top of page
Writer's pictureJohn B. Parisutham

9. கோபமே வராத ஆஞாவுக்கு கோபம் வந்தது


1960, 70 களில் பிச்சைக்காரர்கள் அதிகம் இருந்தார்கள். சரியாக காலை 9 மணியிலிருந்து மதியம் 12, 1 மணி வரை ‘அம்மா! தாயே!! பிச்சை இருந்தா போடுங்கம்மா’ எனச் சொல்லி ஒருவர் ஒருவராக வந்த வண்ணம் இருப்பார்கள்.


சிலர் நைந்த உடைகளுடன் கையில் திருவோடு ஏந்தி வருவார்கள். சிலர் கையில் கம்புடன், நொண்டிக்கொண்டே வருவார்கள். பெரும்பாலும் அன்றாடம் குளிக்காத உடம்பு. வசதியிருக்காது. வாறாத தலை. பிசுக்கேறிய முகம். வாங்குகிற சாப்பாட்டை போட்டு வைக்கிற ஒரு வேட்டி ஸ்டோர் ரூம். தொங்குகிற தோள் பட்டை. செருப்பில்லாத கால். வெட்டப்படாத விரல் நகங்கள்.


சிலர் தனியாக வருவார்கள். சிலர் ஆணும் பெண்ணுமாக ஜோடியாக வருவார்கள். சிலர் குழந்தைகளை இடுப்பில் தூங்கிக் கொண்டோ, நடக்க வைத்து அழைத்துக் கொண்டோ வருவார்கள். பெரும்பாலும் குழந்தைகளின் மூக்கு ஒழுகிக்கொண்டு இருக்கும்.


ஒரு வீட்டில் பழைய சோறு. இன்னொரு வீட்டில் ஏதாவது குழம்பு. மற்றொரு வீட்டில் மீதமான காய்கறி. இதையெல்லாம் எப்படி பிரித்துப் பிரித்துப் போட்டுக் கொள்வார்கள்? ஒரு நிர்வாகத் திறமை வேண்டும் தான்.


எந்த வீட்டில் எந்த நாட்களில் எந்த நேரத்தில் போனால் சூடான ரசம் கிடைக்கும், பொங்கல் கிடைக்கும், அல்லது கறி கொழம்பு கிடைக்கும் எனத் அத்துப்படியாகத் தெரிந்து வைத்திருப்பார்கள்.


‘ அம்மா!… பிச்சைக்காரங்க வந்திருக்காங்க’

‘ போ சொல்லு!… பக்கத்து வீட்டைப் பார்க்கச் சொல்லு!’

என சில நாட்களும்

‘ அம்மா!… பிச்சைக்காரங்க வந்திருக்காங்க’

‘ இந்தா… இதைப் போய் போடு’ எனச் சொல்லும் குரல்களும் மாறி மாறிக் கேட்டுக் கொண்டே இருக்கும்.


பிச்சை எடுப்பவர்கள் எல்லோரும் சங்கமம் ஆகும் இடம் சில உண்டு. அதில் பிரசித்திப் பெற்றது தஞ்சாவூர் பூக்காரத் தெரு போகும் வழியில் பாஸ்கா மேடை உள்ள மைதானத்தில் இருந்த சில மரத்தடிகள். சுருக்கமாக காலை உணவை முடித்துவிட்டு ரெண்டு மூணு சுற்றுக்களை முடித்து விட்டு மதிய உணவுக்கு மரத்தடி வந்தால், மற்றும் சிலரும் தங்களது சுற்றுக்களை முடித்துவிட்டு, தோளில் கனமான தொங்கு பையுடன் வந்திருப்பார்கள்.


விரும்புகிற மதிய உணவை உண்டுவிட்டு, சற்று மாலை அல்லது இரவு உணவுக்கு வைத்துவிட்டு, தென்றல் தாலாட்ட ஒரு தூக்கம் போட்டால், மாலை நேர தேநீருக்கு எழுந்திரிக்கலாம். சில வீடுகளில் கொடுத்த 5 பைசா, 10 பைசாக்களைக் கொண்டு ஒரு டீ அருந்தலாம்.

அன்றைக்கு ஒரு டீ மூணு காசு தான். 1970களில் அது ஏழு காசு ஆனது. பெரும்பாலும் 30,40 வயதுக்கு மேல் இருப்பவர்கள் தான் பிச்சை எடுப்பார்கள்.


இவர்கள் எப்படி பிச்சைக்காரர்கள் ஆனார்கள் என நான் யோசிப்பதுண்டு. அவர்களுக்கும் ஒரு குடும்பம் இருந்திருக்குமா? தினசரி வேலை, வருமானம் இருந்திருக்குமா? நல்லது கெட்டது என்று அவர்கள் வாழ்வில் நடந்திருக்குமா? கல்யாணம் காட்சி என போயிருப்பார்களா? சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா என உறவுக்காரர்கள் இருந்திருப்பார்களா? தீபாவளி பொங்கல் எனக் கொண்டாடி இருப்பார்களா? சினிமா டிராமா எனப் போயிருப்பார்களா? பஸ், டிரெயின் ஏறியிருப்பார்களா?


