top of page
Writer's pictureJohn B. Parisutham

கட்டுரை 17 - ஆஸ்திரேலியாவின் நிலநடுக்கங்களின் வரலாறும், பாதிப்பும், - நிலநடுக்கங்கள் வந்தால்

Updated: Jan 9, 2022



வீட்டின் மேல் மாடியில், என் கணிணியின் முன் உட்கார்ந்து, வேலை செய்து கொண்டிருந்தேன். என் தலைக்கு மேலை ‘சட, சட’ வென சத்தம் கேட்டது. என்ன சத்தம் என எண்ணுவதற்குள், வீட்டு கூரை நொறுங்கி விழுவது போல் ‘படார் படார்’ என அந்த சத்தம் அதிகமாகியது. பக்கத்தில் இருந்த வைப்பறையில் இருந்து சில நூல்கள் ‘தொப் தொப்’ பென கீழே விழுந்தன. என் உடல் என்னையுமறியால் ஆடியது. கூரை இடிந்து தலைக்கு மேலே விழுமுன் கீழே இறங்கி ஓடி விடலாம் என மூச்சை கையில் பிடித்துக்கொண்டு ‘சர சர’ வென படிக்கட்டில் இறங்கி ஓடினேன். படிக்கட்டின் கைப்பிடி ஆடியது.


என்ன நடக்கிறது எனப்புரியாமல் வெளியே ஓடிவந்த போது, வீட்டின் பின்புறத்தில், காய்கறித் தோட்டத்தில் இருந்த என் மனைவி, வெளிறிய முகத்துடன், ‘களை எடுத்துக்கொண்டிருந்தேன், திடீரென பாதுகாப்பு வேலி சாய்ந்து விழுவது போல் இருந்தது’ என்றார். இருவரும் கைகளைப் பிடித்துக்கொண்டோம். ஆனால் இருவரது உடலும் ஆடிக்கொண்டிருந்தது. பக்கத்து வீட்டுக்காரர்கள் வெளியே ஓடி வந்தார்கள். நீங்கள் உணர்ந்தீர்களா? என்று கேட்டார்கள். அப்பொழுது தான் தெரிந்தது பக்கத்திலும் நடந்திருக்கிறது என்று. என் பிள்ளைகள் தொலைபேசியில் அழைத்தார்கள். பாதுகாப்பு பற்றி விசாரித்தார்கள். தொலைக்காட்சியில் செய்தியைப் பார்த்தோம். ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதியில் நிலநடுக்கம் 5.8 ரிக்டர் அளவுக்கு வந்திருக்கிறதை உணர்ந்தோம்.


இப்படிப்பட்ட நிலநடுக்கம் ஏன், எப்படி உண்டாகிறது, ரிக்டர் அளவை எப்படி கணக்கிடுகிறார்கள், நிலநடுக்கத்தின் போதும் அதன் பிறகும் உடனே என்ன செய்யவேண்டும் என்று தேடி எழுத ஆரம்பித்தேன்.


நிலநடுக்கம் ஏன் உண்டாகிறது?

பூகம்பம் அல்லது பூமியதிர்ச்சி என்று சொல்லப்படுகிற earthquake, பூமிக்கடியில் அழுத்தம் அதிகமாகி, அதனால் சக்தி வெளியேற்றப்பட்டு, பூமியின் தளத்தட்டுகள் (டெக்கோனிக் கட்டுகள்) என்கிற Plates ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்வதனால் இடம் பெறும் அதிர்வையேக் குறிக்கிறது. இந்த அதிர்வை Sesimometer என்கிற நிலநடுக்கமானியால் அளந்து இத்தனை ரிக்டர் அளவில் நிலநடுக்கம் வந்திருக்கிறது என்று சொல்கிறார்கள். 7.0 ரிக்டருக்கும் கூடுதலான அதிர்வுகள் பலத்த சேதத்தை ஏற்படுத்தும். விக்டோரியா, கான்பரா மற்றும் நியூ சௌத் வேல்ஸ் மாநிலங்களின் சில பகுதிகளைத் தாக்கிய இன்றைய நிலநடுக்கம் 6.0 ரிக்டர் என்று அளவிட்டிருக்கிறார்கள். கொஞ்சம் அதிகமாகி இருந்தால் அழிவு சொல்லிக்கொள்கிறாற் போல் இருந்திருக்கும்.


கொஞ்சம் பூகோளப் படிப்பு படிப்போம்.


