top of page
Writer's pictureJohn B. Parisutham

17. கறையான் வீடும் கல்லறை மேடும்



தஞ்சாவூர் அருளானந்த நகர்.


மேரீஸ் கார்னரிலிருந்து, நாஞ்சிக்கோட்டை போடு வழியாக, அருள் தியேட்டர், திரு இருதய ஆண்டவர் கோயில்களைத் தாண்டி, இருதயபுரம் போஸ்ட் ஆபீஸ் வந்ததும் வலது பக்கம் திரும்ப வேண்டும். சிறிது தூரம் நடந்தார் முதல் இடது பக்க சாலை நீண்டு செல்லும். அதில் தான் ஒய்.சி வாத்தியார் வீடு, அருள் நர்சரி தோட்டம் எல்லாம் இருக்கும். அந்த அருள் நர்சரி தோட்டத்தின் முன், எதிர்பக்கம் அந்த கறையான் வீடு இருந்தது. அதில் தான் குடியேறினோம்.

நான்கு பக்கமும் காட்டாமணக்கால் வேலி போடப்பட்டிருக்கும். முன் பக்கம் மூங்கில் பிளாச்சுகளால் ஆன கேட் இருக்கும். கேட்டுக்கும் வீட்டுக்கும் இடையே கிட்டத்தட்ட 30 அடி தூரம் இடைவெளியில் வெற்றிடம் இருக்கும். நாங்கள் ஓடி ஆடி விளையாட வசதியாக இருக்கும். கேட்டில் நுழைந்ததும் வலது புறம் கேணி இருக்கும்.

பின்னாட்களில் ஆஞா வேலி ஓரங்களில் முருங்கை முரம், வேப்ப மரம் எனப் பல மரங்களை நட்டார்கள். அதற்கெல்லாம் அந்தக் கேணியில் தான் நீர் இறைத்து ஊற்றுவார்கள்.

அது ஓர் ஓட்டு வீடு.

நுழைந்ததும் பெரிய ஹால். ஹாலின் வலது கடைசியில் அடுக்களை. இடது கடைசியில் ஒரு ரூம். ஹாலிலிருந்து வெளியே வந்தால் கொல்லைப்புறம். கொல்லைப்புற வேலியை ஒட்டி கல்லறைகள். வேலி அருகே நின்று பார்த்தால், பெரிதும் சின்னதுமான, உயரமானதும் குட்டையுமானதுமான, கல்லால் ஆனதும் மண்ணால் ஆனதுமான, கூரை உள்ளதும் இல்லாததுமான, வயதானவர்கள் மற்றும் சிசுக்களுடையதுமான கல்லறைகள். ஒரு காலத்தில் அவர்களும் அது போல எங்கேயாவது நின்று இது போன்ற கல்லறைகளைப் பார்த்திருப்பார்கள்.

இறப்பிடமான இக் கல்லறைகள் தத்துவங்களின் பிறப்பிடம். மரணம் அழகானது. மரணம் முடிவல்ல. என் தாத்தா தான் என் பேரனாகப் பிறக்கிறான். என் பேத்தியின் வேர் என் பாட்டியின் வயிற்றில் இருந்திருக்கிறது. மண்ணுக்குள் கறையான்களுக்கு உணவாகும் இந்த உடலுக்குள் எத்தனை பேரன்பு!! எத்தனை வன்மங்கள்!! எத்தனை ஆசைகள்! ஆசைப்படாமல் இருக்க ஆசைதான். முடியவில்லையே!

வருடத்திற்கு ஒரு நாள் வரும். கல்லறை தினம். ரோமன் கத்தோலிக்க மதப் பிரகாரம் அனைத்து புண்ணியவான்கள் தினம். அன்றைக்கு கல்லறைகளை எடுத்துக்கட்டி, மெழுகுவார்கள். பூக்களைத் தூவி, அழகுபடுத்தி, மெழுகுவர்த்தி, சாம்பிராணி, ஊதுவத்தி வைத்து ஜொலிக்க வைப்பார்கள். கல்லறையில் இருக்கும் சிலுவைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்துவார்கள். கண்களை மூடி, இறந்தோரை நினைவில் வைத்து உருக்கமாக மன்றாடுவார்கள். வந்திருப்போருக்கு பொரி பொட்டுக்கடலை, முறுக்கு என தானம் வழங்குவார்கள். வருடத்திற்கொரு முறை காணாத உற்றார் உறவினர்களை, நண்பர்களைப் பார்த்து குலம் விசாரிப்பார்கள்.


