அடுத்து அல்போன்ஸ் ஊரான கன்னியாகுமரியில் யாத்திரை செய்வது எனத் திட்டம்.
கன்னியாகுமரியில் சிஸ்டர் டெல்ஃபின் அவர்களின் கான்வென்டில் கூடினோம். சிஸ்டர் டெல்பினை நான் பெங்களூர் இண்டியன் இன்ஸ்டிடியூட்டில் ‘சமூக ஆய்வு’ப் பயிற்சியில் பார்த்திருக்கிறேன். அங்கேயே தங்கி ‘கடல்’ என்கிற நாடகத்தைத் தயாரித்தோம்.
மீனவர்களின் பிரச்னைகளை மையப்படுத்திய நாடகம். சிறு படகுகளைக் கொண்டு மீன் பிடிப்பவர்கள், பெரிய ராட்சச போட்களை வைத்திருக்கும் பெரு மீன் பிடிப்போரால் என்னென்ன கஷ்டப்படுகின்றனர் என விவரிக்கும் நாடகம். இடைத்தரகர்களால் நடைபெறுகின்ற சுரண்டல்கள், கடன் சுமை, இவைகளுக்கிடையே அவர்கள் வாழ்வில் இழையோடும் அன்பும் உறவும் என ‘கடல்’ நாடகம் உணர்வுப் பிழம்பாய் வலம் வந்தது.
கடற்கரை கிராமங்களில் நாடகங்கள் போட்டோம். இந்தப் பக்கம் ஆர்ப்பரிக்கும் கடல். அந்தப் பக்கம் மேகத்தோடு உரையாடும் சிலுவையைத் தாங்கிய உயரிய மாதாக் கோயில். நடுவில் வெள்ளை வெளேரென்று மணல் துகள்கள். ஒரு பக்கம் கட்டுமரங்களும், சிறு படகுகளும் அடுக்கி இருக்க, இன்னொரு பக்கம் கடலுக்குப் போய் வந்து, வலையை சரி செய்து கொண்டிருக்கும் விரிந்த மார்புகளைக் கொண்ட மீனவர்கள். அவர்கள் கொண்டு வந்த மீன்களில் சிலவற்றை கருவாட்டிற்காக காயப் போட்டு விட்டு, மீதியைக் கொண்டு சுவையான மீன் கொழம்பு வைக்கத் தயாராகும் மீனவப் பெண்கள்.
பொழிக்கரை, முருங்கவிளையில் நாடகம் போட்டுவிட்டு, சின்ன முட்டத்தில் நாடகம் போட்டோம். கடல் நீரில் கால் நனைய அங்கிருந்து பெரிய முட்டம் போனோம். அங்கிருந்து குளச்சல், இணையம் வழி கோவலம் வரை போனோம். முட்டத்திலிருந்து குளச்சல் போகும் போது வழியில் மண்டைக்காடு என்று நினைக்கிறேன்.
சில வருடங்களுக்கு முன்பு தான் மண்டைக்காட்டில் மதக் கலவரம் நடந்திருந்தது. நாங்கள் போன போது அமைதியாக இருந்தது. ஒரு வாய்க்கால் ஊரையே சுற்றிக் காண்பித்தது. அது மனோரஞ்சிதமாக இருந்தது. அங்கே நாடகம் போட்டோம். அப்பொழுது மதக்கலவரம் நடந்த பின்னணி, அதனால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அதுவே மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்தது.
இடையில் ஒரு நாள், கன்னியாகுமரி பள்ளியொன்றில் குழந்தைகளுக்காக நாடகம் போடச் சொல்லி சிஸ்டர் டெல்ஃபின் ஏற்பாடு செய்திருந்தார்கள். பிரான்சிஸ் என்னைக் கூப்பிட்டார்.
“ ஜான்! கடல் நாடகம் இங்கு பொருந்தாது. இந்த சிறார்களுக்கு துவக்கத்தில் ஏதாவது கதை சொல்ல முடியுமா” என்று கேட்டார். பார்க்கிற மக்களுக்கு பொருத்தமாக கருத்துக்கள் கூறப்படவேண்டும் என்பதில் பிரான்சிஸ் எப்பொழுதும் தெளிவாக இருப்பார்.
நான் பிரபாவை கதைக் கேட்பவராக பாவித்து, நான் கதைசொல்லியாக இருந்து ‘கருப்பு மீனு’ என்கிற கதையைச் சொல்லத் துவங்கினேன். அதன் வடிவம் கதைக்கும் நாடகத்திற்கும் இடையே உள்ள வடிவம். அல்லது இரண்டும் ஒருங்கே இணைந்த வடிவம். கதையை நான் சொல்ல, பிரபா கேட்பார். சில நேரம் பிரபா கேள்வி கேட்பார். நான் பதில் சொல்வேன். சில நேரம் நான் கேள்வி கேட்டால் அவர் பதில் சொல்வார்.
