“ அம்மா! இன்னக்கித் தான் ஸ்போர்ட்ஸ் டே… ஒம்பது மணிக்கெல்லாம் தம்பியை (என்னைத்தான்) தூக்கி கிட்டு பள்ளிக்கோடத்துக்கு வந்துடுங்க.”
ஜூலி அக்கா குளித்து முடித்துவிட்டு, உடை மாற்றிக்கொண்டே அடுக்களையில் சமைத்துக்கொண்டிருந்த அம்மாவிடம் சொன்னார்.
“சரி!…” என்பது போல் தலையை ஆட்டிய அம்மாவைத் தொடர்ந்து நான், “ஸ்போர்ட்ஸ் டே’ன்னா என்னக்கா?” எனக் கேட்டேன்.
“விளையாட்டு நாள். பள்ளிக்கூடத்துல போட்டியெல்லாம் நடக்கும். நான் ஸ்கிப்பிங் போட்டியில கலந்துக்கறேன்.”
“ஓ! அது தான் தெனமும் கயிறை வச்சிகிட்டு தாண்டிகிட்டு இருந்தீங்களா?”
“ஆமா…”
______
அம்மா தெருக்கதவை மூடித் தாளிட்டு விட்டு பூட்டினார்கள். என்னைத் தூக்குவதற்கு முன் கால்சட்டையை சரி பண்ணி விட்டு, முகத்தில் இருந்த பவுடர் போதுமானதா எனப் பார்த்து விட்டு தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டார்கள்.
அவ்வளவு தான்.
பின்னாட்களில் வானூர்தியில் (ஏராப்ளேனில்), தொடர்வண்டியில் (ரயிலில்), பேருந்தில் (பஸ்ஸில்), மகிழுந்தில் (காரில்), தானியில் (ஆட்டோவில்), இரு சக்கர வாகனத்தில் (பைக்கில்), மிதிவண்டியில் (சைக்கிளில்), நாவாயில் (கப்பலில்), கலத்தில் (படகில்) என வெவ்வேறு விதமாக பயணித்திருக்கிறேன். ஆனால் அம்மா இடுப்பில் உட்கார்ந்து கொண்டு பயணிப்பது போன்ற சுகம் வேறு எதிலும் கிடையாது. நல்ல உயரத்திலிருந்து காட்சிகளைப் பார்க்கலாம். நாற்காலியின் கால்களையே பார்த்துக் கொண்டிருந்ததை விட்டுவிட்டு நாற்காலியின் உச்சிக்கு மேலே பார்க்கலாம். கிட்டத்தட்ட அம்மா பார்க்கிறதெல்லாம் நான் பார்க்கலாம்.
இடது கையில் பிடித்துக் கொள்ள கழுத்துச் சங்கிலியோ, ஜாக்கெட்டோ, இடுப்பில் செருகிய கொசுவமோ இருக்கும். வலது கையில் பிடித்துக் கொள்ள முதுகில் உள்ள ஜாக்கெட்டோ வேறு ஏதோ ஒன்று கிடைக்கும்.
அம்மாவின் நடைக்கேற்றாற் போல தாள லயத்துடன் நாமும் ஏறி இறங்குவோம். சில நேரங்களில் அது தாலாட்டு என நினைத்து தூங்கி விடுவது உண்டு.
“தோ! அது தான் இது. அதப்பாரு இது தான் அது” என வேடிக்கைப் பார்ப்பதையெல்லாம் அது யார், அது என்ன பொருள், அங்கு என்ன நடக்கிறது என கற்றுக் கொள்ளும் பல்கலைக்கழகமாக மாறிவிடும் அந்தப் பயணம்.
அம்மா என்னை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டு, எம்ஜிஆர் திரைப்படங்களைப் பார்க்கப்போனது ஞாபகம் வருகிறது. தியேட்டர் போடனதும் ஜம்’மென்று அம்மா மடியில் உட்கார்ந்து நானும் படம் பார்ப்பேன். பல நாட்கள், இடைவேளை சமயத்தில் என்னை எழுப்பி, கூஜாவில் கொண்டு வந்த காபியையோ பாலையோ கொடுப்பார்கள்.
