நாடகத்தில் உள்ள பாத்திரங்கள்
பாண்டியன் (சிறுவன் - 12 வயது)
பாட்டி (பாண்டியனின் பாட்டி - 70 வயது)
வயதான முதியவர்
கண் பார்வை இல்லாத பெண்மணி
ஏழெட்டு சிறுவர்கள்
ஊரார்
காட்சி 1
இடம்: பாண்டியன் வீடு
நேரம்: காலை 8:00 மணி
பாத்திரங்கள்: பாண்டியன், பாட்டி
( பாண்டியன் பாட்டியின் காலை அமுக்கிக் கொண்டிருக்கிறான்.)
பாட்டி:
பாண்டியா! பேராண்டி… அப்படித்தான். அப்படித்தான். அமுக்கு. கொஞ்சம் கீழ. ம்!…முட்டிகிட்ட கொஞ்சம் அமுக்கு.
பாண்டியன்:
பாட்டி! இங்க தான! அமுக்குறேன். இப்ப…நல்லா இருக்கா?
பாட்டி:
நல்லா இருக்கு பேராண்டி. (ஒரு பாடலை முணுமுணுக்கிறார்)
வெள்ளை மல திருடன் இவன்
வெத்தலய போட்டானாம்
வெத்தலய போட்டுகிட்டு
வெற்றிகள கேட்டானாம்
பச்ச மல திருடன் இவன்
பச்சரிசி தின்னானாம்
பச்சரிசி தின்னுகிட்டு
பட்டங்களை பெற்றானாம்
பாண்டியன்:
பாட்டி! என்ன பாட்டு இது?
பாட்டி:
இது நாட்டுப்புறப் பாட்டு பேராண்டி.
பாண்டியன்:
பாட்டி. நான் வெத்தலய போடாமலேயே வெற்றிகளப் பெறப்போறேன் பாட்டி.
பாட்டி:
என்னது? சத்தமா சொல்லுடா பேராண்டி.
பாண்டியன்: (சத்தமாக)
நான் வெத்தலய போடாமலேயே நிறைய வெற்றிகளைப் பெறப்போறேன்’னு சொன்னேன் பாட்டி.
பாட்டி:
அப்படி சொல்லுடா என் அட்ராசக்க பேராண்டி! (தொடர்ந்து பாடுகிறாள்)
பச்ச மல திருடன் இவன்
பச்சரிசி தின்னானாம்
பச்சரிசி தின்னுகிட்டு
பட்டங்களை பெற்றானாம்
நீல மல திருடன் இவன்
நீர் குடித்து நின்றானாம்
நீர் குடித்து நின்னுகிட்டு
நீலகண்டன் என்றானாம்
பாண்டியன்:
நான் பச்சரியை திங்காம பட்டங்கள வாங்குவேன். நீர் குடிச்சி நிக்காம நீலகண்டன் ஆயிடுவேன்.
பாட்டி:
உன் தன்னம்பிக்கையை பாராட்டுறேன் பேராண்டி. ஆனா, வாழ்க்கையில வெற்றி பெறுவது எப்படி தெரியுமா?
பாண்டியன்:
எல்லாம் தெரியும். அடுத்த வாரம் ஊர்ல பொங்கல் விழா வருது. ஓட்டப் பந்தயம் வப்பாங்க. அதுல ஓடி ஜெயிச்ச காட்டுறேன் பாரு.
பாட்டி:
நான் என்ன சொல்ல வர்றேன்னா…
பாண்டியன்:
நீ ஒன்னும் சொல்ல வேண்டாம். நீயே மூக்குல வெரல் வக்கிற மாதிரி செய்றேன் பாரு.
பாட்டி:
அடேய்! மெதுவா அமுக்குடா. ஐயோ! போதும்டா பேராண்டி. போய் வெளயாடு. போ.
பாண்டியன்:
நான் ஓடி பயிற்சி செய்யப்போறேன்.
(பாண்டியன் தெருவுக்கு ஓடுகிறான்.)
காட்சி 2
இடம்: ஊர் மந்தை
நேரம்: காலை 8:00 மணி
பாத்திரங்கள்: பாண்டியன், பாட்டி, அறிவிப்பாளர், ஏழெட்டு சிறுவர்கள், ஊர் மக்கள்
(ஊர் முழுக்க விழாக்கோலம் பூண்டிருக்கு. எங்கும் கரும்பும், மஞ்சளும் தோரணம் கட்டி இருக்கிறது. வீடுகளில் மாக்கோலம் போட்டு, புதுப்பானைகளில் பொங்கல் பொங்குகின்றனர். ஊர் மந்தையில் விளையாட்டுப்போட்டிகள் துவங்குகின்றன. பாட்டி பார்வையாளர்கள் இடத்தில் உட்கார்கிறார். பாண்டியன் விளையாட்டுப்போட்டிக்கான அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறான். அப்பொழுது அறிவிப்பு வருகிறது.)
