கையா? வாழ்வாதாரமா?


எழுந்து எழுதத் தொடங்கினேன்.


முடக்கநிலை தேவையா?

முகக் கவசம் போடலாம். கை சுத்திகரிப்பான் பயன்படுத்தலாம். அடிக்கடி கை கழுவுலாம். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கலாம். ஆனால் இந்தப் பாழாய்ப்போன முடக்கநிலை தேவைதானா? ஆழமாய் யோசித்துப் பார்த்தால் போருக்குப் போகிற போது எல்லா ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு போகிறது தானே புத்திசாலித்தனம். முடக்கநிலை என்கிற பேராயுதத்தை உபயோகப்படுத்தவதே சிறந்தது என ஒருபக்கம் மனம் யோசிக்கிறது.


ஒரு திருமணபந்தலில் தாலி கட்டும் நேரத்தில், விஷம் கக்கும் நாகப்பாம்பு நுழைந்துவிட்டால், ‘பரவாயில்ல.. பாம்பு பாட்டுக்கு ஒரு பக்கம் ஊர்ந்து போகட்டும். நீ தாலியைக் கட்டுப்பா?’ என்றா சொல்வோம்? ம்ஹீம். அதை எப்படியாவது விரட்டுவதிலோ, அடிப்பதிலோ தானே முழுக்கவனமும் இருக்கும். அதனால் கொரோனா என்கிற கொள்ளை நோயை கட்டுக்குள் கொண்டு வர அல்லது விரட்ட முடக்கநிலை என்கிற ஆயுதத்தை எடுப்பது சரியே என மனம் ஆசுவாசப் படுத்திக் கொண்டது.


இது என்ன திடீரென்று திருவள்ளுவர் முளைக்கிறார்! அவர் என்ன தான் சொல்கிறார் என்று கேட்போம். ‘ஐயா! வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்

வைத்தூறு போலக் கெடும். பின்னால் வரப்போவதை முன்கூட்டியே அறிந்து, தன்னையே காப்பாற்றிக் கொள்ளாவிட்டால், அவனது வாழ்க்கை, நெருப்புக்கு முன் வைத்திருக்கும் வைக்கோல் போல ஆபத்தானது என நான் அப்பயே சொல்லிட்டேனே. படிக்கலயா?’ என்கிறார்.


அவர் சொல்றதும் சரிதான். வருமுன் காப்பது தானே சிறந்தது. முளையில் கிள்ளாது முற்றினால் கோடாரி கொண்டல்லவா வெட்ட வேண்டியிருக்கும். மைய அரசின் நலவாழ்வுத்துறை மந்திரி கிரெக் ஹன்ட் கூட அதை வழி மொழிந்து, “மிகவும் வருந்தத்தக்கும் நிலை தான் ஆனால் இந்த முடக்கநிலை அவசியமான ஒன்று’ என்கிறார்.


சரி. தேவை தான். அப்படி என்ன அவசியமான தேவை?


ஏன் தேவை?

கற்பனை செய்து பாருங்கள். நாலைந்து பேர் கொண்ட ஒரு மகிழ்ச்சியான குடும்பம் இருக்கிறது. எங்கும் வைரஸ் பரவுகிறது. முடக்கநிலை அறிவிக்கப்படவில்லை என வைத்துக்கொள்வோம். தொடக்கத்தில் குடும்பத்தில் ஒருவருக்கு நோய் தொற்றுகிறது. பிறகு எல்லா குடும்ப உறுப்பினர்களும் ஒருவர் பின் ஒருவராக இறந்து போகிறார்கள். ஒருவர் மட்டும் மிஞ்சுகிறார். அவரிடம் முடக்கநிலையின் அவசியத்தைக் கேட்டால் என்ன சொல்வார்? ‘ஐயோ! ஊரடங்கை முன்கூட்டியே அறிவிச்சிருந்தா என் குடும்பத்தை அப்பொழுதே காப்பாற்றியிருக்கலாமே!’ என்று சொல்லியிருப்பாரா? இல்லையா?

இவர் சொல்வதை பார்க்கும் போது முடக்கநிலை சரிதான் என நினைக்கத் தோன்றுகிறது. ஏனென்றால், இந்த நோயின் இயல்பு கொடூரமாக இருக்கிறது. எளிதில் பரவும் தொற்று நோயாக இருக்கிறது.

