top of page
Writer's pictureJohn B. Parisutham

15. வலங்கைமான் மாரியம்மன் கோவில் திருவிழா


ஆடிமாதம்.


ஒரு மாதத்திற்கு முன்பே ஆர்வம் தொற்றிக்கொண்டது. நம்ம ஊர்க் கோவில் திருவிழா. ஆவணி மாதத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருவிழா தான். கடைசி ஞாயிறன்று தெப்பத்திருவிழா. பங்குனி மாதத்தில் இரண்டாம் ஞாயிறு பாடைக்காவடி திருவிழா. அடுத்த திங்கட் கிழமை மீன் திருவிழா. மூன்றாம் ஞாயிறு புஷ்ப பல்லாக்கு. கடைசி ஞாயிறு ‘கடை ஞாயிறு’ திருவிழா.


கும்பகோணம் மன்னார்குடி சாலையில் உள்ள மீரா வீட்டின் பக்கத்திலிருந்த வீட்டில் குடியிருந்த போது குதூகுலம் கூடிவிடும். ஏனென்றால் மாரியம்மன் கோவில் இரண்டு நிமிட நடைதூரத்தில் இருந்தது தான். கோயிலும் கோயிலைச் சுற்றி நடப்பதுவும் மிகத் தெளிவாகத் தெரியும். மேளச் சத்தமோ, ரேடியோ சத்தமோ கேட்டுக்கொண்டே இருக்கும்.


ஆஞாவுடன் பன்னீர் செல்வம் மாமா பேசிக்கொண்டிருந்தார்.

“கோயிலுக்கு காப்பு கட்டியாச்சு!… இன்னும் ஒரு வாரத்துக்கு வெளியூருக்கு யாரும் போக முடியாது.”

அப்படி ஒரு பழக்கம். ஊரில் எல்லோரும் இருந்தால் தானே திருவிழா களைகட்டும். அப்படி சாமி பேரில் பாரத்தைப் போட்டு கட்டிப்போட்டு வைத்தால் எல்லாம் சுமுகமாக நடக்கும். இல்லையா?


திருவிழா நாள்.


“ தம்பியையும் குளிப்பாட்டி, கால்சட்டை போட்டு கெளப்பு” என அம்மா சொல்ல, ஏதோ ஓர் அக்கா கூடுதலாக எனக்கு தலைசீவி, பவுடர் போட்டு, நெற்றியிலும் கன்னத்திலும் பொட்டு வைத்து திண்ணையில் உட்கார வைத்துவிட்டார்கள். அம்மா தயாராகி வந்ததும் என்னைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டார்.


“ அதோ பார் ! அது தான் பால் காவடி. இங்க பார்… அலகு குத்தி அலகு காவடி.”

“ ஐயய்யோ! அவங்களுக்கு வலிக்காதாம்மா?”

“ம்ஹூம்… வலிக்காது. அங்க பார் ரதக்காவடி. அழகா இருக்குல்ல?…”


ஆஞா, அம்மா, அம்மாவின் இடுப்பில் நான், அக்காக்கள் மூன்று பேர், இன்னும் அம்மாவின் தோழியர் ஒருவர் என எல்லோரும் பொடி நடையாக நடந்து கோயிலுக்கு வந்தோம்.


“ அல்போன்சு! அக்கா கைய புடிச்சுக்கோ… கூட்டத்துல காணா பொயிடாத…”

“ ஐயய்யோ!… அவரு செத்து பொயிட்டாரா? பாடையில தூக்கிட்டு வாராங்க?”

“ இது தான் பாடைக் காவடி..”

“ சாவலயா?”

“ இல்ல… செத்த மாதிரி படுத்துருக்காரு…”

“ முன்னாடி ஒரு பையன் தீச்சட்டி தூக்கிட்டுப் போறான்!!!”

“ ஆமா! அது மேல படுத்துருக்கறவரோட மகனா இருக்கலாம்.”

“ பின்னாடி வேப்பிலை வச்சிகிட்டு ஆடிட்டு வர்றது?....”

“ அவரோட மனைவியா இருக்கலாம்…”

“ மேளமெல்லாம் அடிச்சிட்டு வாராங்களே!..”

“ ஆமா! அவரை ஆத்துல குளிக்க வச்சி, நெத்தியில திருநீறு பூசி, பச்சை பாடையில தூக்கிட்டு வர்றாங்க.”

“ அவரு வாயையும் வயித்தையும் கட்டியிருக்காங்க”

“ போய் பொதைச்சிடுவாங்களா?”

“ ம்ஹூம்! கோயிலுக்குப் போய் இறக்குவாங்க… பூசாரி மஞ்ச தண்ணிய தெளிச்சி எழுப்புவார்”

“ என் அப்படி செய்றாங்க?”

“ ஏதாவது நோய்வாப்பட்டோ, விபத்தில் அடிபட்டோ உயிர் போற மாதிரி இருந்தா, அம்மன் கோவிலுக்கு வந்து, திருவிழாவுக்கு ‘பாடை கட்டி தூக்கியாறேன்.. காப்பாத்து’னு வேண்டிக்குவாங்க. அது படி நேர்ச்சையை இப்ப பண்றாங்க…”

“ ஓ!…”


இப்படியாகப் பேசிக்கொண்டே கோயிலைச் சுற்றி வந்தோம். வளையல் கடைகள், பாத்திரக்கடைகள். மிட்டாய்க்கடைகள். பல்வேறு கடைகள்.


