top of page
Writer's pictureJohn B. Parisutham

18. ஆஞா அம்மா சொந்த வீடு (17H) கட்டிய கதை

Updated: Jan 5, 2022


அம்மாவுடைய பெரியப்பா திரு. ரெத்தினசாமி நாடார். அவர் பூக்காரத்தெருவில் வசித்து வந்தார். அவருடைய மனைவி தஞ்சாவூரில் மிகவும் பிரபலமான ராவ் பகதூர் திரு. அருளானந்த சாமி நாடார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு. பரிசுத்த நாடார் அவர்களின் ஒரே சகோதரி. அதனால் அவருக்குச் சொந்தமான முந்திரித்தோப்பு அருளானந்த நகருக்கும், பரிசுத்த நகருக்கும், அருளானந்தம்மாள் நகருக்கும் இடையே இருந்தது. அதை பிளாட் போட்டு விற்கத் துவங்கிய காலம். 1965-66.

இந்தச் செய்தியை கறையான் வீட்டின் பக்கத்து வீட்டு அம்மா (மெர்சி, ஜொப்பி, கிரேஸி , ஸ்டெல்லா, ஆரோக்கியராஜ், அருமைராஜ்) போன்றோரின் அம்மா, எங்கள் அம்மாவிடம் சொன்னார்.

“ ஒங்க பெரியப்பா தானே! போய் கேளுங்க. ஒங்களுக்கு ஒரு பிளாட் தரச் சொல்லுங்க..”

“ அப்படி எல்லாம் போய் கேட்டு பழக்கமில்ல… வேண்டாம்.”

“ வெட்கப்படாதீங்க… போய் கேளுங்க…”


கலைமணி அக்கா உயர்நிலைப்பள்ளியை முடித்து கல்லூரிக்குப் போகிற நேரம். அவரை அப்பொழுது தான் தஞ்சை குந்தவை நாச்சியார் கல்லூரியில் ஆஞா சேர்த்திருந்தார்கள். அந்தக் கல்லூரிக்கென்று தனி இடமில்லாமல் இருந்தது. தற்போது சத்யா விளையாட்டரங்கத்திற்கு பின்புறம் அந்தக் கல்லூரி அமைந்திருக்கிறது. ஆனால் அப்போது தஞ்சை சரபோஜி ராஜா அரண்மனையில் ஒரு சிறு கட்டிடத்தில் துவங்கியது.


அக்காவை கல்லூரியில் சேர்க்கும் போது ஆஞா என்னையும் சைக்கிளில் அழைத்துப் போனார்கள். ஏனென்றால், அந்த அரண்மனை கீழ வாயிலின் எதிர் புறம் தான், ஆஞாவின் நெருங்கிய நண்பரும், உறவினருமான திரு. மரியசூசை நாடார் அவர்களின் ‘சிட்டி பைண்டிங் ஒர்க்ஸ்’ கடை இருந்தது. அவரை ‘பைண்டர்’ என்று தான் அழைப்போம். என்னை அங்கு இறக்கிவிட்டு, பைண்டர் பெரியப்பாவைப் பார்த்துக்கச் சொல்லிவிட்டு, அக்காவை கல்லூரியில் சேர்க்க ஆஞா அரண்மனைக்குள் போனார்கள். சேர்த்துவிட்டு வெளியே வந்து, பைண்டர் பெரியப்பாவுடன், பக்கத்தில் ஒரு ‘காபி கிளப்’ புக்குச் சென்று இட்லி சாப்பிட்டோம்.

ஜூலி அக்காவையும், அல்போன்ஸ் அக்காவையும், மேரீஸ் கார்னர் அருகே உள்ள ‘சேக்ரட் ஹார்ட் உயர் நிலைப் பள்ளி’யில் சேர்த்தார்கள். என்னைத் ‘தமிழ் மடம்’ என்று பொதுவாக அழைக்கப்பட்ட ‘போன் செக்கர்ஸ் உயர்நிலைப்பள்ளி’யில் மூணாவது வகுப்பில் சேர்த்தார்கள். தமிழ் மடம் பள்ளியைப் பற்றி தனியாக எழுதுகிறேன்.

இப்பொழுது திரு. ரெத்தினசாமி நாடார் பிளாட் போடும் கதைக்கு வருவோம்.