அறிவிப்பாளர்:
(ஊர் ரேடியாவில்) நம்ம ஊர் தமிழர் திருநாளை முன்னிட்டு, சிறுவர் சிறுமிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகின்றன. 15 வயதிற்கு கீழ் உள்ளவர்களின் ஓட்டப்பந்தயம் இப்பொழுது நடக்க இருக்கிறது.
பாண்டியன்:
பாட்டி! நான் தான் முதல்ல ஓடியாந்து கோப்பையை வாங்குவேன்.
பாட்டி:
போய் கலந்துக்க. வெற்றி’ங்றது என்ன தெரியுமா?
பாண்டியன்:
வெற்றி’ங்றது நான் தனியாளா ஓடி கோப்பையை வெல்றது தான். இங்க உக்காந்துகிட்டு நான் ஓடுறத பாரு. (எனச் சொல்லிவிட்டு துவக்கக் கோட்டிற்கு ஓடுகிறான்.)
அறிவிப்பாளர்:
பசங்களா! நல்லா கேட்டுக்குங்க. நான், ஒன்னு, ரெண்டு, மூணு என்றதும் ஓடத் துவங்கனும். அதோ செகப்பு கயிறு புடிச்சிகிட்டு ரெண்டு பேரு, வேப்பமரத்தடிகிட்ட நிக்கிறாங்கள்ல, அந்த கயிறைப் போய் யாரு தொடுறாங்களோ, அவங்களுக்கு கோப்பையும் பரிசும். புரியுதா. எல்லோரும் கையைத்தட்டி ஓட்டப்பந்தயத்துல கலந்துக்கறவங்கள உற்சாகப்படுத்துங்க பாப்போம்.
(ஊரார் கை தட்டுகின்றனர்.)
அறிவிப்பாளர்:
ரெடி. ஒன்னு, ரெண்டு, மூணு…ஓடுங்க
(மக்களின் உற்சாக குரலுக்கிடையே, பாண்டியன் உட்பட ஏழு பேர் ஒடுகிறார்கள். பாண்டியன் வெற்றிக்கோட்டைத் தொட்டு முதல் இடம் வருகிறான்.)
அறிவிப்பாளர்:
நம்ம பாண்டியன் முதல் இடத்திற்கு வந்து வெற்றியாளன் ஆயிட்டான். எல்லோரும் கைதட்டி அவனைப் பாராட்டுங்க.
(ஊர் மக்கள் கைதட்டி ஆரவாரிக்கிறார்கள். பாண்டியன் பாட்டியிடம் ஓடி வந்தான்)
பாண்டியன்: (மூச்சிறைக்க)
பாட்டி! பாட்டி!! பாத்தியா நான் சொன்ன மாதிரி வெற்றி பெற்றுட்டேன். ஊர் மக்கள் எல்லாம் பாராட்டுறாங்க. கை தட்டுறாங்க. என்ன தூக்கி வச்சு கொண்டாடுறாங்க.
பாட்டி:
அப்படி நீ நெனக்கிற. இப்ப பாரு
(பாட்டி, பார்வையாளர்கள் இடத்திலிருந்து எழுந்து அறிவிப்பாளர் இடத்திற்கு வருகிறார். அறிவிப்பாளரிடம் ஏதோ சொல்கிறார். பாட்டி சொன்னதற்கு அறிவிப்பாளர் சம்மதம் சொல்கிறார்.)
அறிவிப்பாளர்:
பெரியோர்களே! தாய்மார்களே! பாண்டியனின் பாட்டி இப்பொழுது ஒரு சிறப்பு போட்டியை நடத்துவார்.
(பாட்டி கூட்டத்திலிருத்து எண்பது வயது முதியவரையும், கண் பார்வை இல்லாத ஒரு பெண்மணியையும் ஓடுகளத்திற்கு அழைத்து வருகிறார்.)
பாட்டி:
பெரியவரே! இப்படி இந்த துவக்கக் கோட்டில் நில்லுங்கள். கண் பார்வை தெரியாத அம்மா, நீங்களும் இப்படி இங்கு வந்து துவக்கக் கோட்டல் நில்லுங்கள். (பாண்டியனைப் பார்த்து) பாண்டியா! இங்க வா. நீயும் இந்தத் துவக்கக் கோட்டில் நில். இப்பொழுது அறிவிப்பாளர், ஒன்று, இரண்டு, மூன்று என்றவுடன், நீ ஓடத் துவங்க வேண்டும்.
பாண்டியன்:
பாட்டி! உனக்கு என்ன பைத்தியம் புடிச்சிடுச்சா? எண்பது வயசு தாத்தா இங்க. கண்ணு தெரியாத அம்மா அங்க. நான் இவங்களோட ஓடனுமா? இது என்ன ஓட்டப் பந்தயம்?