ஒரு சில நாடுகளை நினைக்கும் போது மனம் ‘பக்’ கென்று இருக்கிறது. உதாரணமாக வியட்நாமை எடுத்துக் கொள்ளுங்கள். 2020 தொடங்கி, இரு மாதங்கள் முன்பு வரை, 15 மாதங்களாக, மிகக் குறைவான தொற்றுகளே இருந்தன. எல்லாம் நார்மல் என நினைத்துக்கொண்டிருக்கும் போது, திடீரென்று போன இரண்டு மாதங்களில் பாய்ச்சலாய் தொற்று பரவியது. கிட்டத்தட்ட 7000 தொற்றுகளில், 3500 தொற்றுகள் போன இரண்டு மாதங்களில் வந்தது தான். 47 இறப்புகள். ஒரு நாளைக்கு சுழியம், ஒன்று என்று இருந்த இடத்தில் 300, 500 என வந்தது எதனால்?


அப்படி விக்டோரியா மாநிலத்தில் நடக்கவிடாமல், தனி நபர் மற்றும் குடும்பத்தினரின் உயிரையும் உடல் நலத்தையும் காப்பாற்ற முடக்கநிலை தேவை தான் என மனம் அமைதியானது.


ஆனால் என் அண்டை வீட்டார் ஒருவரின் அழுகுரல் அந்த அமைதியை சற்றே அசைத்துப் போட்டது. ‘ஐயா! எனக்கு வேலை போச்சு. வருமானம் இல்லை. இப்படி அடிக்கடி லோக்டவுன் அறிவிச்சா, எப்படித்தான் வாழ்றது? குடும்ப குட்டிகளை எப்படி காப்பத்தறது? தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தான் தெரியுமய்யா’. என்றார்.


இவர் புலம்பலிலும் அர்த்தம் இல்லாமல் இல்லை. வாஸ்தவமாகத்தானே கேட்கிறார். இருந்தாலும் வாழ்வா? வாழ்வாதாரமா?’ன்னு பார்க்கும் போது உயிரோடு இருப்பதைத் தான் தேர்ந்தெடுக்கவேண்டி இருக்கிறது. அதோடு மட்டுமல்ல மற்றவர்கள் உயிரோடு இருக்கவும் நாம ஊரடங்கில் அடக்கி வாசிப்பதே நல்லது என்று நினைக்கத் தோன்றுகிறது.


இந்த முடக்கநிலை, தனிமனித வாழ்விற்கும் குடும்பங்களுக்கும் மாத்திரமல்ல, ஆஸ்திரேலிய நாட்டிற்கும் உபயோகமாக இருக்கிறது. எப்படி தெரியுமா?


மருத்துவ கட்டமைப்புகளும் பொருளாதார தேக்கமும்

உலக சுகாதார நிறுவன சிறப்பு தூதர் டேவிட் நபாரோ சொல்கிறார்: அரசுக்கும், நிறுவனங்களுக்கும், குடும்பங்களுக்கும் தங்கள் வளங்களை மறு சீரமைக்கவும் ஒருங்கிணைக்கவும், முடக்கநிலை நேரத்தை வழங்குகிறது என்கிறார்.


முடக்கநிலையால், நாட்டின் சுகாதார அமைப்புகளும் மருத்துவ வசதிகளும் உடைந்து போகா வண்ணம், ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும். அதனால் தேவையற்ற உயிரழப்புகளை தவிர்க்கலாம். இந்தியாவைப் பாருங்கள். மருத்துவ மனைகளில் படுக்கை வசதிகள் இல்லை. ஆக்ஸீஜன் என்று சொல்லப்படுகிற உயிர்க்காற்றுக்கு பஞ்சம். தடுப்பூசிகள் பற்றைக்குறை. முன்களப் பணியாளர்களான சுகாதாரப் பணியாளர்கள் இறந்து போகிறார்கள். இதையெல்லாம் ஊரடங்கால் தவிர்க்கலாம்.


ஆனால் பொருளாதார தேக்கத்தை எப்படி கையாள்வது?