“ அந்த கருப்பு மீனு, கடலைப் பார்க்கனும் ஆசைப் பட்டுச்சு. என்னத்தைப் பாக்கனும்’னு ஆசைப்பட்டுச்சு?” - நான்
“ ம்..ம்..ம்.. கடைப் பாக்கனும்’னு ஆசைப் பட்டுச்சு” - பிரபா.
“ அந்த கருப்பு மீனு, தான் வாழ்ந்துட்டு இருந்த, சின்ன பள்ளத்துலேர்ந்து, ஒரு நாள் ஓடை வழியா வந்து, பெரிய ஆத்துல போய் கலந்துடுச்சு” - நான்
“ ஏன் ஆத்துக்கு போச்சு?” - பிரபா
“ ஏன்’னா அதுக்குத் தான் கடலை பாக்கனும்’னு ஆசை வந்திருச்சுல்ல” - நான்
இப்படி கதை பயணிக்கும். அதோடு நிக்காது. ஒரு கட்டத்தில் நானும் பிரபாவும், கதைமாந்தர்களாகி, ஒரு காட்சியை நடிக்கத் துவங்கிவிடுவோம். எடுத்துக்காட்டாக, அந்தக் கதையில் கறுப்பு மீனும், ஒரு மீன் கொத்தி குருவியும் நட்பாக இருப்பார்கள். (அட! மீன் கொத்தி குருவிக்கும் ஒரு மீனுக்கும் இடையே நட்பா? அழகா இருக்குல்ல!!!)
நான் கருப்பு மீனாக மாறுவேன். பிரபா மீன் கொத்தி குருவியாக மாறுவார். வசனங்களைப் பேசி காட்சியை நடிப்போம். காட்சி நிறைவுற்றதும், மறுபடி நான் கதை சொல்லி, பிரபா கதை கேட்பவர் என்று கதையும் காட்சியுமாக கதை நகரும். குழந்தைகளிடம் மிகப் பெரிய வரவேற்பைக் கொடுத்தது.
பிரான்சிஸ் மனம் திறந்து பாராட்டினார். பாராட்டுவதிலும் மற்றவர்களது திறமைகளை வெளிக் கொணர்வதிலும் பிரான்சிஸ்க்கு நிகர் பிரான்சிஸ் தான்.
“ இந்த வடிவம் நல்லா இருக்கு ஜான். இந்த வடிவத்திற்கு என்ன பேரு?” என்று பிரான்சிஸ் கேட்டார்.
“ இன்றைக்குத்தான் இதைக் கண்டு பிடித்திருக்கிறோம். கதை நாடகம் இணைந்த வடிவம். கதாநாடகம் என வைக்கலாமா” என்று கேட்டேன்.
“ அருமை. கதாநாடகம். இதில் பல வசதிகள் இருக்கின்றன. இருவர் இருந்தால் போதும். அவர்களே கதையில் உள்ள பாத்திரங்களை எடுத்து காட்சிப்படுத்தி கதையைச் சொல்லலாம்.”
அதற்குப் பிறகு, கதாநாடக வடிவத்தை பல பயிற்சிகளில் நான் சொல்லிக்கொடுக்க அந்த தேடல் அனுபவமே விதை.
பள்ளம் என்கிற ஊரில் தான் பிரான்சிஸின் பொறுமைக்கு சோதனை வந்தது.
மாலை 6 மணி. சூரியன் குளிக்கப் போகும் நேரம். மாதா கோயிலுக்கு முன்பு கூடினோம். நாடகத்தைத் துவங்கினோம். ‘கடல்’ நாடகம் ஆரம்பித்தது. இடைத்தரகர்கள் பற்றி காரச்சாரமாக வசனம் வர…
“ ஏய்! யாரலே அது? நாடகத்தை நிறுத்துலே” என சத்தம் கேட்டது. எல்லோரும் சத்தம் வந்த திசையை நோக்கினோம். கைலியை எடுத்து மறுபடி சரிசெய்து கட்டிக்கொள்ள முயற்சி செய்து, அதில் தோல்வியுற்ற ஒரு நபர் எங்களை நோக்கி முன்னேறி வந்தார். நடை கலங்கியிருந்தது. பின்னல் நடையை ‘நான் நேராகத்தான் நடக்கிறேன்’ என மற்றவர்கள் நினைக்கவேண்டும் என்கிற நோக்கத்துடன் கவனமாக நடப்பது எல்லோருக்கும் புரிந்தது.