பூமியின் மேற்பரப்பு பெரும் பாளங்களாக அமைந்துள்ளது என்றும் அவை நகரும் பிளேட்டுகளாக இருக்கிறது என்றும் உங்களுக்குத் தெரியும். நிலப்பரப்பிலும் நீரின் அடியிலுமாக உள்ள ஏழு பிளேட்டுகள் மிகப் பெரியதாகவும் அதில் ஐந்து கண்டங்களும் பசிபிக் முதலிய சமுத்திரப் பகுதிகளும் அடங்கி இருக்கின்றன. இந்தப் பிளேட்டுகள் சுமார் 80 கி.மீ. தடிமன் கொண்டதாக இருக்கின்றன. இதனடியில் பாறைகள் கொதிக்கும் குழம்பாக இருப்பதாலும், பூமியின் சுழற்சி வேகத்தில் இந்தப் பாறைக் குழம்பு நகர்வதாலும், மேலே இருக்கும் பிளேட்டுகள் ஒன்றுடன் ஒன்று உராய்வதுடன் நகர்ந்தும் செல்கிறது.


ஒவ்வொரு வருடமும் 5 லட்சம் நிலநடுக்கங்கள் புவியில் ஏற்படுகின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? இவற்றில் கிட்டத்தட்ட 1 லட்சம் நிலநடுக்கங்கள் மக்களால் உணரப்படுகின்றன.


நிலநடுக்கத்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?

நிலம் நடுங்கி பிளந்துகொள்ளும். இதனால் கட்டடங்களும், வீடுகளும் அழிவுக்குள்ளாகும். அடுத்து மண்சரிவு அல்லது பனிச்சரிவு ஏற்படலாம். நிலநடுக்கத்தின் போது வாயு வழங்கல் குழாய்களும், மின்சாரக் கம்பிகளும் பாதிக்கப்படுவதால் தீ விபத்து ஏற்படும் அபாயம் இருக்கிறது. ஆழிப்பேரலை என்கிற சுனாமி வருவதற்கும் வாயப்பிருக்கிறது.


கடலடியில் 7.5க்கும் அதிகமான நிலநடுக்கங்கள் சுனாமி அலைகளை உருவாக்கும். இந்தோனேசியாவில் தொடங்கி இந்தியா வரை பாதித்த 2004 டிசம்பரில் வந்த சுனாமியையும் அது கொணர்ந்த பாதிப்பையும் யாரால் மறக்க முடியும். இது தவிர வெள்ளமும் வரலாம். தடுப்பணைகள் உடையலாம். இதையெல்லாம் தாண்டி, நிலநடுக்கத்தின் போது மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் காயங்கள் ஏற்படவும், மரணம் சம்பவிக்கவும் நிறைய வாய்ப்பு இருக்கிறது. சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட தனியார் மற்றும் பொதுச் சொத்துகள் நாசமாகலாம். இந்தக் குழப்பங்களில் நோய் பரவும் அபாயமும் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு மன அழுத்தம் உண்டாகவும் வாய்ப்பிருக்கிறது.


ஆஸ்திரேலியாவில் என்னென்ன பாதிப்புகளை இன்றைய நிலநடுக்கம் கொண்டுவந்தது?

தென்கிழக்கு ஆஸ்திரேலியாவில், புதன்கிழமை காலை 9:15 மணிக்கு விக்டோரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மெல்பர்ன் நகரத்தில் சில கட்டடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. சில டிராம் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தில் யாருக்கும் மோசமான காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறியுள்ளார். மேலும் ஆஸ்திரேலியாவில் நிலநடுக்கங்கள் அசாதாரணமானவை என்றும் அது மிகவும் வருத்தமான நிகழ்வு என்றும் குறிப்பிட்டுள்ளார்.


ஆஸ்திரேலியாவில் நடந்த மிகப்பெரிய நிலநடுக்கங்கள் எவையெவை?

• 1855 - Victoria - Offshore Cape - 5.5 ரிக்டர் அளவு

• 1902 - south Australia Beachport - 6.5 ரிக்டர் அளவு

• 1918 - Queensland - Bundaberg - 6.0 ரிக்டர் அளவு

• 1946 - Victoria/Tasmania - Bass Strait - 6.2 ரிக்டர் அளவு

• 1968 - Western Australia - Meckering - 6.5 ரிக்டர் அளவு

• 1970 - Western Australia - Cannin gBasin - 6.7 ரிக்டர் அளவு

• 1971 - Western Australia - Canning Basin - 6.4 ரிக்டர் அளவு

• 1975 - Western Australia - Canning Basin - 6.2 ரிக்டர் அளவு

• 1979 - Western Australia - Cadoux - 6.1 ரிக்டர் அளவு

• 1988 - Northern Territory - Tennant Creek - 6.6 ரிக்டர் அளவு

• 1989 - New South Wales - Newcastle - 5.6 ரிக்டர் அளவு. 13 பேர் மாண்டனர்

• 1997 - Western Australia - Collier Bay - 6.2 ரிக்டர் அளவு

• 2011 - Queensland - Bowen - 5.3 ரிக்டர் அளவு

• 2012 - Victoria - Gipplsland - 5.3 ரிக்டர் அளவு

• 2015 - Queensland - Fraser Island - 5.4 ரிக்டர் அளவு

• 2016 - Northeren Territory - Petermann Ranges - 6.1 ரிக்டர் அளவு

• 2018 - Western Australia Lake Muir - 5.3 ரிக்டர் அளவு

• 2021 - Victoria - Melbourne - 5.9 ரிக்டர் அளவு


நிலநடுக்கத்தை உணர்ந்தால் நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியது என்ன?

