top of page
Writer's pictureJohn B. Parisutham

12. தடுப்பூசியும் கோழிகுடாப்பும்



“இங்க வந்துடு”

“எங்க?”

“இங்க பாரு…”

“எங்க?”

“இங்க கோழி குடாப்புல”

“சத்தம் தான் வருது… ஆளையேக் காணோம்?”

“கிட்டக்க வந்து பாரு”


கோழிக்கூட்டின் அருகே வந்து பார்க்கிறேன். அல்போன்ஸ் அக்கா குத்துக்காலிட்டு, கோழிக்குடாப்பிற்குள் குனிந்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். ஆஞாவுக்கு மாடு வளர்க்க, ஆடு வளர்க்க, கோழி வளர்க்கப் பிடிக்கும். எந்த வீட்டிற்குச் சென்றாலும் மூடக்கூடிய கோழி குடாப்பு வாங்கி விடுவார்கள். அல்லது மண்ணால் கோழிகுடாப்பு கட்டி விடுவார்கள். இல்லையென்றால் மரத்தட்டிகளை வைத்து கம்பிகள் கொண்ட கோழிவீடு தயார் செய்து விடுவார்கள்.

இந்த கோழிக்கூடும் இரண்டு அடுக்குகள் கொண்ட கோழிக்கூடு. கீழ் அறையில் பத்து பதினைந்து கோழிகளும், மேல் அறையில் பத்து பதினைந்து கோழிக்கூடுகளும் அடையக்கூடிய அளவுக்கு பெரிதான கூடுதான். காலை 10 மணி என்பதால் கோழிகளைத் திறந்துவிட்டிருந்தார்கள். சிறிது நேரம் கழித்துத்தான் கோழிக்கழிவுகளைக் கூட்டி சுத்தம் செய்வார்கள். அதற்குள், கோழிக்கழிவுகளைப் பொருட்படுத்தாமல் அதன் மேலேயே அல்போன்ஸ் அக்கா உட்கார்ந்திருந்தார். என்னை வேறு உள்ளே அழைக்கிறார்.

“நா வரமாட்டேன்… நாத்தம் அடிக்கும்”

“மூக்கை பிடிச்சுக்கலாம்….உள்ள வா..சீக்கிரம் வா”

“ம்ஹூம்!..வரமாட்டேன். அசிங்கமா இருக்கு.”

“உள்ள வந்துடு…இல்லைனா ஊசி டாக்டர் வந்துருக்காரு…ஊசி போட்டுருவாரு…”

“ஊசியா?...”

“ஆமா!…அம்மை நோயிக்கு தடுப்பூசி போட ஆளு வந்துருக்காங்க..”

“எனக்கும் போடுவாங்களா?”

“எல்லாருக்கும் போடுவாங்க…”

“ஐயய்யோ!!! பயமா இருக்கே!…” கண்ணில் நீர் எட்டிப்பார்த்தது எனக்கு.

“பயமா இருக்குல்ல… கோழி குடாப்புக்குல வந்துரு… இங்க யாரும் தேடமாட்டாங்க…”


கோழி வீட்டின் கதவை உள்ளிருந்து அல்போன்ஸ் அக்கா தூக்கி விட, நான் தரையில் படுத்து தவழ்ந்து நுழைந்தேன். அப்பொழுது கால்சட்டை பட்டன் தெறித்து கழண்டு விட்டது. ஒரு கையால் கால்சட்டையைப் பிடித்துக் கொண்டு, மறு கையால் மூக்கைப் பிடித்துக் கொண்டு, கோழி குடாப்புக்குள் நுழைந்துவிட்டேன்.


பயங்கர துர்நாற்றம்.


கோழிக் கழிவுகளுக்கிடையே அங்கங்கே கோழி இறகுகள் சிதறிக்கிடந்தன. மூலையில் இரண்டு முட்டைகள் கிடந்தன. கோழிகளுக்குத் தண்ணீர் வைக்கும் பாத்திரம் காய்ந்து போய் இருந்தது. அரிசியும் வேறு எதுவுமோ கலந்து ஒரு டப்பாவில் வைத்திருந்தார்கள். கொஞ்சம் இறைந்து கிடந்தது. கோழிக்குடாப்பின் கம்பி ஜன்னல் கதவை மூடிவிட்டோம்.