அப்படி அடுத்தவூட்டு அம்மா, எங்கள் அம்மாவிடம் சொல்ல, தன்மானம் காரணமாக, பெரியதாத்தாவின் வீட்டிற்குச் சென்று, பிளாட் கேட்க, அம்மா தயங்கினார். அம்மாவின் தயக்கத்துக்கு இன்னொரு காரணமும் இருந்தது. எங்கள் ஆஞாவுக்கு கல்யாணம் பேசி முடித்திருந்தது பெரிய தாத்தாவின் பெண்ணைத்தான். இந்த கல்யாணப் பேச்சை பேசி முடித்ததே ஆஞாவின் அப்பாவான திரு. மாசிலாமணி நாடாரின் நெருங்கிய நண்பரான மன்னார்குடி திரு. சவரிமுத்து நாடார் தான். இந்த சவரிமுத்து நாடாரின் அண்ணன் தான் திரு. ரெத்தினசாமி நாடார். அதாவது, தம்பியாகிய திரு. சவரிமுத்து நாடார், தன் நண்பரின் பிள்ளைக்காக (எங்கள் ஆஞாவுக்காக)த் தன் அண்ணன் மகளைப் பேசி முடித்துவிட்டார்.


ஆனால், சிலச் சூழல் காரணமாக, சொந்த காரணங்களுக்காக, பேசியபடி நடக்காமல், திரு. ரெத்தினசாமி நாடார், எங்கள் ஆஞாவின் பெரிய தாத்தா பேரனுக்கு, தன் மகளை, மணமுடிக்க ஒப்புக்கொண்டுவிட்டார். அதனால் திரு. சவரிமுத்து நாடார் கோவித்துக்கொண்டு, தன் பெண்ணையே (எங்கள் அம்மாவை) திருமணம் செய்து கொடுக்க முன் வந்தார். அந்தக் கல்யாணம் நடக்கும் அதே நாளில், அதே திருப்பலியில் எங்கள் பெற்றோரின் கல்யாணமும் நடக்க வேண்டும் என்று வீம்பு பிடித்து நடத்தி வைத்தார்கள். வந்த விருந்தினர்கள் எந்தக் கல்யாணத்தில் போய் சாப்பிடுவது என்று குழம்பினார்கள் என்று ஆஞா பிறகு எங்களிடம் குறிப்பிட்டுள்ளார்கள். இப்பொழுது அந்த பெரியப்பாவிடமே (திரு. ரெத்தினசாமி நாடாரிடமே) போய் பிளாட்டுக்காக நிற்பதா என்ற காரணமும் இந்த தயக்கத்துக்கு காரணம்.

ஆனால், கல்லூரிக்குப் போகும் கலைமணி அக்கா, “அம்மா! நானும் வருகிறேன். போய் கேட்போம்” என்று நம்பிக்கை ஊட்டி, ஆர்வத்தை வரவழைத்தார்.

சில நாட்கள் சிந்தனைக்குப் பிறகு, ஆஞாவிடம் ஆலோசித்து விட்டு, சரி போகலாம் என அம்மாவும் கலைமணி அக்காவும் பெரிய தாத்தா வீட்டிற்குப் போனார்கள். திரு இருதய ஆண்டவர் கோயிலுக்கு ஞாயிற்றுக் கிழமை திருப்பலிக்கு போகும் போதும், பூக்காரத்தெருவில் உள்ள பூச்சந்தைக்கு காய்கறிகள் வாங்கப் போகும் போதும், சில முறை அம்மாவும் அக்காவும் பெரிய தாத்தா வீட்டிற்குப் போய் இது விஷயமாக பேசியுள்ளார்கள். திருமணத்தில் செய்த குளறுபடியை சரிசெய்யும் விதமாகவும், பெரிய தாத்தா, பெரிய மனது பண்ணி, கிட்டத்தட்ட 4000 சதுர அடி கொண்ட ஒரு பிளாட்டை இனாமாக தருவதென்றும், ஆனால் அதற்குரிய பதிவு செலவை மாத்திரம் ஆஞா பார்த்துக்கொள்வதென்றும் பேசி முடிவெடுக்கப்பட்டது..

அம்மா பெயரில் அந்த இடம் ரிஜிஸ்டர் செய்யப்பட்டது. பிறகு தஞ்சாவூர் முனிசிபாலிட்டி அந்த பிளாட்டிற்கு 17/H என்ற எண்ணைக் கொடுத்தது.

ஆஞா பிறந்த, மன்னார்குடிக்கு அருகே உள்ள, ஊரான கானூரில் (பக்கத்தில் ராசப்பையன் சாவடியில்) இருந்த ஆஞாவின் சித்தப்பா (குட்டியப்பா என்கிற ஆரோக்கியசாமி நாடார்) அவர்கள் கானூரிலிருந்து ஆட்களை அழைத்து வந்து வீட்டிற்கு கீத்து கொட்டகை போட்டார்கள். அம்மாவின் அப்பா திரு சவரிமுத்து நாடாரின் மன்னார்குடி வீட்டிலிருந்து மூங்கில்களை அறுத்து வந்து கொட்டகைக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள்.