இன்றைக்கு பொசு பொசு ஷோபாவில் உட்கார்ந்துக் கொண்டு, கடலை மிட்டாயோ, மிக்சரோ தின்று கொண்டு ஹோம் தியேட்டரில் தொலைக்காட்சி பார்க்கிறதை விட சுகம் அது.
அம்மாவின் இடுப்பில் ‘ஜாம் ஜாம்’ என்று உட்கார்ந்துக்கொண்டு, அம்மா கொடுத்த கமார்க்கட் மிட்டாயோ, சூட மிட்டாயோ, பிரிட்டானியா பிஸ்கட்டோ தின்று கொண்டு, கடைத் தெருவையும், குளத்தையும், அதில் பூத்திருக்கும் அல்லிப் பூவையும், பச்சைப் பசேல் வயலையும் பார்த்துக் கொண்டு, மாட்டு வண்டியை ஒட்டிக் கொண்டு போகும் ஐயாவின் ‘ஏ!..ஏ..ய்…டுர்ர்ர்ர்’ என்கிற கத்தலையும், பசங்க சைக்கிள் டயரை ஒட்டிக் கொண்டே, ‘ஏய்ய்ய்ய்ய்…’ எனக் கத்திக் கொண்டே ஓடும் சத்தத்தையும், குருவிகள் கூச்சலிடும் சத்தத்தையும், இன்ன பிற சத்தங்களையும் கேட்டுக் கொண்டு போவது, ‘ஒலியும் ஒளியும்’ கேட்பதை விட ஆனந்தம்.
‘அது என்னம்மா? இது என்னம்மா?’ என்கிற நச்சரிக்கிற கேள்விகளுக்கு, அம்மா பொறுமையாகப் பதில் சொல்லிக் கொண்டே வருவார்கள். எவ்வளவு கற்றல்!
அன்றைக்கும் அப்படித்தான் அக்காக்களின் உயர்நிலைப் பள்ளிக் கூடத்துக்கு அம்மாவின் இடுப்பில் பயணம். ஒரு வழியாய் பள்ளிக்கூடம் வந்து சேர்ந்தாச்சு.
மைதானத்தின் நடுவே உள்ள கொடிக்கம்பத்தின் உச்சியில் இருந்து துவங்கி பல வண்ண வண்ணத் தாள்களில் செய்த முக்கோண வடிவ கொடிக் கயிறுகள் நாலா பக்கமும் போயிருந்தன. அவைகள் காற்றில் ஆடிக்கொண்டே எல்லோரையும் வரவேற்றன. ரேடியோவில் ஏதோ சத்தமாகப் பாடிக் கொண்டிருந்தது. தரையில் வெள்ளை நிறக் கோடுகள் அங்கும் இங்கும் போயிருந்தன.
சிலர் பள்ளி கேட் வழியாக வந்து சேர்ந்த வண்ணமிருந்தனர். வகுப்பில் இருந்த பெஞ்சுகளை எடுத்து வந்து ஒரு பந்தலின் அடியில் போட்டு இருந்தனர். சிலர் உட்கார வசதியாக. ஆனால் நிறையப் பேர் நின்று கொண்டிருந்தார்கள். நாங்களும் நின்று கொண்டுதான் இருந்தோம்.
எங்கே அக்காக்களைக் காணவில்லை? தேடினேன். ம்ஹூம்! காணோம்.
சிலர் அங்கும் இங்கும் நடந்து கொண்டும், ஓடிக்கொண்டும் இருந்தார்கள். அவசரம் அவசரமாக எதையோச் செய்துக் கொண்டிருந்தார்கள்.
அன்றைக்கு கொடுத்தது போல இன்றைக்கும் மிட்டாய் தருவார்களா? என நான் என்னையே கேட்டுக்கொண்டிருந்தேன். அம்மாவிடம் கேட்கலாமா? வேண்டாம். பார்த்துக் கொள்வோம் எனக் காத்திருந்தேன்.
யாரோ மைக்கில் பேசினார்கள். பிள்ளைகள் வரிசையாக வந்து நின்றார்கள்.
அதோ ஜூலி அக்கா. அதோ கலைமணி அக்கா.
ஜூலி அக்கா முழங்கால் வரை உள்ள குட்டை பாவாடையும் மேற்சட்டையும் போட்டிருந்தார். கலைமணி அக்கா கணுக்கால் வரை உள்ள நீண்ட பாவாடை அணிந்திருந்தார். அதோடு தாவணி.