1. வீட்டை விட்டோ, கூரை இருக்கும் எந்த கட்டிடத்தையும் விட்டோ உடனடியாக , கட்டிடம், மரம், மின்கம்பி, பாலம் போன்றவை இல்லாத, வெளியிடத்திற்கு வெளியேறுங்கள்.

2. வீட்டை விட்டு வெளியேற முடியவில்லையென்றால், நல்ல தடியான மேசைக்கு கீழே போய் ஒளிந்துக் கொள்ளுங்கள்.

3. லிப்டுக்குள் மாட்டிக்கொண்டீர்களென்றால், கீழே உட்கார்ந்து, நன்றாக மூடியபடி, தரையை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.

4. மிகவும் அவசியம் தவிர மற்றபடி வாகனங்களை ஓட்டுவதைத் தவிருங்கள்.

5. வாகனம் ஓட்டிக்கொண்டிருக்கும் போது நிலநடுக்கத்தை உணர்ந்தால், உடனடியாக ஓரமாக நிறுத்தி, சீட் பெல்ட் போட்டவாறு அமைதியாக இருங்கள்.

6. நடுக்கம் நின்றதும், பிளவுபட்டிருக்கும் சாலை, உடைந்து போயிருக்கும் பாலம் போன்றவற்றை பார்த்து கவனமாக ஓட்டுங்கள்.

7. கடற்கரையோரம் இருந்தீர்களென்றால், கீழே உட்கார்ந்து, உங்களை மூடியபடி, தரையை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள். நடுக்கம் முடிந்ததும், உடனடியாக மேட்டுப் பகுதியை நோக்கி ஓடுங்கள். சுனாமி அலைகள் எப்பொழுது வேண்டுமென்றாலும் வரலாம்.

8. மலைப்பகுதியில் இருந்தீர்களென்றால், மண்சரிவு இருக்கும் இடம் இல்லாத இடத்திற்கு நகருங்கள்.

9. எச்சரிக்கை செய்திகளை ஏதாவதொரு ஊடகத்தின் வாயிலாக தெரிந்துக் கொள்ளுங்கள்.

10. நிலநடுக்கம் சம்பந்தப்பட்ட உடனடி உதவிக்கு SES phone 132 500 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள். உயிருக்கு அபாயம் இருக்கும் சூழலில் 000 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்.


நிலநடுக்கத்திற்குப் பிறகு நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

1. உங்கள் வீட்டில் ஏதாவது உடைந்த பொருட்கள் இருந்தால் அதை கவனமாக சுத்தம் செய்யுங்கள்.

2. உங்கள் வீட்டின் உள்ளோ அல்லது வெளியிலோ, உடைப்புகள் அல்லது விரிசல்கள் இருக்கிறதா என பரிசோதியுங்கள். சேதத்திற்கு ஏற்றாற் போல, உடனடியாக இன்சூரன்ஸ் கம்பெனிக்கு தகவல் அனுப்புங்கள்.

3. உங்கள் வீட்டிற்கு வரும் வாயு குழாயிலோ, நீர் குழாயிலோ வெடிப்பு இருக்கிறதா எனச் சரிப் பாருங்கள்.

4. தூசி இருக்கும் பட்சத்தில், வாயை ஏதாவது ஒரு துணி கொண்டு மூடிக்கொள்ளுங்கள்.

5. நிலநடுக்கத்தில் மாட்டிக்கொண்டால், ஒலி வரும் குழாயையோ அல்லது சுவரையோ தட்டி, மீட்பு பணி செய்பவர்களுக்கு சமிக்ஞை செய்யுங்கள். தேவைப்பட்டால், குரலை உயர்த்தி கூப்பிடுங்கள்.


நிலநடுக்கம் வராமல் நாம் தடுக்க முடியாது. ஆனால் நிலநடுக்கம் வந்தால் நம்மையும் பிறரையும் காப்பாற்ற முடியும்.


*****


ஆய்வுக்கு உதவியவை:

6. https://www.abc.net.au/news/2021-09-22/live-melbourne-earthquake-victoria-nsw-canberra/100481780

27 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page