“நம்மள கண்டு பிடிச்சுட்டாங்கன்னா… ஊசி குத்திடுவாங்களா?….”

“ஆமா!…”

“எங்க குத்துவாங்க?”

“கையில…”


ஊசி போட வந்தவர்கள் கண்டுபிடித்துவிடக் கூடாதுன்னு என் கண்களை மூடிக்கொண்டேன்.


யாரோ நடந்து வர்ற காலடிச்சத்தம் கேட்டது. கண்ணைத் திறப்பதா, வேண்டாமா என எனக்குள் பதற்றம். ஊசி குத்தினால் பயங்கர வலி வலிக்குமே! என உள்ளுக்குள் மனசு உதைத்துக் கொண்டது. வர்றது யார்?...ஊசி டாக்டரா இருக்குமோ? ஊசிக்குப் பயந்து ஒளிந்து இருக்கிறோம் எனத் தெரிந்துக் கண்டுபிடித்து விட்டால் ஒரு ஊசிக்குப் பதில் இரண்டு ஊசி போடுவார்களோ? ஒரு கண்ணை மட்டும் திறந்துப் பார்த்தேன். ஆஞாவின் கால்களும் வேட்டியும் தெரிந்தது.


“இங்க தான நின்னாங்க…” என ஆஞா சொல்லியது காதில் விழுந்தது. ஐயய்யோ!! ஆஞா பிடித்துக்கொண்டுப் போய் ஊசி குத்த வைத்து விடுவார்களோ? அல்போன்ஸ் அக்காவைப் பார்த்தேன். அவரும் கண்களை மூடிக்கொண்டிருந்தார். அப்படியானால் நிச்சயம் கண்டுபிடிக்க முடியாது என்று நம்பினேன்.


“பின்னாடி தான ஒடியாந்தான் தம்பி…” எனச் சொல்லிக்கொண்டு அம்மாவும் வந்தார்கள். கோழிக்கூட்டின் கதவு வழியே பார்க்கும் போது இப்பொழுது நான்கு கால்கள். இரண்டு கால்கள் வேட்டியுடன். இரண்டு கால்கள் சேலையுடன்.


“அக்கா!…கண்டுபிடித்துவிடுவார்களா?…” எனக் கேட்க வாயைத் திறந்து “அக்..” எனச் சொல்வதற்குள், என் வாயை அக்காவின் கை ‘சடக்’ கென மூடியது. ஐயோ! கையிலும் ‘அந்த’ துர்நாற்றம். எனக்கு தும்மல் வரும் போல் இருந்தது.


“ டாக்டரும் மத்தவங்களும் ‘போகலாமா? இன்னும் ஆளுங்க இருக்காங்களா?’ ன்னு கேக்கறாங்கம்மா’ என்று கேட்டுக்கொண்டே ஜூலி அக்கா ஓடி வந்தார்கள்.


“அல்போன்ஸையும் தம்பியையும் காணோமே! தெருபக்கம் நல்லா பாத்தியா? பக்கத்துல மீரா வீட்டுல பாத்தியா?”


“கலைமணி அக்கா தான் பாத்துச்சி… இந்த பக்கம் கோயிலுக்கு வரைக்கும் போனிச்சு… நான் அந்த பக்கம் வேப்ப மரம் வரைக்கும் பாத்துட்டு வந்துட்டேன்.”

“எங்க போயி தொலைஞ்சுதங்கன்னு தெரியலையே!!”

“ கிணத்துக்குள்ள எட்டிப் பாக்கட்டுமா?”

“ இவ ஒருத்தி!!!”

“ அம்மா! ஆஸ்பத்திரியிலேர்ந்து வந்தவங்க எல்லாம் போயிட்டாங்க..” என்று சொல்லிக்கொண்டே கலைமணி அக்கா வந்தார்கள்.


இப்பொழுது நாலிரண்டு எட்டுக் கால்கள். ஜூலி அக்காவின் கால்களில் கொலுசு இருந்தது. கலைமணி அக்காவின் கால்களில் பூப்போட்ட பாவாடை. ஏதேதோ பேசிக்கொண்டே எட்டுக் கால்களும் வீடு நோக்கி நகர்ந்தன.


யாரும் இல்லை.