2020ம் வருடம் ஏப்ரல் 19ம் தேதி, 265 ஆஸ்திரேலிய பொருளாதார நிபுணர்கள் கூடி அரசுக்கு எழுதிய கடிதம் ஒன்றை நாம் கவனிக்க வேண்டியிருக்கிறது. அதில் ‘பொது சுகாதார நெருக்கடியை நாம் முதலில் விரிவாகக் கவனிக்காவிட்டால், வளமான பொருளாதாரம் நம்மிடம் இருக்க முடியாது. கட்டுப்பாடுகளை தளர்த்துவதை விட இந்த பொருளாதார செலவுகளை ஈடுசெய்ய வலுவான அரசு நிதி நடவடிக்கைகள் மிகச் சிறந்த வழியாகும் என்று நாங்கள் நம்புகிறோம்.’ எனக் குறிப்பிடுகிறார்கள்.


இருந்தாலும் இந்த முடக்கநிலை நம்மை படுத்தி எடுக்கத்தானே செய்கிறது. என்னென்ன தினுசில் முடக்கநிலை பாதிப்புகள் இருக்கின்றன தெரியுமா?


சிறை வாழ்க்கையும் திரை வாழ்க்கையும்

என் நண்பர் புலம்பித் தள்ளுகிறார். ‘ பைத்தியம் பிடிக்குதுய்யா. சாதாரணமா நம்ம பார்க்குக்குப் போவோம். சினிமா, ரெஸ்டாரண்ட்ன்னு சுத்துவோம். கோயிலுக்கு ப்போவோம். நண்பர்கள் வீட்டுக்குப் போவோம். அவங்களோடு சேர்ந்து பிக்னிக் போவோம். பண்டிகைகள் கொண்டாட்டம்’ன்னு வாழ்க்கை ஜாலியா இருக்கும். ஆனா இப்ப ஏதாவது குத்தம் பண்ணிட்டு ஜெயிலுக்குப் போனாலும் கஷ்டப்பட மாட்டோம். ஏன்னா, அதான் பழகிட்டோமே. அதைவிடக் கொடுமையா சிறை வாழ்க்கையை வாழ்ந்து பழகிட்டோமே!’.


புலம்புனாலும் சரியாத்தானே புலம்புறாரு. எவ்வளவு உளவியல் பாதிப்பு பாருங்க.


உளவியல் கெடக்கட்டும். ஒருத்தர் சொல்றாரு. சும்மா உட்கார்ந்து உட்கார்ந்து கைபேசி திரையையும் கணிணி திரையையும் தொலைக்காட்சி திரையையும் பார்த்து பார்த்து ஒடம்பும் கெட்டுப் போவது, மனசும் கெட்டுப் போவுது. அது என்னவோ உண்மை தான்.


ஆனா, இப்பத்தாங்க நான் நிறைய யோகா பண்றேன். உடற்பயிற்சி பண்றேன். நல்லா நடக்குறேன். எடை குறைஞ்சி சும்மா ஜம்’முன்னு இருக்கேன்’னு சொல்றவங்களும் இருக்கத்தானே செய்றாங்க. தீதும் நன்றும் பிறர் தர வாரா’ங்ற மாதிரி, இந்த ஊரடங்கை எப்படி பயன்படுத்திக்கிறோங்றது ஒவ்வொருத்தார் பொறுப்பிலும் கூட இருக்கு.


திரும்பிய பக்கமெல்லாம் திறன்கள்

என்னையே எடுத்துக்குங்க. யூடியூப் என்கிற வலையொளியில் காணொளிகளைப் பார்த்து புதுசு புதுசா சமைக்க கத்துகிட்டேன். வீட்டுத் தோட்டத்தில் காய்கறிகளைப் போட்டு எடுத்தேன். புது திறன்களை வளர்த்துக் கொள்ள இந்த முடக்கநிலை பயன்படுகிறது என்பது உண்மையே. எங்கள் பக்கத்து வீட்டில் இரண்டு சிறுவர்கள் இருக்கிறார்கள். இந்த ஊரடங்கில் அவர்களுக்கென்று ஒரு வலையொளி கணக்கை ஆரம்பித்து, விளையாட்டு காணொளிகளை ஒளிபரப்புகிறார்கள். உங்களுக்கு கூட, புதிய திறன்களை கூட்டிக்கொள்ளும் அனுபவம் இருந்திருக்கும். திறன்களை வளர்த்துக் கொள்வது இருக்கட்டும். குடும்பங்கள் எப்படி இருக்கின்றன?


