top of page
Writer's pictureJohn B. Parisutham

2. மொந்தன் வாழைப்பழம்

Updated: Jul 15, 2021


வலங்கைமான் புதுத்தெரு வீட்டில் திண்ணை, கூடம், முற்றம், அடுக்களைத் தவிர ஒரு அறையைப் பற்றிச் சொல்லியிருந்தேன். அதில் நடந்த சில கதைகளை இப்பொழுது சொல்லப் போகிறேன்.


என் அக்காக்கள் மூன்று பேருக்குப் பிறகு, ஓரியூர் புனித அருளானந்தரையும், சேத்தூர் வேத போதகரையும் வேண்டியதால் ஆண்பிள்ளையாக நான் பிறந்தேன். அப்படித்தான் என் பெற்றோர்களும் உற்றார் உறவினர்களும் நம்பினார்கள்.


ஆண் பிள்ளை வேணும் என்று கேட்டீர்களே, இதோ வாங்கிக் கொள்ளுங்கள் என்று எனக்குப்பிறகு வரிசையாக நான்கு ஆண் குழந்தைகள். சார்லஸ், ஜேம்ஸ், வின்சென்ட், அலெக்ஸ். இதில் எனக்கு அடுத்ததாகப் பிறந்த சார்லஸ் பிறந்தது புதுத்தெரு வீட்டில் இருந்த அந்த அறையில் தான். எனக்கு ரெண்டு, ரெண்டரை வயசு தான் இருக்கும்.


பிள்ளை பிறக்கப் போகிறது என்று அம்மாவை அந்த அறைக்குள் போகச் சொல்லிவிட்டு, மூன்று அக்காக்களையும் என்னையும் எதிர்த்தாற் போல இருந்த வேம்பு வீட்டிற்கு அனுப்பிவிட்டார்கள். நான் யாராவது ஒரு அக்காவின் மடியில் தான் உட்கார்ந்திருந்திருப்பேன். வேம்பு வீட்டு திண்ணையில் நாங்கள் நால்வரும் நெருக்கமாக உட்கார்ந்திருந்த காட்சி மட்டும் என்னமோ ஆழமாகப் பதிந்து விட்டிருக்கிறது.

என்ன நடக்கிறது என்பது புரியாமல் குழம்பியதால் இருக்குமோ? அல்லது அடுத்த குழந்தை பிறக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்பில் உண்டான பதட்டத்தால் அந்தக் காட்சியும் கணமும் மனதில் தங்கி விட்டதோ? வேம்பு வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்துக் கொண்டு முருங்கை மரத்துக்குப் பின்னே இருந்த அறை சாளரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அதில் ஒரு துண்டையோ, எதையோ போட்டு திரை போல மறைத்திருந்தார்கள்.


பிரசவம்

திருமதி. அந்தோணியம்மாள் அவர்கள், என் அப்பாயி

அப்பொழுது எல்லாம் பிரசவம் வீடுகளில் தான் நடக்கும். மருத்துவமனைகள் காசு பிடுங்கும் தொழிற்சாலையாக இன்னும் மாறாத காலம். பிரசவம் பார்க்க என் அப்பாவின் அம்மாவும் ( திருமதி. அந்தோணியம்மாள் அவர்கள். பிறகு 104 வயசு வரை வாழ்ந்து, ஆச்சி 100 என எங்களால் விழா எடுக்கப்பட்டவர்), அப்பாவின் அம்மாச்சியும் (திருமதி. அன்னம்மாள், ஆச்சி அந்தோணியம்மாளின் தாயார், கடைசியில் மன்னார்குடி சேரங்குளத்தில் வாழ்ந்து மறைந்தவர்.) அம்மாவின் அம்மாவும் ( திருமதி. ஞானாம்பாள், மன்னார்குடி சவரிமுத்து ஐயாவின் இரண்டாவது மனைவி) ஆக மூவரும் ஆஜர்.


அந்தோணியம்மாள் ஆச்சி, அன்னம்மாள் பாட்டி, ஞானாம்பாள் அம்மாச்சி - இவர்கள் தான் தாதியர்.


இன்றையத் தலைமுறைகள் அல்லது பிறகு வரும் தலைமுறைகள் இதைப்படித்தால், ‘என்ன? டாக்டர் இல்லையா? நர்ஸ் இல்லையா? வீட்டு பெரியவர்களே பிரசவம் பார்ப்பார்களா? வீட்டிலேயே பிள்ளைகள் பிறப்பார்களா? ஏதாச்சும் ஆச்சுன்னா என்ன பண்ணுவாங்க? காசு செலவாகும்னு அப்படி பண்ணுனாங்களா? இல்ல, அறியாமையாலயா? ரொம்ப பிற்போக்கா இருக்கே!’ என எண்ணுவதற்கு வாய்ப்பிருக்கிறது.


