வாழ்த்துரை
திரு. அகநம்பி அவர்களை பல ஆண்டுகளாக எனக்குத் தெரியும். பல நூல்களைப் படித்து, தாம் கற்றவற்றைப் பிறருக்கு எடுத்துரைக்கும் நல்ல நோக்கத்தோடு, கட்டுரைகளை எழுதுவதும், மேடைகளில் பேசுவதும், நூல்களை வெளியிடுவதும் என ஒரு கருத்தாளராகவும், சமூக அக்கறையாளராகவும் மிளிர்ந்துக் கொண்டே இருப்பவர் திரு. அகநம்பி அவர்கள்.
அவரது பல சிறப்பானக் கட்டுரைகளை ஏந்தி வரும் இந்த நூல் தமிழுலகத்துக்கு கிடைக்கிற மிக முக்கிய ஆவணம். இந்த நூலில் மொழி மற்றும் ஊடகம், இசை மற்றும் கலை, சுற்றுச் சூழல் மற்றும் தொழிற்நுட்பம், தொழில்துறை மற்றும் எதிர்கால இளையோர் என பல்சுவை விருந்து வாசகர்களுக்குக் காத்திருக்கிறது.
மொழி மற்றும் ஊடகம்
மொழி மற்றும் ஊடகம் என்கிற தொகுதியில் ஐந்து கட்டுரைகளை ஆசிரியர் எழுதி இருக்கிறார். அவைகளைப் படிக்கும் போது ஆசிரியரின் சமூக அக்கறை மிகத் தெளிவாக புலப்படுகிறது. திரைப்படக் கவர்ச்சி நடிகைகளுக்கு நேரமும் இடமும் ஒதுக்கித் தரும் ஊடகங்களை வெகுவாகச் சாடி விட்டு, ஊடகத்தின் சமூக வளர்ச்சிக் குறிக்கோளை நியாயமாக நினைவுபடுத்துகிறார். குடிநீர், கல்வி போன்ற அடிப்படைப் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்க ஊடகங்களை ஊக்கத்தோடு அழைக்கிறார். அடுத்து, இதழியில் மீது ஆசிரியருக்கு உண்டான காதலும் இக்கட்டுரையில் புரிகிறது. முகநூல், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் ஊடக உலகில் உச்சத்தில் இருக்கும் பொழுது இதழியல் எதிர்நீச்சல் போட்டு முன்னேறவேண்டியதன் அவசியத்தை இதழியலாளர்களுக்கு இருக்கும் சவால்களையும் இனிதே எடுத்துரைக்கிறார்.
மத்திய அரசின் நிதி பற்றிய ஒரு கட்டுரையில் கூட, மொழியின் ஆளுமையை மொழிகிறார். இந்திய நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சராக இருந்து தமிழர் ஆர். கே. சண்முகம் செட்டியார் அவர்களின் பங்கு பற்றி குறிப்பிடும் பொழுது ‘அழிவதும் ஆவதும் ஆகி வழிபயக்கும் ஊழியமும் சூழ்ந்து செயல்’ என்கிற குறளை விளக்குகிறார்.
‘தமிழ் வளர்த்த வெளி நாட்டவர்கள்’ என்கிற கட்டுரையில் பல வெளிநாட்டவர்கள் எடுத்த முயற்சிகள் ஆதாரங்களோடு எடுத்துக் கூறப்படுகிறது. போர்த்துகீசிய நாட்டு ‘என்றிக்கே என்றீக்கசு’ என்பவர் முதல் இத்தாலி நாட்டு ‘இராபர்டேர் நோபிலி’ வரை பலருடைய வாழ்க்கைச் சாதனைகளை அழகுற விளக்குகிறார். அவர்கள் தமிழுக்கு ஆற்றிய அரும்பெரும் பணிகளைச் சுட்டிக்காட்டி, வாசகர்களைத் தட்டி எழுப்புகிறார். ஜெர்மானிய நாட்டைச் சேர்ந்த பர்த்தலேமேயு சீகன் பால்க், ஏழு மாதங்கள் கப்பல் பயணம் மேற்கொண்டு தரங்கம்பாடி வந்தடைந்து, கடற்கரை மணலில் தமிழ் கற்று, குழந்தைகளுக்கான இல்லமும் பள்ளியும் தொடங்கி, இந்தியாவின் முதல் அச்சகத்தை அமைத்து, தமிழ் இலக்கிய நூல்களை எளிய முறையில் அச்சடித்து விநியோகம் செய்ததுவரை அவர் விவரிக்க விவரிக்க வாசகர்களின் கண்கள் அகல அகல விரிந்துக் கொண்டே போகிறது. வருங்கால தலைமுறையினர் நிச்சயம் வாசிக்க வேண்டிய கட்டுரைகளில் ஒன்றாக அது மிளிர்கிறது.