குடும்ப உறவுகள் இணைப்பா? இழப்பா?

எங்க குடும்பத்துல பிள்ளைகளோடு உட்கார்ந்து ‘போர்டு கேம்’ விளையாடுகிறோம். அவர்களோடு பேசுகிறோம். வெளியில் நண்பர்களோடு ஊர் சுற்ற முடியாவிட்டாலும், வேலை வேலை என்று சுற்றி, குடும்ப உறவுகளை மேம்படுத்திக் கொள்ள அவகாசம் இல்லாது போன காலம் போய், இப்பொழுது குடும்ப உறுப்பினர்களோடு அளவளாவும் அனுபவம் மகிழ்ச்சியானது தான்.


‘அடப் போங்க! ஒரே மூஞ்சை தினமும் பார்த்து பார்த்து போர் அடிக்குதுங்க. என்னடா வாழ்க்கைன்னு ஆவுது. கொரோனா வந்து செத்தாலும் பரவால்லன்னு தோணுதுங்க. வீட்டுலயே உட்கார்ந்து வேலை செஞ்சி பாருங்க தெரியும்.’ என்கிற புலம்பலும் கேட்காமல் இல்லை.


அப்படித்தான் ஒரு நண்பர் எனக்கு ஒரு நாள் தொலைபேசியில் அழைத்தார். ‘எங்க பக்கத்து வீட்டுல ஒரு அமைதியான குடும்பம் இருந்துச்சு. ஆனா, இப்ப அடிக்கடி கணவன் மனைவிக்குள்ள சண்டை வருது. சத்தமா திட்டி பேசிக்கிறாங்க. ஒரு கட்டுரை படிச்சேன். ஆஸ்திரேலியாவுல வழக்கமா குடும்ப வன்முறையால வாரத்திற்கு ஒரு பெண் இறக்கிறாரு. ஆனா இப்போ அது இரண்டு மடங்காகியிருக்கு. ஒரு வருடத்துல 3000 தற்கொலைகள் நடக்குது. அதுவும் கூடியிருக்கு’ன்னு படிச்சேன்.’


ஒரு பக்கம் குடும்ப உறவுகள் மேம்பட, இந்த முடக்கநிலை உதவுனாலும், நண்பர் சொல்ற மாதிரி சிதைவுகளும் நடக்கறது பார்க்கத்தான் செய்கிறோம்.


ஊரடங்கால் இவை மட்டும் பாதிப்புகள் அல்ல. இன்னும் இருக்கிறது.


மற்ற மருத்துவ சேவையை பயன்படுத்தாமை

போன வாரம் என் நண்பரின் மனைவி மயக்கம் போட்டு கீழே விழுந்து விட்டார். சாதாரண நேரமாக இருந்தால் அவரை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருப்பார்கள். ஆனால் ‘வேணாம். இப்போ போனா அது இதுன்னு இழுத்து விட்டுடுவாங்க. பேசாம வீட்டுலயே சரி பண்ணிடலாம்’ னு அவர்களுக்குள்ளேயே பேசிக்கொண்டு வீட்டிலேயே இருந்துவிட்டார்கள்.


குறைவான அவசர சிக்கல்களுக்கு சுகாதார சேவையை அணுகுவதற்கான வாய்ப்புகள் குறைந்து போய்விட்டது. ஒரு அறிக்கையில் இப்படி படித்தேன். புற்றுநோய் கண்டறிதல் விகிதங்கள் தற்போது எதிர்பார்த்ததை விட மிகக் குறைவாக உள்ளன எனவும், அது தடுக்கக்கூடிய இறப்புகளின் அதிகரிப்புக்கு வழிவகுக்கும் எனவும் படித்தேன். சுகாதார நிலை இப்படி இருக்க, பொருளாதார நிலை மோசமாகும் நிலையும் இருக்கு.


