top of page
Writer's pictureJohn B. Parisutham

கட்டுரை 5 - சீனாவை கைக்குள் வைத்திருக்கும் கம்யூனிச கட்சியின் 100 ஆண்டுகள்: சாதனையும் வேதனையும்

Updated: Jan 9, 2022


சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (Chinese Communist Party - CCP) இந்த மாதம் (ஜூலை) தன் நூற்றாண்டு விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடுகிறது.


To read this article in SBS Podcast Click here: https://www.sbs.com.au/language/tamil/chinese-communist-party-centenary?fbclid=IwAR2Z3nbK_4EKYmZiRwx_k5i809djP41cLRnHi4R-tiXiFw8AKtG6vLuE9NM


சீனாவில் உள்ள 56 இனக்குழுக்களை குறிக்கும் வண்ணம், பீரங்கி குண்டுகளை 56 தடவைகள் முழங்கி, 9 நினைவு நாணயங்களை வெளியிட்டு, வானத்தில் ஹெலிகாப்டர்கள் மூலம் செங்கொடியைப் பறக்க விட்டு, 100 என்று காணும் விதமாக ஜெட் விமானங்கள் பறக்க, வான்அதிரும் மேளங்களுடனும் துள்ளல் இசையுடனும், தியானமென் சதுக்கமே அதிரும் வண்ணம், 9 கோடி உறுப்பினர்களைக் கொண்ட சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகின்றனர். பல்வேறு நகரங்களில் ஒலிஒளி நிகழ்ச்சிகளை கட்சியினர் நடத்துகின்றனர்.

மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டிய இந்த தருணத்தில், ஆஸ்திரேலிய சீன இளைஞரான Yin மிகுந்த கவலையோடு இருக்கிறார். “என் பெற்றோர்கள் குற்றம் புரிந்துவிட்டனர். நான் பிறந்திருக்கவே கூடாது.” என அங்கலாய்க்கிறார். சீன அரசின் ஒற்றைக் குழந்தை கொள்கைக்கு மாறாக பிறந்த Yin போன்ற இரண்டாவது குழந்தைகளைக் ‘கருப்புக் குழந்தைகள்’ என்று அழைக்கின்றனர். இப்படிப்பட்ட கொடூரமான அரசுக் கொள்கைகளைக் கொண்ட சீன கம்யூனிஸ்ட் கட்சி, அசுர பொருளாதார வளர்ச்சி அடைந்துவிட்டோம் என மார்தட்டிக்கொண்டு இந்த நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (CCP) தொடங்கிய வரலாறு, அதன் தத்துவம், அடைந்த சாதனைகள், மற்றும் அனுபவித்த பின்னடைவுகளை அலசுவோம்.


சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிறப்பு

சீனாவில் 1920களின் முன்பகுதியில் வரலாற்றில் சொல்லொண்ணா துயரம் தந்த பஞ்சம் வந்தது. பயிர்கள் அழிந்தன. கால்நடைகள் இறந்தன. குழந்தைகளை காசுக்கு விற்றனர். மக்கள் பீதியில் இடம் பெயர்ந்தனர். அரசாங்கம் கண் பிதுங்கி நின்றது. குறுநில பிரபுக்கள் அட்டகாசம் செய்தனர். புரட்சிகர நடவடிக்கைகள் துவங்க ஏதுவாக இருந்தது இந்த பின்னணி.

இதற்கு முன்னதாக, 1917ம் ஆண்டில் ரஸ்யாவில் புரட்சி ஏற்பட்டிருந்தது. Russian Social Democratic Labour Party என்கிற போல்ஷிவிக்குகள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தனர். அவர்களின் உதவியுடன் Chen Duxiu மற்றும் Li Dazhao ஆகியோரால், கொடூர பஞ்சப் பின்னணியில், 1921ல் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (CCP) துவங்கப்பட்டது.

ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் நிதி உதவியுடன் 1924ல் Whampoa (Huangpu) Military Academy ஐ நிறுவினர். அதில் பயிற்சி பெற்று வெளி வருபவர்கள் போர் திறத்தோடு, புரட்சிகர கம்யூனிஸ்ட் தத்துவத்தையும் உள்வாங்கி வந்தனர்.