‘அகராதியியல் தோற்றமும் வளர்ச்சியும்’ என்கிற கட்டுரை சிறப்பாகக் கவனிக்கக்கூடிய கட்டுரை என்று நான் நினைக்கிறேன். திருமூலரின் திருமந்திரத்தில் முதன்முதலாகக் காணப்பெறும் ‘அகராதி’ என்கிற சொல், தொல்காப்பியத்தில் ‘பனுவல்’ என்றும் வடமொழி கலப்பில் ‘நிகண்டு’ என்றும் கூறப்பட்டு பிறகு தேவநேயப் பாவாணர் ‘அகரமுதலி’ என்று மாற்றிய தரவை அழகுற விளக்குகிறார். வெவ்வேறு காலக்கட்டத்தில் பலரும் எழுதிய அகராதிகளைப் பட்டியலிடுவது வாசகர்களுக்கு மிகவும் பயன்படும்.
இசை மற்றும் கலை
இசை மற்றும் கலை என்கிற தொகுதியில் நான்கு கட்டுரைகளை ஆசிரியர் எழுதி இருக்கிறார். நான்கையும் படிக்கும் பொது ஆசிரியர் தமி்ழ்க் கலைகள் மீதும் தமிழ் இசையின் மீதும் வைத்திருக்கிற அளப்பரிய ஆர்வம் புரியவருகிறது. அகத்தியம், தொல்காப்பியம், திருக்குறள் என்று பல்வேறு இலக்கியச் சான்றுகளிலிருந்து சங்கீத மூம்மூர்த்திகள் வரை ஆய்வு செய்து, தமிழிசையின் இலக்கணத்தையும் அதன் வளர்ச்சியையும் அழகுற எழுதுகிறார். தமிழிசை எவ்வாறு தெற்காசிய நாடுகளுக்கு பரவியது என்றும் சான்றுகளோடு நிறுவுகிறார். மலேசிய நாட்டில் கெடா என்கிற பகுதியில் கிடைத்த கல்வெட்டைச் சுட்டிக் காட்டி வணிகத்தோடு பண்பாட்டையும் பகிர்ந்துள்ள தகவலைத் தெரிவிக்கிறார்.
‘களிப்பூட்டும் கழியலாட்டம்’ என்கிற கட்டுரையில், கலைகளின் நோக்கத்தையும் வகைகளையும் குறிப்பிடுவதோடு, குமரி மாவட்டத்தில் கழியலாட்டம் விளையாடும் விதத்தை பாடலுடன் விவரிக்கிறார். ‘மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது தமிழர் இசை’ என்கிற கட்டுரையில் இசை முறைகளையும் இசைக் கருவிகளையும் திறம்பட விவரிக்கிறார். மலைபடுகடாம் போன்ற இலக்கிய நூல்களையும், திருச்செந்தூர் கல்வெட்டுகளையும் காண்பித்து தமிழ் இசை பற்றி ஆய்வு செய்கிறார். குடுமியான் மலை முதல் சந்திரகிரி வரையிலான கல்வெட்டுகளில் உள்ள இசைக் கலைஞர்களின் பெயர்களை பட்டியலிடுகிறார். தாராபுரம் முதல் திருவட்டாறு வரையிலான கோவில்களில் உள்ள இசைச் சிற்பங்களை எடுத்துக்காட்டாக பயன்படுத்துகிறார். மருத்துவமாகவும், ஊடகமாகவும் இசை செயல்படுவதை எடுத்துரைக்கிறார்.
‘கைக்கொடுக்கும் கரலாக்கட்டை’ சுவராஸ்யமான மற்றொரு கட்டுரை. ‘கைகர்லா, புசகர்லா, தொப்பைகர்லா, குஸ்திகர்லா, பிடிகர்லா’ போன்ற 64 கர்லா முறைகள் இருப்பதை விளக்கி இதன் தொன்மையையும் தொடர்ச்சியையும் படம் பிடித்துக் காட்டுகிறார்.