காசு பணம் துட்டு மணி மணி

ஒரு உதாரணம் சொல்றேன். நாங்கள் வழக்கமாக சாப்பிடப் போகிற இந்தியன் ரெஸ்டரண்ட் முதலாளியோடு பேசிக்கொண்டிருந்தேன். அவர் சொன்னார். ‘சார். திடீர்னு லோக்டவுன் வந்திடுச்சு. அடிக்கடி லோக்டவுன்’னு போனா எங்க பிசினஸ் என்ன சார் ஆவுறது. யாரும் சாப்பிட வராதது ஒரு பக்கம் சார். நாங்க ஏற்கனவே வாங்கி வச்சிருக்கற பொருள் எல்லாம் வேஸ்ட் ஆயிடும் சார். வொர்க்கர்ஸ்க்கு சம்பளம் குடுத்தாகனும். வாடகை குடுத்தாகனும். தொழில் செய்றவங்க வயித்துல அடிக்கிறாங்க சார்’

என்னதான் வாழ்வாதாரத்தை விட வாழ்க்கை முக்கியம்’னு பேசினாலும், அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை, பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லைங்ற மாதிரி, பொருள்தான வாழ்க்கைக்கு ஆதாராமாக இருக்கிறது. அதுவே போயிடுச்சுன்னா? இது போக நம் பிள்ளைகளின் நிலையை யோசித்தால் இன்னும் கவலையாக இருக்கிறது.


கல்வியின் கோலம்

வீட்டிலிருந்தபடியே எத்தனை நாள் தான் படிப்பது? திரையைப் பார்த்து எப்படித் தான் படிப்பது? ஆசிரியர்களின் நேரடி பார்வையும், சக மாணவர்களின் உறவும் இல்லாமல் முழுமையான கற்றல் இருக்குமா? இப்படியே போனால், மாணவ கண்மணிகளின் எதிர்காலம் எப்படித்தான் இருக்கும்?


ஐயோ! ஊரடங்கால் இத்துணை பாதிப்பா? நல்ல விடயங்கள் சில இருந்தாலும், எதிர்மறை பாதிப்புகளே நிறையக் காண்கிறோம். இந்த நேரத்தில் இந்தியாவிலிருந்து பயணம் செய்வது பற்றி பல கருத்துக்கள் எழுகின்றன.


இந்திய விமான சேவைக்குத் தடை

பலரும் பலவிதமாகச் சொல்கிறார்கள். சிக்கலான இந்தச் சூழலில் இந்தியாவிலிருந்து விமானத்தை இயக்கியிருக்கக் கூடாது என சிலரும், அது எப்படி நம்மாட்களை அப்படி நட்டாற்றில் விட்டு விட முடியுமா என சிலரும் பட்டிமன்றம் போல் பேசுகிறார்கள்.


நான் என்ன நினைக்கிறேன் எனச் சொல்லும் முன் இதைக் கேளுங்கள். என் நண்பரின் மனைவி இந்தியாவுக்குப் போனார். அவர் திரும்பி வர இயலவில்லை. என் நண்பருக்கு ஒரே மகன். தனக்குத் தெரிந்த அரைகுறை சமையல் அறிவோடு, தன் ஒரே மகனையும் சமாளிக்கப் படாத பாடுபடுகிறார். இவரைப்போல் பலரும் தன் உடன் பிறப்புக்களை இந்தியாவில் விட்டு விட்டு அவதிப்படுகின்றனர். வியாபார நோக்கத்திற்காகப் போனவர்கள், சுற்றுலாவிற்காகப் போனவர்கள் என பலரும் தடுமாறி இருக்கின்றனர். இந்தியாவிலும் அன்றாடம் நிலைமை மோசமாகிக் கொண்டே வருகிறது. இருந்தாலும் நான் என்ன நினைக்கிறேன் என்றால் ஆஸ்திரேலிய அரசு விமான சேவைகளை அனுமதித்ததில் தவறில்லை. வரமுடியாமல் தவிப்பவர்கள் திரும்ப வந்து குடும்பத்தோடு வாழ தொடர்ந்து உதவ வேண்டும்.