எந்தக் கணத்தில் பிச்சைத்தொழிலுக்கு தள்ளப்பட்டிருப்பார்கள்? அவர்களாகவே விரும்பி இதற்கு வந்திருப்பார்களா?


பின்னாளில் ‘பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம்’ என அரசு கொண்டு வந்து அவர்களையெல்லாம் ஒரு இடத்தில் வைத்து பிச்சைக்காரர்கள் இல்லாத நிலையைக் கொண்டு வந்தார்கள். திருச்சி - தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் வளம்பக்குடி, மனையேறிப்பட்டி பஸ் நிறுத்தத்தில் அப்படிப்பட்ட ஓர் இல்லம் இருந்தது. நானே அந்த இல்லத்திற்குப் போய் அங்கு இருந்தோரைப் பார்த்திருக்கிறேன். நிறைய தொழுநோய் கொண்டவர்களும் அங்கே இருந்தார்கள். சக மனிதர்களை பிச்சைக்காரர்களாக ஆக்கிய சமூகம் ஆரோக்கியமான சமூகமா? எனக் கேள்வி எழுப்பி இருக்கிறேன்.


‘ ஈ என இரப்பது இழிவானது தான் என்றாலும், ஈயமாட்டேன் என்று மறுப்பது அதனினும் இழிநிலைதானே’ என்று கேட்கிறது ஒரு சங்கப் பாடல்.


‘இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான்.’ என்கிற திருக்குறளில் பிச்சை எடுத்துத்தான் சிலர் உண்டு உயிர் வாழ வேண்டும் என்கிற நிலை இருந்தால், இந்த உலகை இயக்குவதாகச் சொல்லப்படும் கடவுள் என்கிறவன் அங்கும் இங்கும் திரிந்து கெட்டுப் போகட்டும் என்கிறார்.


அப்படியானால் சங்க காலத்திலிருந்து இந்தப் பிச்சைத் தொழில் இருந்திருக்கிறதா?


ஒரு நாள்.


‘அம்மா! தாயே’ என்கிற மெல்லிய குரல் பசலிக்கீரை வீட்டின் வெளியேக் கேட்டது. பிச்சைக்காரர் தெருவில் நின்றிருக்க வேண்டும். அம்மா அடுக்களையில் இருந்தார்கள். கிட்டத்தட்ட நூறு அடி தூரம். ஆஞா அலுவலகம் போகக் கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.


‘அம்மா! ஏதாவது இருந்தா போடுங்கம்மா.’ கொஞ்சம் உரத்தக் குரலில் கேட்டது காதில் விழுந்தது. பிச்சைக்காரர் கீழ்ப்படி அருகே வந்திருக்க வேண்டும்.


அக்காக்கள் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்கள்.


‘அம்மா! தாயே பிச்சை போடுங்கம்மா’ இப்பொழுது குரல் சற்று ஓங்கி அருகில் கேட்டது. பிச்சைக்காரர் படியேறி வந்து கேட்கிறாரோ?


‘தம்பி! யாருன்னு போயி பாரு’

‘அம்மா! தாயே!’ சத்தம் இப்பொழுது மிக பக்கத்தில். யார் என்று பார்க்க ஓடினேன்.


பிச்சைக்காரர் வீட்டு முன் வாசல் படியைத் தாண்டி தெருக்கதவைத் தாண்டி வீட்டுக்குள்ளே நிற்கிறார். அழுக்கு வேட்டி. ஒரு கையில் தடி. இன்னொரு கையில் பாத்திரம். தாடி மீசை. முழியே சரியில்லை. தெருவில் யாராவது நிற்பார்கள் என நினைத்து ஓடி வந்த எனக்கு, திடீரேன வீட்டுக்குள்ளே பிச்சைக்காரரைப் பார்த்ததும் ஒரு கணம் திகைத்து, ‘அம்மா! பிச்சைக்காரங்க உள்ள வந்துட்டாங்கம்மா’ எனக் கத்திக் கொண்டே முத்தத்துக்குள் இறங்கி, அடுக்களை நோக்கி ஓடினேன்.


‘என்னது?’ எனக் கேட்டுக்கொண்டே வந்த ஆஞா ‘வெளியில போயா’ ன்னு சொன்னாங்க.

‘சாமி..சோறு ஏதாவது போடுங்கய்யா’ எனக் கேட்டார்.

‘போடுறோம். மொதல்ல நீ வெளிய போ’ எனச் சொல்ல, அம்மா அடுக்களையிலிருந்து எட்டிப்பார்த்தார்கள்.


அம்மாவைப் பார்த்த பிச்சைக்காரர், ‘அம்மா! பழைய கஞ்சி ஏதாவது இருந்தா….’ என்பதற்குள் பள்ளிக்கு கிளம்பிக் கொண்டிருந்த அக்காக்களும், வேடிக்கைப் பார்க்க கூடத்துக்கு வந்து விட்டார்கள்.