அரங்கத்தின் வெளியே நின்று, “ யாருடா நீங்கள்லாம்? கலவரம் பண்ண வந்திருக்கீங்களா? ஒதை வாங்கி சாவறதுக்குள்ள ஓடிப்பொயிடுங்க” என்று எச்சரித்தார்.
சுப்புவும் அல்போன்சும் சமாதானப்படுத்த முயன்றனர். “கடையை சாத்திட்டு, ஊரைப்போய் சேருங்க…மச்சி மீனு தலையை நசுக்கறமாதிரி நசுக்கிப்புடுவோம்.” என கத்தல் உச்ச ஸ்தாயியில் கேட்டது.
“ மத்தவங்க எல்லாம் ஆர்வமா கேக்கறாங்க. கலவரமெல்லாம் பண்ண வரல” ன்னு ஏதேதோ சொல்லிப் பாத்தாங்க. அவரோ கடலோரம் நின்று கொண்டிருந்த சிலரின் பக்கம் பார்த்து, “ டேய் பிரகாசம், டேவிட்டு அந்த துடுப்பை எடுத்துட்டு வாடா…இவனுங்கள அடிச்சி வெரட்டு!!!”
நிலைமை மோசமாகியது. பிரான்சிஸ் களத்தில் இறங்கினார். பொறுமையாகப் பேசினார். “ நீங்க சொல்றமாதிரியே முடிச்சுடறோம் தலைவரே! நீங்க அனுமதி கொடுத்தா, இன்னும் ஒரு கலகலப்பான நாடகம் இருக்கு. நீங்க சரின்னா போடறோம். இல்லன்னா போயிடறோம்” என்று சொல்ல, கொதிக்கும் பாலில் நீரை ஊற்றியது போல… காட்சி மாறியது.
“ ஒன்ன எனக்கு புடிச்சிருக்கு. ஓன் பேரு என்ன?”
“ பிரான்சிஸ் தலைவரே”
“ நான் தலைவர்’னு கண்டுபிடிச்சிட்டியா?. சரி ஒனக்காக உடுறேன். ஒன்னு என்ன, ரெண்டு நாடகமே போடு.” என்றார்.
அந்த ‘தலைவரின்’ பக்கத்திலேயே பிரான்சிஸ் நின்றுக்கொண்டார். பக்கத்தில், போதையின் வாசனையையும் தாங்கிக்கொண்டு ஏதோ பேச்சு கொடுத்துக்கொண்டிருந்தார். பொறுமையின் சிகரம் பிரான்சிஸ்க்கு வெற்றி! பொறுமை மாத்திரம் அல்ல, சாதுர்யமாக நிலைமையை சமாளிக்கும் திறனும் கொண்டிருந்ததால் அன்றைக்கு எல்லா நாடகங்களுமே தொடர்ந்து போட்டோம்.
குப்பைத்தொட்டியையும், புறாக்களையும் போட்டு முடித்தோம். புறாக்கள் எல்லாம் சேர்ந்து வலையை எடுத்துக் கொண்டு பறக்கும் காட்சியில், அந்த ‘தலைவர்’ கைதட்டி வெகுவாக ரசித்தார்.
பிரான்சிஸின் முதுகில் தட்டி,” நான் தான் எல்லாருக்கும் டீ, பன் எல்லாம் வாங்கிக் குடுப்பேன். வேண்டாம்’னு சொல்லப்படாது” என்று அன்பாக முறைத்துக்கொண்டார்.
“ டேய் பிரகாசம்! எல்லோருக்கும் டீ சொல்லு. டேவிட்டு அந்த பன்னு எடுத்து பிள்ளைகளுக்கு குடு. என்னமா மணல்’லு பொரண்டு கிரண்டு நடிச்சுதுங்க பாத்தியா.. ஒனக்கு தெரியுமா? முட்டா பயலே…” என்று சரமாரியாகத் திட்டத் தொடங்கினார். ஒரு வழியாக பள்ளம் ஊரிலிருந்து கிளம்பினோம்.
இது பரவாயில்லை. கொடைக்கானலில், விறகு ஏற்றிச் செல்லும் லாரியில், மழையில், தார்ப்பாயின் அடியில் ஒளிந்து பயணித்த போது நடந்தது தான் எதிர்பாராத ஒன்று.
*****************
( தொடரும்...)
Comments