பாட்டி:
நீ ஓடு. யார் வெற்றி அடைகிறாங்கன்னு பாப்போம்.
பாண்டியன்:
இதுல என்ன சந்தேகம்? நான் தான் வெற்றி அடைவேன்.
பாட்டி:
பாப்போம். இங்க வந்து நில்லு. (அறிவிப்பாளரை நோக்கி) அறிவிப்பாளரே! நீங்க ஒன்னு, ரெண்டு, மூணு சொல்லுங்க.
அறிவிப்பாளர்:
(எல்லோரும் கை தட்டி உற்சாகப்படுத்துங்க) போட்டி ஆரம்பம். ஒன்னு, ரெண்டு, மூணு
(மூணு என்று சொல்லி முடித்ததும், பாண்டியன் கண்ணை மூடிக்கொண்டு, மூச்சிறைக்க ஓடுகிறான். வெற்றிக் கயிறை தொட்டதும், கைகளை உயர்த்திக் கத்துகிறான்.)
பாண்டியன்:
வெற்றி! வெற்றி!! வெற்றி!!!
( ஊரார் மௌனம் காக்கின்றனர். யாரும் கைதட்டவில்லை. அப்பொழுது தான் கவனிக்கிறான். அந்த முதியவரும், பார்வையற்ற பெண்மணியும் தட்டுத் தடுமாறிக் கொண்டிருந்தார்கள்.)
பாண்டியன்:
இந்த ஊர் மக்களுக்கு என்ன ஆச்சி? போன தடவை வெற்றி பெற்றதற்கு எல்லோரும் கை தட்டி உற்சாகப் படுத்தினார்கள். ஆனால் இப்ப, யாருமே கை தட்டவில்லை.
(அப்பொழுது பாட்டி பாண்டியனை அழைக்கிறாள்.)
பாட்டி:
பாண்டியா! இங்க வா. (பாண்டியன் பாட்டியின் அருகே வருகிறான்.)
(பாட்டி, பாண்டியனின் காதில் ஏதோ சொல்கிறார். சரி என்பது போல் தலையாட்டிய பாண்டியன், முதியவரின் கையை ஒரு பக்கமும், பார்வையற்ற பெண்மணியின் கையை இன்னொரு பக்கமும் பிடித்துக் கொள்கிறான்.)
அறிவிப்பாளர்:
போட்டி மறுபடி துவங்குகிறது. ஒன்னு, ரெண்டு, மூணு
(பாண்டியன் இருவரையும் அழைத்துக் கொண்டு, இறுதிக் கோட்டை நோக்கி அவர்கள் வேகத்திலேயே மெதுவாக நடக்கிறான். மக்கள் கைகளைத் தட்ட ஆரம்பிக்கிறார்கள். மூவரும் ஒரே நேரத்தில் வெற்றிக் கோட்டை அடைகின்றனர். அப்பொழுது ஊர் மக்களின் கரகோஷம் விண்ணைப் பிளக்கிறது. ஒரே விசில் சப்தம். கைதட்டல். ஓடி வந்து பாண்டியனை தூக்கிக் கொண்டு ஆடுகின்றனர். )
ஊர் மக்களில் சிலர்:
பாண்டியன் சிறந்த வெற்றியாளன். மனிதநேயம் மிக்க பையன் என நிரூபித்துவிட்டான். வாழ்க பாண்டியன்!!!
(பாண்டியன் கண்களில் நீர் வழிகிறது. பாட்டியின் அருகில் வருகிறான்.)
பாண்டியன்:
பாட்டி! தனி நபர் வெற்றியை விட, நம்மோடு கூட இருக்கிறவர்களோடு சேர்ந்து பெறுகிற வெற்றியில் ஒரு மகிழ்ச்சியும், நிம்மதியும் இருக்கிறது.
பாட்டி:
இந்த கூட்டு வெற்றி தான் இப்பொழுது இந்த மனித குலத்திற்குத் தேவை.
அறிவிப்பாளர்:
வெற்றி பெற்ற பாண்டியனுக்கும் மற்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படும்.
பாண்டியன்:
இந்தக் கோப்பையை என் பாட்டி தான் வாங்க வேண்டும்.
(பாட்டி சிரித்துக்கொண்டே பாண்டியனைப் பார்க்கிறார்.)
அறிவிப்பாளர்:
ஊர் மக்கள் எல்லோரும் காளியம்மன் கோவிலுக்கு வாங்க. பந்தல்’ல எல்லோருக்கும் பொங்கல் வழங்கப்படும்.
(ஊர் மக்கள் கைதட்டி ஆரவாரம் செய்கிறார்கள். ரேடியோவில் பாட்டு கேட்கிறது. )
*****
படிப்பினை: வெற்றி, சாதனை, கூட்டு செயல்பாடு, கூட்டு வெற்றி, குழு செயல்பாடு,
நாடக ஆசிரியர்: ஜான் பி. பரிசுத்தம்
Comments