சுற்றுச் சூழல் மற்றும் தொழிற்நுட்பம்
சுற்றுச் சூழல் மற்றும் தொழிற்நுட்பம் தொகுதியில் நான்கு கட்டுரைகளை ஆசிரியர் எழுதி உள்ளார். அவைகளைக் கூர்ந்து படிக்கும் போது, ஆசிரியர் மனித சமூகம் வாழும் இயற்கை மேல் வைத்துள்ள ஈர்ப்பை உணரமுடிகிறது. சுற்றுச்சூழலை மேம்படுத்த தேவையான தொழிற் நுட்பத்தைப் பற்றியும் எழுதுகிறார். புதைவடிவ எரிபொருட்களான நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு போன்றவைகளுக்கு மாற்றாக, என்றென்றைக்கும் கிடைக்கும் மாற்று எரிவாயுக்களில் ஒன்றான சூரிய ஆற்றல் மற்றும் கடல் காற்றாலை மின் சக்தியின் தேவையை ஆதாரங்களுடனும் ஆதங்கத்துடனும் பதிவு செய்கிறார். மத்திய அரசும் மாநில அரசும் இதற்காக எப்படியெல்லாம் திட்டமிடுகிறது என்று சான்றுகளுடன் பட்டியலிடுகிறார்.
‘நீர்நிலைகளை நேசிப்பதுடன் பாதுகாப்பதும் நமது கடமை’ என்கிற கட்டுரை மிக முக்கியமாக கட்டுரையாகப் பார்க்கப்படுகிறது. அறிவியலையும் இலக்கியத்தையும் கலந்து கொடுக்கும் இரசவாதம் ஆசிரியருக்கு கைவந்த கலையாக இருக்கிறது. சங்க காலப் புலவர் காராயாசான் இயற்றிய சிறுபஞ்சமூலம் நூலிலிருந்து பாடலை மேற்காள் காட்டும் போதே, 71% நீரால் சூழப்பட்ட பூமியின் அறிவியல் தரவுகளை அடுக்குகிறார். சுவாரஸ்யமான தகவல்களைக் கொடுப்பதில் ஆசிரியருக்கு நிகர் அவரே. பெரிய குளங்கள் இருந்த ஊர் ‘பெருங்களத்தூர்’, ஏரியும் காடுகளும் நிறைந்து ஊர் ‘ஏரிக்காடு’ ஆகி ‘ஏற்காடு’ ஆனது என்றும் இன்னும் குழித்துறை, ஒழுகினசேரி என ஊர்களின் பெயர்களைச் சுட்டி விளக்குகிறார். நீர் மேலாண்மையின் அவசியத்தை கச்சிதமாக எடுத்துரைக்கிறார்.
‘வள்ளுவம் போற்றும் வான்மழை’ என்கிற சிறப்புக் கட்டுரையில் நீரின் சிறப்பையும் அதன் மேலாண்மை குறித்தும் மறுபடியும் விளக்குகிறார். மழையை வள்ளுவர் ‘வான் சிறப்பு’ என்கிற அதிகாரத்தில் குறிப்பிடுவதை எடுத்துக்காட்டி, தமிழர்களின் பண்பாட்டுத் தளத்தில் மழைக்கு ‘மாரி’ என்ற சொல் வழங்குவதையும், அதன் மேன்மையை இன்னும் மெருகூட்ட ‘மாரியம்மன்’ வழிபாட்டையும் எடுத்து வைக்கிறார். இயற்கையின் இயல்பை அழகாக வருணிக்கும் பொழுது, மழை வருமுன் உயிரினங்கள் எப்படி நடந்துக் கொள்கின்றன என்று வாசகர்களின் கண்முன்னே கொண்டு வருகிறார். எறும்புகள் உணவுத் துகள்களை எடுத்துக் கொண்டு மேடான இடத்துக்குச் செல்வது முதல், பறவைகள் தாழ்வாக பறப்பது ஈறாக காட்சிகளை வர்ணிக்கிறார்.