வடக்கர் அணிகிற சுடிதார் போன்றவை சினிமா மூலமாக அறிமுகப்படுத்தப்படாத நேரம். இரண்டு அக்காக்களுமே என்னைப்பார்த்தார்கள். நான் சிரித்தேன். அவர்களின் வாய் லேசாக அசைந்தது. சிரிக்க முயற்சிக்கிறார்கள் எனப் புரிந்துக்கொண்டேன்.
கலைமணி அக்கா, பள்ளி மாணவர்களுடன், ஒரு மரத்தடியில் நின்று கொண்டிருந்தார். ஜூலி அக்கா, விளையாட்டுகளில் பங்கெடுக்கும் மாணவர்களுடன் நின்று கொண்டிருந்தார்.
பல விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. அம்மாவால் இடுப்பில் ரொம்ப நேரம் தூக்கிக்கொண்டு நிற்க முடியவில்லை. ரோட்டுக்கு வந்து, அங்கு நின்று கொண்டிருந்த ஐஸ்காரரிடம், சிவப்பு நிறத்தில் ஒரு ஐஸ் வாங்கிக்கொடுத்து என்னை தரையில் இறக்க வைத்து, பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு நடக்க வைத்து அழைத்து வந்தார்கள்.
சட்டையில் ஒழுக ஒழுக, ஐஸ்ஸை சப்பி சாப்பிட்டுக்கொண்டே, அம்மாவின் கையைப்பிடித்துக் கொண்டு நடந்து வந்தேன்.
‘ஸ்கிப்பிங்’ போட்டி துவங்கியது.
ஏழெட்டுப் பிள்ளைகள் ஸ்கிப்பிங் கயிறை இரண்டு கைகளிலும் பிடித்துக் கொண்டு ஆடத் தயாரானார்கள். ஜூலி அக்கா எங்களைப் பார்க்கவேயில்லை. தரையைப் பார்த்து நின்று கொண்டிருந்தார். யாரோ என்னமோ சொன்னதும் எல்லோரும் ஸ்கிப்பிங் கையிறைத் தூக்கிப் போட்டு குதிக்கத் தொடங்கினார்கள். எல்லோரும் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கழுத்தில் தொங்கும் விசிலை எடுத்து வாயில் வைத்துக் கொண்டிருந்த ஓர் ஆசிரியர், சுற்றிச் சுற்றி வந்தார்.
திடீரென ஒரு பிள்ளை கயிறு காலில் சிக்கி தடுமாற, அந்த ஆசிரியர் அவரை அழைத்து உட்கார வைத்தார். ஜூலி அக்கா மும்மரமாக குதித்துக் கொண்டிருந்தார். லாவகமாக கயிற்றைத் தூக்கி, உடம்பில் எந்தப் பாகத்தையும் தொடாமல் சுற்றிச் சுற்றிக் குதித்துக் கொண்டிருந்தார். இன்னும் சிலர் தடுமாறி விளையாட்டை முடித்துக்கொண்டனர். இரண்டு பேரே மிஞ்சினார்கள்.
ஒன்று ஜூலி அக்கா. இன்னொன்று இன்னொரு மாணவி.
ஜூலி அக்காவுக்கு வேர்த்தது. நெற்றியிலிருந்து வேர்வை கிளம்பி கண்களுக்குள் போய் மறைத்திருக்க வேண்டும். தலையை ஆட்டிக் கொண்டு, கண்களை மூடி மூடித் திறந்தார். ‘விசில்’ வாத்தியார் எல்லோரையும் கைதட்டச் சொல்லியிருப்பார் என நினைக்கிறேன். எல்லோரும் கைதட்டி உற்சாகப்படுத்தினார்கள். என் கையில் ஐஸ் இருந்ததால் தட்ட முடியவில்லை.
ஜூலி அக்காவைப் பார்த்தேன். முகம் முழுக்க வியர்வை. அதோடு மூச்சிறைக்க குதிப்பது தெரிந்தது. என்ன நடக்கும்? கடைசி வரை குதித்து முதல் பரிசு வாங்குவாரா? அல்லது தடுக்கி ஆட்டத்திலிருந்து விலகுவாரா? இருவருமே குதித்துக் கொண்டிருந்தார்கள். ஜூலி அக்கா பலவீனமாக குதிப்பது தெரிந்தது. ஐயோ பாவம் என நினைத்தேன். திடீரென குதித்துக்கொண்டிருந்த இன்னொரு அக்கா தடுமாறி விட்டார்.