“ அம்மா! அந்த கண்ணாடி வளையல்..”

“ அப்பறமா வாங்கித் தாரேன்..”


கூட்ட நெரிசலில் அம்மாவின் இடுப்பிலிருந்து மற்றவர்களின் இடுப்புதான் தெரிந்தது. நான் அழ ஆரம்பித்தேன்.


“ தம்பியை கொஞ்சம் புடிங்க” என்று அம்மா என்னை ஆஞாவிடம் கொடுத்தார். ஆஞா என்னை அவரது தோளில் உட்கார வைத்துக்கொண்டார். ஆஞாவின் தோள் ஆசனம். தலையில் கைகளை வைத்துக்கொண்டு கால்களை அவர்களை மார்பில் தொங்கல் போட்டுக் கொண்டு….இப்பொழுது எல்லாம் தெரிந்தது. எங்கு பார்த்தாலும் மனிதத் தலைகள்.


கோவிலுக்கு முன்னே ஒரு கொடிக்கம்பத்தில் பாடையில் ஒருவரைக் கட்டி தூக்கி ஆகாயத்தில் சுற்றினார்கள்.


“ கோவிலுக்குள்ள போவோம்…”

“ ரொம்ப கூட்டமா இருக்கு. இப்ப போகமுடியாது..”

“ எல்லோரும் போறாங்க…”

“ நம்மளும் போவோம்”


கூட்டத்தில் ஒருவரையொருவர் இடித்துக்கொண்டு, கோவிலுக்குள் போயாச்சு. நான் இன்னும் ஆஞாவின் தோளில் தான்.


அதோ! சீதள அம்மன் என்று அழைக்கப்படுகிற வலங்கைமான் வரதராஜன்பேட்டை மகா மாரியம்மன். ஏதோ ஒர் வசீகரமான அழகு அவரது முகத்தில். இரு பக்கங்களிலும் இரண்டு கரங்களுடன். இடது காலை மடித்து, வலதுகாலை தொங்கவிட்டபடி, கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கிறார். வலகு மேற்கரத்தில் உடுக்கை, கீழ்க்கரத்தில் கத்தி. இடது மேற்கரத்தில் சூலம், கீழ்க்கரத்தில் மண்டையோடு. அதென்ன அவரது தோள்களில்? ஓ!… இரண்டு நாகங்கள்.


கண்ணுக்கு குளிர்ச்சியாக இருந்தது. சீதளம் என்றால் குளிர்ச்சி. அம்மை போன்ற வெக்கை நோயைக் குணப்படுத்தி உடலை குளுமைப்படுத்தும் தெய்வமாச்சே!


“பக்கத்துல இருக்கற சாமியெல்லாம் யாரும்மா?”

“ அது பேச்சியம்மன். வாய் பேச முடியாத குழந்தைக்கு பேச்சு வரணும்’னு வேண்டிகிட்டு, இங்க வைந்து சக்கரை பொங்கல் வச்சு வழிபட்டா பேச்சு வந்துடும்”

“ வந்துடுமா?”

“ நம்பிக்கை..”

“ அந்த சாமி?”

“ அது மதுரை வீரன், இது இருளன், அதோ அது விநாயகர்”

“ நிறைய சாமி இருக்கு”

“ ஆமா! கால்’ல நோய் இருக்கறங்க, வாதம் வந்தவங்க, இங்க வந்து எலுமிச்சை சாறு, வேப்பிலை, குங்கும்ம் இழைச்சு தடவி வந்தாங்கன்னா நோய் குணாயிடும்.”

“ சாமியாலயா? மருந்தாலயா?”

“ மருந்து தான் சாமி…”

“ அப்பறம் கண் நோய் உள்ளவங்க இங்க வந்து அபிஷேகப் பாலை, குடிச்சி வேப்பிலைய தின்னாங்கன்னா குணமாயிடும். அம்மை நோய் வந்தங்களும் இங்க வந்து தங்கிடுவாங்க. அதே அபிஷேகப் பால், வேப்பிலை தின்னு குணமாகிப் போவாங்க..திருமணத்துல ஏதாவது தடை வந்தவங்க கூட இங்க வந்து வேண்டிக்குவாங்க..”


அக்காக்களுக்கு வளையல் வாங்கிக்கொடுத்தார்கள். ஏகப்பட்ட காவடிகள் சுத்துப்பட்ட கிராமங்களிலிருந்து வந்த கொண்டே இருந்தன. நீர் மோர் குடித்தோம்.


“ இந்தக் கோயில் சோழர்களால் கட்டப் பெற்றதாம். இன்னொரு கோயிலும் உண்டு. வலங்கைமான் பெரியநாயகி உடனாய கைலாசநாதர் கோவில். பொதுவாக சிவபெருமானின் இடதுகரத்தில் தான் மான் இருக்குமாம். இந்த ஊரில் உள்ள சிவன் கோவிலில், சிவபெருமானின் வலக்கையில் தான் மான் இருக்குமாம்.


வலக் கை மான்.

வலங்கைமான் என ஊரூக்குப் பெயர்.


*****

23 views0 comments

コメント


bottom of page