போன வருடம் அப்படி விசாரித்ததில் இந்த வருடம் சிலர் கல்லறைக்குப் போயிருப்பார்கள். இந்த வருடம் விசாரிப்பவர்கள் சிலர் அடுத்த வருடம் இருக்க மாட்டார்கள் என்று அறியாமலேயே கல்லறைத் தோட்டத்தை விட்டு வீட்டுக்குச் செல்வார்கள். வழக்கம் போல் ஆசைப்படுவது. எப்படியும் அதை அடைவது. மற்றவர்களை ஏமாற்றியாவது அடைவது. அடைந்தால் கொண்டாடுவது. அடையாவிட்டால் அழுது புலம்புவது. அப்படி வாழ்க்கையை வாழ கல்லறைத் தோட்டத்தை விட்டுச் செல்வார்கள்.

கொல்லைப்புறம் போய் வேலி வழியே கல்லறைகளைப் பார்க்கும் போதெல்லாம் இந்த எண்ணங்களை தோன்றாது. இப்பொழுது எழுதும் போது வந்து விழுகின்றன. அப்பொழுது பயப்படுவோம். பேய் பிசாசு எனச் சொல்லி வைத்திருந்தார்கள். அதனால் விளையாடுவது எல்லாம் வீட்டிற்கு முன்பக்கம் தான். தப்பித் தவறி பின்பக்கம். ம்ஹூம்!!!

இந்தப் பகுதி முழுக்க முழுக்க செக்கச் செவேலென்ற செம்மண் பகுதி. எந்த செடியும் மரமும் நன்றாக வளரும். அதே நேரத்தில் கறையான்களுக்கு செம கொண்டாட்டம். அந்த வீடு செம்மண்ணால் குழைத்து கட்டப்பட்ட சுவர்களால் ஆன வீடு. வீட்டுச் சுவர்களில் கறையான் புற்றுக்கள் வளர்ந்து வருவதைப் பார்த்திருக்கிறீர்களா? செழுமையாக வளரும். இன்றைக்குப் பார்த்துவிட்டு நாளைக்குப் பார்த்தால் பல சென்டிமீட்டர்கள் வளர்ந்து நிற்கும். அடிப்பக்கம் நல்ல சிகப்பாக கரடு முரடாக, உணர்ந்து காய்ந்து இருக்கும். ஆனால் புதிதாக கட்டப்படும் நுனிப்பக்கம் இளஞ்சிவப்பு நிறத்தில் நனைந்து மலர்ச்சியாக இருக்கும்.

ஒரு பக்கம் சிறிதாக தட்டிவிட்டால், சுறுசுறுப்பான கறையான்கள் அங்கும் இங்கும் ஓடுவதைப் பார்க்கலாம். ஞாயிற்றுக் கிழமைகளில் ஓர் அடி அல்லது ஒன்றரை அடி வளர்ந்த கறையான் புற்றை, ஆஞா அகற்றுவார்கள். நாங்கள் மண்ணை முறத்தால் அள்ளி தெருவில் கொட்டுவோம். அம்மா அதில் மண்ணெண்ணெய் ஊற்றுவார். சில கறையான்கள் சுருக்’கென்று கடிக்கும்.

“இதுல ராணி கறையான் ரொம்ப ஆழத்துல இருக்கும். அதை எடுத்தாத் தான் முழுசா போகும், ஒரு ஆளவச்சி எடுக்கனும்” னு ஒவ்வொரு தடவையும் ஆஞா சொல்வார்கள். வெட்டி எடுத்த பகுதியில் ஏற்பட்ட சுவற்றின் காயத்தை மண் வச்சி பூசுவார்கள். இரண்டொரு நாளில், சற்றுத் தள்ளி, முட்டிக் கொண்டு புற்று வெளியே வரும். புற்றை நாங்கள் சிதைப்பதும், கறையான்கள் அதை வளர்ப்பதும் வாடிக்கையாகிவிட்டது.