பாத்திமா நகரிலிருந்து கொத்தனார் வந்து மண் சுவர் அமைத்தார். வீட்டிற்கு எதிரே பள்ளம் வெட்டி மண்ணை எடுத்தார்கள். ஒரு படை சுவர் என்றால் ரெண்டு, ரெண்டரை அடி உயரம் இருக்கும். செம்மண்ணை பதமாக குழைத்து, அப்பி ஒரு நீண்ட இரும்பு கத்தியை வைத்து ஓரத்தை வெட்டி சரி செய்வார்கள். வீடு முழுக்க ஒரு படையை எழுப்பிவிட்டு, அந்த படை காய்வதற்காக காத்திருப்பார்கள். அந்த படை நன்றாகக் காய்ந்ததும், அடுத்த படை சுவர் கட்டுவார்கள். சில நேரம் மழை வந்துவிடும். அதற்காக சுவர் முழுக்க தென்னங்கீற்றை போட்டு அதன் மேல் கற்களை வைப்போம். ஒரு படை சுற்றுச் சுவர் முடிந்ததும் அடுத்த படை வைப்பதற்கு ஆஞாவிடம் காசு இருக்காது.


அடுத்த சம்பளத்திற்காக காத்திருப்பார்கள். அடை மழைக்காலம் நெருங்கி விட்டதால் ஆஞாவின் உயிர் நண்பர் ‘பைண்டர்’ திரு. மரிய சூசை நாடார் அவர்கள், தன் மனைவி தாலியை அடகு வைத்து ஆஞாவிற்கு பணம் கொடுத்து உதவியிருக்கிறார். அவருக்கு எங்கள் குடும்பத்தார் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


அதை வாங்கி மேலும் அடுத்த அடுத்த மண் சுவர் படைகளை வைத்திருக்கிறார்கள். வழக்கமாக நான்கு அல்லது ஐந்து படை சுவர் வைப்பார்கள். ஒரு வழியாக திண்ணை, ஹால், ரூம், அடுக்களை வைத்து மண் சுவர் கட்டி, கீத்து கொட்டகைப் போட்டு, வீட்டைக் கட்டியாகிவிட்டது. ஓரிரு வருடங்களுக்கு முன் கதவு, பின் கதவு இல்லாமலேயேத் தான் இருந்தோம். அதற்குப் பதிலாக போர்வையோ, அம்மாவின் சீலையோ தான் தொங்கும். தரையும் மண் தரை. அம்மா சில நாட்களுக்கு ஒரு முறை சாணியால் தரையை மெழுகுவார்கள். பல வீடுகளில் அப்படி ஒரு பழக்கம் இருந்தது. சாணி நல்ல கிருமி நாசினியாச்சே!

நான் முன்பு குறிப்பிட்ட கறையான் வீட்டில், ஏழெட்டு மாதங்கள் தான் இருந்தோம். சொந்த வீடு (17H) கட்டிய பிறகு, அங்கே குடிவந்து விட்டோம். அருளானந்த நகர் ஆறாவது குறுக்குத் தெருவிலிருந்து, ஒன்பதாவது குறுக்குத் தெரு வரை, அதாவது பரிசுத்தம் நகர் தொடங்குகிற வரை ரெத்தினசாமி நாடார் நகர். அதில் முதன் முதலில் வீடு கட்டிக்கொண்டு போனது நாங்கள் தான். பிளாட்டுகள் போட்டார்களேத் தவிர, அதில் இருந்த முந்திரி மரங்களை அகற்றவில்லை. அதன் பின்புறம் பரிசுத்தம் நகர், பிலோமினாள் நகர் எல்லாம் முந்திரிக்காடுகளாகவே இருந்தன. அவைகளை பிளாட் போடாத நேரம்.

1967. திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த வருடம். திரு. கருணாநிதி அவர்கள், இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த, எங்கள் தாத்தா திரு. பரிசுத்த நாடாரை, தஞ்சையில் தேர்தலில் நின்று தோற்கடித்து வெற்றி பெற்ற சமயம்.

அப்பொழுது சிமிலி விளக்கு தான். மண்ணெண்ணெயில் எரியும். கரண்ட் வரவில்லை. கறையான் வீட்டிலிருந்து நடை தூரம் தான். அதனால் கையிலும், வாடகை சைக்கிளிலுமாக வீட்டு சாமான்களை 17H வீட்டிற்குக் கொண்டு போனோம்.

ஒரு நல்ல நாளில் பால் காய்ச்சி குடித்தோம். கறையான் வீட்டில் இருக்கும் போது, ‘தமிழ் மடம்’ போவது அருகில் இருந்தது. இப்பொழுது சற்று அதிகமாக நடக்க வேண்டும். தமிழ் மடம் துவக்கப் பள்ளியில் நடந்த சுவையான சம்பவங்களை அடுத்துக் கூறுகிறேன்.


*****

67 views0 comments

Comments


bottom of page