top of page

ஆஸ்திரேலிய ஆதிக்குடிகள்: மறையும் வரலாறும் மாறும் வழக்காறும்




ஆஸ்திரேலிய ஆதிக்குடிகள்: மறையும் வரலாறும் மாறும் வழக்காறும்

                                         

                                          பேரா. முனைவர். ஜான் பிரிட்டோ பரிசுத்தம்

                                          தலைவர், ஜோபா அகாடமி, ஆஸ்திரேலியா

                              pjohnbritto@gmail.com

                              www.johnbrittoacademy.com

+61424698383

ஆய்வுச் சுருக்கம்

ஆஸ்திரேலியாவின் ஆதிக்குடிகளான ஆபரிஜினல் என்ற உலகின் மிகப் பழமையான மனித சமூகங்களின் வரலாற்று மற்றும் பண்பாட்டு மாற்றங்களை ஆராய்கிறது. ஐரோப்பிய குடியேற்றத்தின் ஆழமான தாக்கம் இவர்களது பண்பாடு, மொழி, கலை, ஆன்மீக நம்பிக்கைகள் மற்றும் நிலத்துடனான தொடர்பு ஆகியவற்றை எவ்வாறு சிதைத்தது என்பதையும், இதன் விளைவாக இவர்களது வரலாற்று விவரிப்பு அழிந்து, பாரம்பரிய வழக்காறுகள் மாற்றமடைந்து வந்துள்ளன என்பதை முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் கொண்டு இந்த ஆய்வு விளக்குகிறது. அதற்கு பகுப்பாய்வு அணுகுமுறையும், விளக்கமுறை அணுகுமுறையும், ஒப்பீட்டு முறை அணுகுமுறையும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சமூக, பொருளாதார மற்றும் ஆரோக்கிய ஏற்றத்தாழ்வுகள், தொடர்ந்து நிலவும் பாகுபாடு போன்ற பல சவால்களை எதிர்கொண்டாலும், ஆதிக்குடி சமூகங்கள் தங்கள் அடையாளம், உரிமைகள் மற்றும் பண்பாட்டு மரபுகளை மீட்டெடுக்க முயற்சிக்கின்றன. ஆதிக்குடிகளின் பங்களிப்பை சமூக மற்றும் அரசாங்க அளவில் அங்கீகரிப்பது, அவர்களுடன் இணைந்து செயல்படுவது ஆகியவை இவர்களது வரலாறு பாதுகாக்கப்படுவதற்கும், அவர்களது வழக்காறுகள் அவர்களது தனித்துவமான அடையாளத்தை அழிக்காமல் பரிணமிப்பதற்கும் அவசியமானவை என்று இந்தக் கட்டுரை வலியுறுத்துகிறது.

 

குறிச் சொற்கள்: ஆஸ்திரேலிய ஆதிக்குடிகள், வரலாறு, மாறும் வழக்காறு, அகக் காரணங்கள், புறக் காரணங்கள்

 

முன்னுரை

ஆஸ்திரேலியாவின் ஆதிக்குடிகள் (Aboriginal and Torres Strait Islander peoples) உலகின் மிகப் பழமையான மனித சமூகங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றனர். 60,000 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மக்கள் ஆஸ்திரேலிய கண்டத்தில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது பண்பாடு, மொழி, கலை, ஆன்மீக நம்பிக்கைகள் மற்றும் இயற்கையுடனான தொடர்பு ஆகியவை அவர்களது தனித்துவமான அடையாளத்தை வெளிப்படுத்துகின்றன. ஆயினும், ஐரோப்பிய குடியேற்றத்திற்குப் பிறகு இவர்களது வரலாறு பெருமளவு மறைக்கப்பட்டும், அவர்களது வாழ்க்கை முறைகள் மாற்றப்பட்டும் வந்துள்ளன. இந்தக் கட்டுரையில் ஆஸ்திரேலிய ஆதிக்குடிகளின் மறையும் வரலாறு, மாறிவரும் வழக்காறுகள் மற்றும் இன்றைய சூழலில் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஆராயப்படும்.

 

ஆய்வுக் கருதுகோள்

ஆஸ்திரேலிய ஆதிக்குடிகளின் வாழ்வியலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அம்மாற்றங்கள் அகவயப்பட்டது என்பதை விட புறவயப்பட்டதா என ஆராய்வது கருதுகோளாக அமைகின்றது. ஆதிக்குடிகளின் பல்லாண்டு கால வரலாறு தானாக மறைவதைவிட புறக்காரணங்களால் மறைக்கப்படுகிறது என ஆராய்வது அடுத்த கருதுகோளாக அமைகின்றது. பழங்குடிமக்களின் இயற்கையை ஒட்டிய வாழ்வியல் வழக்காறுகள் எந்தெந்த விதத்தில் மாறியுள்ளன என ஆராய்வது பிறிதொரு கருதுகோளாக அமைகின்றது.

 

ஆய்வு அணுகுமுறைகள்

இவ்வாய்வில் பகுப்பாய்வு அணுகுமுறையும், விளக்கமுறை அணுகுமுறையும், ஒப்பீட்டு முறை அணுகுமுறையும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


ஆய்வுப் பகுப்பு

இவ்வாய்வு முன்னுரை, முடிவுரை நீங்கலாக ஐந்து இயல்களைக் கொண்டுள்ளது. அவை 1. முன்னுரை 2. ஆஸ்திரேலிய ஆதிக்குடிகளின் வரலாறு 3. ஆஸ்திரேலிய ஆதிக்குடிகளின் பண்பாடு 4. ஆஸ்திரேலிய ஆதிக்குடிகளின் அழிவு 5. மறையும் வரலாறும் மாறும் வழக்காறும் 5.1 முதற்பொருள் - நிலமும் பொழுதும் 5.2 கருப்பொருள் 5.3 உரிப்பொருள் 6. மாற்றத்திற்கான காரணிகள் 7. முடிவுரை

 