கறையான்கள் மாத்திரம் அல்ல. மூட்டைப்பூச்சிகளும், வாடகை கொடுக்காமலேயே எங்களோடு குடி இருக்கும். சுவர் முழுக்க சிறு சிறு ஓட்டைகளில் பதுங்கி வாழும். நாங்கள் மண்ணெண்ணைய் ஊற்றிய சிமிலி விளக்கைக் கொண்டு அந்த ஓட்டைகளை சூடு படுத்துவோம். வெப்பம் தாங்க முடியாமல் கூட்டை விட்டு (ஓட்டையை விட்டு) மூட்டைப்பூச்சிகள் வெளியே ஓடி வரும். அவைகளை நசுக்குவது எங்களுக்கு பேரானந்தம். அதன் முதுகு முழுக்க, இரவில் எங்களைக் கடித்து குடித்த இரத்தம் இருக்கும். நசுக்கும் போது அவைகள் பீச்சி அடிக்கும். ( மூட்டைப் பூச்சிகளைப் பற்றி எழுதும் போது, மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளும், வியாபாரிகளும், மதவாதிகளும் ஏன் கண் முன்னே வருகிறார்கள்?)

சுவர் முழுக்க ஓட்டைகளில் விளக்கினால் ஏற்பட்ட கருமை சுவடும், மூட்டைப்பூச்சியின் சிவப்பு ரத்தமும், வெள்ளை சுண்ணாம்பு சுவரில் பளிச்’செனத் தெரியும். அதைப்பற்றி யாரும் கவலைப்படுவதாக இல்லை. ஒரளவு, அந்தக் காலத்தில், எல்லா மண் சுவர் வீடுகளிலும் இதை கதை தான் என்பதால் யாரும் அலட்டிக் கொள்வதில்லை. மூட்டைப்பூச்சி மனிதர்களை விட புத்திசாலி என நினைக்கிறேன். நாற்காலி மேசைகளில் உள்ள இடுக்குளில் லாவகமாகப் போய் ஒளிந்துக் கொள்ளும். நாம் உட்கார்ந்திருக்கும் போது, தெரியாமல் ஊர்ந்து வந்து, சொல்ல முடியாத இடங்களில் கடித்து ரத்தத்தை உறிஞ்சிவிடும்.

வாரத்திற்கொருமுறை அல்லது மாதத்திற்கொரு முறை பாய், தலயணை, போர்வை, கொசுவலை என எல்லாவற்றையும் அம்மா, வெயிலில் காயப்போட்டு, மூட்டைப்பூச்சியின் ஆட்சியை முடித்து வைப்பார்கள். கறையான்களையும், மூட்டைப்பூச்சிகளையும் பற்றிப் பேசும் போது பேன்களை பற்றியம் பேசிவிட வேண்டும். அது கோவித்துக்கொள்ளக்கூடாதே!

என்ன இயற்கையோடு கலந்த வாழ்க்கை!

ஒரே ஹாலில் எல்லோரும் படுத்திருப்பதால், பேன்கள் ஒருவர் தலையிலிருந்து, இன்னொருவர் தலைக்கு, இரவில் தான் ‘டூர்’ போகும். இந்த தலையை விட அந்தத் தலை வசதியாக இருந்தால் அங்கேயே ‘டேரா’ போட்டுவிடும். வகுப்பில் யாரிடமாவது ஒருவருக்கு பேன் இருந்தால் போதும், அங்கிருந்து தொற்றி, பிறகு வீட்டில் உள்ள எல்லோரையும் பதம் பார்க்கும். பேன் சீப்புகளின் விற்பனை கடைகளில் அமோகமாக இருக்கும்.


விடுமுறை நாட்களில், எங்களை உட்கார வைத்து, பேன் சீப்பை அழகாக தலைமயிருக்குள்ளே விட்டு, வெளியே எடுப்பார்கள் அம்மா. சில நேரம் ‘பொல பொல’ வென்று பேன்கள் கொட்டும். அதை நசுக்கும் போது ‘கிளிக்’ கென ஒரு சத்தம் வரும். அதைக் கொல்வதில் தான் என்ன ஆனந்தம். ஷாம்புகள் வராத காலம். பேன் வராமல் இருக்க, செம்பருத்தி இலையோடு அரப்பு சேர்த்து குளிக்க வைப்பார்கள்.