பல நாடுகளை ஒப்பிடும் போது, ஆஸ்திரேலியா பாதுகாப்பான நாடு. ஒரு போரில் எதிரிகளிடம் மாட்டிக்கொண்ட, அல்லது அவர்களால் அடிபட்ட வீரர்களை திரும்ப நம் பக்கம் கொண்டு வந்த சேர்க்க முயற்சிப்பது தானே சரியான முறை, ஒழுக்க நெறி.


ஆனால், மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல, முடிவெடுக்கும் இடத்தில் உள்ளவர்களுக்கு சிரமம் தான். இருந்தாலும், இந்தியாவிலேயே அவர்களுக்கான பரிசோதனை செய்து, கொரோனா பாஸிட்டிவாக இருந்தாலும், இங்கு கொண்டு வந்து முறையாக காப்பாற்றலாமே!


ஊக்கத்தொகை

மைய அரசு முடக்கநிலை சமயத்தில் பணி இழந்தவர்களுக்கு ஊக்கத்தொகை அறிவித்திருக்கிறது. வாரம் இருபது மணி நேரத்திற்கு மேல் வேலை செய்து பணியை இழந்திருந்தால், 500 டாலர்களும், அதற்கு குறைவான நேரமாக இருந்தால் 325 டாலர்களும் வழங்குவதாக அறிவித்திருக்கிறது.


இது எப்படியா பத்தும்? என சிலரும், ஒன்னும் இல்லாததுக்கு இதாவது பரவாயில்ல என சிலரும் பேசிக்கொள்கிறார்கள்.


என்னைக்கேட்டால், ‘காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது’ என்கிற திருக்குறளைத் தான் சொல்வேன். இந்த ஊக்கத் தொகை சரியானது. அது போதுமானதா என்பது ஒவ்வொருவரின் தேவையையும் பார்வையையும் பொருத்து உள்ளது. என்ன! வாடகை வீட்டுல இருக்கறவங்களுக்கு கொஞ்சம் கஷ்டம் தான்.


ஒரு நண்பர் தொலைபேசியில் அழைத்தார். ‘பாத்திங்களா சார். நான் அரக்க பரக்க தெனக்கும் வேலைக்குப் போறேன். என்னோட வேலை செஞ்ச ஒரு ஆளு, வேலையை விட்டு நின்னுட்டார். வேலைக்கே போகாம வாரம் வாரம் அரசாங்கம் குடுக்கற பணத்தை வாங்கிகிட்டு, வீட்டுலயே ஜாலியா இருக்காரு சார். நம்ம வரிப்பணத்துல அந்த ஆளுங்களுக்கு உதவி. இதெல்லாம் நியாயமா சார்?’


நண்பர் ஒன்றும் தப்பா சொல்ற மாதிரி தெரியவில்லை. இப்படி நிலைமைகள் போகும் போது திடீர் திடீரென மாநில எல்லைகளை மூடியும் திறந்தும் அவதிக்குள்ளாக்குகிறார்கள்.


எங்க ஏரியா உள்ள வராத

பக்கத்துல இருக்கற மாநிலத்தில், ஓரிருவருக்கு கொரோனா தொற்றுன்னு செய்தி வந்துச்சுன்னா, உடனே அடுத்த மாநிலம் தன் எல்லையை மூடுவது கொஞ்சம் டூ மச்சா தெரியலயா?’ன்னு நண்பர் கேட்டார்.


நம்ம வீட்டுலயே ஒருத்தருக்கு கொரோனா தொற்று வந்தா என்ன செய்வோம்? அவருடைய பாதுகாப்பு கருதியும், மற்ற குடும்பத்தினர் பாதுகாப்பு கருதியும் தனிமை படுத்திக் கொள்வது தானே புத்திசாலித்தனம். மற்றவர்களின் குற்றத்திற்கு நமக்கு தண்டனை பெற வேண்டியதில்லை, எச்சரிக்கையா இருப்போம் என அண்டை மாநிலம் நினைத்து எல்லையை மூடுவது சரி என்றே நினைக்கிறேன்.