ஆஸ்திரேலிய ஆதிக்குடிகளின் வரலாறு

ஆஸ்திரேலிய ஆதிக்குடிகளின் வரலாறு மிகவும் பழமையானது. ஆஸ்திரேலியாவில் Northeren Territory என்கிற வடமாநிலத்தில் Madjedbebe (MJB) என்கிற இடத்தில் தொல்பொருள் ஆய்வு நடந்தது. அதில் பாறை ஓவியங்கள் பல கண்டுபிடிக்கப்பட்டன. அவைகளை ஆராய்ந்துப் பார்த்து, ஓர் ஆய்வு, கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் (50,000) அல்லது அறுபதாயிரம் (60,000) வருடங்களுக்கு முன்பு மனிதர்கள் அங்கு வாழ்ந்ததாக முடிவுக்கு வந்தார்கள்.[1] 2011 ஆம் ஆண்டின் மரபணு ஆய்வு[2], ஆஸ்திரேலிய பழங்குடிமக்கள் 60,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறிய முதல் மனிதர்களிடமிருந்து வந்தவர்கள் என்பதைக் குறிப்பிட்டது. ஆனால், Britannica[3] எண்பதாயிரம் (80,000) ஆண்டுகள் என்று வரையறுக்கிறது. ஆக, ஐம்பதாயிரத்திலிருந்து எண்பதாயிரத்திற்கு முந்தைய வரலாறு கொண்டவர்களாக ஆஸ்திரேலிய பூர்வக்குடி மக்களைக் கொள்ளலாம்.

 

1770 ஆம் ஆண்டு லெப்டினன்ட் ஜேம்ஸ் குக் ஆஸ்திரேலியாவிற்கு வந்தார். தெற்கு கண்டம் மக்கள் வசிக்காமல் இருந்தால் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். பூர்வீகவாசிகள் இருந்தால் அவர்களின் ஒப்புதலுடன் நிலைத்தைக் கைப்பற்ற வேண்டும் என குக் அறிவுறுத்தப்பட்டிருந்தார். அவர், ஆஸ்திரேலியா வந்த உடன் நியூ சவுத் வேல்ஸ் என்று அழைக்கப்பட்ட நிலத்தை பிரிட்டனின் மூன்றாம் ஜார்ஜ் மன்னரின் சொத்து என்று அறிவித்தார். பூர்வீக குடிமக்களின் சம்மதத்தைப் பெறுவதற்கான முயற்சியில் அவர் தோல்வியுற்றார். இந்த தோல்வியால் ஆஸ்திரேலியா ஒரு ஆளரவற்ற கண்டம் அங்கே யாருமில்லை என்ற கட்டுக்கதை சட்டப்பூர்வமாக பரப்பப்பட்டது. பிரிட்டிஷ் குடியேற்றவாசிகள் ஆஸ்திரேலியாவை 'டெர்ரா நல்லியஸ்' (Terra Nullius) என அறிவித்தனர், அதாவது இது 'யாருக்கும் சொந்தமில்லாத நிலம்' என்று கருதப்பட்டது. இது ஆதிக்குடிகளின் நில உரிமைகளை முற்றிலும் மறுத்து, அவர்களை தங்கள் சொந்த நிலங்களிலிருந்து வெளியேற்றியது.[4]

 

1788 ஆம் ஆண்டு ஆர்தர் பிலிப்பின் தலைமையில் இங்கிலாந்தின் முதற் கடற்படை ஆஸ்திரேலியா வந்தடைந்தது. இப்படையெடுப்பின் நோக்கம் டெர்ரா ஆஸ்திரேலியாவைக் கைப்பற்றி ஒரு காலனியை நிறுவி கட்டுப்பாட்டை நிறுவுவதாகும். கேப்டன் பிலிப் தலைமையில் முதல் கப்பற்படையினர் சிட்னி கோவுக்கு வந்த போது இது யாருக்கும் சொந்தமில்லை என்று சொல்வது உண்மையல்ல என்று உணர்ந்தனர். ஏனென்றால் கரையோரத்தில் பூர்வீகவாசிகள் ஈட்டிகளை அசைத்து கூச்சலிடுவதைக் காண முடிந்தது என பிலிப் குக் கூறினார்.[5]

 

ஆதிக்குடிகளின் வரலாறு பெரும்பாலும் எழுத்து வடிவில் பதிவு செய்யப்படவில்லை. ஐரோப்பிய குடியேற்றவாசிகள் ஆதிக்குடிகளின் வாழ்க்கை முறைகளை ஆவணப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை, மாறாக அவர்களை 'பின்தங்கியவர்கள்' என்று முத்திரை குத்தினர். இதனால், ஆதிக்குடிகளின் செம்மையான வாழ்க்கை முறைகள், சமூக அமைப்புகள் மற்றும் ஆன்மீக நம்பிக்கைகள் பதிவு செய்யப்படாமல் மறைந்து போயின.

 

ஆஸ்திரேலிய ஆதிக்குடிகளின் பண்பாடு

ஆர்தர் பிலிப் வந்தடைந்த போது, தீவுக் கண்டத்தில் சுமார் ஏழரை லட்சம் (7,50,000) பூர்வக்குடி மக்கள் வசித்ததாக ஒரு மதிப்பும்[6], மூன்று லட்சம் (3,00,000) என இன்னொரு மதிப்பும்[7] கூறுகிறது. அப்பொழுது இங்கே இருநூற்று அறுபது (260) தனித்துவமான மொழிகளும், ஐநூறுக்குக் (500) குறைவில்லாத வட்டார உபமொழிகளும் இருந்தன என்று ஒரு அறிக்கையும்[8] ஐந்நூறுக்கும் (500) அதிகமான தேசங்கள் இருந்தன என்றும் இருநூற்றைம்பது (250) மொழிகள் பேசப்பட்டு வந்தன என்று ஒரு கட்டுரையும்[9] கூறுகின்றன.

 

பல தேசங்களும், பல மொழிகளும் இருந்தாலும், ஒவ்வொரு சமூகமும் தனித்துவமான வாழ்க்கை முறைகளையும், ஆன்மீக நம்பிக்கைகளையும் கொண்டிருந்தன. இருந்தாலும் எல்லா சமூகத்தினரது வாழ்க்கை முறையும் இயற்கையுடனான ஆழமான தொடர்பு கொண்ட வாழ்க்கை முறையாக இருந்தது. அதோடு ‘கனவு நேரம்’ அல்லது 'ட்ரீம்டைம்' (Dreamtime) எனப்படும் அவர்களது ஆன்மீக நம்பிக்கை முறையானது, உலகின் தோற்றம், இயற்கை நிகழ்வுகள் மற்றும் மனித வாழ்வின் நோக்கம் ஆகியவற்றை விளக்குவதாக அமைந்தது. இது அவர்களது கலை, இசை, நடனம் மற்றும் வாய்மொழி வரலாறு வழியாக பரவியது.

