சின்னப்பன் என்கிற ஆசிரியரின் வீட்டில் தான் நாங்கள் நால்வரும் தங்கியிருந்தோம். ஊட்டியின் எழில் கொஞ்சும் காட்சிகளை ரசித்தவாறே நடந்தால், பெத்லகேம் பயிற்சிப் பள்ளியிலிருந்து சின்னப்பன் ஐயாவின் வீடு பத்துப் பதினைந்து நிமிட நடை. போகிற வழியில் ஒரு தேநீர் கடை. ஊட்டி ரஸ்க் அங்க ரொம்ப ஃபேமஸ்.
வெளியில் உள்ள மர பெஞ்சில் உட்கார்ந்தோம். குவளை நிறைய தேநீர்.
பிரான்சிஸ், தேநீரை ஓர் உறிஞ்சி உறிஞ்சிவிட்டு, பழைய நினைவுக்குளத்தில் மூழ்க ஆரம்பித்ததை என்னால் உணர முடிந்தது.
“ நான் Finger Post-ல் இருக்கற St. Thereas’s High School ல தான் படிச்சேன். பள்ளியில் எப்ப Drawing Competition நடந்தாலும் எனக்குத் தான் முதல் பரிசு கிடைக்கும். நல்லா வரைவேன். அப்போ Finger Post பங்கு சாமியாரா இருந்தவரு Fr. Michael. எனக்கு எட்டாங்கிளாஸ், கிளாஸ் டீச்சராவும் இருந்தாரு. அப்போ YCS/YSM என்கிற இளம் மாணவர் இயக்கத்துல உறுப்பினரா இருந்தேன். அப்பயே சமூகத்துல நடக்கற சுரண்டல்கள், ஏற்றத் தாழ்வுகள் பற்றியெல்லாம் வகுப்புகள் எடுப்பாங்க.’
பிரான்சிஸின் நினைவுகளை கலைத்துவிடாமல், ஊட்டி ரஸ்கை டீயில் மெதுவாக முக்கி, எடுத்து சுவைத்தேன்.
பிரான்சிஸ் தொடர்ந்தார்.
“ ஓவியக் கண்காட்சி வைப்பார்கள். என் படங்கள் அதில் இருக்கும். ஊட்டி YMCA-வில் அப்படி ஓர் ஓவியக் கண்காட்சி நடத்தினார்கள். மலைவாழ் மக்கள் பிரச்னைகள், விவசாயிகளின் வாழ்க்கை நிலை, தோட்டவாழ் மக்களின் அவலங்கள் என வெவ்வேறு தலைப்புகளில் என் படங்களும் இருந்தன. படிப்பு முடிந்தது. இதையெல்லாம் கவனித்துக்கொண்டிருந்த Fr. Michael என்னை பெங்களூருவில் இருக்கிற இண்டியன் சோஷியல் இன்ஸ்டிடியூட்டில் நடந்த ஒரு பயிற்சிக்கு 1975-76 வாக்கில் அனுப்பி வைத்தார். என்னோடு சிங்காராவில் இருந்து, சுப்பு, வர்கிஸ் போன்று சில நண்பர்களும் கலந்துக் கொண்டனர். கன்னியாகுமரியிலிருந்து KK Group என்ற அமைப்பிலிருந்து சில நண்பர்களும் கலந்துக் கொண்டனர்.”
பிரான்சிஸின் குவளையில் தேநீர் குடிக்கப்படாமலே இருந்ததைக் கவனித்தேன். ஆனால் ஒன்றும் சொல்லவில்லை. அவர் தொடர்ந்தார்.
“அப்பொழுது நாட்டில் எமர்ஜென்சி காலம். ‘சமுதாயா’ என்கிற அமைப்பிலிருந்து ‘பிரசன்னா’ என்பவர் வந்து வீதி நாடகம் போட்டார். அது தான் எனக்கு முதல் நாடக அறிமுகம். வெவ்வேறு குழுக்கள் வந்து நாடகம் போட்டார்கள். சீனிவாச பிரபு, வர்மா என்று பலரும் வீதி நாடகம் போட்டார்கள். அடிப்படையில் கலைஞனாகவும், சமூக அக்கறை கொண்ட இளைஞனாகவும் இருந்த என்னை வீதி நாடகம் அப்படியே தூக்கி அரவணைத்துக்கொண்டது. அதன் எளிமையும், மக்கள் பிரச்னையை நேரடியாக சொல்லும் பாங்கும் என்னை வெகுவாக கவர்ந்துவிட்டது. ”
சிறிது இடைவெளி விட்டார். தேநீரை உறிஞ்சினார். பெங்களூருவிலேயே அவர் தங்கிவிட்டதாக எனக்குப் பட்டது.
எனக்கும் என் பெங்களூர் நாடக அனுபவம் பற்றிய நினைப்பு வந்தது. அவர் அமைதியாக இருந்ததால், நான் பேசத்துவங்கினேன்.
“ ஆமா, பிரான்சிஸ்! அந்த எளிமையும், நறுக்’கென்று கருத்தைச் சொல்லும் பாங்கும் என்னையும் கவர்ந்தது. நான் 1977-78ல் பெங்களூரில் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது ரவீந்திர கலா ஷேத்ரா என்கிற கலை அமைப்பில் ஓர் ஓவியர் மனித உரிமை சம்பந்தப்பட்ட ஓவியங்களை கண்காட்சியாக வைக்கத் தடைசெய்த நிலையில், ஒரு போராட்டம் நடத்தப்பட்டது.
நான் கல்லூரி மாணவராக அந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டேன். அரை நிர்வாணக் கோலத்தில் ஒரு மனித உருவத்தை வரைந்து ‘இதை தடை செய்ய மாட்டீர்கள்’ என்ற வாசகத்தை எழுதி, அதை தூக்கிக் கொண்டு ஊர்வலத்தில் கலந்துக் கொண்டேன். அந்த கலாஷேத்ரா முன் பெருங்கூட்டம் கூடியது. அப்பொழுது ஒரு குழுவினர் வீதி நாடகம் போட்டனர். அதுவரை மேடைகளில், திரை அவிழ்ந்ததும், ஒளி வெள்ளத்தில், ஒலி பெருக்கி சப்தத்தில், நாடகம் பார்த்து பழக்கப்பட்ட எனக்கு, கூட்டத்தின் மத்தியில், தரையில், திரையேதும் இல்லாமல், ஒலி பெருக்கி இல்லாமல், மக்கள் பிரச்னையை ‘சுருக்’ கென்று இதயத்திற்குள்ளே கொண்டு போன நாடகத்தைப் பார்த்து வியந்து போனேன்.”
“ அப்ப உங்களுக்கும் பெங்களூர் தான் வீதிநாடக அறிமுகம்’னு சொல்லுங்க”
“ ஆமா!”
“ 76-77 ன்னா அநேகமா பிரசன்னாவின் சமுதாயா குழு தான் நாடகம் போட்டிருப்பாங்க.”
இரண்டு பேர் தேநீர் குவளையும் காலியாகிவிட்டிருந்தது. ஆனால் மனம் மட்டும் நிறைவாக இருந்தது.
அடுத்த மாதத்திலேயே நாங்கள் இருவரும், வீதி நாடகம் சம்மந்தமாக, மதுரையில் சந்திக்கப் போகிறோம் என்பது தெரியாமலேயே எழுந்து நடந்தோம்.
******
( தொடரும்...)
Comments