பாட்டியே மருத்துவர்


திரு. சவரிமுத்து அவர்கள் (என் அம்மா வழி தாத்தா) மற்றும் திருமதி. ஞானாம்பாள் அவர்கள் (அம்மாச்சி)

1960-களுக்கு முன்பு ஒவ்வொரு அம்மாவும், பாட்டியும் ஒரு மருத்துவராக, ஒரு தாதியராக இருந்தார்கள். ஒவ்வொரு ஊரிலும் உள்ளூர் சித்த வைத்தியர், சிறப்பு தாதிப் பெண்மணி இயற்கையாக இருந்தார்கள். பிரசவம் மற்றும் சாதாரண வியாதிகளுக்கு அம்மாவும் பாட்டியம் போதும். கொஞ்சம் சிக்கலாக இருந்தால் ஊர் மருத்துவரும் தாதியரும் உதவிக்கு வருவார்கள். அதையும் விட்டால் மருத்துவமனைகள் போன்ற இயற்கைத் தோட்டங்கள் இருந்தன. சிறப்பு சித்தர்கள் மருத்துவர்களாக இருந்தார்கள். நிறைய சிக்கலாக இருந்தால் இவர்கள் உதவுவார்கள். இடையில் பணம் வராது. அவர்களின் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையானதை ஊர் மக்கள் வருடாந்திர வரியாக வசூலித்து கொடுத்து பாதுகாத்து வந்தார்கள்.


ஆஞா எங்கிருந்தார்கள் என ஞாபகம் இல்லை. ஒருவேளை சின்னத் திண்ணையில் இருந்திருக்க வேண்டும். அவர்கள் ஏதாவது கேட்டால் உடனடியாக பதில் அளிப்பதற்காக இருந்திருக்கலாம். யாரோ சொன்னார்கள்.


‘ மேரிக்கு ஆம்பள புள்ள பொறந்திருக்கு.’


எங்க அம்மா பேரு அருள்மேரி. மேரி என்று தான் ஆஞாவும் மற்றவர்களும் கூப்பிட்டுப் பார்த்திருக்கிறேன். பிள்ளை பிறந்த தகவல் வந்ததும் உடனே ஓடிச் சென்று பார்த்தோமா, இல்லையா என ஞாபகம் இல்லை.


சார்லஸ் பிறந்து விட்டான்.


அம்மை

அந்த அறையில் நடந்த இன்னொரு கதை.


பெரியம்மை

அப்பொழுதெல்லாம் குடும்பத்தில் ஒருத்தருக்கு ‘அம்மை’ வார்த்தால், அவருக்கு முடியும் போது இன்னொருத்தருக்குப் பரவி, அப்படியே அடுத்தவருக்குப் பரவி என்று எல்லோரையும் ஒரு வாட்டு வாட்டிவிட்டுத் தான் போகும்.


ஜூலி அக்காவுக்கு (நடு அக்காவுக்கு) அம்மை வார்த்திருந்த ஞாபகம் இருக்கிறது. அப்பொழுது ஜூலி அக்காவை அந்த அறையில் தான் படுக்க வைத்திருந்தார்கள். பாயோ அல்லது ஜமுக்காளமோ போட்டு அதன் மேல் வேப்பிலைகளைப் பரப்பி வைத்து, அதன் மேல் படுக்க வைத்திருந்தார்கள். வீட்டில் யாருக்கோ அம்மை வார்த்திருக்கிறது என்பது மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக ஒரு கொத்து வேப்பிலையை வீட்டு வாசலில், எல்லோருக்கும் தெரியும் படியாக சொருகி வைத்திருந்தார்கள்.


மொந்தன் வாழைப்பழம்

அம்மை வார்த்திருந்த சமயத்தில் உடலை குளுமையாக்க ‘மொந்தன்’ வாழைப்பழம் சாப்பிட வேண்டும். அதற்காக ஒரு தார் மொந்தன் வாழைப்பழத்தை வாங்கி வந்து அந்த அறையில் தொங்க விட்டிருந்தார்கள். ஜூலி அக்கா விரும்பிய போதெல்லாம் வாழைப்பழத்தைப் பிச்சி சாப்பிடலாம். ஆனால் சாப்பிடத்தான் பிடிக்காது. வாய் எல்லாம் கசக்கும். இதெல்லாம் எனக்குத் தெரியாது. அக்கா மட்டும் ‘மொந்தன்’ வாழைப்பழத்தைச் சாப்பிடுகிறதே என எனக்கு ஏகத்துக்கும் வருத்தம்.