 

பூர்வக்குடிகள், ஒட்டுமொத்தமாக நிலத்தைப் புனிதமாகக் கருதினர். நிலம் அவர்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் ஆன்மீக பயணத்திற்கான வழிகாட்டியாக இருந்தது. அவர்களது சமூக அமைப்பு மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. மேலும் இயற்கையைப் பாதுகாக்கும் நிலையான வாழ்க்கை முறைகளை அவர்கள் பின்பற்றினர்.ஆயினும், இந்த செம்மையான வாழ்க்கை முறை 18-ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய குடியேற்றவாசிகளின் வருகையுடன் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. 2008ஆம் ஆண்டு தான், ஆஸ்திரேலிய அரசாங்கம் Stolen Generations கொடுமைக்காக முறையாக மன்னிப்புத் தெரிவித்தது.

 

ஆஸ்திரேலிய ஆதிக்குடிகளின் அழிவு

1788 இல் ஆஸ்திரேலியா மீது ஐரோப்பியர் படையெடுத்ததில் இருந்து பழங்குடி மக்கள் அவர்களது சொந்த மண்ணில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டு ஒடுக்கப்பட்டனர். பெரிய வெள்ளை இன மக்கள் மீன்களை பெருமளவு பிடிப்பதன் மூலமும், கங்காருக்களின் எண்ணிக்கையை தாங்க முடியாத அளவில் வேட்டையாடுவதன் மூலமும் குறைத்தனர். நிலத்தைச் சுத்தம் செய்து, தண்ணீரை மாசுபடுத்தினர். இதன் விளைவாக, சிட்னி படுகையில் உள்ள பழங்குடியின மக்கள் விரைவில் பட்டினியால் வாடும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். தங்களது வறுமை காரணமாக பழங்குடி மக்கள் வெள்ளையர் அளிக்கும் உணவு, உடைக்கு கையேந்த வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. ஆங்கிலேயர்களால் வணிகத்திற்கான வழிமுறையாகப் பயன்படுத்தப்பட்ட மது, பழங்குடியினரின் பாரம்பரிய சமூக மற்றும் குடும்பக் கட்டமைப்புகளை மேலும் சிதைக்க உதவியது. கப்பலில் வந்த மாலுமிகள் மற்றும் குற்றவாளிகளுக்கு இருந்த பெரியம்மை, சிபிலிஸ் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா போன்ற கொடிய வைரஸ்களை எதிர்ப்பதற்கு பழங்குடி மக்களிடத்தில் ஏதுமில்லை. ஒரு வருடத்திற்குள், சிட்னி படுகையில் வசிக்கும் பழங்குடி மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெரியம்மை நோயால் இறந்தனர். பலரும் வடக்கே இடம்பெயர்ந்து டார்வின், அலிஸ் ஸ்பிரிங் போன்ற இடங்களுக்குப் போய் ஒதுங்கிவிட்டார்கள்.[10]

 

புதிய ஆங்கிலேயக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்ட போது, இச்சூழலைச் சாராத, இந்நிலத்துக்கு ஒவ்வாத எத்தனையோ பறவைகளும், மிருகங்களும், தாவரங்களும், ஊர்வனவும் ஆங்கிலேயரால் அறிமுகப்பட்டன. அவை இப்பூர்வீகநிலத்தின் சுற்றுச்சூழற் சமநிலையை பெரிதும் குலைத்தன. பூர்வக்குடிப் பெண்களும், ஆண்களும் அடிமைகள் போல் நடத்தப்பட்டனர். குழந்தைகளும், சிறாரும் இனக்குழுக்களில் - குடும்பங்களில் இருந்து முற்றாகப் பிரிக்கப்பட்டு அரச கண்காணிப்பின் கீழ் பராமரிப்பு இல்லங்களில் தனிமைப்படுத்தப்பட்டு ஆங்கிலேய வாழ்க்கை முறைகளுக்குப் பயிற்றுவிக்கப்பட்டார்கள். இதனால் இத்தலைமுறையைச் சேர்ந்த பூர்வீகக்குடி மக்கள் தத்தமது பூர்வீக இனக்குழுக்களின் உறவுத்தொடர்பு மற்றும் மொழி கலாச்சார பண்பாட்டுத்தொடர்ச்சியை முழுவதுமாக இழந்தனர். குடியேற்றவாசிகளுக்கும் ஆதிக்குடிகளுக்கும் இடையிலான மோதல்கள் வன்முறையாக மாறின, இதில் ஆயிரக்கணக்கான ஆதிக்குடிகள் கொல்லப்பட்டனர். இது 'பிரான்டியர் வார்ஸ்' (Frontier Wars) என்று அழைக்கப்படுகிறது, ஆனால் இந்தப் போர்கள் பெரும்பாலும் ஆஸ்திரேலிய வரலாற்று புத்தகங்களில் பதிவு செய்யப்படவில்லை.[11] 1967ஆம் ஆண்டுவரையில், ஆஸ்திரேலிய பூர்வகுடி மக்களுக்கே ஆஸ்திரேலிய குடியுரிமை வழங்கப்படாதளவுக்கு, நவ ஆஸ்திரேலிய அரச இயந்திரம் மூக்கமுட்ட நிறவாதத்தைப் பருகிய மிதப்பில் ஆட்சிசெய்து கொண்டிருந்த நாடு இது.[12]

 

மறையும் வரலாறும் மாறும் வழக்காறும்

முதற்பொருள் - நிலமும் பொழுதும்

ஆஸ்திரேலிய பழங்குடிமக்களிடையே நிலவும் ஒரு வாய்மொழிக் கதை இது. இக்கதைக் குறித்து 6000 வருடத்திற்கு முந்திய பாறைச் சித்திரங்கள் உள்ளன. கதை இது தான். அது பூமி தட்டையாக இருந்த காலம். கனவுக் காலம். அப்பொழுது பூமிக்கே வடிவம் கொடுத்த பெரிய பாம்பு இருந்தது. அதற்கு வானவில் பாம்பு என்று பெயர். அது தரையை முட்டி வெளிப்பட்டு யானை, கரடி, சிங்கம் போன்ற பல்வேறு வகையான விலங்குகளை எழுப்பிவிடுகிறது. அது வளைந்து நெளிந்து போகிற இயக்கத்தால் மலைகளையும், பள்ளத்தாக்குகளையும், சிற்றோடைகளையும், ஆறுகளையும் உருவாக்குகிறது. பூமி முழுதும் சறுக்கி விளையாடுகிறது. அதனால் பூமித்துவாரங்களை நிரப்பி, சுத்தமான நீரை வழங்குகிறது. அதன் பிறகு, பூமியை வடிவமைத்த களைப்பில் ஒரு நீர்த்தேக்கத்தில் சுருண்டு படுத்து இன்று வரை இளைப்பாறுகிறது.