‘வெளியே போயா’ன்னு சொல்றேன். இன்னும் இங்க நின்னுட்டு இருக்க’ன்னு ஆஞா சொல்ல… பிச்சைக்காரர் நகரவே இல்லை. கோபமே வராத ஆஞாவுக்கு கொஞ்சம் கோபம் வந்தது. பத்தாததுக்கு மூணு பொம்பள புள்ளைகள் வேறு அங்கும் இங்கும் குளித்து முடித்துவிட்டும், உடைமாற்றிக் கொண்டும், புத்தகங்கள் எடுத்து வைத்துக் கொண்டும் இருக்கும் சூழலில், தெருவில் நிற்க வேண்டிய பிச்சைக்காரர் வீட்டிற்குள்ளேயே வந்ததும், ஆஞாவுக்கு இவன் பிச்சைக்காரனா? திருடனா? ரவுடியா? என்கிற சந்தேகம் வந்துவிட்டது.


‘சொல்லிகிட்டே இருக்கேன்… முதல்ல வெளிய போ’


ம்ஹீம். நகர்ற பாடில்லை. சோற்றை வாங்கிக் கொண்டு போகலாம் என நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை. அங்கேயே நின்றார்.


‘வெளியே போ!’ என ஆஞா கத்தினார்கள்.


‘கலைமணி! இந்தா இந்த பழைய சோறை ஆஞாட்ட குடு. போட்டா போயிடுவான்’ என அம்மா என் பெரியக்காவை அழைத்து குண்டானைக் கொடுக்கிறார்கள்.


நான் பயந்து கொண்டே அம்மிக்கல்லு அருகே நிற்கிறேன்.


‘விறகு கட்டையை எடுத்தேன்… அடிதான் விழும்’ என ஆஞா சொல்ல, அந்த பிச்சைக்காரர் திரும்பி நடந்து, படிகளில் இறங்கி தெருவுக்குப் போய்விடுவார் என்று தான் நினைத்தேன்.


ம்ஹீம் நடக்கவில்லை.


‘என்ன பைத்தியமா? ஏன் போகமாட்டேன் என்கிறான்?’

‘அம்மா! மிச்சம் மீதி…’ என ஏதோ சொல்வதற்குள் ஆஞா விறகுக்கட்டையை எடுத்தார்கள். ஓங்கிக் கொண்டு அவனை நோக்கி வேகமாக நடந்தார்கள்.


அவன் கண்களில் இப்பொழுது தான் பீதி தெரிந்தது.


அடிச்சிடுவாரோ? லேசாகத் திரும்பினான். ஆனால் அந்த இடத்தை விட்டு போகவில்லை. ‘வெளியே போ!..’ எனக் கத்திக்கொண்டே விறகுக் கட்டையை அவன் முகத்தருகே வீசிவிடுவது போல் ஆஞா போனதும், சூழலின் தீவரத்தைப் புரிந்துக் கொண்டு விடுவிடுவென இரண்டு படிகள் இறங்கினான்.

ஆஞா விடவில்லை.


‘ போ! வேற வீடு பாரு’ ன்னு சொல்லிக்கொண்டே தெருக்கதவைத் தாண்டி படிகளில் இறங்க, அவனும் மீதிப்படிகளை இறங்கி தெருவுக்கு வந்து விட்டான்.


‘போயிடு…இல்ல அடி தான்’ எனச் சொல்லிக் கொண்டே ஆஞாவும் தெருவுக்கு வர,

‘சோறு கிடைக்காது. நின்னா அடிதான் கிடைக்கும்’ எனத் தெரிந்துக் கொண்ட அவன் சற்றே வேகமாக நகரத் தொடங்கினான்.

ஆஞா ஓங்கிய கையில் விறகுக் கட்டையுடன் இன்னும் கோபம் தாளாமல் அவனை நோக்கி ஓடி வருவதை அவன் எதிர் பார்க்கவில்லை. நிலைமை மோசமாகிவிட்டது அப்பொழுது தான் அவனுக்குப் புரிந்திருக்க வேண்டும்.

அம்மா, அக்காக்கள், நான் எல்லோரும் தெருக்கதவிற்கருகில் வந்து வேடிக்கைப் பார்த்தோம்.


‘இந்தப் பக்கம் இனி வந்த…’ என்று சொல்லிக் கொண்டே விறகுக் கட்டையுடன் ஆஞா விரட்ட, அவன் ‘விட்டா போதும்’ எனப் பின்னங்கால் பிடரியில் பட, வேட்டியை தூக்கிப் பிடித்துக் கொண்டு ஓடினான். கொஞ்ச தூரம் ஓடிய ஆஞா அவன் தெருமுனையைக் கடந்து போய்விட்டான் எனத் தெரிந்ததும் தான் திரும்பி வந்தார்கள்.


விறகு கட்டையை குடக்கல்லுக்குப் பக்கத்தில் போட்டார்கள். கலைமணி அக்கா கையில் வைத்திருந்த பழைய சோறு குண்டானில் அப்படியே இருந்தது.

*****

16 views0 comments

Comments


bottom of page