இப்பொழுது ஜூலி அக்கா மாத்திரம் ஸ்கிப்பிங் செய்து கொண்டிருந்தார். நிறுத்தலாம் உனக்குத்தான் முதல் பரிசு என்று சொல்லியும், திடீரென நிறுத்த முடியாமல் குதித்துக் கொண்டே இருந்தார்.
படாரென மயங்கி கீழே விழுந்து விட்டார். ஸ்கிப்பிங் கயிறு மட்டும் கையிலிருந்து போகவில்லை. தலை குப்பற மண்ணில் கிடந்தார். எல்லோருக்கும் பதட்டம். அம்மா என்னை விட்டு விட்டு அக்காவை நோக்கி ஓடினார்.
ஜூலி ஜூலி என தோள்பட்டைகளைத் தட்டி எழுப்பினார் ஆசிரியர். ம்ஹூம்! எழுந்திருக்கவில்லை. நிறையப் பேர் அக்காவைச் சுற்றி நின்று கொண்டதால் அங்கே என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. வெறும் கால்கள் தான் தெரிகிறது.
கலைமணி அக்கா பதட்டத்துடன் நின்று கொண்டிருந்தார்.
“ரெக்ஸலின் மேரி (கலைமணி அக்காவுக்கு ஸ்கூல்ல இது தான் பெயர்) தங்கச்சி தான் ஜூலி” எனப் பேசிக்கொண்டார்கள்.
“ரெக்ஸலின் இங்க வா!…’ என்பதற்குள் அம்மாவும் பக்கத்தில் இருக்க, ஒரு வழியாக, முகத்தில் தண்ணீரை அடித்து மயக்கத்தை தெளிய வைத்தார்கள்.
வீட்டுக்கு வந்து விட்டோம்.
___
அன்று இரவு.
இரவு உணவு சாப்பிடுவதற்காக எல்லோரும் அமர்ந்தோம். அலுலகத்திலிருந்து வந்த ஆஞாவுக்கும், பள்ளிக்கூடத்திலிருந்து வந்த அல்போன்ஸ் அக்காவுக்கும் ஸ்கிப்பிங் போட்டியில் ஜூலி அக்கா முதல் பரிசு வாங்கி வெற்றி பெற்றதையும், கடைசியில் மயக்கம் போட்டு விழுந்ததையும், ரெக்ஸலின் தங்கச்சி ஜூலி மயக்கம் போட்டுட்டா என ஆசிரியர்களும் மாணவர்களும் பேசிக் கொண்டதையும் அம்மா விலாவாரியாகச் சொல்லிக் கொண்டிருந்தார். எல்லோரும் மகிழ்ச்சியாக இருந்தோம்.
ஆனால் கலைமணி அக்கா மாத்திரம், முகத்தை ஏழூருக்கு தூக்கி வைத்துக் கொண்டு உம்’மென்று இருந்தார்.
“ நா இனிமே ஸ்கூலுக்கு போ மாட்டேன்” கலைமணி அக்கா
“ ஏண்டி?”
“ இது நாள் வரை ஜூலி என் தங்கச்சி’ன்னு தெரியாம இருந்துச்சு. இப்ப எல்லோருக்கும் தெரிஞ்சிடுச்சி” என அழ ஆரம்பித்தார்.
“ அதனால என்ன?”
“ ம்ஹூம்! போ மாட்டேன்.”
ஒரு வழியாக கலைமணி அக்காவைச் சமாதானப்படுத்தினார்கள்.
இரவு தூக்கத்தில் கலைமணி அக்கா உளறியது.
“ ஏன் மயக்கம் போட்டு உழுந்த? இப்ப ஏன் தங்கச்சிதான் நீ’ன்னு ஸ்கூல்ல எல்லோருக்கும் தெரிஞ்சிடுச்சி”
என்ன காரணத்தினால் கலைமணி அக்கா வருத்தப்பட்டார் என்று தெரியவில்லை. ஆனால் இந்த நிகழ்ச்சியைச் சொல்லிச் சொல்லி இன்றளவும் சிரிப்போம்.
*****
Comments