 

அதனால் பழங்குடிமக்கள் “நீர்த்தேக்கங்களை தொந்தரவு செய்யக்கூடாது. இவைகளின் ஆற்றல் மிகப்பெரியது. எல்லாவற்றையும் உருவாக்கிய வானவில் பாம்பு இங்கு இளைப்பாறிக் கொண்டிருக்கிறது. அதனால் நீர்நிலைகளை மிகுந்த மரியாதையுடன் நடத்தவேண்டும்” என்று அவர்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள். சில நேரம் வானவில் பாம்பின் செய்கை கணிக்க முடியாதவாறு இருக்கிறது. வறட்சி, சூறாவளி, வெள்ளம் என்பனவற்றையும் கொண்டு வருகிறது. அதீத மழை பெய்யும் பொழுது அது தங்கியிருக்கும் நீர்த்தேக்கம் நிரம்பி வழிகிறது. அப்பொழுது சூரியன் அதன் வண்ணமயமான உடலைத் தொட, வானவில் பாம்பு எழுந்துக் கொள்கிறது. தரையில் இருந்து எழும்பி வானத்தில் உலவும் மேகங்கள் வழியாக பயணித்து மற்றொரு நீர்த்தேக்கத்திற்குப் போகிறது. அப்படி அந்த பாம்பு மேகங்களுக்கிடையே பயணிக்கும் போது பலவண்ணங்களில் வானவில் தோன்றுகிறது. “அதோ! வானவில் பாம்பு ஒரு நீர்த்தேக்கத்திலிருந்து கிளம்பி, இன்னொரு நீர்த்தேக்கத்தை நிரப்ப போய்க்கொண்டிருக்கிறது” என்று பேசிக்கொள்கிறார்கள்.

 

“நமக்கு எப்பொழுதும் இப்படித்தான் வாழ்வளிக்கும் நீர் கிடைக்கிறது. பெரும் வறட்சியின் போதும் சில நீரூற்றுகள் வறண்டு போகாததற்கு இதுவே காரணம்.” என்றும் “ வானவில் பாம்பு இப்படி வெவ்வேறு இடங்களுக்கு பயணப்பட்டுக் கொண்டே இருப்பதால் தான் வெவ்வேறு பருவங்கள் வருகின்றன” என்றும் “இப்படித்தான் சூரியனும், நிலமும், நீரும், காற்றும் தங்களுக்குள் உறவாடிக்கொள்கின்றன” என்றும் பழங்குடிகள் தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள்.

 

இப்படிப் பலவேறு வாய்மொழிக் கதைகள் உலவுகின்றன. அவர்களுடைய கதைகளிலிலும், பாடல்களிலும், நடனங்களிலும், ஓவியங்களிலும் வானவில் பாம்பு இன்றும் உலா வந்துக் கொண்டே இருக்கிறது. இது போன்றக் கதைகளை பெரியவர்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இதனால் அவர்கள் வாழ்கிற நிலமும் பொழுதும் குறித்த பிரக்ஞை, அதில் இருக்கிற நீர், காற்று, தீ, வான் போன்றவைகளின் இயல்புகள், அதில் வாழ்கிற விலங்குகள், பறவைகள், பூச்சிகள் குறித்த தரவுகள் அடுத்த அடுத்த தலைமுறைகளுக்குப் போய்க் கொண்டே இருக்கின்றன.

 

இப்படிப் பழங்குடிமக்களின் பெரியவர்கள் சிறந்த கதைச் சொல்லியாக இருக்கிறார்கள். குழந்தைகளுக்கு வாழ்வியல் மதிப்பீடுகளையும், அறிவையும், திறனையும், தொழிற் நுட்பத்தையும் கலைவழி கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். இதில் எழுத்து எங்கும் இல்லாததால்,  நினைவாற்றல் சிறந்து இடத்தை எடுத்துக் கொள்கிறது. இந்த நவீன காலத்திலும், ஆதிவாசிகள் மேலாதிக்க கலாச்சாரத்தின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளின்படி கல்வி பெறுவதற்கான வழிகளும் முறைகளும் இருந்தபோதிலும், நினைவாற்றல் இன்னும் ஆதிவாசி கலாச்சாரங்களின் அடிப்படை அடித்தளமாக உள்ளது.[13]

 

வானவில்லும், இடிமுழக்கமும், வசந்தகாலமும், ஏரி, குளங்களும், மலைகளும் உயிரோடு சுவாசித்து வாழ்ந்து கொண்டிருக்கின்றன என்பது பூர்வீக மக்களின் ஐதீகம். தாவர, விலங்கு, பூச்சிகளாகிய பல்லுயிர்களில் பெரும் அக்கறை கொண்ட இந்த மக்கள், தமது உயிர் வாழும் தேவைக்காக, தாம் வாழும் சுற்றுச்சூழலில் இருந்து 'அவசியமானதை மட்டும்' எடுத்துக் கொள்பவர்கள்.[14] பூர்வீகக்குடிகளில் ஒருவரான ஹெலன் மில்ராய், கனவின் ஒரு பகுதியாக நிலத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி பேசுகிறார். "நாம் கனவின் ஒரு பகுதியாக இருக்கிறோம். இந்த பூமியில் பிறப்பதற்கு முன்பே நீண்ட காலமாக நாம் கனவில் இருந்தோம். மேலும் நம் வாழ்நாளின் முடிவில் இந்த பரந்த பிரபஞ்சத்திற்கு திரும்புவோம். இது நமது பூமியில் இருக்கும் காலத்தில், நமக்கு ஆறுதல் அளிக்கும் இடமாகவும், நோக்கம் மற்றும் நம்பிக்கையை மீட்டெடுக்கும் இடமாகவும், நமது விதியைத் தொடரும் இடமாகவும் உள்ளது” என்கிறார்.[15]