CCP 1927 வாக்கில் 60,000 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.சீனாவை ஆண்ட Kumintong உடைய தேசியவாத அரசாங்கத்திற்கு எதிராக உள்நாட்டுப் போரை (civil war) நடத்தியதில் பலரை இழந்து 10,000 உறுப்பினர்களாக பலமிழுந்து நின்றது. பலரும் கிராமப் புறங்களுக்கு ஓடி ஒளிந்துக் கொண்டனர்.


மா சேதுங்கும் டெங் ஷியாபிங்கும்

அப்படி ஓடி ஒளிந்த கட்சி உறுப்பினர்களையும், விவசாயிகளையும், ஒரு பகுதி தலைவராக இருந்த மா சேதுங் ஒருங்கிணைத்தார். செம்படை (Red Army)யை உருவாக்கினார். அன்றைய அரசாங்கம் கம்யூனிஸ்டுகளை அழிக்க எடுத்த ஐந்து பெரும் முயற்சிகளிலிருந்து மா சேதுங் மற்றும் அவரது சகாக்கள் தப்பினர். Long March என்று அழைக்கப்படுகிற வியூகத்தில் 1935ல் மக்களைத் திரட்டினார் மா சேதுங். கொரில்லா போர் தந்திரத்தை அறிமுகப்படுத்தினார். CCP உறுப்பினர்கள் 6200 மைல்களுக்கு தொலைவிலிருந்து அணிதிரண்டு வந்தனர். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (CCP) யின் தலைவர் மா சேதுங் ‘மக்கள் சீனக் குடியரசை’ நிறுவுவதாக 1949ல் அறிவித்தார். கூட்டு விவசாயப் பண்ணைகளை உருவாக்கினார். கலாச்சார புரட்சிக்கு தலைமை வகித்தார்.


டெங் ஷியாபிங் 1976ல் தலைமையேற்றார். விவசாயம், தொழிற்சாலை, பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழிற்நுட்பம் ஆகிய ‘நான்கு நவீனமயமாக்கல்’ கொள்கையின்படி சீனத்தை முன்னேற்றப் பாதையில் முடுக்கிவிட்டார். மா சேதுங்கின் கம்யூன் கொள்கையிலிருந்து விலகி, முதலாளித்துவ பொருளாதார பாணியில், தனிக்குடும்ப முன்னேற்றத்தை முன்வைத்தார். “பூனை கருப்பா இருந்தா என்ன, வெள்ளையா இருந்தா என்ன, எலி புடிச்சா போதும்” என்றார். எனவே முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு பச்சைக்கொடி காட்டினர்.

மா சேதுங் மற்றும் டெங் ஷியாபிங் காலத்தில் சீனா முன்னேற ஆரம்பித்தது. கட்சியும் வெகுவாக வளர்ந்தது. இன்றைக்கு 9 கோடி உறுப்பினர்களைக் கொண்ட உலகிலேயே அதிக உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக CCP வளர்ந்து நிற்கிறது. சீனாவின் எழுச்சி கடந்த நூற்றாண்டின் வியக்கத்தக்க எழுச்சி. கட்சி நிறுவப்பட்டதிலிருந்து 100 ஆண்டுகளைக் கடந்து, 72 ஆண்டுகளில் அதிகாரத்தில் இருப்பதைக் கடந்து இப்பொழுது விழாக் கோலம் பூண்டு நிற்கிறது.


சீனாவின் இன்றைய தலைவர் Xi Jinping

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு விழா நாயகராகவும், தன்னிகரற்ற தலைவராகவும், இன்றைய அதிபர் Xi Jinping தன்னை உயர்த்திக் கொண்டுள்ளார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும் சீன அதிபராகவும் 2012ல் தெரிவு செய்யப்பட்ட Xi Jinping கட்சியின் அசைக்க முடியாத தலைவராக இருக்கிறார்.


சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20 வது தேசிய கட்கிகட்சி மாநாடு - National Party Congress, அடுத்த ஆண்டு (2022) நடக்க இருக்கிறது. அதற்கு முன்னதாக சீனாவின் நிரந்தர தலைவர் தாமே என்று தன் நிலையை உறுதிப்படுத்திக்கொள்ள Xi Jinping இவ்விழாவையும், மாநாட்டையும் கனகச்சிதமாக பயன்படுத்திக் கொள்வார் என்றும், குடியரசை நிறுவிய மா சேதுங், முதுபெரும் தலைவர் டெங் ஷியோபிங் போன்ற தலைவர்களின் வரிசையில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முயற்சிப்பார் எனவும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.


‘சீன மக்கள் வீரத்துடன் எழுந்துவிட்டனர்’ என்று 1949ம் ஆண்டில் தியானமென் சதுக்கத்தில் மா சேதுங் முழக்கமிட்டது போல், டெங் ஷியோபிங் சீன மக்களை பொருளாதாரத்தில் வளப்படுத்தினார் என்று புகழாரம் சூட்டப்பட்டது போல், சீனா சூப்பர்பவர் ஆக மாற Xi Jinpingயின் தலைமையே காரணம் என்று நடக்கவிருக்கும் CCP யின் கட்சி மாநாடு புகல்பாடப்போகிறது என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

“சீன மக்களையும் கட்சி உறுப்பினர்களையும் தன் பின்னே ஒன்று திரட்ட Xi Jinpingக்கு இந்த விழாவை விட்டால் வேறு வழியில்லை. நிச்சயமாக இதைப் பயன்படுத்துவார்” என சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் லீ குவான் யூ ஸ்கூல் ஆஃப் பப்ளிக் பாலிசி இணைப் பேராசிரியர் Alfred Wu கூறுகிறார்.


சீனாவைச் சுற்றிச் சுழலும் பிரச்னைகள்

Xi Jinping க்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பெரும் சவால்கள் உள்ளன. சீனா என்றாலே சர்ச்சைகள் தான் மிச்சம் என பலரும் எண்ணும் விதமே நாட்டின் போக்கு இருப்பதாக சில விமர்சகர்கள் கருதுகிறார்கள். அதற்கு முகாந்திரம் இல்லாமல் இல்லை.

பல நாடுகளோடு சீனா வர்த்தகப் போர் நடத்துகிறது. உதாரணமாக, ஆஸ்திரேலியாவிற்கு பலப் பிரச்னைகளை சீனா ஏற்படுத்துகிறது. வணிக விதிகளுக்கு மாறாக ஆஸ்திரேலிய பார்லி இறக்குமதி செய்யப்படுவதாகச் சொல்லி, 80% வரி வித்தித்துள்ளது. அதனால் ஆஸ்திரேலிய விவசாயிகள் தங்கள் பார்லியை சீனா தவிர மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திணறிவருகின்றனர். ஆஸ்திரேலியா மட்டுமல்ல பல நாடுகளும் சீனாவுடன் மல்லுகட்டுகின்றன.



பல டிரில்லியன் டாலர் மதிப்புள்ள ‘One Belt One Road Initiative’ ஐ அறிமுகப்படுத்தி உலக வர்த்தகத்தை தன் கைப்பிடிக்குள் கொண்டுவர சீனா முயற்சிக்கிறது. கடல் வழியேயும் தரை வழியேயும் Eurasiaவின் இருமுனையும் Africa மற்றும் Oceania வை இணைக்கும் சீனப் பொருளாதார திட்டத்தால் புதிய உலக நியதியைக் கொண்டு வர சீனா முயற்சிப்பதாக பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர்.

சீனா மீது முன்வைக்கப்படும் தற்போதைய குற்றச்சாட்டு கொரோனா வைரஸ் பற்றியது. கோவிட்-19 தோற்றம் பற்றிய ரகசியத்தை வெளிப்படைத்தன்மையோடு விவாதிக்க தயாராக இல்லாமல் சீனா மூடி மறைப்பதாக மேற்கத்திய நாடுகள் கருதுகின்றன. கொரோனா தொற்று வியாதி, மற்ற நாடுகளைப் பலவீனப்படுத்துவதற்காக, சீனாவால் அவிழ்த்துவிடப்பட்ட Bio-war என சிலர் குற்றம் சாட்டுகின்றனர். சீனா இதை மிகக் கடுமையாக மறுக்கிறது.