என்ன! டூரிஸம் பாதிக்கப்படலாம். டிரான்ஸ்ஃபர் ஆஃப் குட்ஸ் அண்ட் சர்வீசஸ், அங்கு போய் பணிபுரிபவர்கள், உறவுக்காரர்கள் என பாதிக்கப்படலாம். ஆனால் இது கஷ்டமாக இருந்தாலும் தவிர்க்கமுடியாததாக இருக்கிறது. இவையெல்லாம் யோசிக்கும் போது அரசு தரப்பில் உள்ள சறுக்கல்களை யோசிக்காமல் இருக்க முடியவில்லை.


அரசு என்ன செய்திருக்க வேண்டும்?

விக்டோரியா அரசு இன்னும் கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்திருக்கலாம் எனவே பலரும் கருதுகிறார்கள். எப்படி?


ஒன்னும் இல்லீங்க. ஏப்ரல் மாதம் நானும் என் மனைவியும் சிட்னி போயிருந்தோம். அங்கு ஒரு முடிவெட்டும் கடைக்கு முடிதிருத்தப் போயிருந்தேன். என் கைபேசி மூலம் ‘செக்-இன்’ செய்யச் சொல்லி, நான் செய்து விட்டேனா எனக் கண்காணித்து விட்டு, பிறகு தான் என் தலையில் கையை வைத்தார் கடைக்காரர். ரெஸ்டாரண்டுகள், கோயில்கள், பொது இடங்கள் என எல்லா இடத்திலும் அந்த வழக்கம் சிறப்பாக கடைப்பிடிக்கப்பட்டது.


ஆனால், மெல்பர்னில் ‘டேக் இட் ஈசி ஊர்வசி’ என இருக்கிறார்கள். அரசும் சரி. மக்களும் சரி. ‘செக்-இன்’ முறையை கடுமையாக கடைப்பிடித்திருந்தால், இப்பொழுது ‘டிராக்கிங்’ எளிதாக இருந்திருக்கும். கோட்டை விட்டுவிட்டோமோ?


அது போல, தனிமைப்படுத்துதல் பகுதி ஒன்று கட்ட இப்பொழுது முடிவெடுத்திருக்கிறார்கள். அதுவும் முன்பே முடிவெடுத்து கட்டியிருக்கலாம். அப்படி செய்திருந்தால், ஹோட்டல் குவாரண்டைன் பணியாளர்கள் மூலம் தொற்று பரவுவதை தவிர்த்திருக்கலாம்.


முடிவாக

திருமண பந்தலில் நுழைந்த பாம்பை அடிக்க துரிதப்படுவது போல, முடக்கநிலை அறிவிப்பு சரியாக இருந்தாலும், அரசும் மக்களும் இன்னும் கொஞ்சம் பொறுப்பாக இருந்திருந்தால், போதுமான கட்டமைப்புகளை உருவாக்கியிருந்தால் இந்த அவலநிலையைத் தவிர்த்திருக்கலாம்.


ஊரடங்கால் வருகிற உளவியல், உடலியல், உறவுகள், கல்வி, பொருளாதார பாதிப்பைத் தவிர்த்திருக்கலாம். தன்மானத்தோடு வருமானம் பெருக்கி வாழ்வதை விட்டு, ஊக்கத்தொகைக்காக கையேந்தும் நிலையைத் தவிர்த்திருக்கலாம். இந்தியாவிலிருந்து வரும் விமானத்தைப் பற்றிக் கவலைப்படுவதைத் தவிர்த்திருக்கலாம். மாநில எல்லைகள் இஷ்டத்திற்கு மூடுவதும் திறப்பதும் சரியா என்கிற வாதத்தை பேச வேண்டிய நிலையைத் தவிர்த்திருக்கலாம்.


எல்லாமே ‘லாம், லாம்’ என இழுக்காமல் இருக்க நீங்களும், நானும், அரசும் இன்னும் பொறுப்பாக இருந்து கொரோனாவை ஆஸ்திரேலியாவில் இல்லாமல் ஆக்குவோம். மற்ற நாடுகளுக்கு முன்மாதிரியாகத் திகழ்வோம்.


அப்பாடா!

இனி நான் நிம்மதியாகத் தூங்க’லாம்.



*****

Picture Credit: The Independent

References: https://theconversation.com/covid-lockdowns-have-human-costs-as-well-as-benefits-its-time-to-consider-both-137233 - குடும்ப வன்முறை, தற்கொலை

38 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page