 

நிலம் தான் அவர்களுக்கு அடிப்படையாக இருந்தது. யாருக்கும் தனிப்பட்ட விதத்தில் நிலம் சொந்தமாக இல்லை. ஆனால் ஒவ்வொருவரும் நிலத்தி்ற்குச் சொந்தமானவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு நிலம் ஒரு பூகோளப் பொருள் அல்ல. அது ஆன்மீகத்தின் ஒரு அடையாளமாக இருந்தது. இன்னும் இருக்கிறது.[16] இன்று ஆஸ்திரேலிய அரசின் புள்ளிவிபரப்படி 2021 மக்கள் தொகை கணக்கெடுப்பில் கிட்டத்தட்ட பத்து லட்சம் (9,84,000) ஆதிக்குடிகள் இருப்பதாகவும், அது ஆஸ்திரேலிய மொத்த மக்கட்தொகையில் 3.8% எனவும் கணக்கிடப்படுகிறது.[17] நிலமே கதி என இருந்த மொத்த மக்கட்தொகையும், இன்றைக்கு அவர்களின் நிலத்திலிருந்து அந்நியப்பட்டு நிற்கிறார்கள்.

 

கருப்பொருள் - வசிக்கும் இடம், தொழில், வணிகம், உணவு, கலை, குடும்பம், கைவினைப் பொருட்கள், மொழி, கல்வி, மதம், வழிபாடு, சடங்குகள், போர், அறிவியல்

பூர்வக்குடிகள் அரை-நிரந்தர குடியிருப்புகளைக் கட்டினர். ஒரு நாடோடி சமூகமாக, அவர்களின் முக்கியத்துவம் ஒரு விவசாய சமூகத்தின் வளர்ச்சியை விட குடும்பம், குழு மற்றும் நாட்டுடனான உறவுகளில் இருந்தது. அரை-நாடோடி வாழ்க்கை முறை காரணமாக, பூர்வக்குடிகள் ஒப்பீட்டளவில் பொருள்முதல் சார்பற்றவர்களாக இருந்தனர்.[18] அவர்களுடையத் தொழில் காடுகளில் வேட்டையாடுதலும், காட்டுப்புதர்களில் உணவு சேகரித்தலும், கடற்கரையோரங்களில் மீன்பிடித்தலுமாக இருந்தது.[19] இயற்கை மருந்துப் பயன்பாட்டில் வல்லவர்களாக இருந்தார்கள். ஆனால் இன்றைக்கு நவீன வேலைகளுக்கு புறக் காரணிகளால் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் உணவு முறையும், மருந்து முறையும் ஐரோப்பிய நாகரீகத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது.

 

அவர்களுடைய மொழிகளுக்கு எழுத்து இல்லை. பேச்சு வழக்கில் தான் மொழி இருந்தது. பெரியவர்களிடமிருந்து குழந்தைகள் வேட்டையாடவும், உணவு சேகரிக்கவும், மீன் பிடிக்கவும், பேச்சு, கதை, பாடல், நடனம் மூலமாகவேக் கற்றுக் கொண்டார்கள். ஆனால் இன்று நவீனக் கல்வி முறையில் கற்கிறார்கள். கிட்டத்தட்ட எல்லோருமே ஆங்கில மொழியில் தான் கற்கிறார்கள். அதோடு அவர்களது கதைகளை ஆங்கில மொழியில் எழுதுகிறார்கள். அவர்கள் சுயசரிதைகள், குறுங்கதைகள், கவிதைகள் மற்றும் நாடகங்கள், கல்வி ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் குழந்தைகளுக்கான கதைகளை எழுதுகிறார்கள். அதேபோல், பூர்வீகக்குடி எழுத்தாளர்கள் தங்கள் திறமைகளை திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிக்கு திருப்புகிறார்கள். இவை அவர்களின் வாய்மொழி மரபுகளைக் காட்சி கருத்துகளாக மாற்றுவதற்கான அங்கீகரிக்கப்பட்ட ஊடகங்களாகும். ஐரோப்பிய குடியேற்றத்திற்குப் பிறகு, ஆதிக்குடிகளின் மொழிகள் மற்றும் பண்பாட்டு வழக்காறுகள் அழிக்கப்படுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. குழந்தைகள் அவர்களது குடும்பங்களிலிருந்து பிரிக்கப்பட்டு, மிஷனரி பள்ளிகளில் வளர்க்கப்பட்டனர். இது 'திருடப்பட்ட தலைமுறைகள்' (Stolen Generations) என்று அழைக்கப்படுகிறது. இதன் விளைவாக, பல மொழிகள் மறைந்து, பண்பாட்டு அறிவு இழக்கப்பட்டது.[20]  ஆதிக்குடிக் குழந்தைகள் மிஷனரி பள்ளிகளில் ஆங்கிலத்தில் மட்டுமே பயிற்றுவிக்கப்பட்டனர், மேலும் அவர்களது சொந்த மொழிகளைப் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதன் விளைவாக, பல மொழிகள் பயன்பாட்டிலிருந்து மறைந்து, அவற்றுடன் தொடர்புடைய பண்பாட்டு அறிவும் இழக்கப்பட்டது. இன்று, ஆதிக்குடிகளின் 300-க்கும் மேற்பட்ட மொழிகளில் 90 சதவீதத்திற்கு மேல் மறைந்து விட்டன அல்லது மறைவின் விளிம்பில் உள்ளன. ஒரு மொழி மறைவது என்பது அந்த மொழியுடன் தொடர்புடைய கதைகள், பாடல்கள், சடங்குகள் மற்றும் அறிவு ஆகியவை மறைவதைக் குறிக்கிறது. இது ஆதிக்குடிகளின் வரலாறும் வழக்காறும் மறைவதற்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

 