சீன நாட்டின் ஜனநாயகத் தன்மையை உலக நாடுகள் கேள்விகேட்கின்றன. உதாரணமாக உள்ளூர் பிரதிநிதிகளுக்கான தேர்தல்களை நடத்தும் போது, CCP அங்கீகாரம் செய்தவர்கள் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும். இதில் வேடிக்கை என்னவென்றால், வேட்பாளரின் தகவலோ, புகைப்படமோ இருக்காது. வெறும் பெயர் மட்டுமே இருக்கும். அப்படியே தேர்ந்தெடுக்கப்பட்டு சீன நாடாளுமன்றத்திற்கு செல்லும் 3000 பிரதிநிதிகளும் வெறும் “ரப்பர் ஸ்டாம்பு” தான் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

“CCP தனிமனித பார்வைகளைப்பற்றிக் கவலைப்படுவதில்லை. அதற்கு ஒப்பீட்டு சமூகப்பார்வையே இருக்கிறது. சமூகம் முன்னேற்றமே முக்கியம், தனிமனித வலிகளைப் பற்றிக் கவலையே இல்லை. மா சேதுங் உட்பட எந்த தலைவருக்கும் கம்யூனிச சித்தாந்தத்தில் நம்பிக்கை இல்லை. ஆனால் எந்த உறுப்பினரும் அதைப் பற்றி வாயைத் திறக்க மாட்டார்கள்” என 1980-90 வரை, சீனாவின் Guizhou பகுதியில் United Front Work Department’s Religious Administration Bureau வின் இயக்குனராக இருந்து, நேரடியாக கட்சியின் மத்தியக்குழுவுக்கே அறிக்கை அளித்த, Zhang Tan கூறுகிறார். பிறகு கருத்து மாற்றங்களால் அரசியலில் அவர் ஈடுபடவில்லை என்பது வேறுகதை.


கொண்டாட்டமும் இரத்தக்கறைபடிந்த தியானமென் சதுக்கமும்

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (CCP) நூற்றாண்டு கொண்டாட்டம் நடத்தும் இதே தியானமென் சதுக்கத்தில் 1989 ஜூன் 4ம் தியதி என்ன நடந்தது என்பதை நினைவுகூர்தல் நல்லது. விலைவாசி உயர்வு, ஊழல், புதிய பொருளாதாரத் திட்டங்களால் விளைந்த ஏற்றத்தாழ்வுகள் ஆகியவைகளை எதிர்த்து ஜனநாயகம் வேண்டி சதுக்கத்தில், திரண்ட இளைஞர்களை சீன ராணுவத்தை ஏவி சீனா போராட்டத்தை ஒடுக்கியது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழக்க பல்லாயிரக்கணக்கானோர் காயமுற்றனர். அது இரத்தக்கறைபடிந்த வரலாறு.


அடுத்து ஹாங்காங். குடைகளுக்கு பஞ்சம் வருகிற அளவுக்கு போராட்டங்கள் இன்று வரை நீளிகிறது. ஆனால் ஹாங்காங் நாட்டின் ஜனநாயகத்தின் குரல்வளையை உடைக்கும் முயற்சியில் சீனாவின் பிடி இறுகுகிறது. திபெத்தை சீனா தன்னோடு இணைத்ததால், இன்று வரை, தலாய் லாமா திபெத்தியர்களின் சுதந்திரத்திற்காகப் போராடுகிறார். இந்திய-சீன நாடுகளின் 3440 கி.மீ. நீளமுள்ள எல்லையில் லடாக் பகுதியில் சீனா ஊடுருவுகிறது என்று இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டுகிறது.

இலங்கையை எடுத்துக் கொள்ளுங்கள். அம்பாந்தோட்டை (Hambantota) துறைமுகத்திற்கு சீன வங்கிகள் மூலம் பெரும் பணம் கடனாக அளித்து, பெரும் கட்டுமானங்களைக் கட்டி, கடனை திருப்பித் தரமுடியாமல் இலங்கை திணறிய போது, சீன நிறுவனம் ஒன்றுக்கு அந்த துறைமுகத்தை இலங்கை அரசு விற்க நேர்ந்துள்ளது என்றும் இதன்மூலம் சீனா தான் நினைத்ததை சாதித்துக்கொண்டது, என்றும் அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.