கறையான், மூட்டைப்பூச்சி, பேன்கள் தவிர, எலிகளும் எங்களோடு கூட்டுக் குடித்தனமாக வாழும். சுவர் ஓரமாக ஓடி பானை இடுக்குக்குள் நுழைந்து, அடுப்படி வழியே விறகுக்குள் நுழையும். கீச்’சென சத்தம் போட்டுக்கொண்டு ஓடும் போது, குச்சியை எடுத்துக் கொண்டு ஓடுவதற்குள் அது பீரோவுக்கு பின்னே நுழைந்து, பாய்களுக்கு இடையே ஓடி, கழுவி விட்டால் தண்ணி ஓட வைத்திருக்கும் சிறு ஓட்டை வழியே மாயமாகி விடும்.


அதற்காகவே ஆஞா எலிப்பொறி வாங்கி வைத்திருப்பார்கள். தரையின் அடிப்பகுதியில் ஒரு இஞ்ச் உயரத்தில் அரை அடிக்கு மரக்கட்டையும் அதை ஒட்டி நிற்பது போல் அரை அடிக்கு வளைவாக மரக்கட்டையும் இருக்கும். இரும்பால் ஆனக் கம்பியில் கருவாடு மாதிரி கவர்ச்சிகரமாக, எலி சாப்பிடுவதற்கு ஏற்றாற்போல அம்மா ஏதாவது வைப்பார். அந்த உணவை எலி சீண்டினால், மேலிருந்து கனமான அந்த இரும்பு எலி மேல் விழும். இது தான் பொறி. அந்த நொடியே எலி பரலோகம் தான். அப்படி பொறியில் விழுந்த எலி அல்லது மூஞ்சூறுகளை வாலைப்பிடித்து தூக்கிக் கொண்டு போய் குப்பை மேட்டில் போடுவது ஓர் ஆனந்தம்.

கறையான், மூட்டைப்பூச்சி, பேன், எலிகள் பற்றிச் சொல்லும் போது எறும்புகளைப் பற்றிச் சொல்லாமல் விட்டால் அவைகள் கோவித்துக் கொள்ளும். கட்டெறும்பு, நெருப்பெறும்பு, பிள்ளையார் எறும்பு என பல வகை எறும்புகளும் சாரை சாரையாய் அங்குமிங்கும் போய்க்கொண்டு இருக்கும். பிள்ளையார் எறும்பு எனச் சொல்லப்படும் கருப்பு நிற எறும்புகள் வடிவத்தில் மிக மிக சிறியதாய் இருக்கும். அவை உங்கள் உடம்பில் ஊர்ந்திருக்கின்றனவா? கடிக்காது. ஆனால் எரிச்சலை உண்டாக்கும்.


சிகப்பு நிறத்தில் இருக்கும் நெருப்பு எறும்புகளை தான் ஆபத்து. பிள்ளையார் எறும்பை விட அளவில் சற்றே பெரிதாக இருக்கும். ஆனால் கட்டெறும்பை விட சிறியது தான். கடித்தால் சுள்’ளென நெருப்பைத் தொட்டது போல் எரியும். சரியாகத்தான் பெயர் வைத்திருக்கிறார்கள். கட்டெறும்புகளில் பலவகைகள் இருக்கின்றன. கருப்பு கட்டெறும்புகள் சில கடிக்காது. சில கடித்தால் தாங்காது. முருங்கை மரத்தில் அதிகம் பார்த்திருக்கிறேன். அவைகளுக்கு எப்படித்தான் நுகரும் உணர்வு இருக்கிறதோ! தெரியவில்லை. சர்க்கரை எங்கிருந்தாலும் அவைகளுக்குத் தெரிந்து விடும்.


கறையான்கள், மூட்டைப்பூச்சிகள், பேன்கள், எலிகள், எறும்புகள் தவிர மண்புழுக்கள், பட்டுப்பூச்சிகள், தட்டான்கள், வண்ணத்துப்பூச்சிகள், ஈசல்கள், வெட்டுக்கிளிகள், ந்த்தைகள் என சிறிய பூச்சிகளிலிருந்து, கோழிகள், ஆடுகள், நாய்கள், மாடுகள், கழுதைகள், குதிரைகள் என எங்கள் வாழ்க்கை உயிரோட்டமாக இருந்தது என்னவோ உண்மை தான்.

அந்த வீட்டில் தான், அடுத்து சொந்தமாக ஒரு இடமும் வீடும் வருவதற்கான விதை வந்தது.

*****

33 views0 comments

Comments


bottom of page