பூர்வீகக்குடிகளில் ஒருவரான ஜூன் மில்ஸ் எழுதியிருக்கும் “நான் இறக்கும்போது” என்ற கவிதையை பாருங்கள். ‘நான் இறக்கும்போது வேறு எதைச்செய்தாலும் என்னைத் தேவாலயத்திற்கு எடுத்துச்செல்லாதீர்கள்.  நான் இறக்கும்போது மனிதர் செய்த எந்தச் சவப்பெட்டிக்குள்ளும் என்னை வைத்துவிடாதிருங்கள். நான் இறக்கும்போது வெள்ளையரின் சாபப் பிரார்த்தனைகளைச் சொல்லி என்பெயரில் செபிக்காதீர்கள். நான் இறக்கும்போது என் பிள்ளைகள் அனைவரையும் அன்போடு பராமரியுங்கள். நான் இறக்கும்போது என்னை குளிரோடையில் வைத்து என் சகோதரிகள் குளிப்பாட்டி விடட்டும். நான் இறக்கும்போது என் உடலின் நிர்வாணத்தை மரப்பட்டை கொண்டு உடுத்திவிடுங்கள். நான் இறக்கும்போது ஏழிப்பாலை மரத்தின் மேலே என்னை அடக்கச்செய்யுங்கள். நான் இறக்கும்போது என் பிள்ளைகள் அனைவரையும் அன்போடு பராமரியுங்கள். நான் இறக்கும்போது என் கதையை நிர்மலமான நீலவானின் கீழேச் சொல்லுங்கள். நான் இறக்கும்போது நம் மூதாதையரின் வழித்தடங்களை முன்னெடுத்துச்செல்லுங்கள். நான் இறக்கும்போது என் பிள்ளைகளுக்கு வாழ்தலைக் கற்றுக்கொடுங்கள்’ என்ற கவிதையை அறிமுகப்படுத்திவிட்டு எழுத்தாளர் முருகபூபதி ஐயா, பூர்வீகக்குடிமக்களின் மத்தியில் இலக்கியவாதிகளும், இசைக்கலைஞர்களும், புள்ளிக்கோலம் வரையும் ஓவியர்களும் வாழ்கின்றனர் என ஆவணப்படுத்துகிறார்.[21] ஐரோப்பிய மதச் சடங்குகளை விரும்புகிற சமூகமாக இல்லாவிட்டாலும், அதற்காக அவர்கள் பழக்கப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். பலர் கிறித்துவ மதத்தைத் தழுவ ஆட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.

 

ஆனால் இருநூறு வருடங்களுக்கு முன்பு, மக்கள் தங்கள் அன்றாட வாழ்விற்கு 4-5 மணி நேரம் வேலை செய்தால் போதுமானதாக இருந்தது. இந்த ஓய்வு நேரத்தினால் அவர்கள் வளமான மற்றும் சிக்கலான சடங்குகள் நிறைந்த வாழ்க்கையை உருவாக்கினர். சமூக, மத மற்றும் ஆன்மீக நடவடிக்கைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் உடல் முறைகளால் அல்ல, ஆன்மீக முறைகளால் கட்டுப்படுத்தப்பட்டது. மேலும், மதம் நாட்டுடன், அதாவது நிலத்துடன், ஆழமாக பிணைக்கப்பட்டிருந்தது. இயற்கையோடு பிணைந்திருப்பதே ஆன்மீக வாழ்க்கையாகப் பார்க்கப்பட்டது.[22] பூர்வீகக் குடிமக்களின் மதம் என்பது அவர்களின் சமூக வாழ்க்கையோடு பிணைந்திருந்தது. சிறப்பாக அவர்களின் சுற்றுச் சூழலுடனும் பொருளாதார வளங்களுடனும் இணைந்திருந்தது. தெய்வங்கள் இயற்கைச் சூழலைப் படைத்ததோடு மட்டும் அல்ல சில மனித சடங்குகள் மூலம், அவைகளைத் தொடர்ந்து கண்காணித்து வளத்தோடு வைத்துக்கொள்பவைகளாகவும் இருக்கிறார்கள். ஒருவிதத்தில் மனிதர்கள் இல்லாமல், தெய்வங்கள் தன்னிச்சையாக இருக்க முடியும். அதே நேரத்தில் மனிதர்களோடு அந்நியோன்யமாக இருக்கவும் செய்கின்றன. தெய்வங்கள் என்றென்றைக்கும் இருப்பவை. அவைகள் பெரும் கனவின் படைப்புகள். நாட்டில் சுயமாக உலவும். தங்களைப் போன்ற மற்ற தெய்வங்களைச் சந்திக்கும். படைக்கும். இயக்கும். காக்கும். நிலத்தில் முடங்கும். காற்றில் கறையும். நீரில் மூழ்கும். கடைசியில் கல்லாகவோ அல்லது வேறு உருவங்களாகவோ மாறி நிற்கும்.[23]

 

ஆதிக்குடிகளின் வழக்காறுகள் மாறினாலும், அவர்களது பண்பாடு முற்றிலும் அழியவில்லை. இன்று, ஆதிக்குடிகள் தங்கள் பண்பாட்டு மரபுகளை மீட்டெடுக்கவும், அவற்றை உலகிற்கு அறிமுகப்படுத்தவும் முயற்சிக்கின்றனர். இது அவர்களது வாழ்க்கை முறைகளில் ஒரு முக்கியமான மாற்றமாக அமைகிறது. ஆதிக்குடி கலை, இசை மற்றும் நடனம் ஆகியவை உலக அளவில் அங்கீகரிக்கப்படுகின்றன. பாரம்பரிய ஓவியங்கள், புள்ளி ஓவியங்கள் (Dot Paintings), மரச் செதுக்கல்கள் மற்றும் டிட்ஜெரிடு (Didgeridoo) இசைக் கருவி ஆகியவை சர்வதேச அளவில் புகழ் பெற்றுள்ளன. இந்தக் கலை வடிவங்கள் ஆதிக்குடிகளுக்கு பொருளாதார வாய்ப்புகளை வழங்குவதோடு, அவர்களது பண்பாட்டு அடையாளத்தைப் பாதுகாக்கவும் உதவுகின்றன. ஆதிக்குடிகள் தங்கள் பண்பாட்டு மரபுகளை கொண்டாடுவதற்காக பல விழாக்களை நடத்துகின்றனர். உதாரணமாக, NAIDOC Week (National Aborigines and Islanders Day Observance Committee Week) ஆதிக்குடிகளின் பண்பாடு, வரலாறு மற்றும் சாதனைகளை வெளிப்படுத்துவதற்கு ஒரு முக்கியமான தளமாக அமைகிறது. இது ஆதிக்குடிகளுக்கும் மற்ற ஆஸ்திரேலியர்களுக்கும் இடையிலான புரிதலை மேம்படுத்துகிறது. ஆதிக்குடிகள் தங்கள் மொழிகளை மீட்டெடுக்கவும், அவற்றை இளைய தலைமுறைகளுக்கு கற்பிக்கவும் முயற்சிக்கின்றனர். மொழி மையங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இதற்கு உதவி வழங்குகின்றன. இது ஆதிக்குடிகளின் பண்பாட்டு அடையாளத்தைப் பாதுகாப்பதற்கு முக்கியமானதாக உள்ளது.