மற்றவர்களுக்குத் தெரியாமல் லேசாகக் கதவைத் திறந்து பார்ப்பேன். ஜூலி அக்கா படுத்திருப்பார். அறையின் நடுவே வாழைப்பழத் தார் தொங்கும். ‘பாவம் அக்கா. அம்மை வந்து அவதிப்படுகிறது என பிரிட்டோ அடிக்கடி எட்டிப்பார்க்கிறான்’ என சிலர் நினைத்திருந்தால், ஐயோ பாவம்! அது தப்பு. ‘மொந்தன்’ வாழைப்பழத் தார் இருக்கிறதா? எத்தனை தீர்ந்திருக்கிறது? எத்தனை மீதி இருக்கிறது? அக்காவுக்கு உடம்பு சரியானதும் அதில் ஒன்றோ இரண்டோ எனக்கு கிடைக்குமா? என்றே பார்த்து வந்திருக்கிறேன் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.


முதல் தண்ணி


வேப்பிலை

ஜூலி அக்காவுக்கு அம்மை இறங்கத் தொடங்கியது. முதல் தண்ணி ஊத்தியாச்சு. அம்மையின் கடுமை இறங்கி, பொதுவாக பத்து அல்லது பனிரெண்டு நாட்களுக்குப் பிறகு அதன் வடுக்கள் இருக்கும் போதே, தண்ணீரை பெரிய குண்டானில் பிடித்து வெயிலில் வைத்து அதில் சில வேப்பங் கொத்துக்களைப் பறித்துப் போட்டு, கொஞ்சம் மஞ்சள் போட்டு, வெது வெது நீரில் குளிக்க வைப்பார்கள்.


அடுத்தது ஓரிரு நாட்களில் இரண்டாவது தண்ணி. பிறகு உடம்பு நல்லானதும் மூன்றாவது தண்ணி குளியல். மூன்றாவது தண்ணி குளியல் நடக்கிற வரை நமது குடும்பத்திலிருந்து மற்ற குடும்ப விசேடங்களுக்கு (கல்யாணமானாலும் சரி, கருமாதியானாலும் சரி) போக மாட்டார்கள். நம் வீட்டிற்கும் யாரும் வர மாட்டார்கள்.


பெரிய அம்மையாக இருந்தால் (அதாவது புண்கள் மிளகு அளவுக்கு உக்கிரமாக இருந்தால்) வாழ்நாள் பூரா தழும்புகள் இருக்க வாய்ப்பு இருக்கிறது. சின்ன அம்மையாக இருந்தால் (அதாவது கடுகு அளவுக்கு இருந்தால்) தழும்பு இருக்க வாய்ப்பு இல்லை. பெரியம்மை உடல் முழுக்க வரும். ஒவ்வொரு புண்ணுக்கும் இடையில் ஒரு இஞ்ச் இடைவெளியாவது இருக்கும். ஆனால் சின்னம்மை மணலை அள்ளித் தெளித்தவாறு நெருக்கமாக இருக்கும்.


எனக்கும்

எது வந்தாலும் கீழே படுக்க முடியாது. பிரள முடியாது. அவஸ்தை சொல்லி மாளாது. ஒவ்வொரு புண்ணும் அரிக்கும். சுத்தி சொரியச் சொல்லும். புண்ணை உடைத்து விடலாமா என விரல்கள் துடிக்கும். ஆனால் சொரியவோ, உடைத்து விடவோ கூடாது. அப்படிச் செய்தால் ஆபத்து அதிகம்.


இதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்?


ஜூலி அக்காவுக்குப் பிறகு எனக்குத் தானே அம்மை வார்த்தது. அதே அறை. இப்பொழுது வேப்பிலை பாயில் படுத்திருப்பது நான். ஆனால் என் பார்வை முழுக்க புதிதாகத் தொங்கிக் கொண்டிருந்த மொந்தன் வாழைப்பழத் தார் மேல் தான்.


அப்பாடா! விரும்பியது நடந்து விட்டது.


புதுத்தெருவில் உள்ள வீடு உங்களுக்கு அறிமுகம் ஆகி விட்டது. அதில் உள்ள அறையில் நடந்த நிகழ்வுகள் தெரிந்து விட்டது. ஆனால் புதுத்தெருவை ஒட்டி ஓடிய கோரையாற்றில், என் அம்மாவுக்கு நடந்த துயர சம்பவத்தை நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டாமா?


*****


Picture Courtesy:



56 views0 comments

Comments


bottom of page