‘போகலாமா?’ என்கிற மாதிரி அல்போன்ஸ் அக்காவைப் பார்த்தேன். வேறு சாதாரண அக்காவாக இருந்தால் ‘சரி! வா..போகலாம்’னு சொல்லியிருப்பார்கள். இது அல்போன்ஸ் அக்காவாச்சே! ‘இரு! அவங்க பக்கத்து வீட்டுக்குத் தான் போயிருப்பாங்க. நாம வெளியில வந்துட்டோம்னா மறுபடி அவங்கள அழைச்சிட்டு வந்துடுவாங்க… நாலஞ்சு வீடு தள்ளி அடுத்த தெருவுக்கு போயிட்டாங்கன்னா, மறுபடி வரமுடியாது…அதனால பேசாம இரு’ என்கிற அர்த்தத்தில் ஏதோ சொல்ல அமைதியாகிவிட்டேன்.


'ஐயய்யோ! நம்மள காணும்னு தேடுவாங்களே’ன்னு ஒரு பக்கம் கவலை. வெளியில வந்துட்டா கண்டுபிடிச்சி நம்மளுக்கு தடுப்பூசி குத்திடுவாங்களேன்னு இன்னொரு பக்கம் பயம். கொஞ்ச நேரம் கழிச்சி வரலாம்னா ‘இவ்வளவு நேரம் எங்க போனிங்கன்னு திட்டுவாங்களே’ ன்னு மறுபக்கம் உதறல். ‘இப்போ போகக்கூடாது. மாட்டிக்கிவோம்’ என்று அல்போன்ஸ் அக்காவின் உருட்டிய கண்களைப் பார்த்து இன்னொரு பக்கம் அச்சம்.


கோழிக்கழிவுகளின் துர்நாற்றத்தை இப்பொழுது நன்கு உணர முடிந்தது. அப்பொழுது தான் கவனித்தேன். ‘கோழிப்பேன்’ என்கிற ஒரு வித செல்கள் உடலில் ஊற ஆரம்பித்திருந்தன. பக்கத்தில் ஒரு கூடையில் அடைகோழி இருந்தது. அங்கிருந்து தான் ஊர்ந்து அந்தப் பேன்கள் வந்திருக்க வேண்டும். இவைகளையெல்லாம் விட தலையாயப் பிரச்னை ஒன்று வந்தது. உடனடியாக ஒன்னுக்குப் போகவேண்டும்.


“ அக்கா!”

“ என்ன?”

சுண்டுவிரலை மட்டும் உயர்த்திக் காண்பித்தேன். ‘க’ எனத் தொடங்கும் கெட்டவார்த்தையச் சொல்லி

“ கொஞ்ச நேரம் அடக்கிக்கோ” என்றார்.

“ம்ஹூம்!…”

“ இன்னும் கொஞ்ச நேரம் பேசாம இரு..”

“ முடியாது…கிட்ட வந்துருச்சு”


சாதாரண அக்காக்களாக இருந்தால் ‘சரி! போய்தொலை’ என்று சொல்லியிருப்பார்கள். இது அல்போன்ஸ் அக்காவாச்சே!

“ அடக்கிக்கோ… இல்லன்னா இங்கயே இருந்துரு”


இந்தக்கதை எப்பொழுது தான் முடியும் என்று உங்களைப் போலவே எனக்கும் பொறுமை குறைந்து போனது. மறுபடி யாரோ ஓடிவரும் சத்தம் கேட்டது. கொலுசு சத்தம் கேட்டால் ஜூலி அக்கா தான். இதுவரை ‘பரணி’ முதற்கொண்டு எல்லா இடத்தையும் தேடியிருப்பார்கள் போல. அங்கு இங்கு’வென திரிந்து விட்டு, கோழிக்குடாப்பு பக்கம் வந்து குனிந்து பார்த்து,


“ அம்மா! இங்க ஒளிஞ்சிட்டு இருக்காங்கம்மா…” எனக் கத்தினார்.


வெளியில் தவழ்ந்து வந்தோம்.

என் கால்சட்டை தொப்பையாக நனைந்திருந்தது.

ஆஸ்பத்திரியிலிருந்து வந்தவர்கள் அடுத்த தெருவுக்கு போய்விட்டார்கள்.


******



9 views0 comments

Comments


bottom of page