 

உரிப்பொருள் - பண்பாடும் ஒழுக்கமும்

குடும்பத்திலும் சமூகத்திலும் ஒருவருக்கொருவர் சார்ந்து இருப்பர். ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வர். குழந்தைகளை வளர்ப்பது கூட அனைத்து சமுதாய உறப்பினர்களின் பொறுப்பாகக் கருதப்படுகிறது. தங்கள் குழந்தைகள் அவர்களைச் சுற்றியுள்ள உலகத்தை ஆராய தேவையான சுதந்திரத்தையும் வாய்ப்புகளையும் வழங்குகிறார்கள். பெரியவர்களாகும் போது தங்கள் வாழ்க்கையை வாழத் தேவையான திறன்களை வளர்க்க பெற்றோர்கள் உதவுகிறார்கள்.

 

சமூகத்தில், வயதான பெரியவர்களின் பேச்சுக்கு மதிப்பு உண்டு. அவர்கள், குடும்பத்தில் மதிப்புமிக்கவர்களாக கருதப்படுகிறார்கள். குடும்பத்தில் வரும் சவால்களைச் சமாளிக்க ஆன்மீகம் உதவுகிறது. அது தனிநபர் ஒவ்வொருவரும் ஒருவருக்கொருவர் ஆதரவு கொடுக்கவும், உதவவும் வழிவகைச் செய்கிறது. குடும்பமும் சமூகமும் தங்கள் அடையாளத்தைக் காப்பாற்றிக் கொள்ள உதவுகிறது.[24] தனிப்பட்ட, குடும்ப மற்றும் குழு உறுப்பினர்களிடையே பகிர்தல் மிக முக்கிய மதிப்பீடாக இருந்திருக்கிறது.[25] ஆனால் இன்று ஐரோப்பிய குடும்ப உறவு முறை பண்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு நிற்கிறார்கள்.

 

மாற்றத்திற்கானக் காரணிகள்

வழக்காறுகள் என்பது ஒரு சமூகத்தின் பாரம்பரியம், பண்பாடு மற்றும் வாழ்க்கை முறையை வெளிப்படுத்தும் முக்கியமான கூறுகளாகும். இவை பல நூற்றாண்டுகளாக தலைமுறை தலைமுறையாக அனுசரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், காலப்போக்கில் சமூகம், பொருளாதாரம், அரசியல் மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள் காரணமாக, இந்த வழக்காறுகள் மாற்றமடைகின்றன. இந்த மாற்றங்கள் சில நேரங்களில் இயற்கையானவையாகவும், சில நேரங்களில் கட்டாயப்படுத்தப்பட்டவையாகவும் இருக்கின்றன.

 

ஆதிக்குடிகளின் வாழ்க்கை முறைகள் காலப்போக்கில் பல மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் சில நேர்மறையாகவும், சில எதிர்மறையாகவும் அமைந்துள்ளன. இன்று, பல ஆதிக்குடிகள் நகர்ப்புறங்களில் வாழ்கின்றனர். இது அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுகாதார வசதிகளை அணுகுவதற்கு உதவியுள்ளது. ஆயினும், இது அவர்களது பாரம்பரிய வாழ்க்கை முறைகளிலிருந்து விலகுவதற்கும் காரணமாக அமைந்துள்ளது. 20-ஆம் நூற்றாண்டில், ஆதிக்குடிகள் தங்கள் நில உரிமைகளை மீட்பதற்காகப் போராடினர். 1992-இல் மாபோ தீர்ப்பு (Mabo Decision)[26] மூலம் 'டெர்ரா நல்லியஸ்' கோட்பாடு நிராகரிக்கப்பட்டு, ஆதிக்குடிகளுக்கு நில உரிமைகள் வழங்கப்பட்டன. இது ஒரு முக்கியமான வெற்றியாக இருந்தாலும், இன்னும் பல பகுதிகளில் நில உரிமைப் போராட்டங்கள் தொடர்கின்றன. இன்று, ஆதிக்குடிகளின் கலை, இசை, நடனம் மற்றும் பண்பாட்டு விழாக்கள் உலக அளவில் அங்கீகரிக்கப்படுகின்றன. பல இளைஞர்கள் தங்கள் மொழிகளையும், பண்பாட்டு மரபுகளையும் மீட்டெடுக்க முயற்சிக்கின்றனர். ஆதிக்குடி கலைஞர்களின் படைப்புகள் சர்வதேச அளவில் புகழ் பெற்றுள்ளன.

 

இருந்தாலும், ஆதிக்குடிகள் இன்றும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். இவை அவர்களது சமூக, பொருளாதார மற்றும் ஆரோக்கிய நிலைகளைப் பாதிக்கின்றன. ஆதிக்குடிகள் இன்னும் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுகாதாரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ளனர். அவர்களது ஆயுட்காலம் மற்ற ஆஸ்திரேலியர்களை விடக் குறைவாக உள்ளது, மேலும் வறுமை மற்றும் வேலையின்மை விகிதங்கள் அதிகமாக உள்ளன. ஆதிக்குடிகள் இன்னும் இனவெறி மற்றும் பாகுபாட்டை எதிர்கொள்கின்றனர். இது அவர்களது சமூக ஒருங்கிணைப்பு மற்றும் மனநலத்தைப் பாதிக்கிறது. ஆதிக்குடிகளுக்கு அரசியல் மற்றும் சட்டரீதியான பிரதிநிதித்துவம் இன்னும் போதுமானதாக இல்லை. அவர்களது குரல்கள் முடிவெடுக்கும் செயல்முறைகளில் புறக்கணிக்கப்படுவது தொடர்கிறது. இதற்கு காலனியாதிக்கமும், உலகமயமாதலும் புறக் காரணிகளாக அமைகின்றன.