‘குளிர்ச்சி தரும் கொல்லிமலை’ கட்டுரை நம் மனங்களை குளிரவைக்கும் என்பதில் வேறு கருத்தில்லை. கொல்லிமலைக் கதையை சங்க காலத்திலிருந்து துவங்குகிறார். புறநானூற்றில் பெருஞ்சித்திரனார் குறிப்பிடுகிற ‘கொல்லி ஆண்ட வல்வில் ஓரி’ என்ற சொல்லாட்சியையும், குறுந்தொகையில் கபிலர் குறிப்பிடுகிற ‘வல்வில் ஓரி கொல்லிமலை’ என்ற பகுதியையும் சுட்டிக்காட்டி தன் வாதத்திற்கு வலுச் சேர்க்கிறார். இன்றையக் கொல்லிமலைக்கு வாசகர்களையும் பயணிக்க வைக்கிறார். சாலையில் இருபுறமும் ஏலக்காயும், பாக்கும், தென்னையும், வாழையும், மூங்கிலும், தேக்கும், வெற்றிலையும், மிளகும் நேர்த்தியாக வளர்ந்து உள்ளதை ஒரு நாவலாசிரியர் போல காட்சிப்படுத்துகிறார். அது எப்படி சித்தர்களின் சொர்க்கபூமியாக இருந்தது என்றும் இப்பொழுதும் இருக்கிறது என்றும் விளக்குகிறார்.
தொழில்துறை மற்றும் எதிர்கால இளையோர்
தொழில்துறை மற்றும் எதிர்கால இளையோர் என்கிற தொகுதியில் மூன்று கட்டுரைகளை எழுதியுள்ளார். தொழில் துறையில் நேற்றைய இந்தியா எந்த நிலையில் இருந்தது என்றும், இன்றைய இந்தியா எந்த நிலையில் இருக்கிறது என்றும் வருங்காலத்தில் நாளைய இந்தியா உலகச் சந்தையை எப்படிக் கைப்பற்றும் எனவும் புள்ளிவிவரங்களோடு வாசகர்களின் முன் வாதங்களை எடுத்து வைக்கிறார். அதற்கு லேண்ட் மார்க் குழுமத்தின் மேக்ஸ் பேசன் நிறுவனம் முதல் பிக் பஜார் நிறுவனம் வரை எடுத்துக்காட்டுகளை அடுக்குகிறார். மத்திய அரசு செய்து கொண்டிருக்கும் முன்னெடுப்புகளை தரவுகளோடு முன் வைக்கிறார். ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காக்களை அமைப்பது குறித்து விளக்குகிறார்.
‘எதிர்கால இளையோர்’ என்கிற கட்டுரையில் நூல் ஆசிரியர் வருங்கால இந்தியாவை நினைத்து வருத்தப்படுகிறார். அதோடு நம்பிக்கை கொடுக்கும் வண்ணம் இளம் தலைமுறைக்கு வழிகாட்ட வேண்டிய வழிமுறைகளையும் எடுத்துரைக்கிறார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூர் மாணவி தற்கொலை முதல் விருத்தாச்சலம் மாணவி தற்கொலை வரை சான்றுகளைக் காட்டி, அதற்கான காரண காரியங்களை ஆய்வு செய்வதோடு அடுத்து செய்யவேண்டியது என்ன என்றும் அடுக்குகிறார். எடுத்துக்காட்டாக, பெற்றோரும் மற்றோரும் படிக்கும் மாணவ மாணவியரை பாராட்டவேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கிறார். குறைந்த பட்சம் அவர்களோடு அளாவளாவ வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர வைக்கிறார். அதோடு, ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையேயான உறவை மேம்படுத்த செய்யவேண்டிய இயல்பான முறைகளை விளக்குகிறார். மொத்தத்தில், வருங்கால தலைமுறையை ஆற்றல் மிக்க குடிமக்களாகவும், சமுதாயத்தில் மதிப்பு மிக்கவர்களாகவும், தன்னம்பிக்கையுடன் குறிக்கோள் உடையவர்களாகவும், நல்ல பண்பாடும் பழக்க வழக்கமும் கொண்டவர்களாகவும் உருவாக்க வேண்டியது நம் எல்லோருடைய கடமை என்று வலியுறுத்துகிறார்.
திரு. அகநம்பி அவர்களின் இந்த இனிய பணியைப் பாராட்டுகிறோம். அவர் மென்மேலும் கருத்துக்களை நுகரவேண்டும். அப்படி நுகர்ந்த கருத்துக்களை பிறருக்கு, அவருடைய இனிய பாணியில் பகிரவேண்டும் என்று வாழ்த்துகிறோம்.
நன்றி
பெயர்
நாள்
Comments