உலக வர்த்தகத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் கடல் வழி மார்க்கமான, தென் சீனக் கடலை முழுவதுமாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் சீனா முனைப்புடன் நிற்கிறது. சர்வதேச நியமனங்களுக்கு கட்டுப்பட மறுக்கிறது. பராசல் தீவு மற்றும் ஸ்பார்ட்லி தீவுகளை சொந்தம் கொண்டாடுவதில் வியட்நாம், பிலிப்பைன்ஸ், தைவான், மலேசியா, புருனே என்று பல நாடுகளுடனும் சீனா மல்லுகட்டுகியது.


தொடரும் சவால்

பல விமர்சனங்கள் இருந்தாலும், 100 வருடங்களுக்கு முன்பு வறுமையில் உழன்ற ஒரு நாட்டை, உலகத்தின் பொருளாதார ஜாம்பவானாக, ராணுவ, பொருளாதார சூப்பர்பவராக சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (CCP) நிமிர்த்தியிருக்கிறது என்பதும் உண்மை. அதனால் CCP காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டு தன் நூற்றாண்டைக் கொண்டாடுவது அர்த்தமுள்ளதும், நியாமானதும் என்று அரசியல் பார்வையாளர்கள் பலர் நினைக்கிறார்கள். அதே நேரத்தில், 140 கோடி சீன மக்களுக்கு உணவையும், வாழ்வாதாரத்தையும் உறுதி செய்வதுபோன்றே அவர்களின் மனித உரிமையைப் பாதுகாக்கும் கடமையும், சர்வதேச அரங்கில் நெறிகளை கடைபிடிக்கும் நல்லதொரு நாடாக சீனாவை மாற்றவேண்டிய கடமையும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (CCP) க்கு உள்ளது.

*****


Ref:

1. 100th anniversary of the Chinese Communist Party. (2021 July 1). In Wikipedia. https://en.wikipedia.org/wiki/100th_anniversary_of_the_Chinese_Communist_Party. 2. Zheng, William. (2021 July 1). Chinese Communist Party centenary: Xi Jinping set to lead celebrations and issue rallying cry for future. South China Morning Post. https://www.scmp.com/topics/chinas-communist-party-turns-100. 3. Internal Strife in China. Facing history and ourselves. Retrieved from https://www.facinghistory.org/nanjing-atrocities/nation-building/internal-strife-china on 1st July 2021. 4. Keep your eyes on the Sun. ABC’s Asia Pacific News Room. Retrieved from https://www.abc.net.au/news/2021-07-01/ccp-100-years-chinese-communist-party/100222794 on 1st July 2021. 5. Three Chinese leaders: Mao Zedong, Zhou Enlai, and Deng Xioping. (2021) Asia for educators Retrieved from http://afe.easia.columbia.edu/special/china_1950_leaders.htm as on 02.07.2021. 6. Conifer, Dan. (2020, May 19). China imposes 80pc tariff on Australian barley for next five years amid global push for coronavirus investigation. ABC News. https://www.abc.net.au/news 2020-05-18/china-to-impose-tariffs-on-australian-barley/12261108.


Picture Sources:

  1. Members of the Chinese military orchestra at the 100th founding anniversary of the Chinese Communist Party, in Beijing, China, 01 July 2021 Source: AAP (SBS)

  2. A mass gala celebrating the 100th anniversary. Source: Getty Images (SBS).

  3. File Image: Chinese Communist Party of China. Source: AAP (SBS).

  4. Mao Ze Dong at Beijing Airport in 1963. Source: ullstein bild/Getty Images (SBS).

  5. President Xi Jinping is seen on the big screen during the speech. Source: KYDPL KYODO (SBS)

  6. Chinese President Xi Jinping delivers a speech at a ceremony marking the centenary of the ruling Communist Party in Beijing. Source: Xinhua (SBS)

  7. Source: Getty Images (SBS)

  8. Visitors stand outside the Tiananmen Gate next to Tiananmen Square in Beijing. Source: AAP Image/AP Photo/Mark Schiefelbein (SBS).

  9. File photo: Chinese troops hold a banner which reads "You've crossed the border, please go back" in Ladakh, India. Source: AP (SBS)










27 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page