முடிவுரை

ஆஸ்திரேலிய ஆதிக்குடிகளின் வாழ்வியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் புறவயப்பட்டதாகவே இருக்கிறது என்றும், அவர்களின் பல்லாண்டு கால வரலாறு மற்றவர்களால் மறைக்கப்படுகிறது என்றும், அவர்களின் வழக்காறுகள் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் மாறியுள்ளது என்றும் தெரிகிறது. ஆஸ்திரேலிய ஆதிக்குடிகளின் வரலாறு மறைந்தாலும், அவர்களது பண்பாடு மற்றும் வாழ்க்கை முறைகள் முற்றிலும் அழியவில்லை. ஐரோப்பிய குடியேற்றத்தின் தாக்கம், வாய்மொழி மரபின் துண்டிப்பு, மொழி இழப்பு, வரலாற்று மறுப்பு மற்றும் நில உரிமைகளின் இழப்பு ஆகியவை ஆதிக்குடிகளின் செம்மையான வரலாறு மறைவதற்கு முக்கிய காரணங்களாக அமைந்தன. ஆனாலும், இன்று, அவர்கள் தங்கள் அடையாளத்தை மீட்டெடுக்கவும், தங்கள் உரிமைகளைப் பெறவும் போராடி வருகின்றனர். ஆஸ்திரேலிய சமூகமும், அரசாங்கமும் ஆதிக்குடிகளின் பங்களிப்பை அங்கீகரித்து, அவர்களுடன் இணைந்து செயல்படுவது அவசியமாகும். ஆதிக்குடிகளின் வரலாறு மறையாமல், அவர்களது வழக்காறுகள் மாற்றத்துடன் செழித்து வளர வேண்டுமெனில், ஒரு ஒருங்கிணைந்த மற்றும் நியாயமான சமூகத்தை உருவாக்குவது அனைவரின் பொறுப்பாகும். இவர்கள் வரலாறு மறையக் கூடாது. அவர்கள் வழக்காறு மாறிக் கொண்டே இருக்கலாம். ஆனால் அது அவர்களது அடையாளத்தை அழிக்க வேண்டியதில்லை. ஆதிக்குடியின மக்களின் வாழ்க்கைமுறையை அறிந்து, அவர்களின் உரிமைகளுக்காக ஆதரவு கொடுப்பது, அனைவரின் பொறுப்பாக இருக்க வேண்டும்.

 

**************

 

சாத்துணை நூற்பட்டியல்

 

[1] Clarkson, Chris & et. al., (2015). The archaeology, chronology and stratigraphy of Madjedbebe (Malakunanja II): A site in northern Australia with early occupation.

[2] The Story Untold - The links between Australian Aboriginal and Indian Tribes.

[3] Berndt, Ronald M, Tonkinson, Robert. (n.d). The Dreaming. Australian Aboriginal Mythology. Britannica.

[4] Govind. (2022). Aboriginal Australians. ஆஸ்திரேலியா ஆதிக்குடிகள் அழிக்கப்பட்ட வரலாறு: பழங்குடிகளிடமிருந்து ஐரோப்பா திருடிய நாடு.

[5] Ibid.

[6] Ibid.

[7] Commonwealth of Australia  As a matter of fact Answering the myths and misconceptions about Indigenous Australians Canberra A C.

[8] Ibid.

[9] ஆதிக்குடிகள். (2020). படலை. https://www.padalay.com/2020/09/blog-post_17.html

[10] Ibid.

[11] ஆழியாள். (2017). பூவுலகைக் கற்றலும் கேட்டலும்.

[12] கருணாகரன். (2024). ஊடகமும் அரசியலும் காலாவதியான நிலையில் இலக்கியமே பெரும் ஆசுவாசத்தைத் தருகிறது. பா. தெய்வீகனுடனாக உரையாடல்.

[13] Van den Berg, R. (2005). Aboriginal storytelling and writing. Australian Public Intellectual Network.

[14] ஆழியாள். (2017). பூவுலகைக் கற்றலும் கேட்டலும்.

[15] HEROC. (2008). Social Justice Report 2007.  Sydney: Aboriginal and Torres Strait Islander Social Justice Commissioner

[16] Dudgeon, P., Wright, M., Paradies, Y., Garvey, D., & Walker, I. (2010). The social, cultural and historical context of Aboriginal and Torres Strait Islander Australians. Working together: Aboriginal and Torres Strait Islander mental health and wellbeing principles and practice, 25-42.

[17] Profile of First Nations People. (2024). Australian Institute of Health and Welfare. Australian Government. https://www.aihw.gov.au/reports/australias-welfare/profile-of-indigenous-australians

[18] Dudgeon, P., Wright, M., Paradies, Y., Garvey, D., & Walker, I. (2010). The social, cultural and historical context of Aboriginal and Torres Strait Islander Australians. Working together: Aboriginal and Torres Strait Islander mental health and wellbeing principles and practice, 25-42.

[19] Govind. (2022). Aboriginal Australians. ஆஸ்திரேலியா ஆதிக்குடிகள் அழிக்கப்பட்ட வரலாறு: பழங்குடிகளிடமிருந்து ஐரோப்பா திருடிய நாடு.

[20] Van den Berg, R. (2005). Aboriginal storytelling and writing. Australian Public Intellectual Network.

[21] முருக பூபதி. (2020). கவிஞர் ஆழியாள் மதுபாஷினி. அவுஸ்திரேலிய ஆதிக்குடிகளின் கவிதைகள்…பூவுலகைக் கற்றலும் கேட்டலும். படித்தோம். சொல்கின்றோம். இலக்கியச்சோலை. https://akkinikkunchu.com/?p=122858

[22] Dudgeon, P., Wright, M., Paradies, Y., Garvey, D., & Walker, I. (2010). The social, cultural and historical context of Aboriginal and Torres Strait Islander Australians. Working together: Aboriginal and Torres

[23] Berndt, R. M. (1970). Traditional morality as expressed through the medium of an Australian Aboriginal religion. Australian Aboriginal Anthropology, 216-247.

[24] Lohoar, S., Butera, N., & Kennedy, E. (2014). Strengths of Australian Aboriginal cultural practices in family life and child rearing. Melbourne: Australian Institute of Family Studies.

[25] Berndt,Berndt, C H. (1988).  The world of the First Australians Aboriginal traditional life, past and present Canberra AA.

Comments


© 2021 - John B. Parisutham | All rights reserved

bottom of page